என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வித்துறை"

    • விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து மாநில தேர்வு குழுவுக்கு வருகிற 25ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
    • மாவட்ட தேர்வு குழுவில் மாநில பிரதிநிதியாக ஒருவரும், மாவட்ட கலெக்டரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெற்று இருப்பார்கள்.

    சென்னை:

    2024-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் வாயிலாக 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தலைவராக கொண்ட மாவட்ட குழு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து மாநில தேர்வு குழுவுக்கு வருகிற 25ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    இந்த மாவட்ட தேர்வு குழுவில் மாநில பிரதிநிதியாக ஒருவரும், மாவட்ட கலெக்டரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெற்று இருப்பார்கள். தேசிய நல்லாசிரியர் விருதுக்கான தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் அளித்திருந்த வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.
    • காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.

    இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
    • எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினார். பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    காமராஜரின் பிறந்தநாளான இன்று அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். கல்வி போன்ற துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது இலட்சியங்களை நிறைவேற்றவும், நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

    • குறிப்பாக 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று டைரியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • ஆசிரியர்களின் பயிற்சிக்கு 10 நாட்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) ஆண்டு டைரியில் 220 தினங்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. குறிப்பாக 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று டைரியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, பணிச்சுமையை குறைக்கும் வகையில், வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு வேண்டுகோள்களை வைத்தன. அவர்களின் கோரிக்கைகள், வேண்டுகோளை ஏற்று கற்றல், கற்பித்தல், தேர்வுகள் உள்பட பணிகளுக்கு 210 வேலைநாட்கள் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆசிரியர்களின் பயிற்சிக்கு 10 நாட்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

    இந்த திருத்தப்பட்ட டைரியை பின்பற்றி செயல்பட அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள்.
    • பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் ஓர் அங்கமாக திகழும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 15,000 பேர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 17,500 பேர் என மொத்தம் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதமும், காட்டப்படும் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இன்று வரை வழங்காதது தான் ஊதியம் வழங்கப்படாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்குவதற்கு மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதியே கல்வித்துறை முடங்குவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது. கல்வித்துறைக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு காட்டும் பிடிவாதம் நியாயமானதல்ல.

    அதே நேரத்தில் மத்திய அரசின் நிதி வரவில்லை என்பதையே காரணமாகக் காட்டி, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மனிதநேய மற்ற செயலாகும்.

    மத்திய அரசிடமிருந்து நிதி வராவிட்டாலும் கூட, தமிழக அரசு நினைத்திருந்தால் தன்னிடமுள்ள பிற துறைகளுக்கான நிதியை விதிகளுக்கு உட்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்கியிருக்க முடியும். ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.25 கோடியை ஏற்பாடு செய்வது இயலாத ஒன்றல்ல.

    ஆனாலும், ஒருங்கிணைந்த கல்வித்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களை தவிக்கவிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக, பெரிதுபடுத்தி அரசியல் லாபம் தேடவே தமிழக அரசு முயல்கிறது என்பது உறுதியாகிறது.

    இந்தத் திட்டத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள். மாதத்தின் இறுதி நாட்களையே கடன் வாங்கிக் கழிக்கும் அவர்களால் மாதத்தின் முதல் நாளில் ஊதியம் வராமல் வாழவே முடியாது. அவர்களின் துயரத்தை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வராததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாததன் மூலம் பள்ளிக்கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளே முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது.

    நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டும் முடிவடைந்து விட்ட நிலையில், மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் அந்த நிதிக்காக காத்திருக்காமல் சொந்த நிதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணிச்சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.
    • வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழி காட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018 முதல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை கடந்த ஜூன் 8-ந்தேதி வெளியிட்டது. அதில் 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் பணிச்சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கையை 210 தினங்களாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.

    இதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

    அதில் 19 சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருந்ததை மாற்றி 4 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 2 சனிக்கிழமைகளில் வகுப்புகள் முடிந்து விட்டது.

    இதனுடன் பழைய நாட்காட்டியை பள்ளி இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 25-ந்தேதியாக இருந்தது. அது தற்போது ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • தலைமை ஆசிரியை கலைச்செல்வி மீது புகார் எழுந்துள்ளது.
    • அதியமான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு வத்தல்மலை அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    தருமபுரி:

    தருமபுரி நகரில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி நகரில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் தெரேசால், பணி ஓய்வு பெற்றதை அடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு கலைச்செல்வி, என்பவர் பாலக்கோடு மகளிர் அரசு பள்ளியில் இருந்து அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று கொண்டார்.

    இந்த நிலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த இப்பள்ளி தகைச்சாள் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்ததில் முறைகேடு நடந்ததாக தலைமை ஆசிரியை கலைச்செல்வி மீது புகார் எழுந்துள்ளது.

    மேலும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களை தருமபுரிக்கு வந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர். இதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் மீது கூறப்பட்ட புகார் உண்மைதானா என விசாரணை நடத்தினர். இதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

    இதை அடுத்து நேற்று முன்தினம் தலைமை ஆசிரியை கலைச்செல்வி காமலாபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்த தலைமை ஆசிரியர் சுதா, அவ்வையார் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் பொறுபேற்றார்.

    இதே போல் தருமபுரி நகர் அதியமான் ஆண்கள் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தங்கவேலு. இவர் பொறுப்பேற்ற பின்னர் பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைவு, போட்டி தேர்வுகளில் மாணவர்கள் ஒருவர் கூட வெற்றி பெறாதது, உயர்கல்வி அதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படாதது என பல்வேறு குற்றச்சாட்டுகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் கூறப்பட்டது.

    நேற்று முன்தினம் அதியமான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு வத்தல்மலை அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வத்தல்மலையில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் காமராஜ் தருமபுரி டவுன் அதியமான் அரசு மேல்நிலை பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

    ஒரே நாளில் இரு மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • திருவல்லிக்கேணியில் உள்ள லேடி விலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்துள்ளது.
    • பள்ளியில் நூற்றாண்டு திருவிழா அடுத்த மாதம் 3-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

    சென்னை:

    100 ஆண்டுகள் கடந்து இருக்கும் அரசு பள்ளிகளின் விவரங்களை எடுத்து, அந்த பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவாக அதை கொண்டாட கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

    அதன்படி, தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்பட 2,238 அரசு பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்து இருக்கின்றன.

    இந்த பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் வாயிலாக நூற்றாண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் திருக்குவளை (தஞ்சாவூர் மாவட்டம்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (புதன்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நூற்றாண்டு சுடர் ஏற்றி தொடங்கி வைக்கின்றனர்.

    அதனைத் தொடர்ந்து மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 37 அரசு பள்ளிகளிலும் நூற்றாண்டு சுடர் ஏற்றப்பட்டு, நூற்றாண்டு திருவிழா நாளை (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

    இது மாவட்ட அளவிலான தொடக்க விழா கொண்டாட்டம் ஆகும். அதன் பின்னர் 100 ஆண்டுகளை கடந்த பள்ளிகள் பள்ளி அளவில் நூற்றாண்டு திருவிழாவை பள்ளியின் ஆண்டுவிழாவோடு முன்னாள் மாணவர்கள், பெற்றோரை இணைத்து கொண்டாடவும் கல்வித்துறை பரிந்துரைத்து இருக்கிறது.

    இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வகுத்துள்ளது. அதன்படி, விழாக்குழு வாயிலாக பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், உள்ளாட்சி உறுப்பினர்கள், கல்வி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியை சார்ந்த அனைவருக்கும் நூற்றாண்டு விழா குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

    விழாவில் தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும். மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த திட்டமிட வேண்டும்.

    விழாவை புகைப்படம் மற்றும் வீடியோ வாயிலாக பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதனை தவறாது பின்பற்றி, பள்ளி நூற்றாண்டு திருவிழாவை சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னை மாவட்டத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள லேடி விலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றாண்டு திருவிழா அடுத்த மாதம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.

    இதற்காக முன்னாள் மாணவர்கள் பலர் அழைக்கப்பட்டு உள்ளனர். பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களான பர்வீன் சுல்தானா, பாரதி பாஸ்கர் ஆகியோர் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆவார்கள்.

    மேலும் சிலர் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து விழாவை சிறப்பாக கொண்டாடும் முயற்சியில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    • விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது.
    • இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் வேலை நாட்களில் மாலை 6 மணிக்கு மேலும், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கல்வித்துறைக்கும் புகார்கள் சென்றன.

    இதைத்தொடர்ந்து கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை யூனியன் பிரதேசத்தில் இயங்கும் சில தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்தும், வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை அளிக்கும் தினங்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக கவனத்துக்கு வந்துள்ளது. இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    எனவே பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதன்படி எந்த ஒரு தனியார் பள்ளியும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் மற்றும் பிற திறன் சார்ந்த வகுப்புகளை நடத்தக்கூடாது. அதேபோல் வார விடுமுறை, பொதுவிடுமுறை, அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களிலும் இத்தகைய வகுப்புகளை நடத்தக்கூடாது.

    இந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். இதில் ஏதேனும் விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி
    • மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு கூறியிருந்தது. மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களில் இருப்பதால், விடுமுறை நாட்களில் எந்த காரணம் கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவாக தெரிவித்திருந்தார்.

    ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக, தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தலாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதி வழங்கியிருக்கிறார்.

    மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்படட முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். இதுபோன்ற அறிவிப்பு மற்ற மாவட்டங்களிலும் வெளியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, இனி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கான பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    • ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்காவிட்டால் மாணவர்கள் மோசமான நிலைக்கு போவார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 77 வகையாக நெறிமுறைகளை கல்வித்துறை பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசரியர்கள் சங்க செய்தித் தொடர்பு செயலாளர் சேகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஆசிரியர்களுக்கு இப்போது பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும். ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பெஞ்சை உடைப்பது, டேபிளை உடைப்பது என மாணவர்களின் பழக்கவழக்கம் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் இதைவிட மோசமான நிலைக்கு போவார்கள். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால், எல்லா ஆசிரியர்களும் பயமில்லாமல் வேலை செய்வார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயப்படுவார்கள், சரியாக படிப்பார்கள்.

    இன்றைய நிலைமை எப்படி இருக்கிறதென்றால், ஆசிரியர்கள்தான் மாணவர்களை பார்த்து பயப்படுகிறார்கள். எந்த மாணவன் என்ன செய்வானோ, எந்த மாணவன் அடிப்பானோ, எந்த மாணவன் எதாவது பிரச்சனை ஏற்படுத்துவானோ? என்ற பயத்துடனேயே ஆசிரியர்கள் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆசிரியர்கள் இப்போது பெரும்பாலும் சொந்த வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்படும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
    • நீலகிரி மாவட்டத்தில் 10 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

    கோவை:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு பள்ளி சூறையாடப்பட்டது.

    இதை கண்டித்து தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்படும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது, உத்தரவை மீறி விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவை மீறி தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அறிவித்து மூடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் மூடப்பட்டிருந்த தனியார் பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., மெட்ரிக், பிரைமரி என மொத்தம் 31 தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அறிவித்து இருந்தது தெரியவந்தது. இதேபோல நீலகிரி மாவட்டத்தில் 10 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவித்து இருந்த 41 பள்ளிகளுக்கும் அரசு உத்தரவை மீறி பள்ளிகளை மூடியது ஏன் என்பது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில் மாவட்டம் முழுவதும் நேற்று 31 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்றார். இதேபோல நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவித்த 10 பள்ளிகளுக்கு நோட்டீசு அனுப்பப்படும் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் பள்ளி சங்க நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழகத்தில் இயங்கும் நர்சரி மெடரிக் பள்ளிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். சின்னசேலம் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    ×