என் மலர்
நீங்கள் தேடியது "மாநகர பஸ்"
- சென்னை நகரில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
- மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை நகரில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
தான் பயணம் செய்ய விரும்பும் பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த பஸ் எப்போது வரும் என்பதை அறிய 'சலோ' செயலி பயன் பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பஸ்களில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பஸ்களில் பயணம் செய்யும் ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ இந்த அவசர பட்டனை அழுத்தலாம். அதன் மூலம் அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்களிலும், பஸ்களிலும் மகளிர் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியுடன், மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து இன்றும், நாளையும் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துகின்றன.
இந்த விழிப்புணர்வு பிரசாரம் சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், பிராட்வே, திருவான்மியூர், கிண்டி ஆகிய மாநகர போக்குவரத்து கழக டெப்போக்களில் நடந்தது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் அவசர பட்டன்களை எப்படி பயன்படுத்துவது, அரசு உதவி எண்களை எப்படி கையாள்வது என்பது பற்றி பெண்களுக்கு ஊக்குவிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்காக இந்த டெப்போக்களில் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் அவசர பட்டனின் அமைப்பு, அவை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி காண்பிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் போது தெரு நாடகமும் நடைபெற்றது. நாளையும் (30-ந்தேதி) இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
- மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடயே பெரும் பரபரப்பு காணப்பட்டது.
பொன்னேரி:
செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு பகுதிக்கு மாநகர பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை மாநகர பஸ் செங்குன்றத்திலிருந்து பழவேற்காட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பழவேற்காடு அருகேயுள்ள பிரளயம் பாக்கம் பகுதியில் வந்த போது பஸ் ஜன்னல் கண்ணாடி மீது மர்ம நபர் கல் வீசி தாக்கினார்.
இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். இதையடுத்து அந்த பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் மாற்று வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பஸ் கண்ணாடியை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பழவேற்காட்டிற்கு வந்து கொண்டிருந்த சக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பழவேற்காடு பகுதிக்கு வரும் மாநகர பஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், இதே போன்று சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், திருப்பாலை வனம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மேலும் இரவில் தங்கும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தங்கும் அறை இல்லை எனவும், பஸ்சில் கொசு தொல்லையுடன் தூங்குவதாகவும், போதிய பாதுகாப்பு இல்லை எனவும், டிக்கெட் வசூல் பணத்தை வைப்பதற்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடயே பெரும் பரபரப்பு காணப்பட்டது.
- சுரங்க பாதையில் பஸ் சென்ற போது தேங்கியுள்ள மழை நீரில் பஸ் சிக்கிக் கொண்டது.
- மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் ரெயில்வே சுரங்கபாதையில் விடிய விடிய பெய்த மழையால் மழை நீர் தேங்கி உள்ளது. இன்று காலை சென்னை செங்குன்றத்தில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது.

மூலக்கொத்தளம் சுரங்க பாதையில் பஸ் சென்ற போது தேங்கியுள்ள மழை நீரில் பஸ் சிக்கிக் கொண்டது. பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு வேறு ஒரு பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் தண்ணீரில் சிக்கிக் கொண்ட பஸ்சை வாகனம் மூலம் இழுத்து அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
#WATCH | Tamil Nadu: A bus from Chennai MTC was stuck in a subway in Moolakkothalam, Chennai.
— ANI (@ANI) November 22, 2023
With the efforts of the Transport Department and Corporation workers, the bus was later removed from there. pic.twitter.com/nrcG4IRjiG
- வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- பயணிகள் தங்களது உடமைகளை எளிதாக வைத்து சிரமமின்றி பயணம் செய்ய முடியும்.
வண்டலூர்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள் ளது. இங்கிருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் தேவையை அறிந்து தேவையான வசதிகள் ஒவ்வொன்றாக செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியூர் செல்ல கிளாம்பாக்கத்திற்கு மாநகர பஸ்களில் வரும் பயணிகள் தங்களது உடமைகள் மற்றும் பொருட்களை வைக்க இடம் இல்லாமல் கடும் சிரமப்பட்டனர். கூட்ட நெரிசலில் பயணிகளில் பொருட்களுடன் பயணம் செய்யும் நிலை இருந்தது.
இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்திற்கு செல்லும் மாநகர பஸ்கள் மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் மாநகர பஸ்களிலும் பயணிகளின் பொருட்களை வைக்க உரிய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல் கட்டமாக கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரும் 20 மாநகர பஸ்களில் முன் பக்கம் மற்றும் பின்பக்கம் உள்ள படிக்கட்டுகளுக்கு அருகே தலா ஒரு இருக்கை என மொத்தம் 2 இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களது உடமைகளை எளிதாக வைத்து சிரமமின்றி பயணம் செய்ய முடியும். இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். வரும் நாட்களில் மற்ற கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் மாநகர பஸ்களிலும் பொருட்கள் வைக்க வசதியாக இருக்கை அகற்றப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- நள்ளிரவில் பஸ்வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் முடிச்சூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு பஸ்களை நிறுத்தும் வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
இதனை இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதே போல் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

மண்ணிவாக்கத்தில் ஆம்னி பஸ் நிறுத்த வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 300 பேர் தங்கும் இடம், உணவகம், கழிப்பிட வசதியுடன் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுமான பணி நடக்கிறது. மேலும் தேவையான வசதிகள் செய்யப்படும்.
கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் பணியில் தாமதம் ஆனது. ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆம்னி பஸ்நிலையம் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளின் தேவைக்கு ஏற்பட கூடுதல் வசதிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்கள் போதிய அளவு இயக்கப்படவில்லை என்று சிலர் திட்டமிட்டு வேண்டும் என்றே பொய், வதந்தி பரப்புகிறார்கள்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இயங்கிய 100 சதவீத பஸ்களில் 80 சதவீதம் கிளாம்பாக்கத்திலும், 20 சதவீதம் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என்று நள்ளிரவு பயணிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
பஸ் நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. நள்ளிரவு நேரத்தில் எப்போதுமே குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட போதும் இரவு 11.30 மணிக்கு மேல் எப்போதும் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்படும்.

நள்ளிரவு நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பாதுகாப்புக்காக பஸ் பயணம் செல்வதை தவிர்ப்பார்கள். ஆனால் 200 பேர் திடீரென நள்ளிரவில் பஸ்வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது.
ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று உள்ளனர். கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்வதாக கூறி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர அரசு பஸ்(எண்101)சென்றது. பூந்தமல்லி அருகே கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் கடந்து சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக அந்த மாற்றுதிறனாளியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த மாநகர பஸ்சை விரட்டி வந்தார். சிறிது தூரத்தில் அந்த பஸ்சை மடக்க நிறுத்தி மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்து வந்தது தொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் ஆவேசமாக சமூக ஆர்வலரை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். மேலும் எதுவும் செய்யமுடியாது என்று மிரட்டும் வகையில் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மாற்றுத்திறனாளி பின்னர் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.
கண்டக்டரும், டிரைவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை சமூகஆர்வலர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
- கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர் நகர், குண்டலகேசி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். மாநகர பஸ் கண்டக்டராக உள்ளார். இவரது மனைவி ராஜ லட்சுமி. இவர் கடந்த மாதம் 23ந் தேதி வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் தான் அணிந்திருந்த 18பவுன் நகைகளை கழட்டி கைப்பையில் போட்டுக் கொண்டு கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ் (தடம் எண்70வி) மூலம் வீடு திரும்பினார்.
ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய ராஜலட்சுமி நகைகளுடன் தனது கைப்பை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை சுருட்டி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்மு போலீஸ்காரர் விக்ரம் தலைமையிலான தனிப்படை போலீசார் கோயம்பேடு முதல் வண்டலூர் வரை உள்ள மாநகர பஸ் நிறுத்தங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது நகை கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விமலா (30) என்பது தெரிந்தது. வேலூரில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விமலா கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களை குறிவைத்து கொள்ளை அடிப்பவர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இவரை போன்று மேலும் பல பெண்கள் பஸ்களில் கைவரிசை காட்டுவதற்காக சென்னை மாநகருக்குள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சில்லரையை சிதறிவிட்டு கவனத்தை திசை திருப்பி இந்த பெண்கள் கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.
எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விமலா வும் சில்லரையை சிதற விட்டுத்தான் நகையை அபேஸ் செய்துள்ளார்.
இவரைப் போன்று ஆந்திராவை சேர்ந்த 6 பெண்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாகவும், எனவே மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து ஒன்றாக புறப்பட்டு சென்னைக்கு வரும் இவர்கள் பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று கைவரிசை காட்டு வார்கள். காலையில் இருந்து இரவு வரையில் கிடைப்பதை சுருட்டிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்று விடுவார்கள்.
விமலாவை போன்று சென்னை மாநகர பஸ்களில் கைவரிசை காட்டிவரும் மற்ற பெண்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.
- வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவொற்றியூர்:
சென்னையில் ரூட்டு தல தகராறில் கல்லூரி மாணவர்களிடைய பஸ், ரெயில்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஆபத்தான நிலையில் பஸ்களில் தொங்கிய படி சாகச பயணம் செய்து வருகிறார்கள்.
இதனை கண்டிக்கும் டிரைவர், கண்டக்டரிடம் மோதலில் ஈடுபட்டு தாக்குல் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் வேப்பேரியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்ற மாநகர பஸ்சில் (தடம் எண் 159ஏ) கும்பலாக ஏறினர். அவர்கள் பஸ்சுக்குள் செல்லாமல் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பியிலும் தொங்கியபடி பயணம் செய்தனர்.
சில மாணவர்கள் பசின் மேற்கூரையின் மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனால் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்க மறுத்து தொடர்ந்து பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.
டிரைவரும், கண்டக்டரும் மாணவர்களை எச்சரித்தும் கேட்டகாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர். பஸ் நடுரோட்டில் நின்றதால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கியதும் மீண்டும் பஸ் புறப்பட்டு சென்றது.
இந்த பஸ் புரசைவாக்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது பள்ளி மாணவர்கள் மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்து உள்ளனர். இதனை அவ்வழியே சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.
புரசைவாக்கம் பகுதியில் ஏராளமான தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள அனைத்து பஸ்நிலையங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களிலும் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
எனவே இந்த இருவேளைகளிலும் பள்ளி அருகே உள்ள பஸ்நிறுத்தங்களில் போலீசார் கண்காணிபில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- முன்னாள் சென்ற ஒரு லாரியின் மீது மாநகர பஸ் மோதி நின்றது.
- கைதான ஆபிரகாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூரில் மாநகர பஸ் பணிமனை உள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, கிளாம்பாக்கம், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரவு கடைசி பஸ்சேவை முடிந்ததும் பணிமனையில் மாநரக பஸ்களை நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் போதை வாலிபர் ஒருவர் திடீரென பணிமனைக்குள் புகுந்தார்.
இதனை அங்கிருந்த ஊழியர்கள் கவனிக்க வில்லை. திடீரென அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மாநகர பஸ்சில் ஏறி வண்டியை வெளியே ஓட்டிச்சென்றார்.
வழக்கமான டிரைவர் தான் பஸ்சை ஓட்டிச் செல்வதாக நினைத்து ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து போதை வாலிபர் மாநகர பஸ்சை தாறுமாறாக சோழிங்கநல்லூர் அருகே அக்கரை, கிழக்குகடற்கரை சாலையில் வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது முன்னாள் சென்ற ஒரு லாரியின் மீது மாநகர பஸ் மோதி நின்றது. இதையடுத்து லாரிடிரைவர் கீழே இறங்கி வந்து விசாரித்த போது பஸ்சை ஓட்டி வந்த வாலிபர் மதுபோதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து விசாரித்த போது பஸ்சை ஓட்டி வந்தது பெசன்ட் நகரை சேர்ந்த ஆபிரகாம்(33) என்பது தெரிந்தது. கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பழிவாங்க மாநகர பஸ்சை எடுத்து ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.
நேற்று காலை ஆபிரகாம் திருவான்மியூர்-ஊரப்பாக்கம் இடையே மாநகர பஸ்சில் பயணம் செய்து உள்ளார். அப்போது அதில் இருந்த கண்டக்டருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை பழிவாங்க ஆபிரகாம் திருவான்மியூர் பணிமனையில் நிறுத்தி இருந்த மாநகர பஸ்சை எடுத்து ஓட்டி வந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் ஆபிரகாம் பஸ்சை ஓட்டி வந்து உள்ளார். அதிகாலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து அதிகம் இல்லை. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாநகர பஸ் விபத்தில் சிக்காமல் இருந்து இருந்தால் அந்த பஸ்சை ஓட்டிச் சென்றது யார் என்பதே தெரியாமல் இருந்து இருக்கும்.
இது தொடர்பாக கைதான ஆபிரகாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் இல்லாத ஒருவர் பணிமனையில் இருந்து மாநகர பஸ்சை ஓட்டிச்சென்றதை அங்கிருந்து ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது எப்படி? என்பது குறித்து போக்குவரத்து அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள்.
- தமிழ்நாட்டில் அன்னைத் தமிழுக்கு இடமளிக்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
- பஸ் குறிப்பேட்டை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு தமிழுக்கு மாற்ற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் மாநகரப் பஸ்களின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளை பதிவு செய்வதற்கான வண்டி குறிப்பேடு இதுவரை தமிழில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதை இப்போது ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 1956-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின்படி அரசின் ஆவணங்கள், படிவங்கள் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும். பஸ்களுக்கான படிவங்களை ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் அன்னைத் தமிழுக்கு இடமளிக்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுமட்டுமின்றி, ஓட்டுனர்களும், நடத்துனர்களும் 10-ம் வகுப்புக் கல்வித் தகுதியில் பணிக்கு சேர்ந்தவர்கள். அவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாது. இவை அனைத்துக்கும் மேலாக எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. எனவே, பஸ் குறிப்பேட்டை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு தமிழுக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாநகர பஸ்சின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள்.
- மாணவர்கள் அட்டகாசம் செய்த பஸ்சின் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.
சென்னை:
சென்னையில் மாநகர பஸ், மின்சார ரெயில் நிலையங்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசாரும், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் எச்சரித்தும் இது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச்சென்ற மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 'ரூட்டு தல' பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மாநகர பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தாலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் படிக்கட்டு, ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்து பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது நீடிக்கிறது.
இந்த நிலையில் பிராட்வேயில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் (எண்15) கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சின் மேற்கூரையில் நின்றும், அமர்ந்தபடி நடனம் ஆடியும் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மேலும் மாநகர பஸ்சின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடியும் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை மாணவர்கள் அட்டகாசம் செய்த பஸ்சின் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். கோயம்பேடு மேம்பாலத்தில் செல்லும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஆபத்தை உணராமல் பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- காலை வேளையில் அதாவது (8.30 - 10.30) நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதும்.
- கண்டக்டர், டிரைவர்கள் கூட அவர்களை தட்டி கேட்கவோ, புகார் கொடுக்கவோ அச்சப்படுகிறார்கள்.
சென்னை :
பூந்தமல்லி, குன்றத்தூர், பட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து பிராட்வே செல்ல போக்குவரத்து துறை மூலம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் (53இ, 53பி, 53) ஆகிய பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் காலை வேளையில் அதாவது (8.30 - 10.30) நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதும்.
மேற்கூறிய பஸ்களில் பெண்கள், ஆண்கள் கூட்டத்தைவிட கல்லூரி மாணவர்களின் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது.
சென்னைக்கு வரும் கல்லூரி மாணவர்கள் குன்றத்தூர், குமணன்சாவடி, வேலப்பன் சாவடி, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து பஸ்களில் ஏறிக்கொள்கிறார்கள். பஸ்சின் முன் படிக்கட்டுகளிலும் பின் படிக்கட்டுகளிலும் மாணவர்கள் கூட்டம் சேர்ந்ததும் அவர்களின் அரங்கேற்றம் ஆரம்பமாகிறது.
முதலில் கானா பாடல், பின்பு தாளம், அதன் பின்னர் கூச்சல் கடைசியில் இரைச்சல். அவர்கள் போடும் இரைச்சலில் பஸ்சில் யாரேனும் இதய நோயாளி இருந்தால் பஸ் பிராட்வே செல்வதற்கு பதில் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிடுமோ என்று பயணிகள் நினைக்கும் வண்ணம் மாணவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
அவர்களை யாரும், எதுவும் கேட்க தயங்குகிறார்கள், காரணம் பயம். நேற்று கூட 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாணவர்களை பார்த்து 'ஏனப்பா? கூச்சல் போடுகிறீர்கள்' என கேட்டதுக்கு அந்த பெண்மணியை ஆபாசமாக வசை பாடியது பஸ் பயணிகள் அனைவரையும் வேதனைப்பட வைத்தது. மேலும் அந்த மாணவர்கள் அனைவரும் முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பதால் கண்டக்டர், டிரைவர்கள் கூட அவர்களை தட்டி கேட்கவோ, புகார் கொடுக்கவோ அச்சப்படுகிறார்கள்.
குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் சில பெண்கள் இவர்களின் இம்சைகளை தாங்க முடியாமல் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என ஆட்டோவில் பயணம் செய்து வருகிறார்கள்.
ஆசிரியர்கள் கண்டிக்காத பிள்ளை போலீசில் அடி வாங்குவான் என்பது பழைய கூற்று. போலீஸ் தண்டிக்காத மாணவர்கள் கொலைகாரர்களாகவும், கொள்ளைக்காரர்களாவும் மாறுவார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இந்த வழித்தடம் மட்டுமல்லாது சென்னையின் முக்கிய பல வழித்தடங்களில் செல்லும் பஸ்களிலும் பயணிகள் இதுபோல் படும் இன்னல்கள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக இனிவரும் நாட்களில் ஒவ்வொரு மாநகர பஸ்களிலும் போலீசார் மாறுவேடத்தில் சென்று பஸ்களில் எல்லை மீறுபவர்களை பிடித்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும்.
பயணிகள் ஒவ்வொருவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள், இதற்கிடையில் புது பிரச்சினையாக மாணவர்களின் கேலி, கிண்டல் உருவெடுத்திருப்பதால் அவை பயணிகளின் நிம்மதியை முழுவதுமாக சிதைத்து விடுகிறது.