என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம்"

    • சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
    • 21 நீதிபதிகளின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

    நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முடிவு செய்தது. அதன்படி தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.

    சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம்கோர்ட்டின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தங்கம், பங்குச்சந்தைகளில் முதலீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இருக்கிறார். அவர் வருகிற 13-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவரது வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் ரூ.55.75 லட்சம் உள்ளது.

    தெற்கு டெல்லியில் 3 படுக்கை அறைகள் கொண்ட டி.டி.ஏ. பிளாட் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் 2,446 சதுர அடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு (4 படுக்கை அறை) ஆகியவை அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது.

    மேலும், குர்கான், இமாச்சலபிரதேச வீடுகளில் பங்கும் இருக்கிறது. வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.1.06 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். 250 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி இருக்கிறது. 2015 மாருதி சுவிப்ட் கார் உள்ளது.

    அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள பி.ஆர்.கவாய் வங்கி கணக்கில் ரூ.19.63 லட்சம் இருக்கிறது. மராட்டிய மாநிலம் அமராவதி, மும்பை பாந்த்ரா, டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அவருக்கு சொத்துக்களாக இருக்கிறது. ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருக்கிறது.

    எஞ்சிய நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக த.வெ.க. தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
    • தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பை பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து எதிர்க்கடசிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நேற்று உச்ச நீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்தது.

    மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களை சேர்ப்பது மற்றும் வக்ஃப் சொத்துக்களை மறுவரையரை செய்வதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 15 அன்று நடைபெறவுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பையும், தகுதியானவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    மேலும், உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பையும், சிறுபான்மையினரின் உரிமைகளையும் உறுதியாக பாதுகாக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கரூரில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து வந்தனர்.
    • நெரூர் மடம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

    கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து வந்தனர்.

    எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் முறைக்கு தடை விதிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இச்சடங்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    இதனையடுத்து எச்சில் இலையில் உருளும் சடங்கை நடத்த அனுமதிக்ககோரி நெரூர் மடம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் பக்ஷி அமர்வில் இன்று(மே.05) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே இதே போன்ற ஒரு அங்கபிரதட்சணம் சடங்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றமானது தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை நாங்கள் மீற முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்தையும் ஆராய்ந்தே தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே, அந்த தடை உத்தரவை நாங்கள் நீட்டிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

    மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நிலுவையில் உள்ள நெரூர் மடம் வழக்கை கர்நாடக மாநிலம் தொடர்பான வழக்கோடு இணைத்து உத்தரவிட்டது. 

    • சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீஸார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த பிப்.17-ம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

    மேலும், கருக்கலைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால், சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென வளசரவாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி போலீஸார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில் இன்று, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

    நடிகை விவகாரத்தில் சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகை விவகாரம்- மோசடி, வல்லுறவு புகார் வழக்கை ரத்து செய்ய கோரும் சீமானின் மேற்குறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.

    சிமானின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க நடிகைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • நடுவர் மன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது .
    • தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உட்பட 4 நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

    மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டத்தின் (Arbitration and Conciliation Act) கீழ், நடுவர் மன்ற தீர்ப்புகளை திருத்தும் அதிகாரம் நீதிமன்றதிற்கு உள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆராய்ந்தது.

    இது தொடர்பாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது. அதில், நடுவர் மன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உட்பட 4 நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த உத்தரவில், மத்தியஸ்த சட்டத்தின் பிரிவு 34 மற்றும் 37-ன் கீழ், நடுவர் மன்ற தீர்ப்புகளை முழுமையாக ரத்து செய்யாமல், தேவையான திருத்தங்களை செய்ய நீதிமன்றதிற்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம், நீதிமன்றங்கள் நடுவர் மன்ற தீர்ப்புகளை மாற்ற முடியாது என்று நீதிபதி கே.வி. விஸ்வநாதன் தெரிவித்தார். 

    • சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர்.
    • கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பி.இ பட்டதாரி ஆவார்.

    இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த காதல் திருமணம் குறித்து கண்ணகியின் பெற்றோருக்கு தெரியவர, கண்ணகியை மூங்கில் துறைப்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் முருகேசன் மறைத்து வைத்தார். ஆனால், பெண்ணின் செயலால் கவுரவம் கெட்டு விட்டது என்று 2003-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணகி மற்றும் முருகேசனை விருத்தாசலம் வண்ணாங் குடிகாட்டில் உள்ள மயானத்திற்கு இழுத்து சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றி கொலை செய்து, பின்னர் இருவரின் உடலையும் தனி தனியாக எரித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் முருகேசனின் உறவினர்கள் விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் வழக்கை பதிவு செய்ய காலம் தாழ்த்திய போலீசார் பின்னர் இரு குடும்பத்தினரும் சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்த நிலையில், 2003-ல் முருகேசனின் உறவினர்கள் புகார் அளித்த போது விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

    பின்னர் பல ஆண்டு களாக கடலூர் கோர்ட்டில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளி கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது.

    இதில் அய்யாச்சாமியும், குணசேகரனும் குற்றவாளி இல்லை என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத போலீசாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.

    ஆனால் கடலூர் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தனர். சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தி, 2022-ல் தீர்ப்பு வழங்கியது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

    கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    இதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கண்ணகியின் உறவினரான கோ.கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மேலும் குற்றவாளிகள் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    • மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
    • சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?.

    வக்பு திருத்த சடடத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ரிட் மனு தாக்கல் செய்துள்ளன. இது தெடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. வக்பு விசயத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் நீதித்துறையில் முறையிடுவதற்கு எதிராக அரசியல சாயம் பூசக்கூடாது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    எல்லா அமைப்புகளுக்கும் (institution) பங்கு உள்ளது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?. வக்பு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வது இது முதல் முறை கிடையாது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைமைய பிரகடனம் செய்தபோது, நீதிமன்றத்தில் முறையிடவில்லையா?.

    இன்று யாராவது உச்ச நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்றால், அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. நீதிமன்றத்திற்கு அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது. சட்டமன்றத்திற்கும் அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

    வக்பு வாரிய சட்டமசோதாவிற்கு கேரளா முதலமைச்சர் பினாரயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிகமான முஸ்லிம் மக்கள் வாழும் கேரளாவில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது .

    இந்நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டத்தின்படி, புதிய வக்பு வாரியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை அரசாங்கம் விரைவில் முடிக்கும் என்று கேர்ளா வக்பு அமைச்சர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

    இதன்மூலம் புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியம் அமைக்கப்படவுள்ள முதல் மாநிலமாக கேரளா மாறும் என்று கூறப்படுகிறது.

    கேரளாவில் வக்பு வாரியத்தில் பதவிக்காலம் கடந்தாண்டு டிசம்பர் 19 அன்று முடிவடைந்தது. பின்னர் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யயப்பட்டுள்ளது.

    • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
    • வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஆ.ராசா பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

    இதனிடையே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், நீலகிரியில் மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்" என்று தெரிவித்தார்.

    • உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.

    உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் சொத்து விபரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

    • திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?
    • சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது.

    சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    அந்த மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.

    பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது' என்று வாதிடப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு? என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் எனக்கூறி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

    ×