என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை கடற்படை"

    • இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
    • காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான எஞ்சின், ஜிபிஎஸ், 2 செல்போன்கள், பேட்டரி மற்றும் 30 கிலோ மீன்களை பறித்துச் சென்றனர்.

    • 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
    • இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது?

    சென்னை:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பிறகுதான், தமிழக மீனவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கடலுக்குள் சென்று மீனவர்கள் கரை திரும்பும் சூழல் உள்ளது.

    அந்தவகையில் தற்போது கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் சமீபத்தில் சூடுபிடித்தது. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களும் காத்திருக்கிறார்கள்.

    இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி வரையிலான நிலவரப்படி, எவ்வளவு மீனவர்கள் பிடிபட்டார்கள்? அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் விவரங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது.

    அதன்படி, 2015-ம் ஆண்டில் இருந்து கடந்த மார்ச் 22-ந்தேதி வரையில் கடந்த 11 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 870 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் 526 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.

    இதுதவிர, இலங்கை கடல் பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளில் 104 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

    தமிழகம் மட்டுமல்லாது, பிற பகுதிகளில் இருந்து அதாவது, இந்திய மீனவர்களாக எல்லை தாண்டி கடந்த 11 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில், 2 ஆயிரத்து 919 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதே ஆண்டுகளில் 346 மீன்பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன.

    இதுபோக, 22.3.2025 வரையிலான நிலவரப்படி, 86 இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர்கள் உள்பட) இலங்கை சிறையில் இருக்கின்றனர். அதேபோல், 225 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேர் கைது.
    • மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    இதனை கண்டித்து கடந்த மாதம் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவோடு ஏந்தியும், கஞ்சி காய்ச்சியும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது ராமேசுவரம் வந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, போராட்டத் தில் ஈடுபட்ட மீனவர்களை நேரடியாக சந்தித்து பேசினார்.

    மேலும் மத்திய, மாநில அரசுகளிடம் பேசி மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து சென்றார்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை மேலும் 11 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதிச்சீட்டு பெற்று 400 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலையில் அவர்கள் வடக்கு கடல் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டனர்.

    இருந்தபோதிலும் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெர்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த பாம்பனை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 38), சவேரியார் அடிமை (35), முத்துகளஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), இன்னாசி (25), கிறிஸ்து (45), ஆர்னாட் ரிச்சே (36), ராமே சுவரத்தை சேர்ந்த பாலா (38), தங்கச்சிமடத்தை சேர்ந்த யோவான்ஸ் நானன் (36), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய 11 பேரையும் சிறைபிடித்தனர்.

    மேலும் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் பறிமுதல் செய்துகொண்ட இலங்கை கடற்படையினர், அவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 11 பேரிடம் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை மீன்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 11 பேரும் ஒரு விசைப்படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

    பின்னர் ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என என இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்திக்கவும் இரு நாட்டு நல்லெண்ண அடிப்படையில் ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.

    நேற்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து பேசிய நிலையில் இன்று மீண்டும் 11 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

    • மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
    • ஆறு பேர் கொண்ட குழு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பாக் ஜலசந்தியில் மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.

    கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் காரணமாக, அப்பகுதி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதிலிருந்து ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை வைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கைது செய்து வந்த இலங்கை அரசு இதன் மூலம் தமிழக மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் பல அரசியல் வாதிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளனர். ஆனால் சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமலே சென்று கொண்டிருக்கிறது.

    இதனிடையே ராமேசுவரம் மீனவர்கள் முயற்சியால் ராமேசுவரத்திலிருந்து விசைப்படகு தலைவர் ஜேசு ராஜா, சகாயம், ஆல்வின், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய் கிழமை) விமானம் மூலம் புறப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சென்றடைகின்றனர்.

    ஏற்கனவே நாகப்பட்டினம் சேர்ந்த சுரேஷ் என்பவர் இலங்கையில் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு நாளை புதன்கிழமை அன்று வாவுலியாவில் உள்ள அருந்ததி தனியார் தங்கும் விடுதியில் இருநாட்டு மீனவர்களும் சந்தித்து காலை 10 மணி அளவில் சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகளை ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர்களையும் மற்றும் அதற்குரிய அதிகாரிகளையும் சந்தித்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்று விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

    • இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்தது.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும், கைது செய்து இலங்கை சிறைகளில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
    • மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் சிங்கள அரசு இந்த அட்டூழியங்களை தொடர்ந்து வருகிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று விசைப்படகுகளில் மீன்துறை அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு பாரம்பரிய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது நள்ளிரவு அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளிண்டன், பேதுரு, வினிஸ்டன், தயான், மரியான், தாணி, ஆனஸ்ட் ஆகிய 7 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமைப் பெற்றுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும், கைது செய்து இலங்கை சிறைகளில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் சிங்கள அரசு இந்த அட்டூழியங்களை தொடர்ந்து வருகிறது. மத்திய அரசு உடனடியாக தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
    • அவர்களின் 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

    இந்நிலையில் கச்சத்தீவு- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் 15 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

    • கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர்.
    • மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.

    ராமேஸ்வரம்:

    இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வது, விரட்டியடிப்பது உள்ளிட்ட சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்ந்தபடியே இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று சுமார் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் படகில் ரோந்து வந்துள்ளனர். 10 படகுகளில் வந்த அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்திருப்பதாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அவர்கள் சரமாரி தாக்கி உள்ளனர்.

    மேலும் அவர்களது படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அனைவரும் கடலில் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.

    அவர்கள் இன்று அதிகாலை ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு வந்தனர். இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கி, வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்தது குறித்து சக மீனவர்களிடம் கூறினர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த எங்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். மேலும் நாங்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் நாங்கள் மீன்பிடிக்க வழியின்றி தவிக்கிறோம். எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பது வாடிக்கையாகவே இருக்கிறது.
    • எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கொழும்பு:

    ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டியடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைப்பிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது.

    இந்நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே 14 இந்திய மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    • கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
    • மீனவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    காரைக்கால்:

    காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரிமேடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் தினேஷ்குமார், சிவக்குமார், கிஷோர், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த அசோக், அழகர் உள்ளிட் 16 பேர் கடந்த 15-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 பேரையும் கைது செய்தனர். மீனவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவல் கோட்டுச்சேரி கிராம மீனவர்களுக்கு எட்டியது. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே காரைக்கால் மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அப்போது மீனவர்கள் மற்றும் படகை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.

    • இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.
    • ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த தமிழக மீனவக் குடும்பங்களும் கவலை அடைந்துள்ளனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்தபோது மீனவர்கள் பயந்த நிலையில் அங்கிருந்த தப்பித்தனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த தமிழக மீனவக் குடும்பங்களும் கவலை அடைந்துள்ளனர்.

    மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது.
    • இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    சிங்கள கடற்படையினரின் அத்துமீறலை பா.ம.க. தொடர்ந்து கண்டித்து வருகிறது. மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா.

    மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×