என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக அமைச்சர்"
- முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.
- தமிழக ஆளுநர் அவருடைய ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க கூடாது என்றார்.
உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை, சீர்குலைக்க ஆளுநர் தொடர்ந்து குறுக்கீடு செய்கிறார் என
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.
மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன ? எதில் தலையிட வேண்டும் ? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத ஆளுநர் அதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வுக் செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4வது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பதும் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல.
இதுவரையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அளவிற்கு மாநில உரிமைகளை கட்டிக்காப்பதில் மத்திய அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, பல்வேறு மாநில வளர்ச்சிக்கு குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உயர்கல்வியை பொறுத்தவரையில் பல்கலைக்கழங்களுடைய செயல்பாடு தமிழக அரசை விரும்பி பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் அதில் நலன் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள்.
அப்படி தொடர்ந்து திமுக அரசு அமையும்போதெல்லாம் உயர்கல்வியில் அக்கறை காட்டிய காரணத்தால் தான் கலைஞர் காலத்தில் இருந்து இன்று வரை உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலையை எட்டி இருக்கிறோம்.
இதை சீர்குலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஆளுநர் தொடர்ந்து உயர்கல்வித்துறையின் பணிகளையும், அரசின் பணிகளையும் குறிக்கிட்டு இடர்பாடுகளை உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்.
எனவே தான், நேற்று ஆளுநர் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க வேண்டாம் என்ற நிலையில் கருத்து தெரிவித்திருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
- அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக ரகுபதியையே வந்து சேரும்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை தாக்கி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது.
அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
அண்ணா தி.மு.க. வேட்டியைக் கட்டி அரசியல் வாழ்வு பெற்று, இந்த இயக்கத் தொண்டர்கள் சிந்திய வியர்வையிலும் ரத்தத்திலும் சட்டமன்ற உறுப்பினராகி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும் உழைப்பால் அமைச்சர் பதவியைப் பெற்ற இந்த ரகுபதிக்கு, வாழ்வளித்த இயக்கத்தின் மீதே இழிச்சொல் உரைக்க நா கூசவில்லையா?
அஇஅதிமுக கொடுத்த முகவரியால் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தும் ரகுபதி, திமுகவின் முதல் குடும்பத்தின் சிறந்த கொத்தடிமை விருது பெற முயற்சிப்பது அவருடைய தனிப்பட்ட வேள்வியாக இருக்கலாம். அதற்கு அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக அவரையே வந்து சேரும்.
கருணாநிதி ஆட்சியில் விவசாய பம்பு செட்களுக்காண மின் கட்டணம் குறித்து கேட்ட விவசாயிகளை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வரலாற்றை ரகுபதி திமுக-வில் இணைந்த பின் வசதியாக மறந்து விட்டாரா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் 40% மின்சார வாகனங்கள் உற்பத்தி இங்குதான் உற்பத்தியாகிறது.
- ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் 1 நிலையில் உள்ளது.
மஹிந்திராவின் BE 6, XEV 9E SUV கார்களின சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது:-
மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில்தான்
நடைபெறுகிறது. மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில்தான் நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம்.
'தமிழ்நாட்டில் 40% மின்சார வாகனங்கள் உற்பத்தி இங்குதான் உற்பத்தியாகிறது, ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் 1 நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
- தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு பாளை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.
பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தித்திறன் கொண்ட விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிறுவனத்திலும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
- உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
- புகார்கள், கருத்துகள், ஐயங்களை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன்பெறலாம்.
தமிழகத்தில் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 12ம் வகுப்புக்கும், மார்ச் 5ம் தேதி முதல் 11ம் தேதிக்கும், மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு தொடங்குகிறது.
இதையொட்டி, 10ம், 11ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உதவி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள், கருத்துகள், ஐயங்களை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன்பெறலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.
- கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள்.
- கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், " இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு மு.க.ஸ்டாலின்?" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி அளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?
தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.
- சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு.
பெண்கள் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் அனைவரும் பச்சை பொய் கூறி வருகிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் மேலும் கூறியிருப்பதாவது:-
பெண்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு. மகளிர் உதவித் தொகை திட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு. மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.
தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதிக்கப்படும்போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள். உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும்.
- அனைத்துப் பள்ளிகளிலும் உடற் கல்வி மேம்படுத்தப்படும்.
பெரம்பலூரில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்டத்தில் தனி அலுவலகம் அமைத்து "ஆசிரியர் மனசு" என்ற பெட்டி வைக்கப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும் ஆசிரியர் மனசு என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சிறப்பான தேர்வு முடிவுகளை கொடுத்து தமிழ்நாட்டிற்கு முன்னோடி மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்களை பார்த்து மற்ற மாவட்ட ஆசிரியர்களும் தங்களது மாவட்டம் முன்னுக்கு வருவதற்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளரகளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்சோ சட்டத்தில் கைதான கரூர் மாவட்டம், பொம்மாநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மீது முதன்மை கல்வி அதிகாரியின் அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும் என்றும், ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் திட்டப் பணிகள்.
- பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட வனத்துறை நடவடிக்கை.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக வனத்துறை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இணைப்புச் சாலைப் பணிகள் ரூபாய்.294.21 கோடி மதிப்பிலும், தெரு விளக்குகள் ரூபாய்.3.79 கோடி மதிப்பிலும், சோலார் மின் விளக்குகள் ரூபாய்.16.99 கோடி மதிப்பிலும், குடிநீர் திட்டப் பணிகள் ரூபாய் 79.69 கோடி மதிப்பிலும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் திட்டங்களுக்காக ரூபாய்.93.99 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.முதலமைச்சர் ஆணையின்படி பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட பல்வேறு பணிகள் வனத்துறை மேற்கொண்டு வருகிறது.
நீதிமன்ற வழிகாட்டுதழின்படி வனப்பகுதியில் உள்ள அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவும், பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பு வசதி, கல்வி, விவசாயம், தொழில் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க முதல்கட்டமாக 700 எக்டேர் பரப்பளவில் பணிகளை மேற்கொள்ள ரூபாய்.535.21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.