என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு மின்சார வாரியம்"

    • வரும் சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும்.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.

    மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் டெண்டர் கோரியது.
    • 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மின் மீட்டர் அமைப்பதற்கான 2-வது டெண்டரை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

    அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி நிறுவனம் பெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு.
    • சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

    சென்னை.

    தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று கடுமையான மழையும், காற்றும் இருந்தது. நள்ளிரவு வரை எங்கும் மின்தடை இல்லை.

    நள்ளிரவுக்குப் பிறகு காற்று அதிகமானதால் எந்தவித உயிர்ச்சேதமோ, பாதிப்போ ஏற்படா வண்ணம் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 355 துணைமின் நிலையங்களில், 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 33கி.வோ., 11 33கி.வோ.,.22 கி.வோ., 110 கி.வோ.,230 கி.வோ., மற்றும் 400 கி.வோ., உட்பட மொத்தம் 622 பீடர்களில் கன மழை மற்றும் வேகமான காற்று வீசியதின் காரணமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, நேற்று இரவு முழுவதும் சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

    இன்று அதிகாலை தொடங்கி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் களஆய்வு செய்து எந்த இடத்தில் பாதிப்புகள் உள்ளதோ அவற்றை எல்லாம் உடனுக்குடன் சரி செய்து இன்று மதியத்திற்கு முன்னதாகவே சீரான மின் விநியோகம் வழங்கப்படக் கூடிய வகையில் களத்தில் பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    எனவே, இன்று மதியத்திற்கு முன்னதாகவே அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும். சென்னையைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மீதம் இருக்கக்கூடிய புறநகர் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்பதை களத்திலே சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருமாத மின் பயன்பாடு 372 யூனிட்டுகளை (ரூ.1003.50) தாண்டிய வீட்டு உபயோக பயனர், மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் பணம் செலுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.
    • தமிழ்நாடு மின்சார வாரியம், டிஜிட்டல் முறைகள் மூலம் மொத்த வருவாயில் 74 சதவீதத்தை வசூலித்துள்ளது

    சென்னை:

    மின் கட்டணங்கள், அலுவலக கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருகின்றன.

    இதில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

    இந்நிலையில் ரூ. 1000-க்கு மேல் உள்ள மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சமீபத்தில் சில மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.

    மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால் வீட்டு உபயோக நுகர்வோரின் மின் கட்டணம் ரூ.1000-க்கு மேல் இருந்தால் அவர்கள் அதை ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை ஆகியவற்றில் மட்டும்தான் செலுத்த முடியும்.

    அதன்படி இருமாத மின் பயன்பாடு 372 யூனிட்டுகளை (ரூ.1003.50) தாண்டிய வீட்டு உபயோக பயனர், மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் பணம் செலுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஆன்லைன் செயல்முறையை எளிதாக்குவதால், மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் உடனடியாக பணம் பெறுவதற்கும், கவுண்டர்களில் தேவையற்ற பணத்தை கையாளுவதை தவிர்க்கவும் உதவும்.

    தமிழ்நாடு மின்சார வாரியம், டிஜிட்டல் முறைகள் மூலம் மொத்த வருவாயில் 74 சதவீதத்தை வசூலித்துள்ளது" என்றார்.

    இது தொடர்பாக கோவை நுகர்வோர் செய லாளர் கதிர்மதியோன் கூறும் போது, "கவுண்டர்களில் ரொக்கமாக பில் செலுத்துவதற்கான வரம்பை குறைக்கக் கூடாது. ஆன்லைனில் பணம் செலுத் தக்கூடிய நுகர்வோர் டிஜிட்டலை பயன்படுத்துகின்றனர். ஆன்லைனை பயன்படுத்து முடியாத மக்கள் கவுண்டர்களுக்கு வருகின்றனர் என்றார்.

    தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் மத்திய அமைப்பின் தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறும் போது, "ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்து வோரை ஆன்லைனில் செலுத்துமாறு கூற கவுண்டர் ஊழியர்களுக்கு ஏற்கனவே வாய்வழி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கவுண்டர் ஊழியர்களையும், கவுண்டர்களின் எண்ணிக்கையையும் குறைத்து அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஒரே வளாகத்தில் பல பிரிவு அலுவலகங்கள் அமைந்திருந்தாலும் ஒரு கட்டிடத்தில் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்பட்டது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளராக 24 நபர்களுக்கும், இளநிலை உதவியாளராக (கணக்கு) 2 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளராக 14 நபர்களுக்கும், தட்டச்சராக 1 நபருக்கும், களப்பணி உதவியாளராக 56 நபர்களுக்கும், உதவி வரைவாளராக 1 நபருக்கும், காவலாளியாக 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
    • பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் மறைமலைநகர் பேரமனூர் பகுதியில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம், எம். எல். ஏ.க்கள் சுந்தர், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி,

    பாபு மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிகள் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம்.
    • குறைபாடுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத நிலையினை உருவாக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை நிதி கட்டுபாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின் கணக்கீட்டின் போது முறையான கணக்கீட்டிற்கு பதிலாக தன்னிச்சையான, உண்மை நிலைக்கு மாறான கணக்கீட்டை கணினியில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க மற்றும் உரிய காலத்தில் உண்மையான கணக்கெடுப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு அறிவுறுத்தல்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து பல்வேறு கால கட்டங்களில் வழங்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணக்கீட்டின் சரியான தன்மையை உறுதி செய்ய, சோதனை மின்அளவீட்டின் மூலமாக உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, கள ஆய்வு செய்யும் அலுவலர்கள், ஆய்வு செய்யப்படும் பிரிவில் களஆய்வு நாளின் கணக்கீட்டாளரால் கடைசியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் இணைப்புகளில் குறைந்த பட்சம் 10 சதவீத மின் இணைப்புகளை தேர்ந்தெடுத்து சோதனை மின் அளவீடு எடுப்பதன் மூலம், மின்கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி அனைத்து சோதனை அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும்.

    உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம்.

    மேற்படி குறைபாடுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத நிலையினை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    • டிசம்பர் மாதம் பெரும்பாலான பகுதியில் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை.
    • கடந்த முறை செலுத்திய தொகையை இநத் முறையும் கட்ட அறிவுறுத்தல்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக சகஜ நிலை ஏற்பட்டது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் வடிவ காலதாமதம் ஏற்பட்டது.

    இதனால் பெரும்பாலான வீடுகளில் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோர்கள் அக்டோபர் மாதம் கணக்கீடு செய்யப்பட்டு செலுத்தப்பட்ட அதே தொகையை செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    • மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது.
    • கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு கடந்த ஜனவரி 24-ந் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (டான்ஜெட்கோ) மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என 3 ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி, 4 ஆயிரத்து 320 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது. அதேபோல், 2 ஆயிரத்து 321 மெகாவாட் திறன் கொண்ட குந்தா மற்றும் கொல்லிமலை நீர்மின் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 41 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு மாற்றப்படுகிறது.

    கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஊழியர்கள் இரு நிறுவனங்களுக்கு அயபணில் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

    • மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 2 நாட்கள் மின்தடை.
    • 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை அம்பத்தூர் ஜெ.ஜெ.நகர் தொழிற்பேட்டை, முகப்பேர் கிழக்கு, எழும்பூர், கொத்தவால் சாவடி, மண்ணடி, என்.எஸ்.சி. போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை, போரூர் பி.டி.நகர் மெயின் ரோடு, வியாசர்பாடி வி.எஸ்.மணி நகர், கிண்டி ராம்நகர், ஆவடி லட்சுமிபுரம், பல்லாவரம் நாகல்கேணி, ஆழ்வார்திருநகர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் நாளை (8-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம், கொரட்டூர், பாடி, கொடுங்கையூர், வளசரவாக்கம், கிண்டி சாந்திநகர், திருமுல்லைவாயல், அலமாதி, எடப்பாளையம், சி.டி.எச். சாலை, சோழவரம், சிறுனியம், சோத்துப்பெரும்பேடு, கோவில்பதாகை, பாண்டேஸ்வரம், புழல், பல்லாவரம் ஜெயின், மதுரவாயல் ஆலப்பாக்கம், போரூர், கோவூர், கொட்டிவாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் வருகிற 9-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பாரிமுனை: தம்புசெட்டி தெரு, மோர் தெரு, லிங்கி மின்தடை செட்டிதெரு, அங்கப்பன் நாயக்கன் தெரு, ஏரபாலு செட்டி தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு, கச்சாலீஸ்வர் அக்ரஹாரம் தெரு, 2-வது கடற்கரை சாலை, முகார்நலமுத்து தெரு, பர்மாபஜார், சத்தியா நகர் பி மற்றும் சி பிரிவு, சென்னை மாநகராட்சி பார்க், துறைமுகம் மற்றும் ராணுவ குடியிருப்பு, இந்திய கடற்படை, ராணுவ உணவகம் மற்றும் ரிசர்வ் வங்கி, கடற்கரை நகர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது.
    • மின்சார வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுவது தான் இழப்புக்கு காரணம் ஆகும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2022-23ஆம் ஆண்டு வரை ரூ.1.62 லட்சம் திரண்ட இழப்புடன், இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த மின்வாரியங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த இழப்புக்கு மத்திய அரசால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் நிலவும் ஊழல்களும் , முறைகேடுகளும் தான் இத்தகைய இழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

    இந்தியாவில் உள்ள அனைத்து மின்வாரியங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 6.47 லட்சம் கோடி இழப்பை சந்தித்திருக்கின்றன. அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு மட்டும் 25% ஆகும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை இந்தியாவின் முதன்மை மின்வாரியமாக மாற்றப் போவதாகக் கூறியவர்கள், இழப்பை சந்திப்பதில் முதல் நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தை உயர்த்திருப்பது அவமானகரமான சாதனையாகும்.

    2015-16ஆம் ஆண்டில் ரூ.63,162 கோடியாக இருந்த மின்சார வாரியத்தின் திரண்ட இழப்பு 2022-23ஆம் ஆண்டில் ரூ. 1.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் எந்த மின்சார வாரியமும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக இழப்பை சந்திக்கவில்லை.

    திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022&23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10,000 கோடியாக அதிகரித்தது. 2023&ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023&24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மின்சார வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுவது தான் இழப்புக்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தினால் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருக்காது. ஆனால், தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கினால் தான் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதற்காகவே, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்தாமலேயே ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றனர். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தும் வரை மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க முடியாது.

    2022-23ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி மட்டும் தான். ஆனால், அதில் ரூ.51,000 கோடி, அதாவது கிட்டத்தட்ட 62% வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது தவிர மின்சார வாரியம் வாங்கிக் குவித்த கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி செலுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் மின்சார வாரியத்தை எப்படி லாபத்தில் இயக்க முடியும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    எனவே, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். மின் வாரியத்தில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×