என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஜனநாயக கூட்டணி"

    • அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 11-ந்தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு-2025 நடைபெற உள்ளது.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 52 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருவிடந்தையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் கட்சியின் பொது செயலாளர் வடிவேல் ராமன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த கேள்விகளுக்கு எல்லாம் இன்னொரு நாள் பதில் சொல்றேன் என்று கூறி நழுவிச் சென்றார். 

    • தனி நாடு கோருவது போல தி.மு.க. பிரிவினைவாதம் பேசி கொண்டிருக்கிறது.
    • தேர்தலுக்காக இது போன்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மாநிலங்களுக்கான அதிகாரம் பற்றிய 110-வது விதி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க. சட்டசபை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் வெளிநடப்பு செய்தார்கள்.

    பின்னர் பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன் கூறும்போது, "தனி நாடு கோருவது போல தி.மு.க. பிரிவினைவாதம் பேசி கொண்டிருக்கிறது. தேர்தலுக்காக இது போன்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இனியும் அது போன்று தான் செய்வார்கள். இதனால் தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது" என்றார்.

    பின்னர் அவரிடம், நீங்கள் மாநில தலைவராகி இருப்பதால் பா.ஜ.க. சட்டசபை தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ஒருவரிடம் பதவிகள் இல்லாமல் பிரித்து கொடுக்கப்பட்டால் நல்லது தானே" என்றார்.

    • நான் உட்பட தமிழக பா.ஜ.க. சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.
    • அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட தமிழக பா.ஜ.க. சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.

    நேற்றைய தினம், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர், அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்.

    என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த தமிழக பா.ஜ.க சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, அண்ணன் நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    வாழ்க தமிழ். வளர்க பாரதம்... என்று கூறியுள்ளார். 



    • திமுக அரசு சானாதனம், மும்மொழிக் கொள்ளை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்சினைகள் எழுப்பி கொண்டிருக்கிறது.
    • மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே நீட் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைகளை பயன்படுத்துகிறது.

    மத்திய உள்துறை அமைச்சர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி 2026 தேர்தல் சந்திக்கும் என்றார். இதன்மூலம் அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.

    ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்ல என்றார்.

    மேலும், நீட் தேர்வு பிரச்சனையை திமுக தொடர்ந்து எழுப்பி வருகிறதே? என்ற கேள்விக்கு அமித் ஷா "திமுக அரசு சானாதனம், மும்மொழிக் கொள்ளை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்சினைகள் எழுப்பி கொண்டிருக்கிறது.

    ஊழல், மோசடி போன்ற முக்கிய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இது போன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகிறது.

    மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே நீட் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைகளை பயன்படுத்துகிறது" என்றார்.

    • தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் சஎன்று சுதாகர்ரெட்டி உறுதி கூறினார்.
    • மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    தமிழகத்திற்கான பா.ஜ.க. மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து தரப்பினருக்குமான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நாங்கள் மக்களிடம் இதை தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் நடத்தி வருகிறோம். வர இருக்கின்ற நாடாளு மன்ற தேர்தலில் தொடர்ந்து பிரதமர் மோடி நீடிக்க ஆதரவு தருமாறு கேட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பல்வேறு தகவல்களை சொல்லி வருகிறார். நாங்களும் வாக்கு வங்கிக்காக தான் பேசி வருகிறோம். ஆனால் செய்த சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறோம்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. விருதுநகர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும்.

    விருதுநகர் அருகே பட்டம் புதூரில் அறிவிக்கப் படட ஜவுளி பூங்கா திட்டமும் நடைமுறைக்கு வரும். சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தை பொறுத்தமட்டில் அமித்ஷா அறிவித்தபடி வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க. தலைமைக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

    செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் இருக்கும் போது அவர் மீது மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணை கோரினார். ஆனால் தற்போது அதனை எதிர்க்கிறார். தி.மு.க.வில் சேர்ந்தால் ஊழல் மாயமாகி விடும் என்பது முதல்வரின் கருத்தாக உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • என்.டி.ஏ. கூட்டணியை பலப்படுத்துவதுடன், விரிவாக்க வேண்டியதும் அவசியம் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்தினார்.
    • பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 2024 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்.டி.ஏ.) தலைமை வகிக்கும் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.

    அதேநேரம், வரும் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக, என்.டி.ஏ. கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதீஷ்குமார் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் என்.டி.ஏ. கூட்டணியை பலப்படுத்துவதுடன், விரிவாக்க வேண்டியதும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வலியுறுத்தினார்.

    இந்த சூழ்நிலையில் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 18-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அம்மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) பங்கேற்கும் என்று தெரிகிறது. இந்த 2 கட்சிகளின் வருகையால், 48 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் என்.டி.ஏ. கூட்டணி வலுவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபோல முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், ஓம்.பிரகாஷ் ராஜ்பரின் சுஹல்தேவ் சமாஜ் கட்சி, முகேஷ் சஹானி தலைமையிலான விகாஷீல் இன்சான் கட்சியும் பங்கேற்க உள்ளன.

    சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் (ராம்வி லாஸ்), பீகாரில் ஆளும் மெகா கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவும் என்.டி.ஏ. கூட்டத்தில் பங்கேற்கும் என தெரிகிறது.

    மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராயை சிராக் பாஸ்வான் நேற்று பாட்னாவில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது, "பா.ஜ.க. கூட்டணியில் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது" என்றார். சிராக் பாஸ்வானின் சித்தப்பாவும், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி தலைவருமான பசுபதிகுமார் பராஸ் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் மற்றும் சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகளுடனும் பா.ஜ.க. தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் வருகிற 18-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.

    இதனால் டெல்லியில் வருகிற 18-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாரதிய ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    • தேர்தல் நெருங்குவதால் கூட்டணி பலத்தை காட்ட விரும்பும் பா.ஜனதா
    • தங்களது கூட்டணியில் 30 கட்சிகள் உள்ளது என காட்டுவதற்கான இந்த கூட்டம்

    நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 14 கட்சிகள் கலந்து கொண்டன.

    இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வரும் சூழ்நிலையில பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை கூட்டி, தங்களது பலத்தை காண்பிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதனால் நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டுகிறது. இதற்கான 30 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த கூட்டம் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடியுடன் கலந்து கொள்ள இருக்கிறார்.

    பெரும்பாலான கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே 24 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. தற்போது கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    பீகாரில் இருந்து நான்கு தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) சார்பில் சிராக் பஸ்வான், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா சார்பில் ஜித்தன் ராம் மஞ்சி, ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி சார்பில் உபேந்திரா சிங் குஷ்வாகா, விகாஷீல் இன்சான் கட்சி சார்பில் முகேஷ் சஹானி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

    உத்தர பிரதேசத்தில் இருந்து சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் ஓம் பிரகாஷ் ராஜ்பார், முன்னதாக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய தாராசிங் சவுகான் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    தெலுங்குதேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, பாதல் குடும்பத்தின் ஷிரோமணி அகாலி தளம் பா.ஜனதா உடன் நெருக்கமாக உள்ளது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் தனியாக போட்டியிடும் வாய்ப்புள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பா.ஜனதா பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது 24 கட்சிகள் உள்ளன. பா.ஜனதா, அதிமுக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தேசிய மக்கள் கட்சி (NPP), தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NPPP), சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா (SKM), ஜனநாயக் ஜந்தா கட்சி (JJP), இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (IMKMK), ஜார்க்கண்ட் அனைத்து மாணவர்கள் யூனியன் (All Jharkhand Students Union), இந்திய குடியரசு கட்சி (RPI), மிசோ தேசிய முன்னணி (MNF), தமிழ் மாநில காங்கிரஸ் (TMC), ஐ.பி.எஃப்.டி. (திரிபுரா), போடோ மக்கள் கட்சி (BPP), பாட்டாளி மக்கள் கட்சி (PMK), மகாரஸ்த்ரவாடி கோமந்தாக் கட்சி (Mahasthravadi Gomantak Party), அப்னா தல், அசாம் கன பரிசத் (AGP), ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி, நிஷாத் கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி (எல்) (UPPL), அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரி (AIRNC), ஷிரோமணி அகாலி தளம் சயுங்க்த் (தின்ட்சா), ஜனசேனா (பவன் கல்யாண்).

    அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஷ்தானி அவாம் மோர்ச்சா), ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி, விகாஷீல் இன்சான் சாட்கி, ஓம் பிரகாஷ் ராஜ்பார் கட்சி புதிதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப் போகிறது.

    இந்த கூட்டம் டெல்லி அசோக் ஓட்டலில் நாளை மாலை நடைபெற இருக்கிறது.

    • எதிர்க்கட்சிகள் முதல் கூட்டத்தில் 14 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்
    • கர்நாடகாவில் நடைபெறும் 2-வது கூட்டத்தில் 24 கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு

    மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி என்றாலும் தனிப்பெரும்பான்மை என்பதால் பா.ஜனதா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்றால், அது நாட்டிற்கு ஆபத்து எனக் கூறிவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது. அதில் 14 கட்சிகள் இடம் பிடித்திருந்தன. இன்றும், நாளையும் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு போட்டியாக பா.ஜனதா நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை டெல்லியில் நடத்துகிறது. இதில் 30 கட்சிகள் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் இந்த திடீர் கூட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ''பிரதமர் மோடி, பா.ஜனதா மலைத்துப் போய் உள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து யோசித்துள்ளார்.

    அந்த கூட்டணிக்கு மூச்சு கொடுத்து உயிர்கொடுக்க முயற்சிக்கிறார். திடீரென, நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவே இதுவாகும்'' என்றார்.

    • எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது
    • தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்

    காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறுகிறது. இதற்கு போட்டியாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 38 கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    38 கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும், மாநில கட்சிகள் கூட்டணியில் இருப்பதை பா.ஜனதா சாதகமாக பார்க்கிறது.

    மோடி தலைமையில் கடந்த 9 வருடம் நல்லாட்சியை கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சி செயல்முறைதான் இது என நட்டா தெரிவித்துள்ளார்.

    பீகாரை பொறுத்தவரைக்கும் நிதிஷ் குமார் உடன் கூட்டணி வைத்திருந்தது. நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றால், லோக் ஜனசக்தி கட்சி மட்டுமே பா.ஜனதாவில் உள்ளது. சிராக் பஸ்வான் மற்றும் அவரது மாமா ஆகியோரை ஒன்று சேர்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதனால் 6 சதவீதம் பஸ்வான் வாக்குகள் கிடைக்கும் என நினைக்கிறது. மேலும், உபேந்திர சிங் குஷ்வாகா, முகேஷ் சஹானி, ஜித்தன் ராம் மஞ்சி ஆகியோர் கட்சியை கூட்டணியில் சேர்க்க இருக்கிறது.

    உத்தர பிரதேசததில் வலுவாக இருக்கும் பா.ஜனதா சுகல்வே் பாரதிய சமாஜ் கட்சியை மட்டும் கூட்டணியில் சேர்க்க இருக்கிறது.

    தமிழகத்தில் அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடனும், மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் தேசிவாத காங்கிரஸ், ஷிண்டுயின் சிவசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பத்தில முக்கிய கவனம் செலுத்தும்.

    வடகிழக்கு மாநிலங்களில ஏழு கட்சிகள் பா.ஜனதா கூட்டணியில் உள்ளது. பவன் கல்யாண், கேரளாவின் தாமஸ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைய இருக்கின்றன.

    • பாஜக தனது கூட்டணியில் உள்ள 38 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    • பாஜக தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி கேள்வி குறியாகி உள்ளது.

    திருப்பதி:

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பாஜக தனது கூட்டணியில் உள்ள 38 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து பவன் கல்யாண் மட்டுமே பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

    இதனால் பாஜக தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி கேள்வி குறியாகி உள்ளது.

    ஆந்திர மாநில பாஜக தலைவராக என்.டி. ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பொறுப்பேற்றுள்ளார். ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளது. மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

    ஆந்திராவில் பா.ஜ.க, பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து தனித்து போட்டியிடும் என பரபரப்பாக பேசப்படுகிறது.

    • புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்.

    சென்னை:

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.

    இந்த அழைப்பை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ×