என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் மொழி"

    • மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.
    • மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கோவை:

    மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எல்.முருகன் கூறியிருப்பதாதவது:-

    பிரதமர் நரேந்திரமோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடி, தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.

    இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.

    இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்.

    கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதலமைச்சர் பார்ப்பதில்லையா?

    கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், 'காசித் தமிழ்ச் சங்கமம்' விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவில்லையா?

    பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா?

    மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உலகத்தின் மிக முக்கியமான முடிவுகளில் இந்தியாவின் பங்கு முக்கியமாக உள்ளது.
    • உலகின் வேகமாக வளர்ந்துவரக்கூடிய பொருளாதாரம் நாடுகளில் இந்திய முன்னணியில் இருக்கின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு, இந்தி சாகித்ய அகாடமி மற்றும் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி இணைந்து ஒருநாள் தேசிய கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழாவை நடத்தியது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி அரங்கில் விழா நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-

    "தமிழ் பழமையான மொழி, தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும். அதுவே எனது விருப்பமாகும். ஒரு நாள் அதுபோல பேசுவேன்" என தமிழில் பேசினார். மேலும் அவர் பேசியதாவது:-

    தமிழ் இனிமையான மொழி, தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தொடர்பு கொண்டுள்ளேன், தமிழ் பட்டய படிப்பை பல்கலையில் தொடங்கவேண்டுமென கேட்டுள்ளேன்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழை கற்றுக்கொள்கிறேன். நான் தொடக்க நிலையில் தான் இருக்கின்றேன். தமிழ் செய்தித்தாள்களை படிக்கின்றேன். தமிழில் பேசினால் புரிகிறது. பேசுவது சிரமமாக உள்ளது. ஒரு நாள் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். என் காது கேட்கும் தூரத்தில் யாராவது தமிழில் பேசினால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    சுதந்திரத்திற்கு பின்பாக நாம் போதுமானதை செய்யவில்லை, அப்போது இந்தியா 6-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. அதை தொடர்ந்து 60 ஆண்டுகளில் 11-வது இடத்திற்கு வந்து விட்டோம். 65 ஆண்டுகளாக பின்னோக்கி சென்று விட்டோம். நமது நாட்டின் பலம் தவிர்க்கப்பட்டது. நாம் வறுமை ஒழிப்பை குறித்து பேசினோம். கல்வியை பரப்பினோம். ஆனால் இன்னும் படிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள்.

    உலகம் மாறி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. பொருளாதாரத்தையும் நிர்வாகத்தையும் எப்படி சரி செய்ய வேண்டும் என்று பலரும் நமக்கு பாடம் எடுத்தார்கள். ஆனால் இன்று உலகம் நம்மை பார்க்கிறது.

    உலகத்தின் மிக முக்கியமான முடிவுகளில் இந்தியாவின் பங்கு முக்கியமாக உள்ளது. உலகின் வேகமாக வளர்ந்துவரக்கூடிய பொருளாதாரம் நாடுகளில் இந்திய முன்னணியில் இருக்கின்றது. இந்தியா 7 சதவீதம் வளர்ந்து இருக்கின்றது.

    300, 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்தது. இன்றோ 1,25,000 புத்தாக்க நிறுவனங்கள் இருக்கிறது. அவற்றில் 20 சதவீத நிறுவனங்கள் யூனிகான் நிறுவனங்கள். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

    இரண்டாம் உலகப் போருக்கு பின்பு ராணுவ பலம் மற்றும் வளங்களை கொண்டு நாடுகள் வளர்ச்சியடைந்தது. ரஷியா மற்றும் உக்ரைனில் மட்டும் போர் நடைபெறவில்லை. சிறு சிறு போர்கள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று உலகம் அச்சத்தில் வாழுகின்றது. அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. உலகம் வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டுள்ளது.



    பல மில்லியன் மக்கள் இன்றும் உலகில் வெறும் வயிற்றுடன் உறங்க செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜி20 நாடுகள் கூட்டத்தை நாம் தலைமை தாங்கினோம். 85 சதவீத உலக ஜி.டி.பி. வைத்திருக்கக்கூடிய இந்த நாடுகள் பட்டியலில் மிகப்பெரிய அளவிலாக உள்ள ஆப்பிரிக்க கண்டமே இடம்பெறவில்லை. நாம் தான் ஆப்பிரிக்காவை ஜி20 அமைப்பிற்குள் கொண்டு வந்தோம்.

    நாம் மரங்களையும் விலங்குகளையும் வணங்குகின்றோம். மற்றவர்கள் அதை கேட்பார்கள். ஆனால் நாம் அதனை ஆத்மாவாக பார்க்கின்றோம். எப்படி இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே குடும்பம். அனைத்து உயிரினங்களும் ஒன்று.

    இந்த ஒருங்கிணைந்த தத்துவமே ஒருங்கிணைந்த பார்வையே நம் பாரதத்தின் பாரம்பரியம். ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம்.

    'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லித் தந்தனர். ஆனால் அதை நாம் வெளியே கொண்டு செல்லவில்லை. ராணுவ பலம், ஆன்மீக பலம் அனைத்தும் மூலமாக வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

    மாணவர்கள் பல்வேறு துறைகளை தேர்வு செய்திருக்கலாம். உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் பாடுபடுங்கள். உங்கள் துறையில் சிறந்து விளங்குகள். இதுவே சரியான நேரம்.

    பெண்கள் முன்னுக்கு வராமல் நாடு வளர்ச்சி அடையாது. வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன, யாரும் தேங்கி விட வேண்டாம். முன்னேறிச் செல்லுங்கள். இந்த நாட்டுக்காக என்ன செய்தேன் என்று யோசித்துப் பாருங்கள்.

    எதிர்மறை எண்ணங்கள் வருவதை தவிருங்கள். பலர் மொழிகளாலும் மதங்களாலும் பிரிவினை உண்டாக்குவார்கள். நாம் அதில் பாதிக்கப்படக்கூடாது. அந்த எதிர்மறை எண்ணங்களுக்கு எதிராக போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தமிழ்நாடு இந்திய சாகித்ய அகாடமி செயலாளர் ஜவகர் காரூண், முன்னாள் துணைவேந்தர் நிர்மலா மவுரியா, வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் சந்தோஷ்பாபு, செயலாளர் அசோக்குமார் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு பள்ளியில் வட மாநிலத்தவர்கள் குழந்தைகள் தமிழ் மொழியை கற்க தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.
    • அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வலியுறுத்தல்.

    தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

    வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைப்பதாகவும் மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும் வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும் அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும்.
    • தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த நூலக திறப்பு விழாவில் முன்னாள் மந்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும், வாழ்வதற்கும் வளர்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும். தமிழில் எழுத வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும். தமிழ் வளர வேண்டும் என்றால் பல புதிய வடிவங்களில் மாற வேண்டும். இந்த சிறிய நூலகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இது தனி நூலகம் அல்ல. ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அங்கம் இந்த நூலகம்.

    சிவகங்கை பூமி தமிழ் வளர்த்த பூமி. தமிழ் வளர்த்தவர்களை தாங்கிய பூமி. புலவர்கள் மட்டுமல்ல தமிழ் புரவலர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் பல்கலைக்கழகத்தின் விதைகளை விதைத்தது வள்ளல் அழகப்பர் எங்களுக்கு கிடைத்த வரம்.

    இந்த பல்கலைக்கழகம் வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை நிறுவ முடிந்தது என் குடும்பத்தாருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த நூலகத்தில் கொள்ளளவு மிக மிக அதிகம். இன்னும் விரிவுபடுத்தலாம்.

    எங்களுக்கு யானை பசி. முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசே இங்கே இருக்கிறது. இந்த நூலகம் யானை பசிக்கு தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி சோறு தர வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு பெரிய பிடிச்சோறு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது.
    • வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.

    மதுரையில் நடந்த வருமான வரித்துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:

    என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு ரொம்ப நன்றி.

    அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும் என்பது கஷ்டமாக இருக்கும்.

    நாம் எளிமையாக தெரிந்து கொள்ள, எல்லோருக்கும் புரியும் அளவிற்கு இணையதளத்தை ஆரம்பித்து வங்கி கணக்கு எப்படி ஆரம்பிப்பது, சிக்கல்கள் என்ன? என்று குழந்தைகளுக்கு புரிவதுபோல் கார்ட்டூன் வடிவத்தில் கொடுத்து இருப்பது சுவாரசியமாக இருந்தது.

    பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது. நிறைய பேருக்கு அது புரிவது கடினமாக உள்ளது. இது தமிழிலும் இருந்தால் புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.

    உங்களின் இந்த முயற்சி எல்லோரும் எளிமையாக போய் சேர வேண்டும் என்பதற்கான முயற்சி தான். இதை நான் வரவேற்கிறேன். ஆனால் அது தமிழிலும் இருந்தால் இன்னும் எளிமையாக எல்லோருக்கும் போய்ச்சேரும்.

    திடீரென்று ஏதாவது பிரச்சனை வரும்போது தான் அது என்ன பிரச்சனை என்று ஒரு படபடப்பில் அதை தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பே அது பற்றிய விளக்கமும் தெளிவும் நமக்கு புரியும் மொழியில் இருந்தால் நாம் இன்னும் தெளிவாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

    இல்லையென்றால் அதற்கும் ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டியது இருக்கும். அது நிகழ்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    இந்த முயற்சி ரொம்ப அற்புதமானது. வரி செலுத்துவது மிகவும் முக்கியம். அவசியம்.

    நம்முடைய உரிமைக்காக நமது அரசிடம் எப்படி கோரிக்கை வைக்கிறோமோ அதே போல் வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.

    அதனால் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி எல்லாம் கட்டுகிறோம். ஏதாவது benifit இருந்தால் நன்றாக இருக்கும். அதையும் யோசித்து பாருங்கள்.

    நன்றாக சம்பாதிக்கும்போது வரி கட்டி இருப்போம். ஒரு காலத்திற்கு மேல் வருமானம் இல்லாமல் போய் நிலைமை சரியில்லாமல் போனால் நல்ல tax payer ஆக ஒரு சிட்டிசனாக வரி கட்டி இருந்தால் அவருக்கு என்று சில benefits இருக்கலாமே என்று தோன்றுகிறது. இதையும் நீங்கள் consider செய்ய வேண்டும்.

    ஷூட்டிங் நடுவில் வந்துள்ளேன். இங்கிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டும். எல்லாரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. நன்றி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஆரம்பித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நமக்கு தமிழ் மொழி தான் ஆதாரம், ஆணிவேர் எல்லாம்.
    • மத்திய அரசு 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது.

    கோவை:

    கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்று உலக தாய்மொழி நாள் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பாட்டரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உலக தமிழ் அறிஞர் விருது வழங்கப்பட்டது. விருதுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    நமக்கு தமிழ் மொழி தான் ஆதாரம், ஆணிவேர் எல்லாம். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. முன்பு மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் கருணாநிதி செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தார். அதன் பிறகு செம்மொழி மாநாடு கோவையில் தான் நடந்தது. அந்த சிறப்புக்குரியது கோவை.

    நான் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் அன்பழகன், கோவை ராமநாதன் ஆகியோரின் எம்.எல்.ஏ. பதவியை அப்போது சபாநாயகராக இருந்தவர் பறித்தார். நான் 45 நாட்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இப்போது அதே துறைக்கு, தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆசியோடு அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறேன்.

    தமிழ் மொழியை காக்க அனைவரும் பாடுபட வேண்டும். இன்று மத்திய அரசு 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது. முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது தமிழ் மொழிக்காக உயிர் நீத்தவர்கள் சின்னசாமி, நடராஜன், தாளமுத்து போன்றோர். எனவே தாய் மொழியை அழியாமல் பாதுகாக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும். தாயை போல தாய் மொழியாம் தமிழ் மொழியை மதிக்க வேண்டும்.

    தொடர்ந்து மொழியைப் வளர்க்க, பாதுகாக்க நாம் பாடுபட வேண்டும். அனைவரும் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். இன்று தமிழ் மொழியை பாதுகாக்க வளர்க்க பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் வழியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தொல்லியல் ஆராய்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள், மேயர் ரங்கநாயகி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ் 1 மாணவர்களும் எழுதத்தகுதி பெற்றுள்ளனர்.
    • பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் வரை மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்.

    குடிமங்கலம் :

    பள்ளிக்கல்வித்துறை, தமிழ் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வை நடத்த உள்ளது.

    இந்தத்தேர்வை பிளஸ் 1 மாணவர்களும் எழுதத்தகுதி பெற்றுள்ளனர். அவ்வகையில் இந்தத்தேர்வில் வெற்றி பெறும் அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 1,500 பேருக்கு பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் வரை மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்.இதற்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் மாதம் நடக்கவுள்ள நிலையில் உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையம் சார்பில் ராமமூர்த்தி மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறார்.இதற்கான ஏற்பாடுகளை, பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது.
    • இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

    உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. உலகில் பேசப்படும்/பேசப்பட்ட மிகப்பழமையான மொழிகளில்... Worldblaze வரிசைப்படுத்தி உள்ள டாப்-10 மொழிகளை பார்ப்போம்.

    10 வது இடத்தில் லத்தீன் மொழி:

    ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

    9 வது இடத்தில் ஆர்மீனியன் மொழி:

    இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

    8 வது இடத்தில் கொரியன் மொழி:

    கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    7 வது இடத்தில் எபிரேய மொழி:

    இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

    6 வது இடத்தில் அராமிக் மொழி:

    அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

    5 வது இடத்தில் சீன மொழி:

    சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

    4 வது இடத்தில் கிரீக் :

    கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

    3 வது இடத்தில் எகிப்து மொழி:

    ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

    2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி :

    இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இது தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

    1 வது இடத்தில் தமிழ் மொழி:

    5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

    -அம்ரா பாண்டியன்

    • விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு கலெக்டர்-எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினர்.
    • தமிழ் மொழியை செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர்.

    திருப்பரங்குன்றம்

    தமிழ் மொழியை செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். அவரது பிறந்தநாள் விளாசேரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

    கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் கோ. தளபதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி கவுன்சிலர் இந்திரா காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, ராமர், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டச் செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் சுவீதா விமல் தலைமையில் கவுன்சிலர்கள் உசிலை சிவா, விஜயா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பிராமணர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தையா தலைமையில் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அதன் தலைவர்அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத்தலைவர் காளிதாசன், பொருளாளர் அண்ணாமலை, மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி தலைவர் ஆறுமுகம் தலைமையில் செயலாளர் மருதமுத்து, கலை இலக்கிய பாசறை செயலாளர் முருகன், நிர்வாகிகள் கணேசமூர்த்தி, பாண்டித்துரை, விஜய், சின்னசாமி உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்தனர்.

    ×