என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள்"

    • வனத்துறையினர் யானை இருப்பிடத்தை அறிய அதிநவீன டிரோன் கேமராக்களை பயன்படுத்தி யானையை தேடுகின்றனர்.
    • கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு அங்கு வியாபாரம் நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது தொட்டபெட்டா மலை சிகரம்.

    அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.

    இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வழிதவறி தொட்டபெட்டா மலை சிகரத்திற்குள் நுழைந்தது.

    இதையடுத்து அங்கிருந்த சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வனத்துறையினர் யானையை கண்காணித்து வந்தனர். இந்த பணியில் 60-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் வனத்துறையினர் யானை இருப்பிடத்தை அறிய அதிநவீன டிரோன் கேமராக்களை பயன்படுத்தி யானையை தேடுகின்றனர். நேற்று 4-வது நாளாக பணி தொடர்ந்தது.

    யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகள் கடந்த 3 தினங்களாக அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தொட்டபெட்டா மலை சிகரம் திறந்ததை அறிந்ததும், ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வந்து சுற்றி பார்த்தனர். கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு அங்கு வியாபாரம் நடைபெற்றது.

    • சுற்றுலாப் பயணிகள் சோதனை சாவடியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அருவிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் நலன் கருதி பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிக அளவில் வருகின்றனர்.

    சின்ன சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவு தண்ணீரே வந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதே போல் கும்பக்கரை அருவி, சுருளி அருவியிலும் அதிக அளவு தண்ணீர் வருவதால் கோடை விடுமுறைக்காக வரும் சுற்றுலா பயணிகள் இங்கு ஆனந்தமாக நீராடி செல்கின்றனர்.

    மேகமலை அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு நுழைவுக் கட்டணமாக ரூ.10 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுகிறது. அருவியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு முன்பு வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குளிக்க வரும் நபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அந்த பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. மேலும் அங்கிருந்து அருவிக்கு நடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதனால் சுற்றுலாப் பயணிகள் சோதனை சாவடியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அருவிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், அண்டைமாநிலமான கேரள மாநிலத்தில் இதுபோன்ற இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுப்பதோடு, சுற்றுலா பயணிகள் நலன் கருதி பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி சென்று வர ஏதுவாக உள்ளது.

    எனவே மேகமலை அருவிக்கும் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து பேட்டரி வாகனங்களை இயக்க வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கடந்த சில ஆண்டுகளாக கட்டணம் வசூலித்து வரும் நிலையில் அருவியில் பாதுகாப்பு கம்பிகள், பெண்கள் உடை மாற்றும் அறை பெண்கள் கழிப்பறை உள்ளிட்ட எந்தவித வசதிகளும் ஏற்படுத்தவில்லை. எச்சரிக்கை பலகை மற்றும் வன காவலர்கள் இல்லாததால் சில நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் நடைபெற்றது.

    இங்கு வசூல் செய்யப்படும் பணம் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். மேலும் அருவியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட கூடுதலாக வனத்துறை பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனிடையே மேகமலை ஊராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்ததால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

    • முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தையும் திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • சலுகைகளை இந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

    இதனை தொடர்ந்து விடுமுறையில் உள்ள ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவும் ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் முன்பதிவு செய்த ராணுவ மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க அந்த நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

    வருகிற 31-ந் தேதி வரை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பாதுகாப்பு படை உள்ளிட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தையும் திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஜூன் 30-ந்தேதி வரை விமானங்களை மறு அட்டவணை படுத்தி சலுகைகளை இந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    • ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் கங்கநானி அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    • படுகாயம் அடைந்தவர்கள் செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் கொல்லிமலை அரியூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாட்டுபட்டி, நம் அருவி, சோளக்காடு, டெம்பிள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் நம் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை திடீரென தெரு நாய்கள் துரத்தி, துரத்தி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊராட்சி துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று 13 வெறிநாய்களை பிடித்து ஒரு அரங்கத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களை கடித்து குதறிய தெருநாய்கள் பிடிக்கப்பட்டு ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்கள் மூலம் அவைகளுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படும் என்றனர்.

    • தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
    • மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஊட்டி:

    தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைசிகரம் விளங்குகிறது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.

    இந்த மலைசிகரத்தில் இருந்து பசுமை தவிழும் அடர்ந்த காடுகள், ஊட்டி நகரின் அழகை பார்வையிடலாம்.

    தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.

    நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியாகினர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். கடைக்காரர்களையும் கடைகளை பூட்டி விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து கடைகளும் மூடப்பட்டன.

    பின்னர் அங்கு சுற்றிய யானையை அங்கிருந்து விரட்டி விட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. அந்த யானை தான் வழிதவறி வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து அங்கு கடை வைத்திருப்பவர்கள் கூறியதாவது:-

    10 ஆண்டுகாலமாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இதுவரை காட்டு யானை வந்தது இல்லை. முதல்முறையாக இந்த பகுதிக்கு காட்டு யானை வந்துள்ளது.

    காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விடும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தொட்டபெட்டா மலைசிகர பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், இன்று ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை கழிக்க வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் நெலாக்கோ ட்டை பகுதியிலும் காட்டு யானை புகுந்தது.

    அந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கியதுடன், வீடுகளையும் சேதப்படுத்தியது. அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார்.

    இதை பார்த்த யானை, வாலிபரை துரத்த ஆரம்பித்தது. யானையிடம் இருந்து தப்பிக்க அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.

    மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • பாகிஸ்தானை சேர்ந்த பலரின் எக்ஸ் தள பக்கங்கள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த போவதாக உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்து இருந்தார்.

    பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த பலரின் எக்ஸ் தள பக்கங்கள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் வலை தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் மீது அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஊட்டி-குன்னூர் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
    • கடும் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

    ஊட்டி:

    கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதன்காரணமாக அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் பார்வையாளர்களின் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது. அங்கு அவர்கள் இதமான காலநிலையை அனுபவித்தபடி இயற்கை காட்சிகளை கண்டுகளித்தனர்.

    சுற்றுலாப்பயணிகள் திரண்டு வந்திருந்ததால் ஊட்டி சுற்றுலா தலங்களில் நுழைவு டிக்கெட் பெறவும், படகு சவாரி செய்யவும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வந்தது.

    இதற்கிடையே கோடை சீசனையொட்டி சுற்றுலாப்பயணிகள் குவிந்து உள்ளதால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி-குன்னூர் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை ஜூன் 30-ந்தேதி வரை இருப்பதால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களும், வார விடுமுறை நாட்களில் 8,000 வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது. கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் வெளியூர் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை செய்யப்படுகிறது.

    இதற்கிடையே, மே 1-ந்தேதியில் இருந்து ஒருவழிப்பாதை கடைப்பிடிக்கப்படுவதால் ஊட்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் குஞ்சப்பனை வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்கள் பர்லியார் வழியாகவும் ஊட்டிக்கு வர வேண்டும்.

    ஆனால் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை காரணமாக அந்த பகுதியில் ஒரு வழிப்பாதை நடைமுறையை கடைப்பிடிக்க முடியாததால், ஒருசில வாகனங்கள் இருவழிப் பாதையில் சென்று வருகின்றன.

    இதன் காரணமாக ஊட்டியில் முக்கிய சந்திப்புகளான, 'சேரிங்கிராஸ், மதுவான் சந்திப்பு, குன்னூர் சந்திப்பு, பிங்கர் போஸ்ட் சாலை என்று நகரில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் சுற்றுலா வாகனம் மட்டுமின்றி உள்ளூர் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலை இரவு வரை தொடர்ந்ததால் அவசரபணிகளுக்கு செல்லமுடியாமல், அனைத்து தரப்பினரும் அவதி அடைந்தனர்.

    கோடை சீசனின்போது குறைந்தபட்சம் 250 போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவர். ஆனால் தற்போது 50 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்கள் கடும் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டால் மட்டுமே போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று சமூகஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று வருகின்றன.
    • ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மே தின விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.

    ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளான அண்ணா பூங்கா, மான் பூங்கா, சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், படகு இல்லம், சேர்வராயன் கோவில், கிளீயூர் நீர் வீழ்ச்சி, காட்சி கோபுரம் உள்பட பகுதிகளுக்கு சென்று இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். மேலும் ஏற்காடு படகு குழாமில் குடும்பத்தினருடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    மாலை நேரத்தில் ஏற்காட்டில் மழை பெய்ததால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதுடன் படகு இல்லத்தில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்பு விசைப்படகு துடுப்பு படகு மட்டுமே இயக்கப்பட்டது. படகு சவாரி மழையால் தடைபட்டதால் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகிற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    மேலும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி காணப்பட்டன. அதேபோல் உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வெள்ளிக்கிழமையான இன்றும் காலை முதலே ஏற்காட்டில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று வருகின்றன. மேலும் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவுவதால் ஏற்காட்டில் இயற்கை சூழலை ரசித்த படி குடும்பத்துடன் பொது மக்கள் வலம் வருகிறார்கள். இதனால் அங்குள்ள முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

    • போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு தினந்தோறும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்கள் புதுச்சேரி கடற்கரை அழகை ரசிப்பது வழக்கம்.

    இதற்கிடையே புதுச்சேரி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை வாலிபர்கள் கேலி கிண்டல் செய்து ரகளையில் ஈடுபடுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு புகார் வந்தது.

    போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள டூயூப்ளக்ஸ் சிலை அருகே மதுபோதையில் 3 வாலிபர்கள் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.

    இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 27), ராமநாதபுரம் அடுதாகுடியை சேர்ந்த முகேஷ் (26), புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த பிரசாத் (30), புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரை சேர்ந்த கருப்பையா (29) ஆகியோரை கைது செய்தனர்.

    • வருகிற 3, 4-ந்தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் ‘கோடை விழா’ தொடங்குகிறது.
    • வருகிற 23, 24, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குன்னூரில் பழக் கண்காட்சி நடக்கிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் கோத்தகிரி நேரு பூங்கா ஆகியவை உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகளை பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    ஏப்ரல்-மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் மட்டும் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அப்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    அதிலும் குறிப்பாக தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் நூற்றாண்டு புகழ்பெற்ற மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது ஆகும்.

    இந்நிலையில் இந்தாண்டு கோடை விழாவிற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றன. மேலும் கோடை விழா நிகழ்ச்சிகள் வருகிற 3, 4-ந்தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் 'கோடை விழா' தொடங்குகிறது.

    தொடர்ந்து கூடலூரில் 9,10,11-ந்தேதி ஆகிய 3 நாட்கள் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் 10,11,12-ந் தேதி ரோஜா கண்காட்சி ஆகியவை நடக்க உள்ளது.

    மேலும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 127-வது மலர் கண்காட்சி வருகிற 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து வருகிற 23, 24, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குன்னூரில் பழக் கண்காட்சி நடக்கிறது.

    குன்னூர் காட்டேரி பூங்காவில் இம்முறை முதல்முறையாக மே 30-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 3 நாட்கள் மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக மலர் கண்காட்சி நடைபெற உள்ள ஊட்டி தாவரவியல் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 5.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

    இதுதவிர அலங்கார மாடங்களை அலங்கரிப்பதற்காக சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இவை தற்போது பூக்க தொடங்கி உள்ளன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்ச்செடிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வசீகரிப்பதாக அமைந்து உள்ளது. இதனால் அவர்கள் பூஞ்செடிகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் நின்று செல்பி எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    ×