என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து தொழிலாளர்கள்"
- மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி கடலூர் ஜவான் பவன் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பாபு, ஸ்டாலின், ஆள வந்தார், ராஜேஷ், கண்ணன், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் செய்தனர்.
- போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜ் விளக்கவுரை ஆற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ஐவின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஷோபன்ராஜ், அந்தோணி, லட்சுமணன், சுரேஷ், சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது.
- சென்னையில் 1000 தனியார் பஸ்களுக்கு அனுமதி அளிக்கபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது.
சென்னையில் மட்டும் தனியார் பஸ் இயங்க அனுமதி கிடையாது. தமிழகத்தில் ஆட்சிகள் பல மாறி மாறி வந்தாலும் சென்னையில் மட்டும் தனியார் பஸ்களுக்கு அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தது.
ஆனால் இப்போது சென்னையில் 1000 தனியார் பஸ்களுக்கு அனுமதி அளிக்கபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 வழித் தடத்தில் 3,233 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள் தோறும் சுமார் 30 லட்சம் பேர் பயணிக்கின்றனர். நாள் தோறும் பஸ் சேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னை நீடித்த நகர்ப்புற சேவை திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 தனியார் பஸ்களை குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.
தொடர்ந்து 2025-ம் ஆண்டு 500 பஸ்கள் என 1000 பஸ்களை தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனையை வழங்கவே ஆலோசகர் குழுவுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இது உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் தங்களின் பஸ்களை சென்னைக்குள் இயக்க அனுமதி அளிக்கப்படும். அதற்கு ஒரு கி.மீ. வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் தனியார் நிறுவனங்கள் வழங்கும். நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக வரும்போது அதனை மாநகர போக்கு வரத்து கழகம் எடுத்துக் கொள்ளும். குறைவான தொகை வந்தால் கூடுதல் தொகையை மாநகர போக்கு வரத்து கழகம் தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் கூறுகையில், சென்னையில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிப்பதை தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப். உள்பட எந்த தொழிற்சங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே நாளை அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி எங்கள் கண்டனத்தை அரசுக்கு தெரிவிக்க இருக்கிறோம். பஸ் விட தனியாருக்கு அனுமதிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு முதலமைச்சருக்கு கடிதம் கொடுக்க இருக்கிறோம் என்றார்.
இதற்கிடையே சி.ஐ.டி.யு. நாயனார் கூறுகையில், சென்னையில் நாளை காலை 5 மணிக்கு அனைத்து பணிமனை முன்பும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
- 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.
- தனியார் பஸ்களை மீண்டும் இயக்க போவதாக வெளிவந்துள்ள அறிவிப்பு எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் 50 ஆண்டுகளாக அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களை இயக்கவும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் முதற்கட்டமாக 500 தனியார் பஸ்களை நிபந்தனை அடிப்படையில் இயக்க அரசு வந்துள்ளது.
இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் கட்சி தொழிற்சங்கமான தொ.மு.ச. கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. சி.ஐ. டி.யூ. தொழிற்சங்கம் நேற்று பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எம்.எல்.எப்., தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தில் சென்னையில் தனியார் பஸ்களை இயக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகுதான் பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் இதை மீறும் வகையில் தனியார் பஸ்களை மீண்டும் இயக்க போவதாக வெளிவந்துள்ள அறிவிப்பு எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புவதால் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
- சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது செயலாளர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் கர்ஸன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் கோரிக்கை மாநாடு இன்று நடந்தது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர்.
போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலன் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மாநாடு நடத்தப்பட்டது. இதற்கு சி.ஐ.டி.யு. உதவி தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் வி.தயானந்தம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைவர் எம்.அன்பரசு, தலைமை செயலக ஊழியர் சங்க தலைவர் வெங்கடேசன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில், மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச்செயலாளர் எஸ். ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் திருச்செல்வன், சி.ஐ.டி.யு நுகர்பொருள் வாணிப கழக புவனேஸ்வரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது செயலாளர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் கர்ஸன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கோரிக்கை தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
சி.ஐ.டி.யு. மாநில தலைவர் ஏ.சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொழிலாளர்கள் கலந்துகொண்ட னர். பல்லவன் இல்லம் முன்பு சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை முழக்கமிட்டு பேசினர். முடிவில் சசிகுமார் நன்றி கூறினார்.
- பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக்கூடாது, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் (ஸ்டிரைக் நோட்டீஸ்) செய்வதாக கூறி போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு ஏப்ரல் மாதம் நோட்டீஸ் வழங்கினர். இது தொடர்பாக இருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 526 டிரைவர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு பணி ஒதுக்க முயற்சி நடந்தது. இதையறிந்த பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.
இதற்கிடையே ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினருடன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் 31-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், தொழிலாளர் நல கூடுதல் கமிஷனர் மாநகர போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகளுக்கான தீர்வு காணப்படவில்லை. இதனால் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4-வது கட்டமாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களையும் அழைக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. சங்கம் வலியுறுத்தி உள்ளது.
- தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
- 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுவதாக இருந்தது.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது , காலி பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களையே நியமிக்க வேண்டும், பஸ்களை தனியார் மயமாக்ககூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருந்தது.
இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை (9-ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த பேச்சுவார்த்தை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதில் அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்கங்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அன்றையதினம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? என்பது தெரியவரும்.
- டிசம்பர் மாதத்திற்குள் பேச்சுகளை முடித்து ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 14-ம் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது.
நடப்பு செப்டம்பர் மாதத்தில் இருந்து 15-ம் ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், அதற்கான பேச்சுக்களைக்கூட தொடங்குவதற்கு போக்குவரத்துத் துறை முன்வராதது தொழிலாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், இம்முறை அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் உயர்வு வழங்கப்பட வேண்டும், ஆண்டு ஊதிய உயர்வாக 5 சதவீதம் வழங்கப்பட வேண்டும், ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 50-க்கும் கூடுதலான கோரிக்கைகள் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களால் முன்வைக்கப் படும் நிலை யில், அதுகுறித்து பேசித் தீர்வு காண அதிக காலம் தேவைப்படும். அதைக் கருத்தில் கொண்டு ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும் டிசம்பர் மாதத்திற்குள் பேச்சுகளை முடித்து ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.3,000 வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப் படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது.
- போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம்.
தீபாவளிக்கு அரசு ஊழியர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்டோர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்யப்படுவதால் தொழிலாளர்கள் பண்டிகைக்காக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அதனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்ய தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக தமிழக அரசு, போக்குவரத்து கழகங்கள் 2 வாரங்களில் பதிலளிக்க அளிக்க உத்தரவிட்டது.
- போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.
- நாளை மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த டிசம்பர் 19-ந் தேதி தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியது.
இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் ஜனவரி 3-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நாளை மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 23 தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் நோட்டீஸ் 'காலக்கெடு' 4-ந்தேதியுடன் முடிவடையும் சூழலில் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது.
- தொழிலளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுபவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்காமல், தொழிலாளர்களை நிர்கதியாக நிற்க வைத்தது. எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மிக முக்கியமாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீரமைக்கப்பட்டு 'பே மேட்ரிஸ்' தனித்தனி ஊதிய விகிதம், 2.57 காரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படுகிறது. ஊதியமும் 5 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இது அத்தனையும் எந்த போராட்டமும் நடத்தாமல், எந்த ஒடுக்கு முறையையும் சந்திக்காமல் கிடைத்தவை.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது. மகளிர் கட்டண மில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2800 கோடி ஒதுக்கி, டீசல் மானியமாக ரூ.2 ஆயிரம் கோடியும், மாணவர் இலவச பஸ் பயணத்திற்காக ரூ.1,500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசாணை 36-ஐ பிறப்பித்து போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்மூலம் போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். புதிய பஸ்களை வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி போனஸ் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குறைத்து வழங்கப்பட்டதை யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 சதவீதமாக உயர்த்தி ரூ.16,800 வழங்கி உள்ளோம். இதற்கும் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. மக்கள் மனமறிந்து செயல்படுவது போலவே, தொழிலளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுபவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகளை நிறைவேற்றி உள்ளோம்.
இப்போது சென்னையில் வரலாறு காணாத அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் பொதுமக்கள் சந்தித்துள்ள இழப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை கூட வழங்க முன்வராத நிலையில், முதலமைச்சர் நிவாரண தொகுப்பை அறிவித்து வருகிறார். முழு அரசு எந்திரமும் இந்த பணியில் ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவோம்.
பேரிடர் காலத்தில் உடனடியாக களம் இறங்கி பஸ்களை வழக்கம்போல் இயக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் நம் போக்குவரத்து துறை தொழிலாளர்கள். அதேபோல தொழிற்சங்கங்களும் முதலமைச்சருக்கும், பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க அன்போடு வேண்டுகிறேன்.
எனவே போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இதை உணர்ந்து கொண்டு பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், பொங்கல் விடுமுறைக்கு பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
எனவே போராட்டம் அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விரைவு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.
- நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பலன்களை தர வேண்டும், வாரிசுதாரர்களுக்கு வேலை நியமனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதி தொழிற்சங்கங்கள் நோட்டீசு வழங்கி இருந்தது.
இதையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் கடந்த மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
இதில் போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொழிற்சங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று ஒரே ஒரு கோரிக்கையை முதலில் நிறைவேற்றி தருமாறு தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கும் சரியான பதில் கிடைக்காததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனால் வருகிற 9-ந்தேதியில் இருந்து பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் ரெயிலில் டிக்கெட் கிடைக்காததால் பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' என்ற அறிவிப்பு பயணிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதைய சூழலில் பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலிக்கலாம் என்று சொல்லி இருந்தோம்.
ஆனால் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்து 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்து உள்ளனர். இதை சுமூக நிலைக்கு கொண்டு வர தொழிற்சங்கங்களுடன் பேசி விட்டு உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். அதன்பிறகு அந்த விவரங்களை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
கேள்வி:- தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தெளிவுப்படுத்தி விட்டார்கள். இனிமேல் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சமரசத்துக்கு வருவார்களா?
பதில்: அ.தி.மு.க.வை சேர்ந்த தொழிற்சங்கம் வரமாட்டார்கள். தொ.மு.ச. சேர்ந்த தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசிப் பார்ப்போம்.
கேள்வி: எந்த சமரசத்துக்கும் தொழிற்சங்கத்தின் வராவிட்டால் பஸ் ஸ்டிரைக் தொடங்கி விடுமே? இதனால் பொங்கலுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுமே? ஆயிரக்கணக்கான பயணிகள் விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளார்களே?
பதில்: விரைவு பஸ்களில் எந்த பிரச்சனையும் இருக்காது. அந்த பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். தொழிற்சங்கத்தினர் அதை ஒன்றும் செய்ய இயலாது. முன்பதிவு செய்து உள்ள பயணிகள் தாராளமாக பயணிக்க முடியும்.
ஆனால் மற்ற போக்குவரத்து கழகங்கள் சிலவற்றில் மட்டும் தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க வாய்ப்பு உண்டு. அதையும் நாம் சமாளிக்க முடியும். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் என்ன செய்ய முடியுமோ அதை அரசு மேற்கொள்ளும்.
நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை. பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம் என்றுதான் சொல்கிறோம்.
கேள்வி: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 8 வருடமாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கவில்லை. அதை மட்டும் முதலில் நிறைவேற்றுங்கள் என்று கூறுகிறார்களே?
பதில்: 8 வருடம் நிலுவை என்பது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5 வருடம் நிலுவையை வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த முழு சுமையையும் இப்போதைய நிதி நெருக்கடியில் தாங்க முடியாது. அதுதான் பிரச்சனை.
போக்குவரத்து துறை மட்டுமல்ல மற்ற துறைகளில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. இவை எல்லாம் சேரும்போது பெரிய நிதிப்பிரச்சனை வரும்.
இவை அனைத்தையும் கணக்கெடுத்து விட்டு ஒரு பிளான் பண்ணி செய்வதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இந்த சூழலில் இது பொங்கல் நேரம் என்பதால் தொழிற்சங்கத்தினர் டிமாண்ட் வைக்கிறார்கள். கடந்த பேச்சுவார்த்தையின்போது அதிகபட்சமாக எல்லா கோரிக்கையும் முடித்து கொடுத்துள்ளோம்.
சம்பள விகிதத்தை அ.தி.மு.க. ஆட்சியின்போது சீர்குலைத்து வைத்திருக்கிறார்கள். சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இன்றி குளறுபடி இருந்தது. அதை நாங்கள் சரி செய்து கொடுத்து அதனால் மாதம் 40 கோடி கூடுதல் செலவானது. இதை நிதித்துறை ஒத்துக்கொள்ளவில்லை.
ஆனால் முதலமைச்சர் அதை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொல்லி செய்து கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு திருப்திதான்.
எந்த கோரிக்கையையும் நாங்கள் முடியாது என்று சொல்லவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலுவையை வைத்துவிட்டு சென்றதால்தான் பார்த்து செய்கிறோம் என்று கூறுகிறோம்.
எனவே இந்த விஷயத்தில் முதலமைச்சரிடம் கேட்டு விட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி முடிவெடுப்போம்.
இப்போதைக்கு பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள் விட இருப்பது உள்பட பல வேலைகள் இருக்கிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்த பிறகு அதில் உள்ள சிரமங்களை சரி செய்யும் பணிகள் நிறைய உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 7, 8-ந்தேதிகளில் வருகிறது. சட்டமன்றம் விரைவில் கூட உள்ளதாக தெரிகிறது.
இந்த பணிகள் அனைத்தும் இருப்பதால் தான் பொங்கல் கழித்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.