search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லையப்பர் கோவில்"

    • சித்தரின் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • நெல்லையப்பா.. தானா தளம்போய்ச் சேரப்பா.. என்று பாடினார்.

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சுரண்டைக்குச் செல்லும் வழியில் உள்ளது, கீழப்பாவூர். இங்கு சிவலோக பண்டாரநாதர் என்ற சித்தர் கோவில் இருக்கிறது.

    பொதுவாக சித்தர்கள் ஜீவ சமாதியான இடத்தில் சிவலிங்கம்தான் பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால் இங்கு, அந்த சித்தரின் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வாலயம் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடை பெறும் விழாக்களில் ஆனித் தேரோட்டம் மிகவும் முக்கியமானது. 500 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பிரமாண்டமாக நடைபெற்றுவரும் இந்த தேரோட்டம், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சன்னியாசியால் தடைபட்டுப் போனது.

    அந்த நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தைக் காண வந்திருந்தனர். அவர்களில் நெல்லை அருகே உள்ள மானூரைச் சேர்ந்த சிவலோக பண்டாரநாதர் என்ற சன்னியாசியும் ஒருவர்.

    ஒல்லியான தேகம், நீண்ட தாடி, கையில் தவக்கோல், இடுப்பை மட்டுமே மறைக்கும் வஸ்திரம் என்று, முக்கால்வாசி நிர்வாணத்துடன் வந்திருந்த அவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கேலி- கிண்டல் செய்து அங்கிருந்து விரட்டினர். இதனால் வருத்தத்துடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    சிறிது நேரத்திலேயே ஒரு காளை மாட்டின் மீது ஏறி அமர்ந்து மீண்டும் அங்கு வந்தார். தேரின் முன்பாக சென்று நிதானமாக இறைவனை தரிசித்தார். அப்போது இளைஞர்கள் மீண்டும் அவரைப் பார்த்து கேலி- கிண்டல் செய்தனர். இதனால் வருந்திய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.

    அதன்பின்னர் அப்பகுதி மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தும் தேர் சிறுதும் நகரவில்லை. 'தேரின் சக்கரத்தில் ஏதேனும் மாட்டிக் கொண்டு இருக்கிறதா?' என்று பார்த்தனர். அப்படியும் ஒன்றும் இல்லை.

    மீண்டும் சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போதும் தேர் நகரவில்லை. இறுதியில் பக்தர்கள் அனைவரும் சோர்ந்து போயினர். இப்படி நகராத தேர், சுமார் 2 மாதங்களாக நடு வீதியில் நின்று கொண்டிருந்தது.

    இதனால் வருந்திய கோவில் நிர்வாகத்தினர், தேர் நகராததற்கு தெய்வச் செயல் எதுவும் காரணமா என்று பிரசன்னம் பார்த்தனர். அப்போது கோவில் தேரோட்டம் தொடங்கிய நேரத்தில் ஒரு சன்னியாசியை இளைஞர்கள் கேலி செய்தது பற்றியும், அவர் ஒரு சித்தர் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

    அந்த சித்தரின் மனம் குளிர்ந்தால்தான், தேர் அங்கிருந்து நகரும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சித்தர், திருக்குற்றாலத்தில் இருப்பதை அறிந்து கோவில் நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் சித்தர், வான் வழியாக பறந்து குருக்கள் மடம் என்ற பகுதியை அடைந்தார்.

    திருக்குற்றாலத்தில் சித்தர் இல்லாததால், மீண்டும் பிரசன்னம் பார்க்கப்பட்டு, அவர் குருக்கள் மடத்தில் இருப்பதை அறிந்தனர். பின்னர் அங்கு சென்ற கோவில் நிர்வாகத்தினர், இளைஞர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, மீண்டும் தேர் ஓட அருள் புரிய வேண்டும் என்று வேண்டினர்.

    இதையடுத்து திருநெல்வேலி வந்த சிவலோக பண்டாரநாத சித்தர், "தேரோடும் வீதியிலே தெவங்கி நிற்கும் நெல்லையப்பா.. தானா தளம்போய்ச் சேரப்பா.." என்று பாடினார்.

    மறுநொடியே மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல, அந்த தேர் தானாகவே நகர்ந்து, கோவில் வளாகத்தில் போய் நிலை கொண்டது. இதைக்கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

    சிவலோக பண்டாரநாத சித்தர், தான் சித்ரா பவுர்ணமி அன்று ஜீவ சமாதி அடையப் போவதாகவும், பவுர்ணமி தோறும் தன் ஜீவசமாதியில் சாம்பார் சாதம், தயிர் சாதம் படைத்து வழிபட்டு, அதை தானமாக வழங்கு பவர்களுக்கு பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்று கூறினார். அதன்படியே அவர் ஒரு சித்ரா பவுர்ணமியில் ஜீவ சமாதி அடைந்தார். அந்த இடத்தில் கற்கோவில் கட்டப்பட்டுள்ளது.

    கருவறையில் மூலவராக சிவலோக பண்டாரநாத சித்தர் திருவுருவம் உள்ளது. பத்மாசனத்தில் தியான நிலையில் வீற்றிருக்கும் இவர், தலையிலும், நெற்றியிலும் ருத்ராட்சம் அணிந்துள்ளார். அதோடு திருமார்பில் கவுரி சங்கரம் என்னும் அரிய ருத்ராட்சம், இரண்டு புஜங்களிலும் ருத்ராட்ச மணிகள், இடுப்பில் மட்டும் வஸ்திரம் என்று அணிந்திருக்கிறார்.

    வலது கையில் சின்முத்திரையோடும், இடக்கையில் ஏடு தாங்கியும், புத்தரைப் போல் நீண்ட காதுகளுடன், முகத்தில் புன்னகை தவழ சிவசிந்தனையுடன் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி வருகிறார்.

    சிவலோக பண்டாரநாதர், குருக்கள் மடம் பகுதியில் நோய் குணப்படுத்துவது, ஏடு ஜோதிடப் பலன் சொல்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டார். இவரை அப்பகுதி மக்கள் 'ஏடு ஜோதிடர்' என்றே அழைத்தனர்.

    ஓய்வு நேரங்களில் அங்குள்ள தெப்பக்குளத்தில் நீரின் மேற்பரப்பில் படுத்து தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் சித்தரின் புகழ், அனைத்து திசைகளிலும் பரவியது.

    தன்னை நாடி வருபவர்களிடம் தட்சணை எதுவும் பெறாமல், யாசகம் பெற்று கஞ்சி காய்ச்சி பருகி வந்தார். அந்த கஞ்சியை தன்னை நாடி வரும் மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகவும் வழங்கினார்.

    இப்படி கஞ்சியை பனை ஓலை பட்டையில் வாங்கிப் பருகிய மக்கள், ஓலை பட்டையை அங்கேயே வீசி விட்டுச் சென்றனர். அது காய்ந்து அருகில் இருக்கும் வீடுகளின் முன்பாக போய் விழுந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட அந்த வீட்டு மக்கள், சித்தரை வாய்க்கு வந்தபடி திட்டியதுடன், ஒரு கட்டத்தில் அவர் தங்கியிருந்த குடிலுக்கு தீயும் வைத்தனர்.

    ஆனால் அப்படி தீவைத்தவர்களின் உடல் வெப்பத்தால் கொதிக்க ஆரம்பித்தது. உடல் முழுவதும் நெருப்பில் வெந்தது போல எரியத் தொடங்கியது. இதனால் பயந்து போன அவர்கள், சிவலோக பண்டாரநாத சித்தரைத் தேடி ஓடினர்.

    நீரின் மீது படுத்து தியானம் செய்து கொண்டிருந்த அவரிடம், தங்களின் செயலுக்கு மன்னிப்பு கோரினர். இதையடுத்து அவர்களின் உடல் சமநிலைக்கு வந்தது.

    சிவலோகநாதரை வழிபடுவோருக்கு குரு தோஷம், குரு சாபம் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். அரசு வேலை, அரசியலில் உயர் பதவி கிடைக்க சிவலோக நாதரை தொடர்ந்து வழிபடுவது அவசியமாகும்.

    திருமணம், குழந்தைப்பேறுக்குரிய சிறப்புத்தலமாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது. நோய் தீரவும், வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிபெறவும் இங்கு வழிபடுகிறார்கள். இங்கு அர்ச்சனை கிடையாது. அதனால் பூ மாலைகள், நல்லெண்ணெய், ஊதுபத்தி உள்ளிட்ட நறுமணப் பொருட்கள், பஞ்சாமிர்தம், அபிஷேகப் பொருட்கள் வழங்கி வழிபடுவது சிறப்பு.

    பவுர்ணமி தோறும் காலையில் சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை பூச நட்சத்திரம் அன்றும், அவரவர் பிறந்த நட்சத்திரம் அன்றும் இங்கு வந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    அமைவிடம்

    தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில், தென்காசியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோமீட்டரில் கீழப்பாவூர் இருக்கிறது. இங்கு வடக்குப் பேருந்து நிலையத்தில் அரசு நூலகத்தின் பின்புறம் 'குருக்கள் மடம்' பகுதியில் சிவலோக பண்டாரநாதர் ஜீவசமாதி அமைந்துள்ளது.

    • நெல்லையப்பர் கோவில் தேர் 28-28 அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்ட தேர்.
    • அனைத்து தேர்களுக்கும் இணைப்பு பகுதியில் இணைப்புச் சங்கிலி இருக்கும்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    நெல்லையப்பர் கோவில் தேர் 28-28 அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்ட தேர். நேற்று தேர்வடத்தை நெம்புகோல் தருவதற்கு முன்னதாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஒரே நேரத்தில் இழுத்ததன் காரணமாகவே தேர்வடம் அருந்தது. மாறாக திருச்செந்தூரில் தேர்வடம் தயாராக இருந்த நிலையில் அதனை இணைத்து 9:30 மணியளவில் வெற்றிகரமாக 5 சுவாமிகள் ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டது.

    மேலும், அனைத்து தேர்களுக்கும் இணைப்பு பகுதியில் இணைப்புச் சங்கிலி இருக்கும். நெல்லையப்பர் தேர் 450 டன் கொண்ட தேர். அதற்கான வடம் கயிறால் கட்டினால் தான் இழுக்க முடியும். அதுமட்டுமின்றி அதிக எடை கொண்ட தேருக்கு கயிறினால் தான் வடம் அமைக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

    • இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.

    இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு. அதிலும் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட பெருந்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு 418-வது ஆனி பெருந்தோ் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

    இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திர தேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.

    நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.

    கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆகியோர் கோவிலின் பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப் பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்ச புராணம் பாட, கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுப்பதும், ரத வீதிகளில் உலா நடைபெறுவதும் வழக்கம்.

    இதனையொட்டி கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்த சுவாமி நெல்லையப்பர் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று பங்குனி மாதம் பிறந்ததை யொட்டி அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடி மரத்துக்கு மாப்பொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளன்று ஆலயம் உருவான வரலாற்றுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வும், 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும்.

    • வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
    • இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.

    இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

    அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.


    இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

    இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.

    தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.

    • இன்று முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் நாயன்மாா்களால் பாடப்பட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெறும். அதில் குறிப்பாக சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம், பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று மதியம் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். அப்போது மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாத பூஜை நடைபெற்றது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.

    தொடா்ந்து சுவாமி -அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் வைபவம், பாலும்-பழமும் கொடுத்தல் என சடங்குகள் நடைபெற்றன. அதன்பின் சுவாமி நெல்லையப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுவாமி-அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்ய தாரண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.

    அதனை தொடா்ந்து சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுனில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பா் உடனுறை காந்திமதி அம்பாள் கோவில் பழைமை வாய்ந்தது.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

    அதன் ஒரு நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

    இதனை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 7.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன் பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 நாட்கள் நடை பெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் காந்திமதி அம்பாள் டவுனில் உள்ள 4 ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றது.


    வருகிற 8-ந்தேதி அதாவது 11-ம் திருநாள் அன்று மதியம் 12 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.

    அதன்பின் மறுநாள் 9-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடை பெறுகின்றது. அதனை தொடா்ந்து பகலில் பட்டின பிரவேசமும், பின்னா் 3 நாட்கள் மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகிறது.

    முடிவாக வருகிற 12-ந்தேதியன்று சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினபிரவேச வீதிஉலா நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் நிர்வாகத்தினா், உபய தாரா்கள் செய்து வருகின்றனா். 

    • தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர்.
    • 9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

    தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர். இவர் ஒரு சமயம், நெல்லையப்பர் கோவில் முன்பாக வந்து வேண்டி அழைக்கவே, இறைவன் பதில் தராததால் சினமடைந்த சித்தர் சாபமிட்டு மானூர் செல்ல முற்பட்டார். இதனையறிந்த நெல்லையப்பர், சிவத்தொண்டராக வேடம் தாங்கி சித்தரை தடுத்து, பணிந்து அழைத்தார். அந்த இடமே தற்போதும் தொண்டர் நயினார் கோவில் எனப்படுகிறது.

    தொடர்ந்து சித்தர் மானூர் வந்து சேருகிறார். இதனால் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் முறையே, சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி பாண்டியராஜன், அகத்தியர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி மற்றும் சண்டி கேஸ்வரர் ஆகியோருடன் மானூர் சென்று, அங்குள்ள அம்பலவாணர் கோவிலில் வைத்து ஜோதிமயமாய் காட்சியளித்து சித்தரின் கோபத்தை தணியச் செய்கின்றனர். பின்னர் கருவூர் சித்தரையும் அழைத்துக்கொண்டு நெல்லைக்கு வருகின்றனர்.

    இந்நிகழ்வுகள் ஆவணி மாதம் மூலம் நட்சத்திர நாளில் நடைபெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழாவாக மானூர் அம்பலவாணர் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மானூர் வந்து வழிபடுவோருக்கு, முக்தி கிடைக்கும், மூலநோய் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு ஆவணி மூலத் திருவிழாவானது, நெல்லையப்பர் கோவிலில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து நேற்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவாரங்களுடன் வீதியுலா வந்து, நள்ளிரவு புறப்பட்டு இன்று அதிகாலை மானூர் சென்றனர். அங்கு இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சி அளித்தனர். தொடர்ந்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் பரமசிவன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடை பெறுவது வழக்கம்.
    • கொடிமரத்திற்கு 16 வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.

    நெல்லை:

    தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடை பெறுவது வழக்கம்.

    ஆவணி திருவிழா

    இந்த திருவிழாக்களில் ஆவணி மாதம் நடைபெறக்கூடிய மூலத் திருவிழா விமர்சையான ஒன்றாகும். மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று நடை பெற்றது.

    இதனையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    கொடி பட்டம்

    தொடர்ந்து கொடி பட்டம் பல்லக்கில் திருவீதி உலா எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்திருக்கும் சின்ன தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சிகர நிகழ்ச்சி

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தர் மானூர் அம்பலம் புறப்படும் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி யும், கரூவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் காட்சி கொடுத்து சாப நிவர்த்தி பெறும் நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதியும் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கிரந்த எழுத்து வடிவில் 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத்துறையின் ஓலைச்சுவடிகள் நூலாக்க திட்டப்பணி குழுவினர் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளை சேகரித்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 4 நாட்களாக பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியர் தாமரை பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அவருடன் சுவடியியலாளர்கள் சண்முகம், சந்தியா, நீலகண்டன், பாலசுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் நெல்லையப்பர் கோவில் நூலகத்தில் உள்ள சுவடிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவில் நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த 10 செப்பு பட்டயங்களை ஆய்வு செய்தனர். மேலும் கிரந்த எழுத்து வடிவில் வேணுவன நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம் உள்ளிட்டவை குறித்த 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து திட்டப்பணியின் ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாண்டியன் கூறுகையில், பழமை வாய்ந்த சிறிய சிறிய அறைகள் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக 2 அரிய தாள் சுவடிகள் கிடைத்துள்ளது. அதில் திருஞானசம்பந்தரின் 3 திருமுறைகள் அடங்கிய தேவார பாடல்கள் இருந்தன. அதன் தொடக்க பக்கத்தில் தோடுடைய செவியன் எனும் பாடல் இடம் பெற்றுள்ளது.

    இந்த பிரதிகள் செய்தவரின் குறிப்புகள் இல்லை. இவை 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இங்கு கண்டறியப்பட்ட பட்ட யங்களை ஆராயும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பனையோலை சுவடிகளில் 281 ஓலைச்சுவடிகள் நல்ல நிலையில் உள்ளது என்றார்.

    • அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும்.

    விநாயகர் திருவிழா

    48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமர்சையாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிப் பட்டம் கோவில் உட்பிரகா ரத்தில் பல்லக்கில் வீதி உலா கொண்டு வரப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து, கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலாவும் நடைபெறும். இதனைத்தொடர்ந்து 11-ந் தேதி முதல் மூவர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் சந்திரசேகரர் பவானி அம்பாள் உற்சவமும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    பின்னர் 24-ந்தேதி ஆனிப்பெரும் திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதி முன்புள்ள பெரிய கொடிமரத்தில் நடை பெறுகிறது. ஜூலை 2-ந்தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது.

    இன்று காலை விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சுவாமி நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வருஷாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக கொண்டா டப்பட்டது. இதனை யொட்டி சுவாமி நெல்லை யப்பர், காந்திமதி அம்பாள் கோவில் நடை இன்று அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதியில் தனி தனியாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூல விமா னங்களுக்கு தனித்தனியாக மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடை பெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மாலையில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள, பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    ×