search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்பக்குளம்"

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தெப்பக்குளம் ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறது. புஷ்கரணி ஆரத்தியும் ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அத்துடன் செப்டம்பர் மாதம் 13-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

    இரு பிரம்மோற்சவ விழாக்களை முன்னிட்டு தூய்மைப்படுத்தி, சீரமைக்கும் பணிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல், ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி வரை ஒரு மாதத்துக்கு கோவில் தெப்பக்குளம் (புஷ்கரணி) மூடப்படுகிறது. தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் குளிப்பதற்காக புஷ்கரணியின் பின் பக்கம் குழாய்கள் அமைக்கப்பட்டு வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புஷ்கரணியில் உள்ள தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட உள்ளது. தண்ணீரை வெளியேற்றியதும், படிக்கட்டுகள், தடுப்பு கம்பி வேலிகள், தரை தளம் ஆகியவை சீரமைக்கப்பட உள்ளது. படிக்கட்டுகளை சிமெண்டு பூசி சீரமைத்து, வர்ணம் பூசும் பணிகள் நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் புஷ்கரணி ஆரத்தி நடப்பது வழக்கம். எனவே தெப்பக்குளம் இன்று முதல் மூடப்படுவதால் ஒரு மாதத்துக்கு புஷ்கரணி ஆரத்தி நடப்பது ரத்து செய்யப்படுகிறது எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ×