என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வரும் மே 29ம் தேதி விண்வெளி செல்கிறார்.
    • அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் அவர் செல்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து 2025ல், 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

    ஆக்ஸியம் மிஷன் 4 திட்டத்தின் பைலட்டாக இந்திய விமானப் படையில் அனுபவம் வாய்ந்த விமானியான சுபான்ஷு சுக்லா பணியாற்றுவார்.

    இந்நிலையில், வரும் மே 29ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் சுபான்ஷு சுக்லா விண்வெளி செல்கிறார். மே 29ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:33 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் ஏவப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவரான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா (39), 2006ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு 2000 மணிநேரம் வானில் பறந்த அனுபவம் உள்ளவர். சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது அவரது உயிர் பிரிந்தது.
    • பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

    உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.

    மறைந்த கஸ்தூரி ரங்கன் 1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பணியாற்றினார். இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர்.

    2003 முதல் 2009 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை குழுவின் தலைவராகவும் இருந்தார். இவரது சேவைக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது அவரின் மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படும் என்றும், நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தற்போது, ​​இந்தியா சுமார் 55 செயற்கைக்கோள்களை இயக்குகிறது.
    • செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கிறது என்றார்.

    எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்தியா மேலும் 100-150 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

    தற்போது, இந்தியா சுமார் 55 செயற்கைக்கோள்களை இயக்குகிறது.  பரந்த எல்லையையும் 7,500 கி.மீ கடற்கரையையும் கொண்ட ஒரு நாட்டிற்கு, இது போதுமானதாக இல்லை என்று நாராயணன் கூறினார்.

    விண்வெளித் துறையின் செயலாளரான நாராயணன், இந்தக் காரணங்களால்தான் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார், இது ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கிறது என்றார். 

    • ஏவப்படும் சாத்தியமான தேதி குறித்தும் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.
    • விண்வெளியில் பறக்கும்போது அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக 'நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இதன் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், வள மேலாண்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவு தகவல்களையும் வழங்கும்.

    இதனை கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது நிசார் செயற்கைக்கோளில் உள்ள பூமி மற்றும் ரேடார் ஆண்டெனா பிரதிபலிப்பானைப் பயன்படுத்துவதற்கு சாதகமான நிலை இல்லாத "கிரகணப் பருவம்" காரணமாக ஏவுதலில் தாமதம் ஏற்பட்டது. சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக 2025-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் விண்வெளியில் ஏவுவதற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியா-அமெரிக்கா கூட்டு ஏவுதல் மீண்டும் இந்த ஆண்டு இறுதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏவப்படும் சாத்தியமான தேதி குறித்தும் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, 'நிசார் செயற்கைக்கோள் வருகிற மே அல்லது ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் சோதனையில் செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட்டபோது, நிசார் செயற்கைக்கோளில் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதாவது, நிசார் செயற்கைக்கோளில் உள்ள 12 மீட்டர் விட்டம் கொண்ட 'பிரதிபலிக்கும் ஆண்டெனா' விண்வெளியில் பறக்கும்போது அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதை நிவர்த்தி செய்வதற்காக பிரதிபலிக்கும் ஆண்டெனா அதிக வெப்பமடைவதை தடுக்க ஒரு சிறப்பு வெப்ப பூச்சுக்காக அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. பூச்சு பயன்படுத்தப்பட்ட பிறகு நிசார் செயற்கைக்கோளுடன் மிண்டும் ஒருங்கிணைப்பதற்கும், மேலும் சோதனை செய்வதற்கும் ஆண்டெனா இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. பணிக்கான ஏவுதளத் தயார்நிலை தேதியை வரும் வாரங்களில் நாசா-இஸ்ரோ தீர்மானிக்கும்' என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'நிசார் செயற்கைக்கோள் மீண்டும் பல்வேறு கட்ட சோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால், நிசார் செயற்கைக்கோள் ஏவுதல் தேதியை இந்த ஆண்டின் இறுதிக்கு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்7 ஆர் செயற்கைக்கோள் தரவுகளை அளித்து வருகிறது.
    • இஸ்ரோவின் லட்சியத் திட்டத்தை பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் அறிவித்துள்ளார்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை, பேரிடர் தகவல்கள், பல்வேறு வகையிலான தகவல் தொடர்புகள், பூமி கண்காணிப்பு, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

    அந்த வகையில், இந்திய கடற்படையின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கடந்த 2013-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7. இதேபோல், இந்திய விமானப்படைக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு மேம்பட்ட ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ. அத்துடன், எஸ்- பாண்டு அதிர்வெண்ணில் தகவல் தொடர்பு பணியில் ஜிசாட்-6 செயற்கைக்கோள் செயல்படுகிறது.

    இந்திய கடற்படையின் ஜிசாட்-7 ருக்மிணி செயற்கைக்கோளுக்கு மாற்று செயற்கைக்கோளாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்7 ஆர் செயற்கைக்கோள் தரவுகளை அளித்து வருகிறது.

    இதற்கிடையில், இந்திய ராணுவம் அதன் சொந்த தனிப்பட்ட பணிக்காக ஜிசாட்-7பி என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதன்மூலம் எல்லைப் பகுதிகளில் அதன் கண்காணிப்பு திறன்களை மேலும் மேம்படுத்த இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு (2026) விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில். ஜிசாட்- 7 பி மேம்பாட்டிற்காக மத்திய அரசு நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் (என்.எஸ்.ஐ.எல்.) ரூ.3 ஆயிரத்து 100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு உள்ளது.

    இந்தியாவின் ராணுவ விண்வெளி கோட்பாடு, விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள், விண்வெளி குப்பைகள் மற்றும் மின்னணு போர் ஆகியவற்றின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும் நிவர்த்தி செய்யும். அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவின் வரிசையில் சேர்ந்து, பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் ஒரு செயற்கைக்கோளை அழிக்கும் திறனை இஸ்ரோ ஏற்கனவே நிரூபித்துள்ளது. இந்திய விண்வெளி சொத்துகள் அபாயகரமான சூழல்களில் பாதுகாப்பாக செயல்படுவதையும் உறுதி செய்வதை இந்த ராணுவக் கோட்பாடு நோக்கமாக கொண்டுள்ளது.

    'பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைகளை கண்காணிப்பதற்கும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், மேம்பட்ட சென்சார்கள், உயர் தெளிவுத்திறன் படங்களின் அமைப்புகள் மற்றும் அனைத்து வானிலை நிலைகளிலும் 24 மணி நேரமும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் ராணுவ செயற்கைக்கோள்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

    இந்தியாவின் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்தும் மற்றொரு முயற்சியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய ராணுவத்துக்கான உளவுத்துறை சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்காக ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 பிரத்யேக செயற்கைக்கோள்களை ஏவ உள்ளன. இஸ்ரோவின் லட்சியத் திட்டத்தை பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் அறிவித்துள்ளார்.

    இது இந்தியாவின் ராணுவ விண்வெளி கோட்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல். இந்த செயற்கைக்கோள்கள், தாழ் பூமி சுற்றுப்பாதை, நடுத்தர பூமி சுற்றுப்பாதை மற்றும் புவிநிலை சுற்றுப்பாதை உள்ளிட்ட பல சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • 4 மூத்த விஞ்ஞானிகள் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர்.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ஏ.ராஜராஜன்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் மையங்களில் பணியாற்றி வரும் 4 மூத்த விஞ்ஞானிகளுக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் நிலேஷ் எம். தேசாய், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலாவில் உள்ள திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் எம்.மோகன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ஏ.ராஜராஜன், தமிழ்நாடு, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆரய்ச்சி நிறுவன உந்து விசை வளாக இயக்குனர் ஜெ.பாக்கியராஜ் ஆகிய 4 மூத்த விஞ்ஞானிகள் இந்த மையங்களில் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் பணி ஓய்வு பெற இருப்பதையொட்டி, மேலும் 1 ஆண்டுகள் இவர்களுடைய பணிக்காலத்தை நீட்டிப்பு செய்து, மத்திய பணியாளர் அமைச்சகத்தின் நியமனக் குழு செயலகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    • விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிறுவப்பட்டு சந்திரயான்-3 திட்டம் முழுமை பெற்றது.
    • இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன

    சந்திரனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-5 திட்டப்பணிக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றதற்காக நேற்று நடைபெற்ற வாழ்த்து நிகழ்ச்சியில் பேசிய நாராயணன், 25 கிலோ எடையுள்ள 'பிரயாக்யான்' ரோவரைச் சுமந்து சென்ற சந்திரயான்-3 மிஷன் போலல்லாமல், சந்திரயான்-5 மிஷன் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 250 கிலோ எடையுள்ள ரோவரை எடுத்துச் செல்லும்.

    சந்திரயான் என்பது சந்திர மேற்பரப்பை ஆய்வு செய்யும் திட்டம். 2008 ஆம் ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-1, சந்திரனின் வேதியியல், கனிமவியல் மற்றும் புகைப்பட-புவியியல் வரைபடத்தை எடுத்தது.

    2019 இல் ஏவப்பட்ட சந்திரயான்-2, 98 சதவீத வெற்றியைப் பெற்றது. ஆனால் இறுதி கட்டங்களில் இரண்டு சதவீத பணியை மட்டும் முடிக்க முடியவில்லை. இன்னும் சந்திரயான்-2 இல் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நூற்றுக்கணக்கான படங்களை அனுப்பி வருகிறது.

    சந்திரயான்-3 மிஷன் என்பது சந்திரயான்-2 இன் தொடர்ச்சியான பயணமாகும். ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிறுவப்பட்டு சந்திரயான்-3 திட்டம் முழுமை பெற்றது. 2027-ல் தொடங்கப்படும் சந்திரயான்-4 திட்டம் நிலவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே மூன்று நாட்களுக்கு முன்புதான் சந்திரயான்-5 திட்டத்திற்கான ஒப்புதல் எங்களுக்குக் கிடைத்தது. ஜப்பானுடன் இணைந்து நாங்கள் அதைச் செய்வோம் என்று நாராயணன் கூறினார்.

     

    மேலும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசிய நாராயணன், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

    • விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
    • ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    புதுடெல்லி:

    விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோவின் பட்டியலில் இருக்கிறது.

    மிகப்பெரிய இந்தத் திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில்நுட்ப ஆய்வு அதாவது 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை'க்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

    அதன்பின், பல கட்ட முயற்சிகளுக்குப்பின் கடந்த ஜனவரி 16-ம் தேதி விண்ணில் வைத்தே இந்த 2 செயற்கைக்கோள்களையும் ஒன்றாக இணைத்தது. இதன்மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.

    இதற்கிடையே, விண்வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள்களை தனித்தனியாகப் பிரித்து ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இப்பணி வரும் 15-ம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருந்தார். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களைப் பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்தது.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வோர் இந்தியனுக்கும் இந்த நிகழ்வு மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

    வருங்காலத்தில் பாரதீய அந்திரிக்சா நிலையம், சந்திரயான்-4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட திட்டங்களை எளிதில் மேற்கொள்ள வழியேற்படுத்தும் வகையில் உள்ளது. பிரதமர் மோடியால் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவானது மன உறுதியை அதிகரிக்கச் செய்கிறது என பதிவிட்டுள்ளார்.


    • ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
    • குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரே நேரத்தில் 2 புதிய ஏவுதளங்களை உருவாக்கி திறன்களை விரிவுபடுத்த உள்ளது. குறிப்பாக, ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.

    தற்போது 30 டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் திறன் கொண்ட 3-வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த 2 ஏவுதளங்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பதுடன், திறன்களையும் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

    • ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5000 மாணவர் விண்ணப்பித்த நிலையில் 75 மாணவர்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர்.
    • தனது அக்கா மோனிஷா முயற்சியால் இதில் கலந்துகொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் வேலா. இவர் கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 மாணவர்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ நரேந்திர மோடி உரையாற்றினார். இதற்கு 26 மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவர்கள் தேர்வு செய்து அவர்கள் மூலம் அகஸ்தியர் சுற்று‌ச்சூழல் செயற்கைகோள் ஒன்றினை விண்ணில் ஏவ உள்ளனர்.

    இதில் ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5000 மாணவர் விண்ணப்பித்த நிலையில் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டார். இதில் பத்மபூஷன் டாக்டர் சிவதாணு பிள்ளை மாணவர்களுக்கு செயற்கைக்கோள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் இணைய வழி மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டது. இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சஞ்சய் வேலா பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மற்றும் டி ஆர்டிஓ நிலையங்களில் மாணவர்களும் ஆசிரியர்களிடம் சேர்ந்து பயிற்சியில் பங்கேற்க நாளை (2ஆம் தேதி) செல்ல உள்ளார்.

    தற்பொழுது ஆண்டிமடம் பகுதியில் உள்ள பலரும் அரசு பள்ளி மாணவரை பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து அரசு பள்ளி மாணவன் சஞ்சய் வேலா கூறுகையில், தனது அக்கா மோனிஷா முயற்சியால் இதில் கலந்துகொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன். மேலும் இஸ்ரோவிலும் நான் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும். மேலும் இஸ்ரோ விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பது தனது லட்சியமாக கூறினார். போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தனக்கு யாரேனும் உதவிகள் செய்தால் நிச்சயமாக நான் அதை செய்து காண்பிப்பேன் என்று கூறினார்.

    இதுகுறித்து செய்தி அறிந்த அழகாபுரம் தலைவர் கலியபெருமாள், ரீடு தொண்டு நிறுவனர் ரீடுசெல்வம் மற்றும் விளந்தை தலைவர் வக்கீல் நடராஜன், ஓசை சண்முகம், சக்தி உள்ளிட்டோர் மாணவனை அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தியதுடன் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டி நிதி உதவியும் வழங்கினர்.

    • நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
    • இத்திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல சுவாரஸ்ய தகவல்கள் கண்டறியப்படலாம் என இஸ்ரோ தெரிவித்தது.

    டேராடூன்:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரகாண்டின் டேராடூனில் ஆகாஷ் தத்வா மாநாடு நடந்தது. இதில் அலகாபாத் சார்பு இயற்பியல் ஆய்வக இயக்குனர் அனில் பரத்வாஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டத்தின்படி, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    சூரிய வெளிச்சமே இல்லாத நிரந்தர இருளைக் கொண்ட நிலவின் மறுபக்கத்தைக் குறித்து ஆய்வு செய்ய இந்த திட்டம் உதவும்.

    இந்த திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கண்டறியப்படலாம் என தெரிவித்தார்.

    • இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.
    • இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட் ஏவும் பணிக்கு 'மிஷன் பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

    ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஏவப்படவில்லை. வருகிற 18-ந்தேதி வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட், வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.

    3 நிலைகளை கொண்ட ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 480 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

    ×