என் மலர்
நீங்கள் தேடியது "ஓசூர்"
- மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- எரிசாராயத்தை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார்.
ஓசூர்:
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளாவிற்கு அடிக்கடி மதுபான வகைகள், எரிசாரயம், குட்கா பொருட்கள் சாதாரண ஆட்கள் என்ற போர்வையில் கார், இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கோவை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் ஏட்டு மதிவாணன், அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ஓசூர்-சேலம் பை பாஸ் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 215 கேன்களில், 7,525 லிட்டர் எரிசாரியம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் இருந்து பெங்களூர்-ஓசூர் வழியாக கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து எரிசாராயத்தை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சயாத் மற்றும் பாபுராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
- வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் கடும் அனல் காற்று வீசியதால் மக்கள் சாலைகளில் நடமாடவே அச்சமடைந்தனர்.
கடும் வெயில் காரணமாக பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமாக காணப் பட்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மழை லேசாக தூறத் தொடங்கியது. பின்னர் திடீரென மழை பொழியத் தொடங்கியது.
நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், ஓசூர் பஸ்நிலையம், ஜி.ஆர்.டி. சர்க்கிள், பாகலூர் ரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனி பஸ் ஸ்டாப், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் இந்த பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில், கனமழை பெய்ததையடுத்து வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியதால்மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- தமிழக-கர்நாடகா எல்லையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெலகாவியில், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து பஸ் கண்டக்டரை தாக்கிய வர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பஸ் டிரைவர் மீதான மராட்டிய தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், பெலகாவி காப்பாற்றப்பட வேண்டும்.
எம்.இ.எஸ். கட்சியை தடை செய்ய வேண்டும். ,மேகதாது , கலச பண்டூரி, மகதாயி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னட சலுவளி வாட்டள் கட்சி தலைவர் வாட்டள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் சார்பில், கர்நாடக மாநிலத்தில் `அகண்ட் கர்நாடக பந்த்' என்ற பெயரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகில், இன்று காலை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட 30 பேரை கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் இன்று தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து எல்லை பகுதியில் கர்நாடகா மற்றும் தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது.
- பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் கோவில் பகுதியில் குறவர் நடனம், புலியாட்டம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி எழுந்தருளினார். பின்னர் ஒசூர் பகுதியில் சுவாமி சப்பர வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமிக்கு தோங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.
முக்கிய வீதி வழியாக சப்பர வீதி உலா வந்தது. பின்னர் காலை 7.30 மணியளவில் கோவிலை சென்றடைந்தது. கோவில் முன்பு 30 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யபட்டு இருந்தது.
இதை தொடர்ந்து காலை 8 மணியளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அதை தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கினர்.
திருவிழாவில் தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.
- போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
- போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், மருந்து, மாத்திரை தயாரிக்கும் கம்பெனிகளும் அடங்கும்.
இந்த நிலையில், தங்கள் தயாரிப்புக்கு எத்தனால் மற்றும் ஆல்கஹால் பயன்படுத்தும் அங்குள்ள 2 மருந்து, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பூனப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலை என மொத்தம் 3 தொழிற்சாலைகளில் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, எத்தனால் மற்றும் ஆல்கஹால் இருப்பு சரியாக உள்ளதா, என்றும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் காலக்கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
- தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ், இவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி ஜோதி (35). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகளான தன்யா ஸ்ரீ என்ற சிறுமி, நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று குழந்தை தன்யா ஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்தது. இதனை பார்த்து . அதிர்ச்சியடைந்த அவளது தாய் ஜோதி, நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடினார். அப்போது, அவரையும் அந்த நாய் கடித்து விட்டது.
தெரு நாய் கடித்ததில் தாய், மகள் என 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரு நாயை விரட்டி விட்டு, படுகாயம் அடைந்த தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஓசூர் மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தெருவில் விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்வோர் என பொதுமக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இடம் தேர்வு செய்யப்பட்டு, கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
- கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இந்த விமான நிலையம் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
முன்னதாக சென்னையின் 2-வது விமான நிலையத்தை கட்டுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதற்காக காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு அவற்றை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
எனினும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியதில் இருந்தே மனு அளித்து வந்த கிராம மக்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த விமான நிலையத்துக்கான பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமலே உள்ளது. இந்த நிலையில், ஓசூரில் புதிய விமானம் நிலையம் கட்டுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
விமான நிலையம் பற்றிய அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், இதற்காக இடம் தேர்வு செய்வது, அதனை கையகப்படுத்துவது என அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியாகும். அதிக தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக ஓசூர் இருக்கிறது.
எனினும், ஓசூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்களே அங்குள்ள நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், 2 ஆயிரம் ஏக்கரில் ஓசூரை சுற்றி எத்தனை கிராமங்கள் இடம்பெறும், அந்த கிராமங்கள் எவை என்பது தற்போதைக்கு தெரியவில்லை.
நிலம் தேர்வானதும், அங்குள்ள மக்கள் வேறொரு இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்படுவர். இது தொடர்பாக மக்களுக்கு நோட்டீஸ் வழங்குவது, பத்திரிகை செய்தியாக தெரிவிப்பது போன்ற நடைமுறைகள் அரசு சார்பில் பின்பற்றப்படும்.
இதைத் தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறையை சேர்ந்த நில எடுப்பு அதிகாரிகள் தனியே நியமிக்கப்படுவர். இவர்களை வைத்து நிலம் கையகப்படுத்தப்படும். மாநிலத்திற்கு புதிய விமான நிலையம் கட்டுவதில் அரசு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை அரசு எப்படி கையாளும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், ஓசூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பு அந்த மாவட்ட மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
- 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.
ஓசூர்:
சேலம் சரக குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார் தளி ஆனேக்கல் சாலையில் உள்ள உச்சனப்பள்ளி முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 40 கிலோ எடை கொண்ட, 20 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து வேனை ஓட்டி சென்ற தளி கும்பார் வீதியை சேர்ந்த அல்லாபகாஷ், (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.
- மு.க.ஸ்டாலினை, மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.
- தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
ஓசூர்:
ஓசூரில் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா உணவகம் மேம்பாட்டுக்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். அம்மா உணவகத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவர் மேலும் பல கோடி நிதி ஒதுக்க வேண்டும்.
பல மாநிலங்களில் இந்த திட்டம் தோல்வியடைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

தனது 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காமல் ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதகாக அமையும். மத்தியில் பிரதமர் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. அது நிரந்தரமானது அல்ல.
சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் நாற்காலியை தள்ளி விடுவார்கள். நாட்டில் எதிர்கட்சிகள் வலுப்பெற்றுள்ளன. ஜனநாயகம் தழைத்தோங்கி உள்ளது.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
அப்போது ஜான் திமோதி, ராஜேந்திர கவுடா, ஜெயசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- வழக்கறிஞர் கண்ணனை ஆனந்தன் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
- இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
- வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.
விளம்பரத்தில் மட்டுமே ஆட்சிக்காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில், தன்னுடைய பணிகளை மேற்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
வழக்கம் போல வெற்று விளம்பரங்களால் மடைமாற்ற முயற்சிக்காமல், இத்தொடர் சம்பவங்களுக்கு பிறகாவது சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- பள்ளி வளாகத்தில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
- நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல் மனதைக் கொதிக்கச் செய்கிறது.
பள்ளி வளாகத்தில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல் மனதைக் கொதிக்கச் செய்கிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி அவர்கள் பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அந்த செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் மீது கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் மனதைக் கொதிக்கச் செய்கிறது.
தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், அரசு மருத்துவர், அரசுப்பள்ளி ஆசிரியர், வழக்கறிஞர் என்று பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழும் கொலைவெறித் தாக்குதல்கள் யாவும் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால், பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வியை ஒவ்வொரு மக்களுக்குள்ளும் எழுப்புகிறது.
தமிழ்நாட்டில் சாதியத் தீண்டாமை கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பட்டப்பகலில் நாள்தோறும் நிகழும் படுகொலைகள், பெருகி ஓடும் கள்ளச்சாராயம், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கம் என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நாட்டினை திமுக அரசு மெல்ல மெல்ல மாற்றி வருகிறது. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாட்டின் காவல்துறை முற்றிலும் செயலிழந்த துறையாகிவிட்டது. இந்த கொடூர கொலைகள் நடைபெறும் ஆட்சிதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா?
ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் யாவும் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே தமிழ்நாட்டில் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதையே உணர்த்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.