என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர் தாக்குதல்"

    • விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.
    • லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

    பல்வேறு விசாக்களில் இந்தியா வந்த பாகிஸ்தானியர் வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது. 'சார்க்' விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26-ந் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27-ந்தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29-ந் தேதிக்குள்ளும் வெளியேறகெடு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி வசித்து வந்தது தெரியவந்தது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹனீப்கான் (வயது 39). இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த உறவினரான பஷியா பானு (38) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் பஷியா பானு புதுச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார்.

    இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாகிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்கான விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாகியில் தங்கிவிட்டார்.

    இந்த நிலையில் பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவில் இருந்து வெளியேற புதுச்சேரி வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இவர்களின் விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் தெலுங்கானா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
    • போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகரி:

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் தெலுங்கானா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. பாகிஸ்தானியர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் மீது மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

    இந்தநிலையில் ஐதராபாத்திற்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். முகம்மத் பயாஸ் என்ற வாலிபர் ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    மனைவியை சந்திப்பதற்காக பயாஸ் இந்தியாவிற்கு எந்தவித விசாவும் இல்லாமல் நேபாளம் வழியாக ஐதராபாத் வந்துள்ளார்.

    பயாசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகிஸ்தானுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துள்ளது.
    • உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    பாகிஸ்தானுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, எல்லைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.

    இதையடுத்து பாகிஸ்தானும் பதிலடியாக இந்திய விமானங்கள் தங்களது நாட்டு வான் எல்லையை பயன்படுத்த தடை விதித்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ் டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்த பாகிஸ்தான், இத்தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா முகமது ஆசிப் கூறியதாவது:-

    பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச ஆய்வாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பாகிஸ்தான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. இந்தப் போர் வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இந்தப் போர் வெடிப்பது இந்தப் பிராந்தியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.

    பயங்கரவாத தாக்குதலின் பின்விளைவை இந்தியா ஒரு சாக்காகப் பயன்படுத்தி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து உள்ளது. உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.

    எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானைத் தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா செயலிழந்து போய் இருக்கிறது. பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தாக்குதல்களைத் திட்டமிடவோ அல்லது நடத்தவோ எந்த திறனும் அந்த அமைப்பிடம் இல்லை.

    அந்த அமைப்பில் உள்ள எஞ்சியிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுக் காவலில் உள்ளனர், மேலும் சிலர் காவலில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் விடுமுறைகளை அரசு ரத்து செய்துள்ளது. மேலும் பலூச் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் இருந்து வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் எல்லையில் வீரர்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.

    • டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள்.
    • காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காஷ்மீரின் பகல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது.

    டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவரும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட வருமான ஹபீஸ் சயீத் மற்றும் துணை தலைவர் சைபுல்லா ஆகியோரால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பஹல்காம் தாக்குதலில் ஹபீஸ் சயீத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள். எப்போதுமே ஒரு தாக்குதலை நடத்திவிட்டு காட்டுக்குள் சென்று பதுங்கு குழியில் இருப்பார்கள். பாகிஸ்தானில் இருந்து புதிய தாக்குதலுக்கு உத்தரவுகள் வரும் வரை அடர்ந்த காட்டு மறைவிடங்களில் ஒளிந்து கொள்வார்கள். மேலும் டி.ஆர்.எப். அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை ஆகியவை உதவிகள் செய்து வருவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த அமைப்பில் பெரும்பாலான வெளி நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சோனமார்க், பூனமார்க் மற்றும் காண்டர்பால் உள்பட காஷ்மீர் முழுவதும் பல தாக்குதல்களுக்குப் பின்னணியில் டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.

    ஓசூர்:

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து தமிழகத்திலும் முக்கிய சுற்றுலாத்தலங்கள், மாநில எல்லைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள், பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பொருட்கள் ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலம் ரெயில்வே போலீசார் முழுமையாக சோதனையிட்டனர். மேலும் தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.

    இதே போல், ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடி பகுதியில் வெளி மாநிலங்களிலிருந்து ஓசூர் நோக்கி வந்த கார்கள், வேன்கள் ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை சிப்காட் போலீசார் முழுமையாக சோதனை செய்த பிறகே, மேற் கொண்டு பயணிக்க அனுமதித்தனர்.

    • பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
    • சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார்.

    நாகர்கோவில்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் காஷ்மீர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகர்கோவில் நகர பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர்கள் பொது இடத்தில் அமைதியை கெடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதாக வடசேரி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்த முருகன், வடசேரி வெள்ளாளர்கீழ தெருவை சேர்ந்த சுனில் அரசு (வயது32) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் மீது கடந்த வாரம் தான் வடசேரி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டின் பெயர் பலகை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முருகன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

    • தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது.
    • காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது. அங்கு சுற்றுலா சென்ற தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பீதியில் உறைந்தனர்.

    அவர்கள் தங்களது மாநிலத்துக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்த படி இருக்கின்றனர். காஷ்மீரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் காஷ்மீரில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கேரளாவை சேர்ந்த மொத்தம் 258 பேர் அங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உதவுவதற்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த உதவி மையத்தின் 26 குழுக்களில் 262 பேர் பதிவு செய்திருந்ததாகவும், அவர்களில் 4 பேர் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மற்ற 258 பேரும் காஷ்மீரில் இருந்து திரும்ப முடியாமல் அங்கேயே தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர். சித்திக், முகேஷ், மஜீத், அன்சலன் ஆகியோர் தலைமையிலான கேரள சட்டமன்ற உத்தரவாத குழு ஐம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி ஆகிய இடங்களுக்கு 9 நாள் சுற்றுப் பயணத்துக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் முதலில் காஷ்மீருக்கு சென்றிருந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டனர். அவர்களும் காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் தங்கியுள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தால் எம்.எல்.ஏ.க்கள் குழு தனது சுற்றுப்பயண திட்டத்தை மாற்ற உள்ளது.

    காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக ஏற்பாடுகளை கேரள மாநில அரசு செய்து வருகிறது.

    • தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.

    சென்னை:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு சுற்றுலா சென்றுள்ள தமிழக சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மொத்தம் 140 பேர் காஷ்மீர் சென்றிருந்தது தெரிய வந்தது.

    இவர்கள் அனைவரும் காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்தனர். ஒவ்வொருவரும் அடுத்த வாரம் பல்வேறு தேதிகளில் திரும்பி வருவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

    தற்போது அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் ஒவ்வொருவரும் உடனே தமிழ்நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

    அதன் பேரில் அங்கு சென்றிருந்த தமிழக சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களை பத்திரமாக ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    இதையொட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள பயணிகளை ஒருங்கிணைக்க புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் அல்தாப் ரசூ லையும் காஷ்மீருக்கு அரசு அனுப்பி வைத்தது. இவரது சொந்த ஊர் காஷ்மீர் என்பதால் இவர் அங்குள்ள சுற்றுலா பயணிகளை வேகமாக ஒருங்கிணைத்து ஆங்காங்கே உள்ள விடுதிகளில் தங்க வைத்து அதன் விவரங்களை தமிழக அரசுக்கு தெரிவித்து வந்தார்.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சாப்பாடு வசதி, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து காஷ்மீரில் இருந்து டெல்லி வழியாக ஊருக்கு செல்ல விரும்புபவர்களை அனுப்பி வைத்தார்.

    அதன்படி நேற்று மதியம் தமிழக சுற்றுலா பயணிகள் 35 பேர் தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு வந்தனர். அவர்களை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், ஆணையர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்று அரசு இல்லத்தில் உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தனர். இவர்கள் 35 பேரும் நேற்றிரவு 9 மணிக்கு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

    மேலும் 19 பேர் காஷ்மீரில் இருந்து தமிழக அரசின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு ஐதராபாத் வழியாக விமானம் மூலம் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

    விமான நிலையத்தில் அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி தழுவி வரவேற்றனர். இதில் 14 பேர் மதுரையை சேர்ந்த வர்கள். 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இவர்கள் 19 பேரையும் தமிழக அரசு அதிகாரிகள் வாகனங்களை ஏற்பாடு செய்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதே போல் இன்றும் காலையில் காஷ்மீர் மற்றும் டெல்லியில் இருந்து 50 பேர் விமானம் மற்றும் ரெயில் மூலம் சென்னை வந்த டைந்தனர்.

    காஷ்மீர் சுற்றுலா சென்ற 140 பயணிகளில் இதுவரை 100 பேர் தமிழகம் திரும்பி உள்ளதாகவும், இன்னும் 40 பேர் அடுத்தடுத்த விமானங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காஷ்மீரில் இருந்து அழைத்து வரப்படும் தமிழக பயணிகள் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த ரிட்டன் டிக்கெட்டை முன் கூட்டியே உடனே பயன் படுத்தி பயணம் செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உதவியது. அதே போல் தமிழகத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் இங்குள்ள அரசு அதிகாரிகள் உதவி செய்து கொடுத்திருந்தனர்.

    நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் சென்னை வந்து சேரும். அதில் உள்ள சுற்றுலா பயணிகளை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க சென்டிரலில் வாகன வசதி தயாராக செய்து வைக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து தமிழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காஷ்மீரில் குண்டு காயம் அடைந்த மதுரையை சேர்ந்த பாலசந்துரு அனந்தநாக் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரது மனைவி உடன் இருக்கிறார்.

    இதே போல் அங்கு சிகிச்சையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த பரமேஷ்வர் (வயது 31), சந்துரு (வயது 83) ஆகியோரும், இவருடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மதுசூதனராவ் என்பவரின் உடல் விமானம் மூலம் இன்று சென்னை வந்து, பின்னர் இங்கிருந்து நெல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காஷ்மீரைச் சேர்ந்த வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
    ஜார்கண்ட்:

    காஷ்மீரை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க வியாபாரி குளிர்கால ஆடைகளை விற்பனை  செய்து வருகிறார். ஜார்காண்டில் இவரும், சக வியாபாரிகளும் இணைந்து நேற்று ஆடைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

    அப்போது, இவர்களை சுற்றி வளைத்த 25 பேர் கொண்ட மர்ம நபர்கள், ‘ஜெய் ஸ்ரீராம், பாகிஸ்தான் ஒழிக’ என்று கோஷமிடும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் கோஷமிட மறுத்ததை அடுத்து,  அந்த கும்பல் வியாபாரிகளை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் போலீசாரிடம், புகார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில் வியாபாரிகள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் பாதிப்புக்குள்ளான வியாபாரி, “காஷ்மீரை சேர்ந்தவர்களாக இருப்பது எங்கள் குற்றமா? நாங்கள் இந்தியர்கள் இல்லையா ? அவர்கள் எப்போதும் ஜெய் ஸ்ரீராம், பாகிஸ்தான் ஒழிக என்று கோஷமிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

    நாங்கள் நால்வரும் இரக்கமின்றி தாக்கப்பட்டோம். நாங்களும் இந்தியர்கள்தான். சட்டம் அனைவருக்கும் சமமானது. மதத்தைக் கொண்டு பாகுபாடு காட்டக் கூடாது” என ஆவேசமாக கூறுகிறார்.

    இந்த வீடியோவை பார்த்த அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், “குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரவித்துள்ளனர்.
    இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #Terroristsplan
    புதுடெல்லி:

    இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிகை விடுத்து உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலைப் போல, மற்றுமொரு தாக்குதலை காஷ்மீரில் அரங்கேற்ற, இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றன. #Terroristsplan 
    காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரமான ரேடார் பதிவுகளை இந்தியா இன்று வெளியிட்டது. #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் ஏற்பட்டது. 

    அப்போது பாகிஸ்தானின் எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைந்த பாகங்களையும் இந்தியா வெளியிட்டது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்தது. 

    நாங்கள் சுட்டு வீழ்த்தியது எப்-16 ரக போர் விமானம்தான் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்-16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

    இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரின் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானிடம் எத்தனை எப்-16 ரக விமானங்கள் உள்ளது? என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. 

    இதற்கு இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்திருந்தது. “இருதரப்பு வான்மோதலின்போது இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் ரக விமானம், பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை நவ்ஷேரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஆணித்தரமாக கூறியுள்ளது. 

    மேலும், பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று பாகிஸ்தானில் உள்ள நிலைக்கு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் விமானப்படை தகவல் தொடர்புத்துறை உயரதிகாரி மைக் மூலம் தெரிவித்த கருத்தும் இதை உறுதிப்படுத்துவதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்தியாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரத்தை இந்திய விமானப்படையின் துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் இன்று வெளியிட்டுள்ளார்.

    பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்திய ரேடார் பதிவுகளை செய்தியாளர்களுக்கு துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் காட்சிப்படுத்தினார். இதைவிட அதிக வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால், பாதுகாப்பு மற்றும் நாட்டின் அதிமுக்கிய ரகசியம் என்னும் வகையில் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் (ஊடகங்களுக்கு) பகிரங்கமாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison 
    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ் இ முஹம்மது இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க மேலும் ஆதாரங்களை அளிக்குமாறு பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. #Pakistanseeksevidence #Pulwamaattack
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கான ஆதாரங்களை இந்திய அரசு கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் மசூத் அசார் உள்பட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. மேலும், எல்லைப்பகுதியில் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்கள் தொடர்பாக இந்திய அரசிடம் உள்ள உளவுத்துறை தகவல்களும் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவர்கள் அனுப்பிய தகவலில் இவர்களுக்கு எல்லாம் தொடர்பு இருப்பதாக ‘கருதப்படுவதாக’ மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், ஒரு வியக்கத்தக்க முன்னேற்றமாக இந்திய அரசு முன்னர் அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நடத்திய விசாரணை மூலம் அறியவந்த விபரங்களை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதருடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று பரிமாறி கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் அளித்திருந்த வாக்குறுதியின்படி, புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் இன்று இந்திய தூதரிடம் பரிமாறப்பட்டது.

    இவ்விசாரணையை மேற்கொண்டு முன்னெடுத்து செல்லும் வகையில் இந்தியாவிடம் இருந்து மேலும் சில ஆதாரங்கள் கோரப்பட்டுள்ளது என பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Pakistanseeksevidence  #Pulwamaattack
    ×