என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் போராட்டம்"

    • வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது
    • 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

    பாட்னா:

    பீகாரின் பாட்னா நகரில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்து, இதுவரை 6 கட்டங்களாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டுளள்து. 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். 7வது கட்ட ஆட்சேர்ப்பின் கீழ், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதிலும் இருந்து கைக்குழந்தைகளுடன் ஆசிரியைகள் பலர் வந்திருந்தனர்.
    • இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வைத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் போராடி வருகிறார்கள்.

    கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பணியை தொடங்கிய ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இதற்கு ஒருநாள் முன்பாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும், தாங்களும் ஒரே மாதிரியான வேலையையே செய்து வருகிறோம். ஆனால் ஊதியத்தில் மட்டும் அதிக மாறுபாடு உள்ளது என்று கூறி இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை கையில் எடுத்து கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து கைக்குழந்தைகளுடனும் ஆசிரியைகள் பலர் வந்திருந்தனர். இவர்கள் நேற்று இரவு டி.பி.ஐ. வளாகத்திலேயே படுத்து உறங்கினார்கள்.

    இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்களாக சாப்பிடாமல் உடலை வருத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பலர் சோர்வாக காணப்பட்டனர்.

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்காங்கே மரத்தடிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் சிவகங்கையைச் சேர்ந்த வசந்தி, திருவண்ணாமலையைச் சேர்ந்த கவிதா ஆகிய 2 ஆசிரியைகள் இன்று காலையில் திடீரென மயக்கம் அடைந்தனர்.

    அங்கு தயார் நிலையில் இருந்த ஆரம்புலன்சில் ஏற்றப்பட்டு இருவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இது தொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும் போது, "கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என கூறியிருந்தனர். எனவே தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் பலமுறை மனுவும் அளித்துள்ளனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.
    • முதல் நாள் போராட்டம் தொடங்கியபோது இருந்ததை விட தற்போது அதிகம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து பணியை தொடங்கிய ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னாள் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஊதியத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்றும் இதனை சரிசெய்ய வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் . கடந்த 2014-ம் ஆண்டு முதல் அதற்காக இவர்கள் போராடி வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்போது செவி சாய்க்காமல் உள்ளனர். எனவே தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதுவரை 46 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலையில் பூமணி, மேரிநிர்மல் ஜாய், தாத்தப்பன் ஆகிய 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. போலீசார் சமரச பேச்சு நடத்தியும் அதனை ஆசிரியர்கள் ஏற்கவில்லை.

    இது தொடர்பாக ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும்போது, தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதியின்படி செயல்பட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியத்தை தான் நாங்கள் கேட்கிறோம். எனவே எங்களது போராட்ட குரலுக்கு அரசு செவிசாய்த்து எங்களை அழைத்து பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    முதல் நாள் போராட்டம் தொடங்கியபோது இருந்ததை விட தற்போது அதிகம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இருந்து அணி அணியாக ஆசிரியர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவுக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்டத்தில் நேற்று வரை 69 ஆசிரியர்-ஆசிரியைகள் மயக்கம் அடைந்தனர்.
    • இன்று காலை 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி கடந்த 27-ந்தேதி முதல் ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று போராட்டக்குழுவினருடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

    எனவே போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் நேற்று வரை 69 ஆசிரியர்-ஆசிரியைகள் மயக்கம் அடைந்தனர்.

    இன்று காலை 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கல்வித்துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். கிடைக்காத பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் தெரிவித்தார்.

    • கடந்த 27-ந்தேதியில் இருந்து குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • முதலமைச்சரை சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் தகவல்

    கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருப்பதாகவும், அதனை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27-ந்தேதியில் இருந்து குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 140-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

    போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்ளுடன் தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆகியோர் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும், முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • ஊதிய உயர்வு குறித்த உறுதி மொழி அரசு தரப்பில் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
    • 144 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    சென்னை:

    இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 27-ந்தேதி சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் தொடங்கிய உண்ணாவிரதம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.

    இதுவரையில் 144 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். போராட்ட தளத்திலும் சிலருக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.

    இதற்கிடையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஊதிய உயர்வு குறித்த உறுதி மொழி அரசு தரப்பில் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆறாவது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது.

    ஆசிரியர்கள் உணவருந்தாமல், தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி துறை செயலாளர் மற்றும் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல் அமைசர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளரின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது." என கூறப்பட்டுள்ளது.

    முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

    கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். விரைவில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள காலி பணியிடங்களில் வயதுவரம்பின்றி பணிநியமனம் செய்ய வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    சென்னை:

    தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மாநில தலைவர் ரத்தின குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    2010-ல் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு பணி நியமனம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள காலி பணியிடங்களில் வயதுவரம்பின்றி பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    போராட்டம் குறித்து ரத்தின குமார் கூறியதாவது:-

    2014-ம் ஆண்டிற்கு பிறகு பணி நியமனம் செய்யப்படவில்லை. தமிழகத்தில் 9,176 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் 2 ஆயிரம் பேர் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எங்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும்.

    அதேபோல 1743 இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் தற்போது காலியாக உள்ளன. அவற்றில் பாதிக்கப்பட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு எங்களை வஞ்சித்தது. தி.மு.க. அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைநிலை ஆசிரியர்களுக்கான 1743 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • பதவி மூப்பு அப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    சென்னை:

    தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வித்துறை இயக்குனரக அலுவலகத்தில் திரண்டனர்.

    திடீரென்று அவர்கள் கல்வித்துறை இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கான 1743 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏற்கனவே பதவி மூப்பு அப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • தமிழகம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
    • கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்து இருந்தனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி இன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள்.

    2 ஆண்டுகளாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபட்டனர்

    இன்றுக்குள் போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் எனவும் அறிவிப்பு செய்து உள்ளனர். இது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-

    2012-ம் ஆண்டு ஓவியம் உடற்கல்வி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தமிழகம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

    மாதத்திற்கு 12 அரை நாட்கள் வேலை என்ற நிலையில் மூன்று முறை ஊதிய உயர்வு வழங்கி தற்போது பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெற்று வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்து இருந்தனர். இரண்டு ஆண்டுகளாகியும் இந்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்களுக்கு கால முறை சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது.
    • 5-வது நாளாக நீடித்த ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதி தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணையை திரும்ப பெறக்கோரி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், 5-வது நாளாக நீடித்த ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    • 4 ஆசிரியர் சங்கத்தினரும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 9 பேர் நேற்று இரவு மயங்கி விழுந்தனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (பழைய டி.பி.ஐ. வளாகம்) பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம், தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம் என பல்வேறு அலுவலகங்கள் அமைந்து உள்ள இந்த வளாகத்தில், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று அங்கு ஒரே நாளில் 4 ஆசிரியர் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன.

    ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், பழைய டி.பி.ஐ. வளாகம் நேற்று ஆசிரியர்களின் போராட்டக்களமாக மாறியது.

    'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், இடை நிலை ஆசிரியர்கள் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    இதேபோல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கங்களை சேர்ந்த சுமார் 600 ஆசிரியர்கள் கடந்த 5 நாட்களாக டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளனர்.

    அவர்களில் பெரும்பாலானவர்களில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் உண்ணாவிரதத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்று மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை, டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம், பணி நியமனத்துக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் 600-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வந்து இருந்தனர்.

    இவர்கள் தங்களுக்கு ஆசிரியர் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நேற்று டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்களின் 3 விதமான போராட்டம் தொடங்கியது.

    ஒரு சாரார் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள். மற்றொரு ஆசிரியர் சங்கத்தினர் தங்களுக்கு ஆசிரியர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இன்னொரு சங்கத்தினர் தங்களுக்கு வேலை வேண்டும் என்பதை பிரதானமாக கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றதால் பழைய டி.பி.ஐ. வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கப் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் கோரிக்கைக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    4 ஆசிரியர் சங்கத்தினரும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு அவர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் இருந்து கலைந்து செல்லவில்லை. அங்கேயே படுத்து தூங்கினார்கள். இன்று காலை எழுந்து பல் துலக்கி விட்டு மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    அருகருகே அமர்ந்து உள்ள அவர்கள் இடையே இடையே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று காலை முதல் பரபரப்பான சூழ்நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களும் போராட்டத்தில் சேரும் பட்சத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    இதற்கிடையே, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 9 பேர் நேற்று இரவு மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 21 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஆண்கள், 27 பேர் பெண்கள். இன்று காலை வரை 30 பேர் மயங்கி விழுந்தபோதிலும் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

    இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்காக ஆம்புலன்சுகளும் தயாராக நிறுத்தப்பட்டு உள்ளன.

    ×