search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பெருக்கு"

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிபெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று முதல் தடையை நீக்கி பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களாக 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் கடந்த 25 நாட்களாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லில் நீர் வரத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு படிபடியாக குறைந்து 18 ஆயிரம் கனஅடிக்கும் குறைவாக வந்தது. நேற்று 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிப்பெருக்கு விழா தொடங்க உள்ளது. இந்த விழா இன்று தொடங்கி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    ஆடிபெருக்கையொட்டி ஒகேனக்கல்லில் இன்று குளிக்க தடை விலக்கப்பட்டது. ஆனாலும் மெயினருவில் வெள்ளபெருக்கின்போது தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டதால், அருவியில் குளிக்க பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதால் மெயினருவில் மட்டும் குளிப்பதற்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஆடிப்பெருக்கை யொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்துள்ள புதுமண தம்பதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று அதிகளவில் ஏராளமானோர் குவிய தொடங்கினர். அவர்கள் குளிப்பதற்காக மெயினருவி செல்லும் பாதையின் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சுற்றிலும் தடுப்புகள் அமைத்து குளிக்க அனுமதித்தனர்.

    இதுபோன்று காவிரி ஆற்றங்கரையோரம் முறையான தடுப்புகள் அமைத்து சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்று இன்று முதல் பரிசல் இயக்கவும் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இன்று காலை மாற்றுவழி பாதையான கோத்திக்கல் பாறையில் சப்-கலெக்டர் சிவனஅருள் மற்றும் முன்னாள் மாவட்ட சேர்மன் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் பரிசலை இயங்கி தொடங்கி வைத்தனர்.

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிபெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று முதல் தடையை நீக்கி பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க காவிரி ஆற்றங்கரையோரம் மற்றும் குறைவாக நீர் செல்லும் பாதையில் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கயிறு, ரிங் மற்றும் லைப்ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    தற்போது நீர்வரத்து சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் குளிக்க தடைவிதிக்கப்படும். தொடர்ந்து நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்

    இதுபோல் பரிசல் இயக்க வழக்கமாக ஊட்டமலை, மாமரத்துகவுடு, கோத்திக்கல்பாறை ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இன்று கோத்திக்கல்பாறை என்ற இடத்தில் மட்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இயங்கும் மாமரத்துகடுவு பகுதியில் 4 ஆயிரம் கனஅடி அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே பரிசல் இயக்க அனுமதி வழங்கப்படும்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேலும் அதிகமானல் பரிசல் இயக்க மீண்டும் தடைவிதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 26 நாளாக ஒகேனக்கல்லில் வந்து குளிக்க முடியாத தவித்து வந்த சுற்றுலாபயணிகள் இன்று ஆடிப்பெருக்கு நாளில் மகிழ்ச்சியாக குளித்தும், பரிசலிலும் பயணித்தனர். #Hogenakkal #Cauvery



    விவசாயிகள் இன்று தாங்கள் தொடங்கும் விவசாயம் நல்ல பலனை தர வேண்டும் என ஆற்றில் குளித்து புத்தாடை அணிந்து விரதத்துடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.
    தமிழ் மாதமாகிய ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையே ‘ஆடி 18’. இதனை ஆடி பெருக்கு எனவும் கூறுவர். பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் இல்லாமல் தர வேண்டும் என இயற்கையை வழிபடுவதே இப்பண்டிகையின் நோக்கம்.

    இயற்கை அன்னையை அம்மனாக பாவித்து இம்மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விழா எடுப்பர். ஆடி மாதத்தில் ஆறு, குளம், ஏரி அனைத்திலும் நீர் வளம் பெருகி இருக்கும். எனவே இம்மாதத்தில் விவசாயத்தை தொடங்குவர். இதனால் தான் ‘ஆடி பட்டம் தேடி விதை’ எனும் பழமொழியும் உண்டானது. விதை போடுவதும், நாற்று நடுவதும் இம்மாதத்தில் நடக்கும்.

    தமிழகத்தின் அனைத்து நீர் வளங்களுக்கும் நன்றி சொல்லி குதுகலமாய் விவசாயத்தை தொடங்கும் இயற்கையோடு இணைந்த தமிழ் சமுகத்தின் இணையற்ற விழா எனலாம். பார்வதி (அம்மன்) தேவிக்கு அரிசியினால் பல வகையான பண்டங்களை தயாரித்து படைத்து பாட்டிசைத்து வணங்குவர்.

    நீர் வளத்தை கொடுக்கும். ஆறுகளை அட்சசையும் மலர்களையும் தூவி வணங்குவர். பெரும்பாலும் இப்பண்டிகை ஆற்றங்கறைகளை ஒட்டி வாழும் மக்களே வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். அதிலும் காவிரி நதி கறை மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தாங்கள் தொடங்கும் விவசாயம் நல்ல பலனை தர வேண்டும் என ஆற்றில் குளித்து புத்தாடை அணிந்து விரதத்துடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.

    மாவுவிளக்கு செய்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து, மஞ்சள் திரியுடன் விளக்கை ஏற்றி மாவிலையில் வைத்து ஆற்றில் பெண்கள் விடுவர். நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே சேர இவ்வாறு செய்யும் போது ஆற்றில் மிதந்து செல்லும் மாவிவிளக்குகள் காண்பவர்களின் நெஞ்சை மகிழ்விக்கும். 
    ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடுவது. அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.
    தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். 
     
    நெல்,கரும்பு மற்றும் வேர்க்கடலை முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது. ‘ஆடிப்பெருக்கு’ அன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.
     
    நதிகள் ஓடும் இடங்களில் இன்றும் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபாடு செய்வர். அன்றைய நாள் பெண்கள் விரதம் இருந்து ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைப்பர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுவர்.
     
    ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக உணவை சாப்பிடுவார்கள். இப்பொழுதெல்லாம் ஆற்றில் நீர் வரத்தும் குறைந்து விட்டது, நகரங்களில் மக்கள் அதிகமாகக் குடியேறி இருப்பதால் பழக்கமும் குறைந்து வருகிறது.
    ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு காவிரி ஆற்றில் வெள்ளம் புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியே களை கட்டிவிட்டது.
    ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று காவிரி பாய்ந்து செல்லும் பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா சிறப்பாக நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா ஒப்புக்குத்தான் நடந்ததே தவிர களைகட்டவில்லை. ஏனெனில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை.

    தண்ணீருக்கு பதிலாக பாறைகளும் வெறும் மணலாகவும் காட்சியளித்தது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் காவிரி ஆறு பொங்கி வருகிறது. ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு வெள்ளம் பெருக்கு புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியேகளை கட்டிவிட்டது.

    ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் இடங்களில் முக்கிய இடமாக கருதப்படுவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை ஆகும். பவானி, காவிரி, அமுத நதி ஆகிய மூன்று நதி கள் சங்கமிக்கும் இடம்தான் பவானி கூடுதுறை.

    இங்கு அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா பவானி கூடுதுறையில் அமர்க்களமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.



    ஈரோடு மாவட்டம் மட்டு மல்லாமல் திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் நாளை அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிகிறார்கள். இவர்கள் பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள். புதுமண தம்பதிகள் தங்களது மணமாலையை ஆற்றில் விட்டு வழிபடுகிறார்கள்.

    சுமங்கலி பெண்கள் தங்கள் வாழ்க்கை நாயகன் நலமுடன் வாழ வேண்டி வணங்கி புது தாலிக்கயிறு அணிவார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்க வேண்டியும், திருமண வாழ்க்கைகை கூட வேண்டியும் வழிபடுகிறார்கள்.

    குறிப்பாக விவசாய பெருமக்கள் தங்களின் விவசாய நிலங்களை செ(கொ)ழிக்க வைக்கும் காவிரி தாயை வணங்கி மகிழ்வார்கள். இப்படி நாளை பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழாவை அமர்க்களமாக கொண்டாட ஒரு லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு செல்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். ஆழமான பகுதி யில் பக்தர்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் ஓரமாக எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் ஆற்றில் பரிச லில் சென்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    ஆடி 18 பண்டிகையின்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் காவேரி அம்மனுக்கு தாய்வீட்டு சீதனங்களை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது.
    தமிழ்நாட்டில் காவிரி கரையோரத்தில் அமைந்த முதல் சிவாலயமான தேசநாதேஸ்வரர் கோவில் ஒகேனக்கல்லில் உள்ளது. இந்த கோவில் வளாகத்திற்குள்தான் காவிரி ஆற்றின் சிறப்பை போற்றும் வகையில் காவேரியம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி தாயே அம்மன் வடிவில் இங்கு எழுந்தருளியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

    குருச்சேத்திர போர் முடிந்த பின்னர் போரினால் ஏற்பட்ட பாவங்களை போக்க பஞ்சபாண்டவர்கள் கங்கை நதியில் குளித்தனர். அப்போது பாவங்கள் நீங்க கங்கையில் குளித்தால் மட்டும் போதாது, குடகு மலையில் அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு கிடக்கும் பொன்னி நதியில் குளிக்க வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினார். அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதியை விடுவிக்க வேண்டி பஞ்சபாண்டவர்கள் விநாயகரை வழிபட்டனர். இதனால் மகிழ்ந்த விநாயகர் காக்கை வடிவில் குடகுமலைக்கு சென்று அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதிநீரை தென்திசை நோக்கி தள்ளிவிட்டார்.

    இந்த பொன்னி நதிநீர் வேகமாக ஓடி ஒகேனக்கல்லில் அஷ்வமேத யாகம் செய்து கொண்டிருந்த பிரம்மாவின் யாக குண்டத்தில் விழுந்து அருவிகளாக துள்ளிக்குதித்தது. தென்னாடு செழிக்க உருவான இந்த நதிக்கு காவிரி என்று அகத்திய மாமுனிவர் பெயர் சூட்டினார். பொன்னி நதி, காவிரி என்று பெயர் பெற்ற இடமான ஒகேனக்கல்லில் ஆற்றங்கரையில் ஒரு சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கத்தை பிரம்மதேவர் தினமும் வழிபட்ட இடம்தான் தற்போது ஒகேனக்கல்லில் தேசநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடமாகும்.

    ஒகேனக்கல் ‘மத்திய ரங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அகத்தியர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடத்தில் 13-ம் நூற்றாண்டில் தேசநாதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் இந்த கோவிலை சிறப்பான முறையில் பராமரித்தனர். காவிரி ஆறு உருவானது தொடர்பான புராணத்தில் விநாயகருக்கு முக்கிய இடம் உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி ‘கணேச தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு குளித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தேசநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு பிரம்மா பூஜைகள் செய்து வழிபட்டதாகவும், இதனால் இந்த கோவில் ‘தென்னகத்தின் காசி’ என பொருள்படும் ‘தட்சிணகாசி’ என்றும் அழைக்கப்படுகிறது. தேசநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் காவேரி அம்மனுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒகேனக்கல் தவிர வேறு எங்கும் காவிரித்தாய்க்கு தனிக்கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மலையில் பெண் குழந்தை போன்ற வடிவில் உள்ள காவிரி அம்மன், ஒகேனக்கல்லில் உள்ள கோவிலில் குமரி பெண்ணாக 3½ அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு வந்து வணங்குபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கும், குழந்தை பேறு உள்பட கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பல வகையான தோஷபரிகாரங்கள் மற்றும் கடன் தொந்தரவுகள் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    குருச்சேத்திர போரில் பயன்படுத்திய ஆயுதங்களை பாண்டவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கழுவி பாவங்கள் போக நீராடிய நாள் ஆடி மாதம் 18-ம் நாள் என்று கூறப்படுகிறது. இதனால் ஆடி 18 பண்டிகையின்போது காவேரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நடக்கிறது. அப்போது காவிரி ஆறு உற்பத்தியாகும் இடமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு தாய்வீட்டு சீதனமாக அரிசி, பருப்பு, வளையல், புடவை, ரவிக்கை மற்றும் அச்சுவெல்லம் ஆகியவற்றை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. 
    கடந்த 10 ஆண்டுகளாக களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் களை கட்டும். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.
    விவசாயத்தை செழித் தோங்க வைத்து தமிழக மக்களை வாழ வைக்கும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விழாக்கள் நடந்தாலும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டா டப்படும்.

    நதிக்கரைகளில் வாழும் மக்கள் தங்களை வாழ வைக்கும் நதிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் படித்துறைகளில் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு ஆகியவைகளை வைத்து தண்ணீருக்கு பூஜை செய்து மஞ்சள் கயிறை அணிந்து கொள்வார்கள்.

    இது போல புது மண தம்பதியர் அன்றைய தினம் காவிரி கரையில் சிறப்பு வழிபாடுகள் செய்து புதிய தாலிக்கயிறு மாற்றி திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்வார்கள். இதனால் மேட்டூர் அணை முதல் காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதி வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

    மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் போது காவரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் இருக்கும், இதனால் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெறும்.

    கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் உரிய நேரத்தில் திறக்கப்பட வில்லை. ஆனால் மேட்டூர் அணையில் இருந்து ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாட 2 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும்.

    இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டத்தை கடக்காது. இதனால் கடந்த சில வருடங்களாக ஆடிப்பெருக்கு விழா தண்ணீரின்றி களையிழந்து காணப்பட்டது. ஆடிப்பெருக்கு அன்று கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் ஆழ் குழாய் கிணறு அமைத்து தண்ணீர் இறைத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் புனித நீராடினர்.

    கடந்த 2007-ம் ஆண்டு ஆடிப்பண்டிகைக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பியது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    அணை நிரம்பிய தையடுத்து இந்தாண்டு ஜூலை 19-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரியின் மற்றும் கிளை ஆறுகளிலும் கடை மடை பகுதி வரை சென்றுள்ளது.

    இதனால் கடந்த 10 ஆண்டுகளாக களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் களை கட்டும். இதனால் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.

    இதையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றிலும் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்து புனித நீராடுவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    மேலும் ஆடிப்பெருக்கு விழா அன்று மேட்டூர் காவிரியில் பக்தர்கள் அதிகம் குளிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரை தயார் நிலையில் நிறுத்தி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள்.
    ஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆடி மாதம் 18-ந் தேதி மட்டும் வரும் ‘பதினெட்டாம் பெருக்கு’ மட்டும் அதற்கு விதி விலக்கு. அந்த நாளில் மட்டும் நல்லநேரம் பார்த்து புது வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம். இனிய தொழிலுக்கும் ஆதாய வரவு வைக்கலாம்.

    எந்தப் புதிய வாய்ப்புகளையும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றது. அன்று காலை 10 மணி முதல் 10.30 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதிய முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வீடு மாற்றம் செய்தாலும், நாடு மாற்றம் செய்தாலும் வியக்கும் விதத்தில் தொழில் தொடங்க நினைத்தாலும் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க வைக்கும் நல்ல நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 
    ×