என் மலர்
நீங்கள் தேடியது "slug 201641"
- சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார்.
- அவரை 4 இடங்களில் வைத்து சுடச் செய்துள்ளதன் மூலம், காவல்துறை அவரை அடியாள் போல் பயன்படுத்தி உள்ளது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் 100-வது நாளான 2018 மே 22 அன்று பொதுமக்கள் அணி திரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி வழியில் பேரணி நடத்திய போது, திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டது.
அதன் காரணமாக தூண்டிவிடப்பட்ட கலவரத்தை அடக்குவதாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதையும், காவல்துறையில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்து, குறிபார்த்து சுட்டுக் கொன்றார்கள் என்பதையும், நான் தெரிவித்து இருந்தேன்.
தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் அதே கருத்தை தனது விசாரணை அறிக்கையில் கூறி இருக்கிறது.
துப்பாக்கிச் சூடு நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, பெரியார் மொழியில் கூறினால் சமுக்காளத்தில் வடிகட்டியப் பொய் என்பதை விசாரணை ஆணையத்தின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி.ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்து வந்துள்ளனர் என்று ஆணையம் கூறி இருக்கிறது. எனவே தூத்துக்குடி படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் ஐயமில்லை.
சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து சுடச் செய்துள்ளதன் மூலம், காவல்துறை அவரை அடியாள் போல் பயன்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மீது விசாரணை ஆணையம் பரிந்துரைத்தவாறு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.
- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதியற்றது.
அவனியாபுரம்:
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி உயர்வை குறைத்திருக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற வகையில் நடவடிக்கை எடுத்து சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார்.
மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.
வெள்ள காலங்களிலும், தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் சமூக நலம் கருதி தொண்டாற்றி இருக்கிறது. இந்த அமைப்பு மீது சில இடங்களில் நடந்த வன்முறையை காரணம் காட்டி இருக்கிறது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதியற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தொடர் வண்டிகளில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார்.
- நாட்டின் கடன் தொகை 100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சோமு உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 6-ல் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சீமான் உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார்.
பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் நீதிபதிகள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தொடர் வண்டிகளில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். நாட்டின் கடன் தொகை 100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
சலுகை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்கக்கூடாது. உயர்ந்த இடத்தில் உள்ள நீதிபதிகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிடக்கூடாது. அது சிக்கலை ஏற்படுத்தும். ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து மக்கள் கருத்து கேட்பதற்கு முன்பாக முதலமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் கடையை மூடுவது மற்றும் எட்டு வழி சாலை அமைப்பது தொடர்பான முதலமைச்சரின் கருத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்தில் 2008-ம் ஆண்டு முதல் தமிழ் இருக்கை அமைந்திருக்கிறது.
- கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்த் துறையின் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்தில் 48 ஆண்டுகளாக தமிழ் இருக்கை இடம் பெற்றுள்ளது. கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்தில் 2008-ம் ஆண்டு முதல் தமிழ் இருக்கை அமைந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்த் துறையின் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.
தமிழ் மொழியின் மீதும், திருக்குறள் மீதும் ஆர்வமும் பற்றும் உடையவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமையவும், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்களை நியமனம் செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அத்துமீறி நமது கடற்பரப்பில் நுழைந்து கைது செய்வதை ஒன்றிய அரசு தடுத்தி நிறுத்திடாமல் அலட்சியப்போக்குடன் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
- தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதையும், தாக்குதலுக்கு உள்ளாவதையும் கண்டித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் வரை மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அத்துமீறி நமது கடற்பரப்பில் நுழைந்து கைது செய்வதை ஒன்றிய அரசு தடுத்தி நிறுத்திடாமல் அலட்சியப்போக்குடன் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டு நன்மைக்காக, இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மு.க.ஸ்டாலின் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவையாகும்.
- மு.க.ஸ்டாலின் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓய்வு எடுக்கிறார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முழு நலம் பெற வேண்டும். அவர் முதல்-அமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். வாரத்தில் ஒரு நாளாவது அவர் ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழ்நாட்டு நன்மைக்காக, இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அவர் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவையாகும். அவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓய்வு எடுக்கிறார்.
அவருடைய உடல் நலத்தை மனதில் கருதி, திராவிட முன்னேற்றக் கழக முன்னோடிகள், மாவட்டச் செயலாளர்கள் அவரது உழைப்பை நாட்டுக்காக பயன்படுத்தும் வேளையில் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மறந்துவிடக் கூடாது. அவர் விரைவில் முழு நலம் பெற்று தமிழகத்திற்கு பணியாற்ற இயற்கையை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதிகளில் ஒன்றிய ம.தி.மு.க. நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அந்த நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோவை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் தெரிவித்துவிட்டு பின்னர் துரை வைகோவை கட்சியில் சேர்த்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரத்தை கட்சியில் இருந்து நீக்கினார். இந்த கட்சிக்கு 28 ஆண்டுகாலம் உழைத்த மாவட்ட செயலாளரை நீக்கியதை கண்டித்து பொதுக்குழு உறுப்பினரும், காரியாபட்டி ஒன்றிய பொறுப்பாளருமான கடமங்குளம் கலாமணி, மாவட்ட பிரதிநிதி தோப்பூர் தங்கம், ஒன்றிய பொருளாளர் காளிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிளைக்கழக செயலாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
அது போல நரிக்குடி ஒன்றியத்தில் ஒன்றிய அவைத்தலைவர் உறங்காபுலி, பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகைச் சாமி மற்றும் ரெட்டைகுளம், ஆவரங்குளம் பிள்ளையார்குளம், பூம்பிடாகை, இருஞ்சிரை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்களும், மாவட்ட பிரதிநிதிகள் மாறன், ஆறுமுகம் உட்பட்ட நிர்வாகிகளும் ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூடங்குளத்தில் அணு உலைக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
- தமிழக அரசு சிறப்பு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.
வைகோ முன்னிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்துவது. ஜனாதிபதி தேர்தலில் நீண்ட நெடிய பாராளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்காவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிப்பது. உறுப்பினர் சேர்ப்புப் பணியை வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் விரைந்து முடித்து, உறுப்பினர்படி வங்களை உரிய தொகையுடன் தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.
சங் பரிவாரங்களின் கனவான இந்துராஷ்டிரத்தின் காலாட்படையாக, காவிப்படையாக இந்திய ராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரி விப்பதுடன், 'அக்னி பாதை' திட்டத்தைக் கைவிட வலியுறுத்துகிறது.
கூடங்குளத்தில் அணு உலைக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3-வது மற்றும் 4-வது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதி யையும் நிறுத்தி வைக்க வேண்டும்.
நூல் விலை உயர்வைத் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசுக்கு இக்கூட்டம் கண்ட னம் தெரிவிக்கிறது.
தமிழக அரசு சிறப்புப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்மொழி திராவிட மொழிகளின் மூல மொழி என்பதை கிறிஸ்தவ பாதிரியார்கள் அறிவித்துள்ளனர். விவிலியத்திற்கு யோவான் உள்பட 4 பேர் உரை எழுதியுள்ளனர். முதன்முதலில் அச்சில் பொறிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி என தூய யோவான் எழுதிய சுவிஷேசத்தில் இருந்து அறிய முடிகிறது. தமிழகத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாக கலாசார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் நமது பண்பாடு, கலாசாரம் நரகப்படு குழியில் சிக்கி தவிக்கிறது. 5 ஆயிரம் பேர் பயிலும் கல்விக்கூடங்களில் 50 பேர் தான் தவறு செய்கின்றனர். அவர்களால் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்திற்கு தலைகுனிவு ஏற்படுகிறது. கல்வியும், கலாசாரமும் பாழ்படுகிறது. மாணவர்கள் தங்களது பள்ளி, கல்லூரி பருவத்தின் போது ஏற்படும் தோல்விகளை துன்பங்களாக கருதக்கூடாது.
உலகில் துன்பப்படுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். துயரமில்லாதவர்கள் என்று எவருமில்லை. ஆகவே மாணவிகள் துன்பப்படுபவர்களுக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போல தன்னலம் கருதாமல் சேவைப்பணியாற்ற வேண்டும். தாய் தந்தையரின் கனவுகளை நிறைவேற்ற உழைக்க வேண்டும். உழைப்பின் மூலம் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றி அவர்களுக்கு பெருமையை தேடித்தர வேண்டும். தமிழகத்தில் மது கலாசாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உள்ளது. நாம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவிடக் கூடாது. தன்னலம் கருதாமல் சமூக மேம்பாட்டிற்காக சேவை செய்பவர்களுக்கு இதுபோன்ற விழாக்கள் கட்டாயம் நடத்தவேண்டும் என்று பேசினார்.
இதில் கல்வியாளர்கள் ரோவர் வரதராஜன், சீனிவாசரெட்டியார், சிவசுப்ரமணியன், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், ம.தி.மு.க. அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் அ.தி.மு.க. அரசு கோரிக்கை கொடுக்கச் சென்ற நிராயுதபாணியான மக்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி 13 பேரின் உயிரை பலிகொண்டு, பலரை மரண காயப்படுத்தி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலையால் ஏற்பட்ட புற்றுநோயால் மக்கள் மடிந்ததற்கும், விவசாயம் சீரழிந்ததற்கும், நச்சு வாயு பரவியதால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்நலக் கேட்டுக்கும் அ.தி.மு.க. அரசே பொறுப்பு.
தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழக மக்களின் மொத்த வெறுப்பிற்கும் ஆளாகியுள்ள அ.தி.மு.க. அரசு, பழியில் இருந்து தப்பித்துக்கொள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் ஆலை நிறுவனர் அனில் அகர்வால், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆலையை இயக்குவேன் என்று அறிவித்தார்.
ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடுக்கும் வழக்கில், ஒருவேளை சுப்ரீம் கோர்ட்டில் ஆலையை இயக்கும் தீர்ப்பு வருமானால் எங்கள் தமிழ் மண்ணில் நடத்த விடமாட்டோம். லட்சக்கணக்கானவர்கள் திரண்டு ஆலையை அப்புறப்படுத்துவோம். காவல்துறையை அனுப்பினாலும், மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பினாலும் அதனை எதிர்கொண்டு ஆலையை அகற்றியே தீருவோம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கெல்லாம் பொறுப்பேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #SterliteProtest #Thoothukudi #Vaiko