என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் மோசடி"

    • போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நில மோசடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வழக்கில் தொடர்புடைய நவங்கிள்ளி, மோகன், சுரேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் தங்களுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான 50 சென்ட் நிலத்தை ஆள் மாறாட்டம் மூலமாக பலருக்கு விற்பனை செய்துள்ளனர்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நில மோசடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய நவங்கிள்ளி, மோகன், சுரேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளிக்குப்பத்தை சேர்ந்த 3 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

    • நிலத்தின் அசல் ஆவணங்களை சிலர் திருடி போலி ஆவணங்களை கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • சங்கரன், ராமமூர்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 3.98 ஏக்கர் நிலம் அதே பகுதியில் உள்ளது.

    நிலத்தின் அசல் ஆவணங்களை சிலர் திருடி போலி ஆவணங்களை கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்த அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சுமார் ரூ.120 கோடி மதிப்பிலான தனியார் நிறுவனத்தின் நிலத்தை நந்திவரம்-கூடுவாஞ்சேரியை சேர்ந்த சங்கரன், ராமமூர்த்தி ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்வது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து சங்கரன், ராமமூர்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 பேர் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.
    • புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் ஊத்துக்குளி அருகே 2¾ ஏக்கர் நிலத்தை சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 71) என்பவரிடம் கடந்த ஆண்டு ரூ.2½ கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார். அதன்பிறகு நில ஆவணங்களை பார்த்தபோது அவை வேறு நபர் பெயரில் இருப்பதும், சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 பேர் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பிறகு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், சென்னை மாதம்பாக்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (39), ரங்கராஜ் (41) ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட் டது.

    இது தொடர்பாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு நில அளவை மற்றும் பத்திரப்பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் (வயது 53), அப்போதைய செட்டில் மெண்ட் அதிகாரியாக இருந்த மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 30-ந் தேதி சென்னை கோயம்பேட்டில் பதுங்கி இருந்த மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜியை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக இருந்த ரமேசை தேடி வந்தனர். இதற்கிடையே ரமேஷ் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 59). இவருக்கு ரூ.50லட்சம் மதிப்பிலான 38 சென்ட் நிலம் பண்ருட்டி அருகே உள்ள மனம்தவிழ்ந்த புத்தூர் கிராமத்தில் உள்ளது.

    இந்த நிலையில் கலியமூர்த்திக்கு சொந்தமான 38 சென்ட் நிலம், அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் திருசங்குவின் பெயரில் மாறியதாக தகவல் வந்தது. இதையடுத்து கலியமூர்த்தி, தனது வீட்டில் இருந்து நிலப் பத்திரத்தை தேடிய போது அதனை காணவில்லை. மேலும், வாக்காளர் அடையாள அட்டையையும் காணவில்லை.

    இதனைத் தொடர்ந்து கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருசங்கு, கலியமூர்த்தியை அசிங்கமாக திட்டி விரட்டியடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர், கலியமூர்த்தியை மீட்டு அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலியமூர்த்தி, இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகாரளித்தார்.

    விசாரணையில், கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தின் பத்திரத்தையும், வாக்காளர் அடையாள அட்டையையும், திருசங்கு திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கலியமூர்த்தியின் வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த அவரது போட்டோவுக்கு பதிலாக, பொண்ணாங்குப்பத்தை சேர்ந்த மூர்த்தியின் போட்டோவை வைத்து போலியாக வாக்காளர் அடையாள அட்டையை திருசங்கு தயார் செய்துள்ளார்.

    போலியாக தயாரிக்கப்பட்ட ஆதாரத்தை வைத்து கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தை மூர்த்தியை வைத்து புதுப்பேட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் திருசங்கு கிரயம் பெற்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருசங்கு, அவருக்கு உடந்தையாக இருந்த மூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், புதுப்பேட்டை பத்திர பதிவு அலுவலர் பாலாஜி, பத்திர எழுத்தர் சீனிவாசன் ஆகியோர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில், விஜயகுமாருக்கு இடத்தை விற்ற பாக்கியம் என்பவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் என்பவரின் மகன் விஜயகுமார் (50).

    இவர் கடந்த 2006-ம் ஆண்டு பாக்கியம் என்பவரிடமிருந்து 2.4 சென்ட் இடத்தை வாங்கினார்.

    தொடர்ந்து அந்த இடத்தில் அவர் என்ஜினியரிங் நிறுவனம் ஒன்றை கட்டி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தில் அவரது சகோதரர் வேணுகோபால் இருந்தார்.

    அந்த சமயத்தில் அங்கு முபாரக் அலி என்பவர் வந்தார். அவர் தான் ரியல் எஸ்டேட் அதிபர் என்றும், விஜயகுமாரின் நிறுவனம் உள்ள இந்த இடத்தை தான் வாங்கி இருப்பதாகவும், அதனால் நீங்கள் இடத்தை காலி செய்யும்படியும் கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான வேணுகோபால் இதுகுறித்து தனது சகோதரரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து, விஜயகுமாருக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசிய நபர், தற்போதைய மார்க்கெட் விலை எவ்வளவோ, அதன்படி நீங்கள் பணத்தை கொடுத்தால், அந்த இடத்தை உங்களுக்கே கிரையம் செய்து கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியான விஜயகுமார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் சான்றிதழை வாங்கி பார்த்தார்.

    அப்போது, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி பாக்கியம் என்பவரிடமிருந்து முபாரக் அலி அந்த இடத்தை கிரையம் பெற்றிருப்பதாக இருந்தது.

    இதையடுத்து அவர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விஜயகுமாருக்கு இடத்தை விற்ற பாக்கியம் என்பவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

    அதன்பிறகு இறந்து போன பாக்கியத்திற்கு பதில் சிவபாக்கியம் என்ற பெண்ணின் பெயரில் போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து, விஜயகுமாரின் நிலத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த முபாரக் அலி( 50), பாப்பநாயக்கன்பா ளையத்தை சேர்ந்த பாக்கியம் (66), கணபதி கே.ஆர்.ஜி நகர் கவுதமன்(29) கோவை தெற்கு உக்கடம் நிஷார் அகமது(34) கோவை காந்திபுரம் 7-வது வீதியை சேர்ந்த சாந்தி(44 ) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சார்பதிவாளர் மணி, சோமசுந்தரபாரதி, தனசீலன், வடிவேலு ஆகிய 4 பேரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • லலிதா, பவுன்ராஜ், முகம்மதுரபீக் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில் தி.மு.க. அரசு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டு வந்தது.

    அதன்மூலம் போலி பதிவுகள் குறித்து பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். மேலும் போலி பத்திரப்பதிவு செய்யப்பட்டதில் சார்-பதிவாளருக்கு தொடர்பு இருந்தால் அவரையும் கைது செய்யலாம் எனவும் தமிழக அரசு சட்டம் இயற்றியது.

    இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய சட்டத்தில் திருத்தம் என்பதால் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இந்த சட்டத்திருத்தத்திற்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    இந்த சட்டம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போலி பத்திரப்பதிவு தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் வருகிறது.

    மதுரையை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபர் கருமுத்து கண்ணன் (வயது69). இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

    இவரது நிறுவனத்தின் மேலாளரான மதுரை கப்பனூரை சேர்ந்த சபாபதி (54) என்பவர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில், கருமுத்து கண்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள 1.75 ஏக்கர் நிலம் தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரியில் உள்ளது. அந்த நிலத்திற்கு போலியாக இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவை தயாரித்து அதன்மூலம் தென்காசி 1-ம் எண் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. தெய்வம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது திருச்சியை சேர்ந்த லலிதா என்பவர் கடந்த மாதம் 16-ந் தேதி போலியாக இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் தயாரித்து அந்த நிலத்தை விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் ஊத்துமலையை சேர்ந்த சோமசுந்தரபாரதி, சுரண்டையை சேர்ந்த பவுன்ராஜ், தென்காசியை சேர்ந்த முகம்மதுரபீக் ஆகியார் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

    பத்திரப்பதிவின்போது சாட்சிகளாக ஊத்துமலையை சேர்ந்த தனசீலன், சுரண்டையை சேர்ந்த வடிவேலு ஆகியார் கையெழுத்து போட்டுள்ளனர்.

    தொடர் விசாரணையில் போலி பத்திரப்பதிவுக்கு தென்காசி 1-ம் எண் சார்பதிவாளரான நெல்லை டவுன் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சார்பதிவாளர் மணி, சோமசுந்தரபாரதி, தனசீலன், வடிவேலு ஆகிய 4 பேரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து லலிதா, பவுன்ராஜ், முகம்மதுரபீக் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    போலிப்பத்திரப்பதிவு செய்யப்பட்டதில் சார்பதிவாளருக்கு தொடர்பு இருந்தால் அவரையும் கைது செய்யலாம் என சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் அதில் முதல்நபராக தென்காசி 1-ம் என் சார்பதிவாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

    • அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட 16 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தினர் வீட்டுமனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தனர்.
    • அரசுக்கு சொந்தமான இடம் என்று புகார் எழுந்ததால் காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    செங்கல்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால், பால்நல்லூர் போன்ற கிராமங்களில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட 16 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தினர் வீட்டுமனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தனர்.

    அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று புகார் எழுந்ததால் காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மோசடியில் ஈடுபட்ட நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அரசு நிலத்தை ஏமாற்றி வீட்டு மனை பிரிவுகளாக விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் ராஜதுரை (வயது 40), இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் (54), அலுவலக உதவியாளர் பெனடின் (54), காஞ்சிபுரம் நில எடுப்பு தாசில்தார் எழில் வளவன் (50), ஸ்ரீபெரும்புதூர் ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் பார்த்தசாரதி (33) ஆகியோரை காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி வரும் 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவர்களை செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். நில மோசடி வழக்கில் 5 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொய்யான ஆவணம் தயாரித்து இந்த இடம் விற்கப்பட்டதாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • நிலமோசடியில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3ஆயிரம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அய்யனதேவன்பட்டியை சேர்ந்த காசிமாயன் என்பவர் தனது தந்தை பெயரில் இருந்த சொத்தை அதேபகுதியை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் அவரது வாரிசுகளுடன் சேர்ந்து பஸ்நிலையம் அருகில் உள்ள சின்னத்துரை என்பவருக்கு கிரையம் செய்து விற்றார். ஆனால் பொய்யான ஆவணம் தயாரித்து இந்த இடம் விற்கப்பட்டதாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு நிலமோசடியில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.3ஆயிரம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாத கால சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

    இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் நிர்மலாதேவி, சிறப்பாக விசாரணை செய்த முன்னாள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின்மும்தாஜ் மற்றும் போலீசார் ஆகியோரை தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ்டோங்கரே பாராட்டினார்.

    ×