என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்.பி.வேலுமணி"
- வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம்.
- ஆட்சிமாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி
சென்னை:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான 48 பக்க தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. முறைகேடு நடந்ததாக நேரடியாக வழக்கு பதியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் தவறால் அல்லாமல் வேலுமணி செல்வாக்கால் முறைகேடு நடந்ததாக நிரூபித்திருந்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க மாட்டாது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்?
அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீட்டில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்.
தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதால் ரத்து செய்ய முடியாது, என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொண்டாமுத்தூர் ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு.
- 19 மாதங்கள் ஆகிவிட்டது.
வடவள்ளி
சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற வில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கும், கோவை மாவட்டத்திற்கும், தமிழக த்துக்கும் எதுவும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. தற்போது அமைச்சராகி உள்ள உதயநிதி ஸ்டாலின் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.
அ.தி.மு.க. அரசு கட்டிய பாலங்களில் தி.மு.க. போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் தி.மு.க. அரசோ சொத்து வரி, மின் கட்டண உயர்வால் மக்களை வாட்டி வதைக்கிறது.
குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 கொடுப்பதாக சொன்னார்கள். 19 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அந்த திட்டம் பற்றி பேச்சே இல்லை.
இங்கு இருக்கும் காவல்துறை என் கட்சி காரர்கள் மீது பொய் வழக்கு பதிய வேண்டாம். நடுநிலையாக செயல்படுங்கள். தமிழகத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைப்பெறுகிறது.
அ.தி.மு.க. போராட்டம் அறிவித்த பிறகே, பொங்கல் பரிசாக கரும்பு கொடுக்கிறார்கள். தி.மு.க.விற்கு வாக்கு அளித்தவர்கள் எதற்கு வாக்களித்தோம் என்று வேதனைப்படுகின்றனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 இடங்களையும் வெல்வோம். சட்டமன்றதேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.
- காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கோவை,
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேற்று சட்ட சபையில் பேசியதாவது:-
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருமாள்கோவில்பதி, பச்சினான்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் கடுமையாக போராடி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின்படி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, கேரள மாநிலம் மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது காட்டுத்தீ ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது. காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வனப்பகுதியை சுற்றி வாழும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், காட்டுத்தீ இந்த அளவுக்கு பரவ விடாமல் தடுத்து இருக்கலாம்.
அடுத்த மாதம் வெயில் இன்னும் கடுமையாக இருக்கும். எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
மக்களையும், வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கோவை,
கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் ஆகஸ்டு 20-ந்தேதி மதுரையில் நடக்க உள்ள வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்பது, கோவையில் தி.மு.க அரசுக்கு எதிராக நாளை(20ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்காக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தபடி உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட வில்லை. ஆளும் தி.மு.க அரசு தொண்டாமுத்தூர் தொகுதியை கடந்த 2 ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறது.
எனவே ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.
ஆளுங்கட்சி எத்தனையோ பொய் வழக்குகள் போட்டாலும், எதற்கும் அஞ்சாமல் அ.தி.முக தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார்.எனவே தி.மு.க ஆட்சியை தூக்கி வீச மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
- 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவை.
கோவை இதய தெய்வம் மாளிகையில் கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பிவேலுமணி, கோவை மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பியுமான ஜெயவர்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் 5 ஆண்டுகளில் கொண்டு வந்த 50 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
தற்போது இருக்கின்ற தி.மு.க அரசு எந்த விதமான மக்கள் நல திட்டதங்களையும் கொண்டு வரவில்லை. நாம் ஏற்கனவே உருவாக்கிய திட்டங்களை தங்களுடைய திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மிக துரிதமாக வேலை செய்து, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பொறுப்பாளர் ஜெயவர்த்தனன் பேசும்போது, கோவை மாவ ட்டத்தில் இருக்கக்கூடிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் எளிய மக்களின் துயர் துடைப்பவர்களாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் நலத்திட்ட ங்களை மக்களி டம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக பெருவாரியான வெற்றிகளை பெற வேண்டும் அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர் ஜெயராம், முன்னாள் அமைச்சர் செம.வேலுசாமி, பீளமேடு துரைசாமி, பிரபாகரன், புரட்சி தம்பி, லாலி ரோடு ராதா, செல்வகுமார், சிவகுமார், சாரமேடு சந்திரசேகரன், இலக்கடை ஜெயபால், காலணி கருப்பையா, ராஜ்குமார், மனோகரன், பப்பையா ராஜேஷ், கமலக்கண்ணன், மெட்டல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். ’டோன்ட் கேர்’ என விட்டுவிடுங்கள்.
- மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்
"3% - 4% வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில் நான் சேருவதாகச் சொல்கிறார்கள். இதுக்குபோய் நான் பதில் சொல்லனுமா? Don't Care-னு விட்டுட்டு போயிடணும்" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பாஜக ஐடி விங் வெளியிடும் தகவல்களை எல்லாம் பார்க்க நேரமில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. உலக அளவில் அதிக தொண்டர்களைக் கொண்ட 7வது கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சி நமது தாய்வீடு போல. சாதாரணமாக இருந்த நம்மை எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்த கட்சி அதிமுக. எல்லோரும் தாய் வீட்டிற்குத் தான் வருவார்கள். தாய் கழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 'டோன்ட் கேர்' என விட்டுவிடுங்கள். கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை சொல்லியே வாக்காளர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்போம். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்
சிறப்பான முறையில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வோம். கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.
- பூங்கொத்து வழங்கி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
- பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் முடிவு அடுத்த மாதம் வெளியானதும் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்படும் என்றும், அப்போது கட்சிக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? அல்லது எஸ்.பி.வேலுமணியா? என தெரிய வரும் என்றும் தி.மு.க. அமைச்சர் ரகுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.
இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க தவறி விட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய போது அ.தி.மு.க.வில் உள்ள பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தனர்.
ஆனால் எஸ்.பி.வேலுமணி மட்டும் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது எக்ஸ் வலைதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
எக்ஸ் வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி எதற்காக நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் பேசத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை வந்து அடையாரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தன்னுடன் வந்திருந்த ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை திறம்பட நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் சில பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து அனைவரும் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத் ேதாம். அவரது தலைமையில் கட்சி வீறுநடை போடுவதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம் அதன் கீழ் எல்லோரும் இருக்கிறோம். இங்கு பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
செங்கோட்டையனின் பேரன் திருமணம் வரவேற்பு கோவையில் ஜூன் 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்துகிறார்.
எனவே கட்சி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெளியில் பிதற்றுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.
இதேபோல் மூத்த தலைவர்களும் தி.மு.க.வை சாடி உள்ளனர்.
- மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.536 கோடி ஊழல் புகார்.
- 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.536 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் வெங்கடேஷ் என்பவர் கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்திருந்த புகாரில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.290 கோடி மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிக்காக ரூ.246.39 கோடி மதிப்பிலான பணிகளை ஒப்பந்தம் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகவே எஸ்.பி. வேலுமணி மற்றும் மாநகராட்சி என்ஜினீயர்கள் உள்பட 10 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி உள்பட 11 பேரின் வீடுகளில் விரைவில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முறைகேடு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் வீடுகளிலும் விரைவில் சோதனை நடத்துவது பற்றி உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றனர் .
இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உடனேயே சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் எஸ்.பி.வேலு மணி மீது வழக்கு போடப்பட்டுள்ள நிலையிலும் சோதனை எதுவும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, எஸ்.பி. வேலுமணி உள்பட 11 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். அதுபற்றி விரைவில் முடிவெடுத்து சோதனை நடத்துவோம் என்று தெரிவித்தார்.
- உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்களை சேர்த்து தீவிர களப்பணியாற்ற வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், அமைப்புச் செயலாளர் மருதராஜ், பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியபுல்லான், மாணிக்கம், தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-
கடந்த 3½ ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான எந்தவித நலத்திட்டங்களையும் செயல்படுத்தாத நிர்வாக திறனற்ற அரசாக தி.மு.க. உள்ளது. இதனால் மக்கள் தெளிவாக முடிவெடுத்து விட்டனர்.
அரசு ஊழியர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க உள்ளனர். எனவே வருகிற 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவது உறுதி.
எனவே கட்சியில் அதிகப்படியான இளைஞர்களை சேர்த்து தீவிர களப்பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க. மக்களுக்கான இயக்கம் என்பதை உணர்த்த வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது,
தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மக்கள் விரும்பும் தலைவர்களாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விளங்கினர். அவர்களது வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை கொடுத்தார். எனவே மீண்டும் அவரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த கட்சியினர் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது,
கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதுபோன்று ஏற்பட்டு விடாமல் தீவிர களப்பணியாற்ற வேண்டும் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும். இதேபோல் அனைத்து தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் உழைத்தால் 100 சதவீத வெற்றி உறுதி. அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாக சீர்கேடு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றை கண்டித்து விரைவில் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, இளைஞரணி செயலாளர் ராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ஜெயபாலன், ஜெயராமன், திவான்பாட்சா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், ரவிக்குமார், பிரபு, லெனின், திண்டுக்கல் கிழக்குப்பகுதி பேரவை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 8 திருமண மண்டபத்திற்கு பணிகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
- சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பல்வேறு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் அவர் இன்று அயனாவரத்தில் உள்ள ஆதி சேமாத்தம்மன் கோவில் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.18.70 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய சமுதாய நலக் கூடத்தின் பூமி பூஜையிலும் பங்கேற்றார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி வருமாறு:-
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் சுமார் 8 திருமண மண்டபத்திற்கு பணிகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த மண்டபங்கள் 50 ஆண்டுகள் உறுதியாக இருக்கும் வகையில் கட்டப்பட உள்ளன. இந்த மண்டபம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
கேள்வி:- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு களம் அமைத்து கொடுத்ததே தி.மு.க.தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறாரே?
பதில்:- அமைதிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்று அ.தி.மு.க. கையெழுத்து போடாமல் சென்று விட்டதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அதற்கு பரிகாரம் தேட வேண்டும் என்பதற்காக ஏதாவது கருத்தை கூற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்படி கூறியுள்ளார். செல்லூர் ராஜூ எப்போதுமே எங்கள் பக்கம் இருப்பவர்.
கேள்வி:- கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சரை தோற்கடிப்போம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கூறியுள்ளாரே?
பதில்:- இப்படித்தான் வாய்க்கொழுப்பு எடுத்து ஜெயக்குமார் பேசி வந்தார். முதலமைச்சர் வேட்பாளரான எங்கள் தலைவரை பார்த்து ராயபுரத்தில் போட்டியிட்டு பாருங்கள் என்றார். அப்போது முதலமைச்சர் அடக்கத்தோடு, நான் தேவையில்லை. சாதாரண ஒரு தொண்டரை நிறுத்துகிறேன். அவரிடம் வெற்றி பெற்று வாருங்கள் என்றார்.
தற்போது ராயபுரத்தில் இருந்து ஜெயக்குமார் காணாமல் போயுள்ளார். எஸ்.பி.வேலு மணியை வரச்சொல்லுங்கள். முதலமைச்சருடன் போட்டி வேண்டாம், துறைமுகம் தொகுதி தாராளமாக காத்திருக்கிறது. அங்கு போட்டியிட்டு வெற்றி பெற சொல்லுங்கள். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமக்கு எதிரி தி.மு.க. தான்.
- நல்ல கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார்.
சென்னை:
வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் கள ஆய்வு கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில் வில்லிவாக்கம் பாபா நகரில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேசிய தாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தி.மு.க. மைனாரிட்டியாக தான் இருந்தது. அதன் பின் தி.மு.க.வுக்கு ஓட்டு போட மக்கள் தயாராக இல்லை. இப்போது கூட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர்கள் ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.
2010ல் அற்புதமான கூட்டணியை புரட்சித் தலைவி அம்மா அமைத்தார். தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தார். புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பின் எடப்பாடியார் நான்கு வருடம் இரண்டு மாதம் அற்புதமான ஆசி கொடுத்தார்.
திமு.க.வின் நான்கு ஆண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டம் வந்திருக்கிறதா? கடுமையான வறட்சி காலத்தில் எடப்பாடியார் முதலமைச்சர் ஆனவுடன் அம்மா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தினார்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக எப்போது வருவார் என பொதுமக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவிலேயே 7-வது பெரிய கட்சி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தைரியம் இருந்தால் தனித்து நின்று அ.தி.மு.க.வுடன் போட்டியிட தயாரா? யார் வெல்வார்கள் என்று பார்ப்போம். தைரியம் இருந்தால் இதற்கு தி.மு.க. பதில் சொல்லட்டும் பார்ப்போம்.
புரட்சித் தலைவி அம்மா சாதாரண உறுப்பினர்களை கூட தேர்தலில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ., அமைச்சர் என பல்வேறு வாய்ப்புகளை கொடுத்தார்.
சாதாரணமானவர்களுக்கு கூட நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி கொடுத்த கட்சி அ.தி.மு.க. கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக பொறுப்பேற்பதற்கு அம்மா தான் காரணம்.
அம்மா வழியில் எடப்பாடியார் நமக்கு வழி வகுத்துள்ளார். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வருகிறது. நமக்கு எதிரி தி.மு.க. தான். அதை மனதில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக களப் பணியாற்றுங்கள்.
நம்மை வெல்ல யாரும் கிடையாது. யார் என்ன செய்தாலும் 2026-ல் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. நல்ல கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்திய விவசாயதுறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும்.
- இப்போது இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர் என விமர்சனம்
கோவை:
கோவை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் 51 வது ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 300க்கும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது எனவும், திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கொடுத்தது, இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றது, மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மோசமாக இருக்கின்றது. இந்த ஆட்சிமாற வேண்டும். இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் மக்கள் முடிவு செய்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.
எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர். இங்கே எப்போதும் இரு மொழி கொள்கைதான், தமிழகத்தில் இந்தி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பா.ஜ.க தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்க சொல்ல வேண்டும்.
நாளைக்கு கோவை வரும் மத்திய விவசாயதுறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும். தமிழகத்தின் 39 எம்.பிகள் எதுவுமே செய்வது இல்லை. காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அதிமுக எம்.பிகள் முடக்கினர். இப்போது இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர்.
யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார், முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினரும் இருக்கின்றனர். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.