என் மலர்
நீங்கள் தேடியது "மேகதாது அணை"
- மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
- மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஆகியோர் தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுப்பதில் தமிழகம் அலட்சியம் காட்டுவது சரியல்ல.
மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கடந்த மாதம் 7-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் மத்திய அமைச்சரை கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சந்தித்திருப்பதைப் பார்க்க வேண்டும்.
70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகைபாலைவனமாகிவிடும். அதைத் தடுக்க வேண்டியது அவசர, அவசியத் தேவையாகும்.
மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போதெல்லாம், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கொம்பனாலும் மேகதாது அணையைக் கட்ட முடியாது என்று கூறி கடந்து சென்று விடுகிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக ஆட்சியாளர்களிடம் ஒட்டி உறவாடுகிறது. இவற்றைப் பார்க்கும் போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் அதன் உரிமையை இழந்து விடுமோ? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடியாது என்று உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தீர்ப்பளித்திருப்பது உண்மை தான். ஆனால், அந்தத் தீர்ப்பை மீறித்தான் 2018-ஆம் ஆண்டில் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை வைத்துக் கொண்டு தான் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, அதனடிப்படையில் அனுமதி கோரி வருகிறது. வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, அணை கட்டவும் அனுமதி அளிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அலட்சியமாக இருந்ததன் காரணமாகத் தான் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல், இப்போதும் மேகதாது அணை கட்டப்படுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் காரணமாக இருந்து விடக் கூடாது.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதி செல்லுபடியாகும் வரை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும். அதை ரத்து செய்வது தான் மேகதாது அணையை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். எனவே, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
- மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
- கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது.
சென்னை:
கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியது. இதற்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-
மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவதாகும்.
மேகதாது அணை விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை உள்ளிட்ட எதையும் செய்ய முடியாது.
புதிய திட்டங்களுக்கான அனுமதி போன்றவற்றை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும்.
கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது.
இவ்வாறு அந்த பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது.
- விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதையொட்டி அரசியல் லாபம் தேடும் நோக்குடன் கர்நாடக முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை விடுத்துள்ள கோரிக்கை சட்ட விரோதமானது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது. விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், காவிரி ஆணையக் கூட்டத்தில் இனி எந்த காலத்திலும் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டும் என்று கோரி கடந்த 21-ந்தேதி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
எனவே, மத்திய அரசே நினைத்தாலும் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க முடியாது. இத்தகைய சூழலில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது அரசியல் லாபம் தேடும் நாடகம் என்பதை தவிர வேறில்லை.
அதே நேரத்தில் கர்நாடகத்தை இப்போது ஆளும் கட்சி, அதன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மேகதாது அணையை தான் முக்கிய கருவியாக நம்பிக் கொண்டிருக்கிறது.
அதனால், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக மத்திய அரசு எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.
எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். எத்தகைய நிலையிலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, கர்நாடக அரசால் 2019 ஜனவரியில் மத்திய நதிநீர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
- விரிவான திட்ட அறிக்கையின் நகல்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.
சென்னை:
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? என்று வைகோ எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டூடு அளித்த பதில் வருமாறு:-
மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, கர்நாடக அரசால் 2019 ஜனவரியில் மத்திய நதிநீர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, விரிவான திட்ட அறிக்கையின் நகல்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. காவிரி நீர்மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களின் போது, மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மீதான விவாதம் ஒரு நிகழ்ச்சி நிரலாக சேர்க்கப்பட்டது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இந்த நிகழ்ச்சி நிரல் மீதான விவாதம் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
- காவிரியிலிருந்து எடுக்கப்படும் நீரை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்
புதுடெல்லி:
கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.
காவிரி நதியிலிருந்து எடுக்கப்படும் நீரை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேகதாது அணை பாதுகாப்பு விவசாயிகள் நாளை டெல்லியில் பேராராட்டம் நடத்த உள்ள நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- மேகதாது திட்டத்தை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க அரசு தயாராக உள்ளது.
- மேகதாது அணை கட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்தியமில்லை.
பெங்களூரு:
கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்து அதற்காக முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கடி டெல்லி சென்று மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணை கட்டும் திட்டத்தை தொடங்கும் முன்பாகவே, முந்தைய அரசு பல தவறுகளை செய்திருந்தது. அதனால் தற்போது மேகதாது திட்டம் பிரச்சினையில் சிக்கி உள்ளது. அன்றைய அரசு மேகதாது திட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியது. தற்போது மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் மேகதாது திட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேகதாது திட்டத்தை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க அரசு தயாராக உள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி கொண்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேகதாது அணைகட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்தியமில்லை.
திட்ட அறிக்கை கூடிய விரைவிலேயே அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். முந்தைய பட்ஜெட்டிலேயே மேகதாது திட்டத்திற்காக அரசு ரூ.1,000 கோடியை ஒதுக்கி இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக கூடிய விரைவில் நிதி கிடைக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநில மக்களின் உரிமை.
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இழப்புகள் அதிகம் ஏற்படும்.
பல்லடம்:
கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை கட்டப்படும். அதற்கு தேவையான நிதி ஒதுக்க அரசு தயாராக உள்ளது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார். இதற்கு திருப்பூர் மாவட்ட விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரியில் இனி அணை கட்டுவது என்பது நடக்காத காரியம். அதனை தெரிந்து கொண்டே கர்நாடக முதல்வர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. காவிரிஆறு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநில மக்களின் உரிமை. ஏற்கனவே கர்நாடகாவில் ஒருதலைப் பட்சமாக அணைகளை கட்டியுள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளில் காவிரி தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. ஆனால் அதே சமயம் கர்நாடகத்தில் சுமார் 28 லட்சம் ஏக்கர் சாகுபடி அதிகரித்துள்ளது. அணை கட்டுவதற்கு முன்பு 3 மாநில அரசுகள், விவசாயிகள் கூடி முடிவெடுத்து செய்ய வேண்டிய விஷயம்.
இதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவை தெளிவாக இதனை உணர்த்தி உள்ளது. இதனை மீறி, உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கர்நாடக முதல்வர் பேசுவது அழகல்ல. இது வரம்பு மீறிய செயல். இதனை உழவர் உழைப்பாளர் கட்சி கண்டிக்கிறது. இது போன்ற பேச்சுக்களால் 3 மாநில உறவுகள் பாதிக்கப்படும்.விவசாயிகள்- பொதுமக்கள் ஆகியோருக்கிடையே மனக்கசப்பு உருவாக்கும் வகையில் கர்நாடக முதல்வர் பேசியதை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் கூறியதாவது :-
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றை மீறி கர்நாடக முதல்வர் காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என பேசி உள்ளது ஜனநாயகத்திற்கு விடும் சவாலாக உள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.காவிரி நீரை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அந்த திட்டம் பாதிக்கும். கர்நாடக முதல்வரின் இந்த நடவடிக்கை தமிழக மக்களிடையே அச்ச உணர்வை உருவாக்கி உள்ளது.காவிரியில் இனிமேலும் உரிமைகளை இழப்பதற்கு தமிழ்நாடு தயாராக இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களும், அமைப்புகளும், விவசாய சங்கங்களும், கட்சிகளும், ஓரணியில் போராடி காவிரியில் இருக்கிற உரிமைகளை காக்க வேண்டும். அதையும் மீறி அணை கட்டினால் கட்டப்படும் அந்த அணை தமிழர்களால் உடைக்கப்படும்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கர்நாடக மாநில இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை இது குறித்து அவரது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றார்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெற்றி கூறியதாவது:-
கர்நாடக முதல்வரின் பேச்சை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. காவிரி பிரசனை தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ,புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் ஒப்புதலை கேட்டுத்தான் முடிவுகளை எடுக்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதல்வரின் தன்னிச்சையான போக்கு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இழப்புகள் அதிகம் ஏற்படும். காவிரி உற்பத்தியாவது கர்நாடகம். ஆனால் அதன் பயணம் தமிழகத்தில் தான் செல்கிறது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் பாசனப்பரப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதில் மீண்டும் அணை கட்டுவதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. விவசாயிகளுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு இதில் அரசியல் செய்யாமல், தமிழகத்தின் உண்மை நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சியேயாகும்.
- கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமைகளைப் புரிந்தன.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சியேயாகும்.
கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆண்ட காங்கிரசு-பா.ஜ.க. இரு கட்சிகளும், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி, காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமைகளைப் புரிந்தன.
கடந்த 5 ஆண்டு காலமாக கர்நாடக மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க., மேகதாது அணை கட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து, தமிழர்களுக்கு எதிரான அதே துரோக வரலாற்றைத் தொடர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு முன்பாகவே மேகதாது அணைகட்ட ரூ.9,000 கோடிகளை ஒதுக்குவதாக காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளது, இந்தியக் கட்சிகள் எப்போதும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் எதிராகவே செயல்படும் என்பதையே மீண்டும் ஒருமுறை நிறுவுகிறது.
மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அணை கட்ட நிதி ஒதுக்கப்படும் என்ற காங்கிரசு கட்சியின் அறிவிப்பு அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி, இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
அதுமட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பா ளர்களை வெற்றிபெற செய்யத் தேர்தல் பணிக்குழு அமைத்துப் பாடுபட வேண்டும் என்று கர்நாடக மாநில தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தி தி.மு.க. தலைமை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கான காங்கிரசு கட்சியின் தேர்தல் வாக்குறுதி தி.மு.க.விற்கு தெரியுமா? தெரியாதா? ஆதரவு தெரிவிப்பதற்கு முன் மேகதாது அணையைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்ற உறுதிமொழியை காங்கிரசு கட்சியிடம் தி.மு.க. ஏன் பெறவில்லை? காங்கிரசு கட்சியின் வெற்றிக்குப் பாடுபடுவதன் மூலம் காவிரியில் மேகதாது அணை கட்ட தி.மு.க. மறைமுக ஆதரவு அளிப்பது தமிழ்நாட்டிற்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும். கர்நாடக தேர்தலில் காங்கிரசு கட்சியை ஆதரிக்கும் முடிவை தி.மு.க. கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் என்னுடைய நண்பர்கள் தான்.
- கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் அது அந்த கட்சியின் முடிவு.
சென்னை:
சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகா தேர்தல் முடிவு எதிரொலியாக, திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. அகற்றப்பட்டதாக தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் ஏன் இதை கூறவில்லை? அல்லது 2018 தேர்தல் முடிந்து 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும்போது ஏன் இதை சொல்லவில்லை? எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலுக்காக இந்த கருத்தை தெரிவிக்கிறார்
அவருக்கு, பா.ஜ.க.வினுடைய வளர்ச்சியை பார்த்து பயம் வந்துவிட்டது. தமிழகத்தில் பா.ஜ.க. மக்கள் மத்தியில் அன்பை பெற்றுவிட்டது என்று முதலமைச்சருக்கு தெரியும். எனவே தான் தினந்தோறும் பா.ஜ.க. புராணம் பாடிக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க. ஒரு தேசிய கட்சி ஒரு தேர்தலில் தோற்கும். ஒரு தேர்தலில் வெற்றி பெறும். ஆனால் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மனங்களை வென்று பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்.
சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் என்னுடைய நண்பர்கள் தான். சித்தராமையா ஆட்சியின்போது நான் எஸ்.பி.யாக இருந்தபொழுது என் மீது அதிக அன்புடன் இருப்பார். அரசியல் ரீதியாக மட்டுமே எங்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் அது அந்த கட்சியின் முடிவு. அதில் நான் கருத்து சொல்லமுடியாது. ஆனால் நல்ல ஆட்சியை காங்கிரஸ் கொடுக்க வேண்டும். தயவு செய்து தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல மேகதாது அணையை கொண்டு வந்து விடாதீர்கள். நீங்கள் மேகதாதுவை கொண்டு வந்தால், அதை எதிர்த்து நடக்கும் முதல் போராட்டம் பா.ஜ.க. சார்பில் என்னுடையதாக இருக்கும். கர்நாடகாவில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார் அதில் 'மேகதாது மட்டும் வேண்டாம்' என்ற வார்த்தை உள்ளதா? என்று நானும் தேடி பார்த்தேன். ஆனால் அதைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாயை திறக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
- பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது.
மதுரை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வாதத்தின் படி ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான ஆதாரத்தை பார்க்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பின்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்த வீரர்கள், சுப்ரீம் கோர்ட் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரும், புகார் கூறப்பட்டவரை கைது செய்த பின்னர்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவது தவறானது.
தமிழகத்தில் கவியரசு வைரமுத்து மீது எத்தனை புகார்கள் உள்ளது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. விசாரணை நடத்தி பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது இலாகா மாற்றம் நடவடிக்கை மதுரை மண்ணுக்கு தி.மு.க. அரசு இழைத்திருக்கும் துரோகம். பி.டி.ஆர். ஒரு தவறும் செய்யவில்லை. முதல்வர் மீது கருத்து சொல்லியதற்காக தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என்றால் இந்த திராவிட மாடலில் யாருக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை எடுத்துரைக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட செல்லும் போது, அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அப்படி தாக்கியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மேயராக மற்றும் பதவிகளில் உள்ளவர்கள். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி ஒரு அரசு அதிகாரிகள் மீது இது போன்ற செயல்கள் செய்யும் நபர்களுக்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை பெரிய பாடமாக இருக்க வேண்டும்.
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சியின் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எந்த வகையில் சரியாகும். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது.
நிச்சயமாக மேகதாது அணையை கட்டினால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. 6 மாதம் நடக்கும் இந்த நடைபயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம்.
- அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை.
சென்னை:
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார்.
கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-மந்திரியான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது.
- ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதுரை விமான நிலையம் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவோம் என்று கூறியுள்ளது தமிழக அரசு அனுமதி பெறாமல் அணை கட்ட முடியாது. தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள குறைபாடுகளை நீக்கி மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர். ராஜ் மோகன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஊராட்சி தலைவர் முத்தையா, வழக்கறிஞர்கள் சரவணன், சுந்தரா, முருகேசன், மாரிசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.