என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீனவர்கள் வேலைநிறுத்தம்"
- எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை (வயது 60) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் 43 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லைதாண்டி வந்ததாக கூறி ஒரு விசைப்படகு , பைபர் 4 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் சந்திரபாடி கிராமத்தை சேர்ந்த 13 பேர் என 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.
இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை பூம்புகார் மீனவர்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
- 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக கூறி சிறைபிடிப்பதும், பல முறை விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 32 மீனவர்களை எல்லை தாண்டி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் 5 விசைபடகுகளையும் சிறை பிடித்தது. கைதான மீனவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்கள் கைதானது ராமேசுவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர்கள் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.
இந்த நிலையில், இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடிக்க செல்லும் அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் அதிகளவில் இறால் மீன் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
- தொடர் போராட்டத்தால் ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
கடல் வளத்தை அழிக்கும் இழுவை மடியை தடை செய்ய வேண்டும். மீன்பிடி சட்டம் 1983 பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் கீழ்வேளூர், நாகை தாலுகாவை சேர்ந்த 19 கிராம பைபர் படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மீனவர்களின் போராட்டம் 12-வது நாளாக நீடித்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டத்தால் ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் ரேசன், ஆதார் கார்டுகளை ஒப்படைத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
- விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
- மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவைமடி வலையை பயன்படுத்தி ஒரு சில விசைபடகு மீனவர்கள் மீன்பிடிப்பதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் வாணவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள பைபர் படகு மீனவர்கள் கடந்த 28-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
எனவே நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவை மடிவலையை பயன்படுத்துவதை தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து இழுவை மடிவலையை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகிறது.
- மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
- அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் காலங்காலமாய் தொடர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
இதற்கிடையே எல்லை தாண்டியதாக கைதாகும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கிடும் வகையில் இலங்கை அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 2 சம்பவங்களில் சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளையும் அரசுடமையாக்கி வருகின்றனர்.
இதனை கண்டித்தும், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 10 படகுகளை மீட்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதனைதொடர்ந்து, நேற்று ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், அதற்கான பணியை தமிழ்நாடு அரசு செய்யும் என உறுதியளித்தார். இதனை ஏற்று மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனைதொடர்ந்து, இன்று காலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 7 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கையில் உள்ள வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர்.
- இந்த ஆண்டு மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ராமேசுவரம்:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் கடல் பகுதியில் மன்னார் வளைகுடாவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் இருநாட்டு மீனவர்களும் ஓய்வு எடுப்பது, வலைகளை காய வைப்பது, மீன்களை தரம் பிரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
ராமேசுவரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் ஆலய திருவிழாவில் இரு நாட்டில் இருந்தும் ஏராளமான மீனவர்களும், கிறிஸ்தவர்களும் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கின. இருந்தபோதிலும் தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், சிறையில் அடைப்பதுமாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
இதனால் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் மற்றும் இந்திய பக்தர்கள் பங்கேற்பார்களா? என்ற சந்தேகம் நிலவியது. ஏற்கனவே கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டங்களை தொடங்கினர். படகுகளில் கருப்பு கொடி ஏற்றியும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும், பேரணி நடத்தியும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் போராடி வருகின்றனர்.
இதையடுத்து கச்சத்தீவு திருவிழா தொடங்கியதால் அதில் பங்கேற்க போவதில்லை என தமிழக மீனவர்கள் முடிவு செய்தனர். இதனால் இந்தியாவில் இருந்து கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவுக்கு படகுகளை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. பக்தர்கள் யாரையும் படகுகளில் ஏற்றி சென்று கச்சத்தீவு செல்ல தமிழக மீனவர்கள் மறுத்து விட்டனர்.
அதே நேரத்தில் கச்சத்தீவு திருவிழாவில் இலங்கை தரப்பில் இருந்து பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இலங்கையில் இருந்து மிகவும் குறைவான மீனவர்களே கச்சத்தீவுக்கு வந்தனர். நேற்று கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து திருவிழா தொடங்கியது. ஆனால் ராமேசுவரத்தில் இருந்து நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் படகுகளை இயக்கவில்லை. ஏற்கனவே பங்கேற்கபோவதில்லை என்று அறிவித்திருந்த போதிலும் இதை அறியாமல் ஏராளமான வெளிமாவட்ட, வெளி மாநில பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையொட்டி கடலோர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் துறைமுக பகுதியில் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் இந்த ஆண்டு மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அதேபோல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிலும் தமிழக மீனவர்கள் யாரும் பங்கேற்காததால் களை இழந்து காணப்பட்டது. மிகவும் குறைவான பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று மாலை அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை நெடுந்தீவு பங்கு தந்தை ஏற்றி வைத்தார். ஆலயத்தில் சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
விழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அதன் பின்பு கொடியிறக்கப்பட்டது. இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கையில் உள்ள வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர். தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக இரு நாட்டில் இருந்தும் வியாபாரிகளும் புறக்கணித்தனர். இதனால் திருவிழாவில் வழக்கமாக விற்பனையாகும் பொருட்கள், கடைகள் களை இழந்து காணப்பட்டன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
முதன் முறையாக தமிழக மீனவர்கள் கலந்து கொள்ளாமல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நடைபெற்றது இந்திய பக்தர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
- ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
- மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்றபோது 2 கட்டமாக 10 விசைப்படகுகள், 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இதனைதொடர்ந்து, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவ சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அதிகரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதனை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களை மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாளை (சனிக்கிழமை) மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
- நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது.
இதேபோன்று கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த தொடர் நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள் 10 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது.
இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அத்துடன் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்று தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் மீனவ சங்க பிரநிதிகள் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரனை சந்தித்து மீனவர்களை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதற்கிடையே மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிற 3-ந்தேதி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டமும், 6-ந்தேதி முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
- தமிழக மீனவர்கள் 64 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் இன்று வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரம், அக்.30-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல் லும்போது அவர்களை இலங்கை கடற்படை தாக்கி விரட்டி அடிப்பதும், எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறை பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது அதிகரித்துள்ளது.
கடந்த 14-ந்தேதி இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 27 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனை கண்டித்தும் மீன வர்களை விடுதலை செய்யக் கோரியும் கடந்த 2 வாரங் களாக ராமேசுவரம் மீனவர் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீனவர்க ளின் வாழ்வாதாரத்தை கருதி வேலை நிறுத்தம் கடந்த சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. அன்றைய தினமே காலையில் ராமேசு வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்ற னர். ஆனால் அவர்களுக்கு கடலுக்கு சென்ற முதல் நாளே அதிர்ச்சி காத்திருந் தது.
ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 37 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர். இது ராமேசுவரம் பகுதி மீன வர்களிடையே கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 64 பேர் இலங்கை கடற்படை யால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழக மீனவர்கள் 64 பேரையும், பறிமுதல் செய் யப்பட்ட விசைப்ப டகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று (திங் கட்கிழமை) முதல் ராமேசு வரத்தில் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத் தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வருகிற 3-ந்தேதி மண்டபம் ரெயில் நிலை யத்தில் சென்னை எக்ஸ்பி ரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவது, 6-ந்தேதி தங்கச்சிமடத்தில் குடும்பத்துடன் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ராமேசுவரத் தில் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசு வரம் துறைமுகத்தில் நங்கூர மிட்டு நிறுத்தி வைக்கப்பட் டிருந்தன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறை முகம் இன்று வேலை நிறுத் தம் காரணமாக வெறிச் சோடி காணப்பட்டது.
இது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்வது அதிகரித் துள்ளது. இதற்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் வேலை நிறுத்தம் காரணமாக எங் கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.
- வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
- 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதன் மூலம் 3,500 மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ராமேசுவரத்தில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி 5 விசைப் படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 16-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பெரிய மற்றும் சிறிய ரக படகுகள் பங்கேற்றன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதித்தது.
இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய ரக படகுகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லுவதாக மீனவ சங்க தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார். மேலும் பெரிய படகுகள் போராட்டம் தொடருவதாக தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடந்த 5 நாட்களாக வெறிச்சோடி கிடந்த ராமேசுரவம் துறைமுகம் இன்று மீண்டும் பரபரப்புடன் காணப்பட்டது.
- கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.
- படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில் 3,500 மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி இன்றுடன் 5-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக ரூ.10 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 1-ந்தேதி ராமேசுவரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
- 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்றபோது ஒரு படகு, 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதே போன்று புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 விசைப்படகுகள், 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடியது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையில் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. தற்போது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நடக்கும் இதுபோன்று நடக்கும் வேலைநிறுத்தத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்