search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராக்கெட் ஏவுதளம்"

    • ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.
    • 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது.

    ஸ்பேஸ் எக்ஸ்ன், ஸ்டார்ஷிப் பிளைட்5 ராக்கெட் விண்ணில் செலுத்திய பிறகு, அதை ஏவுவதற்கு பயன்படுத்திய பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்தில் வந்தடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    அதன்படி, புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ், இன்று தனது 5வது விமான சோதனையை நிகழ்த்தியது.

    இதில், ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது. அதன்படி, 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட், ஏவுகணை கோபுரத்தில் இருந்து புறப்பட்ட அதே இடத்தில் வந்து லேண்ட் ஆனது.

    ஸ்டார்ஷிப் ஆனது "சாப்ஸ்டிக்" என்ற அதன் கைகளால் பூஸ்டரை லாவகமாக பிடித்தது.

    வலைதளங்களில் பலரும் இதன் வீடியோவை பகிர்ந்து "என்னால் இதை நம்பவே முடியவில்லை" என ஆச்சரியத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது.
    • நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

    மதுரை:

    மதுரை தனியார் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் பாரதம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 2,200 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது இதற்காக பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலக நாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டு சிறப்புகளை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடு சேர்ந்த செயற்கைக் கோளையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது. தற்போது தேவை அதிகரித்து இருந்ததால் வேறு இடங்களை தாண்டி அமைக்க முடிவு செய்தது. அப்போது பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க உகந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை தேர்வானது.

    அப்போது எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். நான் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தேன். இதற்கு தேவையான இடத்தை தருமாறு இஸ்ரோ சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் 2,223 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. அதனை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். மேலும் 8 வட்டாட்சியர்களும், தேவையான சர்வேர்களும் நிலம் எடுப்பு பணிகள் தீவிரமாக செய்து கொடுத்தனர்.

    இந்த பணியினை அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்து கொடுத்தார். இதற்காக நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். மின்னல் வேகத்தில் நில ஆர்ஜித பணிக்கு எடப்பாடியார் அரசு அப்போது செயல்படுத்தி கொடுத்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த மாதம் ஏற்கனவே இருமுறை தமிழகம் வந்த பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார்.
    • நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது.

    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

    தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது முறையாக 2024-ம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என பா.ஜ.க. தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமின்றி பிரதமர் மோடியும் கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் அந்தந்த மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே அங்கு முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.

    அந்த வகையில் பிரதமர் மோடி இன்று குஜராத், உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    கடந்த மாதம் ஏற்கனவே இருமுறை தமிழகம் வந்த பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார். வருகிற 27-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக 28-ந் தேதி காலை மதுரையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். பின்னர் துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் ராக்கெட், செயற்கைகோள்கள் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து சிறுகுறு மற்றும் நானோ வகையில் எடை குறைந்த செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ தயாரித்து வருகிறது. இந்த வகை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்காக மத்திய அரசு புதிதாக ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது.

    அதன்படி பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. இந்நிலையில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    மேலும் தூத்துக்குடி துறைமுக விரிவாக்கப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து ரூ.550 கோடி மதிப்பீட்டில் ரமேஸ்வரன் பாம்பன் கடலின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே தூக்குப்பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

    பிரதமர் மோடி கலந்து கொள்ளும் தூத்துக்குடி அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் வருகையையொட்டி கடலோர காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கூடுதலாக தென்மண்டல ஐ.ஜி., நெல்லை சரக டி.ஐ.ஜி. தலைமையில் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தூத்துக்குடி அரசு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி அதனை முடித்துக்கொண்டு நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இதற்காக அவர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வருகிறார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்தவுடன் ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார்.

    • தனது சுற்றுப்பயணத்தின் போது வருகிற 27-ந்தேதி இரவு பிரதமர் மோடி மதுரையில் தங்குகிறார்.
    • நெல்லையில் பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண்கின்றன.

    இந்த 2 அணிகளுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தும் நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி புதிய கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது.

    தங்களது கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ப்பதற்கும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் பா.ஜனதா கூட்டணி இறுதி செய்யப்பட இருக்கிறது.

    மத்தியில் தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா கட்சி இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க தீவிர களப்பணியில் இறங்கி உள்ளது.

    வடமாநிலங்களில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் இந்த முறை தென் மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் அந்த கட்சி உள்ளது.

    அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் குறிப்பிட்ட சில தொகுதிகளை குறி வைத்து பா.ஜ.க. களமிறங்கி உள்ளது.

    இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பாரதிய ஜனதா பொதுக்கூட்டங்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.

    தனது சுற்றுப்பயணத்தின் போது வருகிற 27-ந்தேதி இரவு பிரதமர் மோடி மதுரையில் தங்குகிறார். இதற்காக அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு வைத்து பா.ஜனதா தமிழக தலைவர்கள் மற்றும் டெல்லியில் இருந்து வருகை தரும் மேலிட தலைவர்கள் ஆகியோருடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் பேசப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை முக்கிய பிரமுகர்கள் பலரும், கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர்.

    பிரதமர் மோடியின் முழு சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகை தருகிறார்.

    பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.


    பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 3.50 மணிக்கு பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பல்லடம் செல்கிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு மதுரையை சென்றடைகிறார். அங்கு ஒரு தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி 5.15 மணி முதல் 6.15 மணி வரை 1 மணி நேரம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் 6.45 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது அவர்களுடனும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.

    மறுநாள் 28-ந் தேதி காலை 8.15 மணிக்கு பிரதமர் ஓட்டலில் இருந்து கார் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு செல்கிறார்.

    8.40 மணிக்கு மதுரையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, 9 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறார்.

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் சில திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.



    மேலும் ராமேசுவரம் புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகள் காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடக்கிறது.

    விழா முடிந்ததும் 10.35 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு 11.10 மணிக்கு வருகிறார்.

    நெல்லையில் பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர். காலை 11.15 மணிக்கு தொடங்கும் கூட்டம் 12.15 மணிக்கு நிறைவடைகிறது.

    பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் 12.30 மணிக்கு நெல்லையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக கேரளாவிற்கு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் வந்து செல்லும் இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பிரதமர் வருகையால் தமிழக பா.ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். நெல்லை மற்றும் பல்லடத்தில் பிரதமர் பேச உள்ள பொதுக்கூட்டங்களில் லட்சக்கணக்கானோரை திரட்டி பலத்தை காட்ட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    பிரதமரின் தமிழக சுற்றுப் பயணத்தால் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

    • மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு குழுவினர் பிரதமர் வரும் ஹெலிபேட் சோதனை நடத்த உள்ளனர்.

    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் செல்லும் இடங்களில் ரோடு-ஷோவும் நடத்தி வருகிறார். தமிழகத்திற்கு கடந்த மாதம் 2 முறை பிரதமர் மோடி வந்தார். இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இந்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார். அன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் மிகப்பிர மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கேரளா புறப்பட்டு செல்கிறார்.

    28-ந் தேதி (புதன்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கு துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்தில் இருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு ராக்கெட் ஏவு தளத்தை அமைப்பதற்காக மத்திய அரசு முடிவு செய்தது.


    பல்வேறு கட்ட ஆய்வுகளின் முடிவில் ராக்கெட் ஏவ சிறந்த இடம் மற்றும் எரி பொருள் என பல்வேறு வழிகளில் மிகச்சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

    குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    இதேபோல் ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரெயில்வே தூக்கு மேம்பாலத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

    மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று முதல் பாதுகாப்பு குழுவினர் பிரதமர் வரும் ஹெலிபேட் சோதனை நடத்த உள்ளனர். கடலோர காவல்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடலில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் அவர்கள் தண்ணீரில் செல்லும் சிறப்பு விமானம் மூலம் ராமேஸ்வரம் பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை தினமும் 3 முறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதேபோல் துறைமுக நுழைவுவாயில் பகுதிகளில் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் துறைமுகத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு படகு மூலம் கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழாவையொட்டி தூத்துக்குடி ஹெலிபேட் தளத்தில் இருந்து விழா நடைபெறும் தூத்துக்குடி துறைமுக நிர்வாக அலுவலகம் வரை பிரதமர் மோடி குண்டு துளைக்காத 'புல்லட் புரூப்' காரில் செல்கிறார். இந்த கார் வருகிற 26-ந் தேதி தூத்துக்குடி வர உள்ளது. மேலும் தமிழக போலீசார் சார்பிலும் ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    • தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
    • ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.

    பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக ஏவுதலுக்குப் பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இஸ்ரோ தனது முதல் 'எக்ஸ்-ரே போலரிமீட்டரை' வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் 2024 புத்தாண்டை வரவேற்றுள்ளது. பி.எஸ்.எல்.வி.யின் மற்றொரு வெற்றிகரமான பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் செயற்கைகோள் இதுவாகும். இந்த செயற்கைகோளின் சோலார் பேனல் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிக்கு பங்காற்றிய இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள்.

    இந்த வெற்றி இஸ்ரோவின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு மிகவும் நம்பகமானது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த ராக்கெட்டை முற்றிலும் வணிக ரீதியிலான உபயோகத்துக்கு பயன்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள் ஒன்று பெண்களால் வடிவமைக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதைக் காட்டுவதுடன், அனைத்து கருவிகளும், பல்வேறு சீர்திருத்தங்களை நிரூபிக்கின்றன.

    பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டின் சுற்றுப்பாதையில் 4-வது கட்டத்தை எட்டிய உடன் என்ஜின் நிறுத்தி மீண்டும் இயக்கி நடத்தப்பட்ட சோதனை மூலம், விஞ்ஞானிகள் செயற்கைகோளின் உயரத்தை சுமார் 350 கிலோ மீட்டர் ஆக குறைத்தனர். பரிசோதனை தொகுதி-3 (போயம்-3) ஆய்வு வெற்றிகரமாக நடந்தது. எக்ஸ்போசாட் செயற்கைகோள் உலகளாவிய வானியல் சமூகத்திற்கு கணிசமான நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டிலும் போயம்-3-ஐ பயன்படுத்தி விண்வெளி நிறுவனம் இதுபோன்ற அறிவியல் பரிசோதனைகளை செய்தது. புவியில் இருந்து 530 கி.மீ.தொலைவு கொண்ட சுற்றுப்பாதைகளில் தான் அதிக அளவிலான செயற்கைகோள்கள், விண்வெளிக்கழிவுகள் உள்ளன. இதனால் 300 கிலோ மீட்டர் புவி தாழ்வட்டபாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்துவது குறித்து, தற்போது ஏவப்பட்ட ராக்கெட்டின் 4-வது நிலை (பி.எஸ் 4) எந்திரம் மூலம் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    விண்வெளி அடிப்படையிலான ஆய்வு சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சூழலில், 'எக்ஸ்போசாட்' பணி ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும், ககன்யான் விண்கலத்திற்கான 2 சோதனை ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    அதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள், பி.எஸ்.எல்.வி. எஸ்.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஸ்க்ராம்ஜெட் உள்ளிட்ட 15 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பான ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் கைவசம் உள்ளன. அதேபோல் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.

    தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் அடிக்கல் நாட்டும் பணி நடக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்சாரம் வெளியில் கொண்டு செல்வதற்கு உயர்மட்ட மின்சாரகோபுரம் அமைக்கும் பணியும் நடந்தது.
    • 80 சதவீத பணிகள் முடிந்து 2025-ம் ஆண்டு இதை திறப்பதற்காக அனைத்து வேலைகளும் முழு வீச்சில் நடந்து வந்தது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உடன்குடி அனல் மின் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிமிக மிக வேகமாக நடந்து வந்தது

    உடன்குடியில் ரூ.9,250 கோடி மதிப்பீட்டில் 1,301 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்காக கல்லா மொழி கடற்கரையில் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து முடிவடை யும் நிலையில் இருந்தது.

    கடலில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம், கட்டிடங்கள் கட்டும் பணிகள் வேகமாக நடந்தன. கப்பலில் வரும் நிலக்கரியை அப்படியே எதிர்புறம் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நேரடியாக கொண்டு வருவதற்கு உயர்ந்த பாலம் ரோட்டில் குறுக்கே சுமார் 60 அடி உயரத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது.

    மேலும் இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் வெளியில் கொண்டு செல்வதற்கு உயர்மட்ட மின்சாரகோபுரம் அமைக்கும் பணியும் நடந்தது.

    80 சதவீத பணிகள் முடிந்து 2025-ம் ஆண்டு இதை திறப்பதற்காக அனைத்து வேலைகளும் முழு வீச்சில் நடந்து வந்தது.


    இதை போல குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதல் கட்டமாக 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக ரூ.6 கோடியே 24 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டு ஆரம்பகட்ட பணியும் தொடங்கியது.

    உடன்குடி அருகில் உள்ள கூடல்நகர் கிராமத்தில் 40 குடும்பங்களை இடம் மாற்றம் செய்ய உடன்குடி அய்யா நகரில் ரூ.4.5 கோடியில் வீடு கட்டும் பணியும் தொடங்கியது. 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் அனல் மின் நிலையத்தை தொடங்கி வைப்பதாகவும், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக அணுமின் நிலையம் மற்றும் ராக்கெட் ஏவுதளத்திற்கு வர வேண்டிய முக்கியமான மூலப்பொருட்கள் வெளியில் இருந்து கொண்டு வர முடியவில்லை என்பதால் பணிகள் தாமதம் ஆவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும் போது, பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கும் முன் இந்த இரு திட்ட விழாக்களும் நடைபெறும் என்றனர்.

    • குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது.
    • தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சென்னை:

    'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன.

    அங்கிருந்து நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.

    மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அதனால் பல நாடுகளும் இஸ்ரோ வாயிலாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன.

    இதற்காக மேலும் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தது.

    இதில் குலசேகரப்பட்டினம் தேர்வானது. புவி வட்ட பாதைக்கு மிக அருகில் இந்த ஊர் அமைந்திருப்பதும் தட்பவெப்ப சூழல் ராக்கெட் ஏவுதளம் இயங்குவதற்கு சாதகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

    இதற்காக குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,230 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது இந்த இடங்களை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ரூ.6 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    தற்போது குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்து விட்டது. இதற்கு தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டிசம்பர் மாதம் குலசேகரபட்டினம் வருகிறார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. மாநில அரசும் தேவையான நிலத்தை கையகப்படுத்தி தந்து விட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சிறிய ரக ராக்கெட் ஏவுவதற்கு வசதியாக ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

    பிரதமர் மோடி டிசம்பர் மாதம் வருகை தந்து அடிக்கல் நாட்டி இதை தொடங்கி வைக்க உள்ளார். அவர் வருவதற்கு முன்பே தற்காலிக ஏவுதளம் அமைத்து சிறிய ரக குறைந்த எடை கொண்ட எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவுவதை பிரதமர் பார்வையிடும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

    இஸ்ரோ தலைவர் சோம்நாத் கடந்த வாரம் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து இது பற்றி விளக்கி கூறி உள்ளார்.

    இதேபோல் ராமேசுவரத்தில் பாம்பன் இடையே புதிய ரெயில்வே தூக்கு பாலம் உள்ளதால் அந்த பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தூர்தன்ஷன் தொலைக்காட்சியின் புதிய சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. அதையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும்.
    • குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்பட்டது.

    உடன்குடி:

    இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது.

    ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நில நடுக்கோடு பகுதி ஆகும். இந்த பகுதியில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதால், ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயற்கைகோள்களை ஏவ முடியும்.

    இதனால் அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்த முடியும். ஸ்ரீஹரிகோட்டா நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்து உள்ளது. தொலையுணர்வு செயற்கைகோள்களை தெற்கு நோக்கியும், தொலைதொடர்பு செயற்கை கோள்கள் கிழக்கு நோக்கியும் ஏவப்படுகின்றன. இங்கு இருந்து ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் 104 டிகிரி கோணத்தில் ஏவப்படுகிறது. ஆனால் கிழக்கு திசையில் 90 டிகிரி கோணத்தில் ஏவுவதே சிறந்தது ஆகும்.

    இதனால் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும்.

    நிலையான கால நிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நிலவியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது.

    இங்கு இருந்து தெற்கு நோக்கிய ராக்கெட் ஏவுதல்கள் சிறப்பானது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்து உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். அதே போன்று கிழக்கு நோக்கிய ஏவுதல்களுக்கு சுமார் 120 டிகிரி கோணத்தில் ஏவ வேண்டும்.

    இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவதை விட சற்று அதிகம். ஆனால் இதனால் ஏற்படும் இழப்பை புவியீர்ப்பு சுற்று வேக அதிகரிப்பால் ஏற்படும் விசையை கொண்டு ஈடுகட்ட முடியும் என்று கருதப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து முதலில் பிரியும் பாகம் வங்காள விரிகுடாவிலும், 2-வது பாகம் இந்திய பெருங்கடலிலும் விழும். இதனால் குறைந்த செலவில் ராக்கெட் ஏவுதல்களை மேற்கொள்ள முடியும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக தமிழக அரசிடம் இருந்து நிலத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து குலசேகரன்பட்டினம் அருகே 2 ஆயிரத்து 376 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. பின்னர் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்பட்டது.

    தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை தொடங்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்நிலையில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடங்குவதற்காக ரூ. 6 கோடியே 24 லட்சத்திற்கு டெண்டர்கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டெண்டர் எடுக்க விரும்புவோர் வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்குள் அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    டெண்டர் பணிகள் முடிந்ததும் அதில் இருந்து ஒரு வாரத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

    • ராக்கெட் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
    • சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்.

    இந்தியா-பூட்டான் கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் உள்பட 9 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பி எஸ் எல் வி -சி 54 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

    செயற்கைகோள்கள் வெற்றிகரமாக அவற்றின் சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: 


    இறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள பூடான் செயற்கைகோள் இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் ஆராய்ச்சி பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். நேபாளம், பூட்டான், இலங்கை உட்பட 61 நாடுகளுடன் இணைந்து இந்திய விண்வெளித்துறை செயல்பட்டு வருகிறது.

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


    தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 24 மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ராக்கெட் தளம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • வெளிநாடுகளின் எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.
    • ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் குலசேகரன்பட்டினம் உள்ளது. எனவே கணிசமான எரிபொருளை சேமிக்க முடியும் என்பதால் ராக்கெட் ஏவுவதற்கான செலவு மிச்சமாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தும்போது தென்கிழக்கு திசையை நோக்கி சென்று இலங்கை வரை இதனுடைய தாக்கம் ஏற்படும்.

    வெளிநாடுகளின் எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. இந்தவகையில் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தெற்கு திசையை நோக்கி சில கட்டுப்பாடுகளோடு விண்வெளியில் செலுத்த முடியும்.

    தற்போது ராக்கெட்டுக்கு தேவைப்படும் திரவ எரிபொருள், இங்கிருந்து மிக அருகில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையத்தில் இருந்து 1,497 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றப்படுகிறது.

    குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமையும்போது, 1000-க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரிகிரியில் இருந்த நேரடியாக கொண்டு செல்ல முடியும் என்பதால் பெரும் செலவு மிச்சமாகும். இதுதவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    • திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சிஆகிய கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
    • ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் குலசேகரன்பட்டினம் உள்ளது.

    தூத்துக்குடி:

    விண்வெளி துறையில் இந்தியா வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது.

    ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்தி ஆய்வு மேற்கொள்வதிலும், புதிய வசதிகளை பெறுவதிலும் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வரும் ஆண்டுகளில் இஸ்ரோ திட்டமிடும் ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு மற்றொரு ஏவுதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம், குலசேகரன்பட்டினத்தில் இயற்கையாகவே விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் சூழல் இருந்தது தான்.

    ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நிலநடுக்கோடு பகுதி ஆகும். இந்த பகுதியில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதால், ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பெற முடியும். இதனால் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    ஸ்ரீஹரிகோட்டா நிலநடுக்கோடு பகுதியில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. தொலையுணர்வு செயற்கை கோள்களை தெற்கு நோக்கியும், தொலை தொடர்பு செயற்கை கோள்கள் கிழக்கு நோக்கியும் ஏவப்படுகின்றன. இங்கிருந்து ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் 104 டிகிரி கோணத்தில் ஏவப்படுகிறது. ஆனால் 90 டிகிரி கோணத்தில் ஏவுவதே சிறந்தது.

    குலசேகரன்பட்டினத்தில் இந்த அம்சம் இயற்கையாகவே உள்ளது. இதனால் அங்கு 2,233 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்து அதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    காலி இடங்களுக்கு ஏக்கருக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வழங்கப்பட்டது. மேலும் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்படுகிறது.

    திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சிஆகிய கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலம் தவிர, மீதம் உள்ள பட்டா நிலங்கள் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படடது.

    இதனை 8 பகுதியாக பிரித்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கென 8 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு தாசில்தார் தலைமையிலும் 13 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரியும் நியமிக்கப்பட்டனர்.

    தற்போது நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

    இதனையடுத்து ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் நில அளவீடு பணிகள் முடித்து தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் படுக்கப்பத்து பகுதி எள்ளுவிளை பகுதியில் இருந்து அமராபுரம், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கம்பி வேலிகள் அமைப்பதற்காக கான்கிரீட் அமைத்து கற்கள் நடப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த தடுப்பு வேலி அமைக்கும் பணியும் முடிந்தது.

    அடுத்தகட்டபணிகளாக குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் கூடல்நகர் பகுதியில் உள்ள 37 குடியிருப்புகளுக்கு உடன்குடி ஒன்றியம் செட்டியா பத்து ஊராட்சி அய்யா நகர் பகுதியில் தனியார் நிலங்களை வாங்கி மக்களுக்கு கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், ஊராட்சி துணைத் தலைவர் செல்வகுமார், ஊராட்சி செயலர் கணேசன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து இரு இடங்களிலும் ஆய்வு செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரோ தலைவர் சோம்நாத் குலசேகரன்பட்டினத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது முழு திருப்தியாக உள்ளது. இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை சிறப்பாக விண்ணில் செலுத்த முடியும். தெற்கு நோக்கிய ஏவுதலுக்கு சிறந்த இடமாக குலசேகரன்பட்டினம் உள்ளது.

    ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து உள்ளது. அரசிடம் இருந்து சில அனுமதியும், பாதுகாப்பு அனுமதியும் பெற வேண்டியது உள்ளது. நாங்கள் ஏவுதளம் அமைப்பதற்கு தயாராக உள்ளோம். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    எனவே விரைவில் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கட்டுமான பணிகள் தொடங்கினால் 2 ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2024 அல்லது 2025-க்குள் பணிகள் முடிந்து ஏவுதளம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் போது வேலைவாய்ப்பு பெரும், வணிக ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக இந்த ஏவுதளம் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் அது தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்கின்றனர்.

    மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும்போது தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் குலசேகரன்பட்டினம் உள்ளது. எனவே கணிசமான எரிபொருளை சேமிக்க முடியும் என்பதால் ராக்கெட் ஏவுவதற்கான செலவு மிச்சமாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தும்போது தென்கிழக்கு திசையை நோக்கி சென்று இலங்கை வரை இதனுடைய தாக்கம் ஏற்படும். வெளிநாடுகளின் எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. இந்தவகையில் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தெற்கு திசையை நோக்கி சில கட்டுப்பாடுகளோடு விண்வெளியில் செலுத்த முடியும்.

    தற்போது ராக்கெட்டுக்கு தேவைப்படும் திரவ எரிபொருள், இங்கிருந்து மிக அருகில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையத்தில் இருந்து 1,497 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமையும்போது, 1000-க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரிகிரியில் இருந்த நேரடியாக கொண்டு செல்ல முடியும் என்பதால் பெரும் செலவு மிச்சமாகும். இதுதவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது காற்றின் வேகம், மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாகவும் இருக்க வேண்டும்.

    நிலையான கால சூழ்நிலை, நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டுள்ளது.

    ×