என் மலர்
நீங்கள் தேடியது "கொடைக்கானல்"
- மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது.
- கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இரவு, பகல் என 24 மணி நேரமும் கொடைக்கானலில் தற்போது ஒரே சீதோசனம் நிலவி வருகிறது. தெருக்கள் மற்றும் சாலைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்கவும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்யும் மழை காலையிலும் தொடர்வதால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள் பின்னர் ஏமாற்றத்துடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.
கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேய முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் இதுபோன்ற ஒரு சீதோசனம் கொடைக்கானலில் காணப்படுவது அபூர்வமான நிகழ்வாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
- சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக ஜிகரெண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை புன்னகையோடு வரவேற்கும் விதமாகவும் மலைச்சாலைகளின் இருபுறமும் பூத்துகுலுங்கும் ஜிகரெண்டா மலர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது.
கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு மற்றும் பழனி செல்லக்கூடிய சாலை ஓரங்களில் உள்ள இந்த மரங்களில் இளநீல ஊதா நிறத்தில் மரம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது. இந்த பூக்கள் கோடைகாலத்தை வரவேற்கும் வகையில் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மட்டுமே பூக்கக்கூடிய பூக்களாகும். தற்போது இவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக பூத்து குலுங்குகிறது.
- கொடைக்கானல் வனப்பகுதியில், கடும் வெப்பம் நிலவி வருகிறது.
- கோடை காலத்தில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியில், கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் அரசு, தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை வனத்துறையினர் அணைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கருவேலம்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய இடங்களில் மீண்டும் தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. காட்டுத்தீயில் அந்த பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடி எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகள் வெளியேறி வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மலைக்கிராம மக்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த காட்டு தீயானது, கொடைக்கானல்-பழனி பிரதான மலைப்பாதைக்கும் பரவி எரிந்து வருகிறது.
வழக்கமாக, கோடை காலத்தில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு அவை அமைக்கப்படாததால்தான் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது என்றும், தீயை கட்டுப்படுத்துவதற்கு நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
- ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
கொடைக்கானல்:
புனித வெள்ளி உள்ளிட்ட 3 நாள் தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
குளு, குளு சீசனை அனுபவித்து மகிழ்ந்தனர். நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன், நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
- கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது.
- சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது புனிதவெள்ளியை தொடர்ந்து வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இதன்காரணமாக அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நுழைவுவாயில் பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மூஞ்சிக்கல், உகாதே நகர் , ஏரிச்சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.
காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது. போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள் உள்பட பொதுமக்கள் தாங்களாகவே போக்குவரத்தை சீரமைத்துக்கொண்டனர். மேலமலையில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போதுமான போக்குவரத்து போலீசார் பணியமர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைந்த அளவே போலீசார் பணியில் உள்ளதால் வேலைபளு அதிகரித்து மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொடைக்கானல் நகருக்குள் நுழைவு பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
- மலர் கண்காட்சி கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று பகல் பொழுதில் இதமான சீதோஷ்ணமும், மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறையால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கொடைக்கானல் நகருக்குள் நுழைவு பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே போதிய அளவு போலீசார் பணியமர்த்தி போக்குவரத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரின் முக்கிய சுற்றுலா தலங்களான வெள்ளிநீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி, நட்சத்திர ஏரி, பிரையண்ட்பூங்கா, மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும் நட்சத்திர ஏரியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றும் அனைவரையும் கவர்ந்தது. நேற்று சாரல் மழையில் நனைந்தபடியே ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், கைடுகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அடுத்த வாரம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தொடங்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே மலர்கண்காட்சி கோடைவிழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
- அரசு பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையோடு வகுப்புகள் முடிந்த நிலையில் பல்வேறு மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
- கேரள மாநிலம் மூணாறு, தேக்கடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் விடப்பட்டது.
அரசு பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையோடு வகுப்புகள் முடிந்த நிலையில் பல்வேறு மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதியது.
இதே போல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் விடுமுறையை கொண்டாடினர். தற்போது காலை முதலே கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணமும், மதிய நேரத்தில் சாரல் மழையும் பெய்து வருகிறது. மலை முகடுகளை தழுவிச் செல்லும் மேகக்கூட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதே போல் கேரள மாநிலம் மூணாறு, தேக்கடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இங்கும் சாரல் மழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் மலை ஸ்தலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரம் அணி வகுத்து நின்ற வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் போராடினர்.
எனவே மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொடைக்கானல் செல்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மதுரை வந்தார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று கொடைக்கானல் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் இன்று மதியம் வருகிறார். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு கார் மூலம் புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி வத்தலக் குண்டு வழியாக கொடைக்கா னலுக்கு மாலை 4.30 மணிக்கு செல்கிறார். எனவே மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இன்று இரவு கொடை க்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை காலை 11 மணிக்கு அன்னைதெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.மாலை 3 மணிக்கு பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிடுகிறார்.
பின்னர் 16-ந்தேதி கொடைக்கானலில் இருந்து கார்மூலம் புறப்பட்டு மதுரை வரும் கவர்னர், இங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கா னலுக்கு செல்ல அறிவுறுத்த ப்பட்டுள்ளது. கவர்னர் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. மதுரை வி மான நிலையம் மற்றும் கவர்னர் செல்லக்கூடிய சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன்உமேஷ் ேடாங்கரே (தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பிக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கவர்னர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கவர்னர் ரவி கொடைக்கானல் வானியல் ஆய்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டார்.
- கொடைக்கானலில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கொடைக்கானல்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கொடைக்கானல் வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவர் பின்னர் கொடைக்கானலுக்கு கார் மூலம் மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.
குறிஞ்சி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் உள்ள கோகினூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் விசாகன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் திலிப் உள்ளிட்ட அதிகாரிகள் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின் கார் மூலம் அப்சர்வேட்டரி சாலை வழியாக அப்பர்லேக் வியூ, பாம்பார்புரம் ஆகிய இடங்களுக்கு சென்றார்.
சுற்றுலா வழித்தடத்தில் கவர்னரின் கார் சென்றதால் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். அதன்பின் கோக்கர்ஸ் வாக் வழியாக பயணித்த கவர்னர் மீண்டும் ஏரிச்சாலையை சுற்றி வாகனத்தில் இருந்து எங்கும் இறங்காமல் பார்வையிட்டனர். அதன்பின் கோகினூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றடைந்தார்.
கவர்னர் வருகையால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் வழித்தட மாற்றத்தால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். கவர்னர் வாகனம் சென்ற பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இன்று காலை கவர்னர் ரவி தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் ரோஜா பூங்காவுக்கு வருகை தந்தார். அங்கு பூத்துக்குலுங்கும் பல்வேறு வகையான ரோஜா மலர்களை கண்டு பரவசமடைந்தார். அதனைத்தொடர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி புதிய வேளாண் எந்திர பயன்பாடு குறித்தும் கேட்டறிந்து அதன் செயல்முறை விளக்கம் ஆற்ற உள்ளார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கொடைக்கானலில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று கொடைக்கானலில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தனது சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கார் மூலம் மதுரைக்கு சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முன்னதாக கொடைக்கானலுக்கு வருகை தந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து வத்தலக்குண்டுவில் கருப்பு பலூன்களை பறக்க விட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட குவிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் திராவிடர் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் மருத மூர்த்தி தலைமையில் அந்த அமைப்பினர் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். கொடைக்கானலிலும் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- காற்று அதிகமாக அடித்ததால் படகு சவாரியும் நேற்று மாலை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தாலும் மாலையில் திடீரென சூறாவளிக்காற்று, இடி மின்னல்களுடன் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி, செண்பகனூர், நாயுடுபுரம், பெருமாள்மலை, வில்பட்டி, வட்டகானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
சுற்றுலா பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பைன்பாரஸ்ட், தூண்பாறை, மோயர்பாய்ண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். காற்று அதிகமாக அடித்ததால் படகு சவாரியும் நேற்று மாலை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
எனினும் சாரல் மழையில் நனைந்தபடியே உற்சாகமாக சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி உள்ளிட்ட இடங்களில் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பிரையண்ட் பூங்காவில் மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த பூக்களின் குடும்ப வகைகள் உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக உள்ளது. எனவே இதற்கு நிரந்தர நீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்களை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடையும் வகையில் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.
- கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோடைவிழாவும் நீட்டிக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கிய 60-வது மலர் கண்காட்சியின் 2-ம் நாள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பழங்கால மன்னர்களின் போர் சாகசங்களை விளக்கும் வண்ணம் மல்லர் கம்பம் என்ற சாகச போட்டியில் சிறுவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாப் பயணிகள் கண்டு வியக்கும் வகையில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு ஆடிய கரகாட்டம், பாரம்பரிய கலை நிகழ்ச்சியான பொய்க்கால் குதிரை ஆட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் திண்டுக்கல் குழுவினரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தில் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு சுத்தல், சுருள் வாள்வீச்சு நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்களை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடையும் வகையில் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவ்வப்போது சாரல் மழை தலை காட்டினாலும் அதை பொருட்படுத்தாது மலர் கண்காட்சி நிகழ்வுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
26-ந்தேதி தொடங்கிய மலர்கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோடைவிழாவும் நீட்டிக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோரின் அனுமதிபெற்று மேலும் 2 நாட்கள் 30-ந்தேதி வரை மலர்கண்காட்சி நீட்டிக்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
- தமிழகத்தில் கோடைவெயில் காரணமாக பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
- சுமார் 1 கோடிக்கும் மேலான பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் விதமாக கடந்த 26-ந்தேதி கோடைவிழா மலர் கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 3 நாட்கள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கோடைவெயில் காரணமாக பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனால் மலர் கண்காட்சி 2 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்றுவரை நடைபெற்ற மலர் கண்காட்சி நிறைவுபெற்றது. சுமார் 1 கோடிக்கும் மேலான பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகையால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. எனவே பலர் ஊர் திரும்ப தொடங்கி உள்ளனர். இதனால் கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 6 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 59 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வருவாய் ரூ.19 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு 65 ஆயிரத்து 971 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் மூலம் ரூ.20லட்சத்து 27 ஆயிரத்து 775 வசூல் ஆகி உள்ளது.
கடந்த ஆண்டை விட கூடுதல் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மேலும் வருவாயும் அதிகரித்துள்ளது என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.