search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைலேந்திரபாபு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சைலேந்திரபாபு புகைப்படத்தை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி
    • விழிப்புடன் இருக்க சைலேந்திரபாபு அறிவுரை.

    சைபர் கிரைம் மோசடி கும்பல் பல்வேறு விதமாக பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் என தொடர்பு கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பெற்றோர்களை குறிவைத்து சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

    வாட்ஸ் அப் கால் மூலமாக தொடர்பு கொண்டு உங்களது மகன் அல்லது மகள் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும். குறிப்பாக மகள் என்றால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், வங்கி மோசடியில் தொடர்பு இருப்பதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.

    வாட்ஸ் அப் காலில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் பேசி பெற்றோர்களை பயப்பட வைக்கின்றனர். அதுமட்டுமல்லாது அழுகுரல் ஒன்றையும் ஒளிபரப்பி மகன் அழுவது போன்ற ஒன்றையும் ஒலிபரப்பி அவர்களை நம்ப வைக்கின்றனர்.

    உண்மையை அறியாத சில பெற்றோர்கள் அவர்களது மகன் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக நினைத்து வாட்ஸ் அப் காலில் பேசும் நபர் கூறியபடி செய்து மகனை காப்பாற்றலாம் என நினைக்கின்றனர்.

    பணத்தை கொடுத்தால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என கேட்டு நினைக்கும் போது, பணத்தை கொடுத்து பெற்றோர்கள் சிலர் ஏமாறுகின்றனர்.

    இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதோடு ஏமாற்றி பணம் பறித்த வீடியோ ஆதாரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    அதில் பாகிஸ்தான் சைபர் குற்றவாளிகள் தனது புகைப்படத்தை பயன்படுத்தி இந்தியர்களிடம் பணம்பறிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற வீடியோ அழைப்பு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    • ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும்.

    கோவை:

    கோவை கணபதியை அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த மாரத்தான் போட்டியை தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் சைலேந்திரபாபுவும் பங்கேற்று ஓடினார்.

    2 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை தொடங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தோம். இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது.

    இதே போன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது. இன்றைய குழந்தைகள் ஓடுவதற்கே தயாராக இல்லை. இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு விதையாக இருந்து வருகின்றது.

    குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும். இதற்கு இது மாதிரியான ஓட்ட போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நூலகத்திற்கு தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.
    • மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பிற்கு பயன்னுள்ளதாக இருக்கும்.

    கன்னியாகுமரி:

    தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு. இவர் தன்னுடைய பணிக்காலத்தில் பணியை திறம்பட செய்ததோடு படிப்பின் அவசியம் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போட்டி தேர்வில் சாதிப்பது எப்படி? என்பது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர சைக்கிள் பயிற்சி, மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று உடல் வலிமை, மனவலிமையின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

    இந்தநிலையில் குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தனது பூர்வீக வீட்டை அவர் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நூலகத்திற்கு அவருடைய தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.

    மேலும், இந்த நூலகத்தை தன்னுடைய தாயார் ரெத்தினம்மாளை வைத்து திறக்கவும் ஏற்பாடு செய்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நூலகத்தை பயன்படுத்துவதற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார்.

    இது தவிர இந்த நூலகத்தில் டிஎன்.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ், நீட், வங்கி தேர்வு, மத்திய, மாநில அரசு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு வல்லுனர்களை கொண்டு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளி, கல்லூரி புத்தகங்கள் உள்ளிட்ட பல புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

    இதுதொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-

    மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பிற்கு பயன்னுள்ளதாக இருக்கும். தற்போது உள்ள மாணவர்களிடம் விளையாட்டு, சினிமா ஆர்வம் இருக்கிறது. ஆனால் அறிவியல், கணிதம், மொழி உள்ளிட்டவற்றை கற்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவாக உள்ளது. அந்த ஆர்வத்தை அதிகப்படுத்த இந்த நூலகம் பயன்பெறும்.

    நான் இந்த வீட்டில் இருந்து படித்து தான் பதவிக்கு வந்தேன். அதே போன்று இந்த பகுதி இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்க இந்த நூலகம் வழிகாட்டியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் தனியார் பாதுகாவலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய சைலேந்திரபாபு, தனியார் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்களை போதை பழக்கம் நெருங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகில் அதிசயம் என்பது சாதிக்க நினைக்கும் மனிதர்கள் தான்.
    • வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு தலைமை தாங்குவோம் என்ற தலைப்பில் பேசியதாவது:-

    பெண்கள் உயர்கல்வி கற்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. இன்று சமத்துவம், சமூகநீதி கொள்கை அடிப்படையில் பெண்கள் உயர்கல்வி கற்று கல்வி தரத்தில் உயர்ந்து வருகிறார்கள். கல்வி தான் நம்முடைய வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

    உலகில் அதிசயம் என்பது சாதிக்க நினைக்கும் மனிதர்கள் தான். ஒரு குறிக்கோளுடன் தன்னம்பிக்கை, திட்டமிடுதலுடன் ஒரு மனிதன் வாழ்ந்தால் அதுவே ஒரு அதிசயமாகும். ஒரு கால கட்டத்தில் பெண்கள் கல்வி மேதை என்பது மறுக்கப்பட்டு வந்தது. சுதந்திரம் இருந்தபோதும் அதனை நாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தோம். சமத்துவம், சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் அனைவரும் சமம். நமது முன்னோர்கள் உயர்கல்வி கற்பது என்பது சாத்தியமற்ற நிலையில் இருந்தது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் வகுத்த பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் இன்று நாம் அனைவரும் உயர்கல்வி கற்று வருகிறோம். தற்போதுள்ள பெண்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். படிக்கலாம். வேலை பார்க்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும். கல்வி என்பது மிகப்பெரிய பேராற்றல் மிக்க ஆயுதம் என்றார் நெல்சன் மண்டேலா. கல்வி என்ற பேராயுதத்தை ஏந்தினால் இந்த உலகத்தில் வெற்றி பெறலாம். மாணவர்களாகிய உங்களுக்கு உடல் பலமும் மன பலமும் மிக முக்கியமாகும்.

    எனவே, மாணவ, மாணவிகள் ஒரு குறிக்கோளுடன் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும். எதிர்காலத்தை எதிர்பார்ப்புடன், திட்டமிட்டு, ஒரு கனவு கண்டு, அந்த கனவின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் வாழ வேண்டும். ஒரு மனிதன் உயர்ந்த நிலைக்கு செல்வது உயர்கல்வியே. கல்வி என்பது மாபெரும் ஆயுதம் ஆகும். பெண்களை சாதிக்க வைப்பது கல்வி தான். கல்வி கற்பதின் மூலம் உலகில் தலைசிறந்தவர்களாக தலைமை தாங்கலாம். அதற்கு கல்வி முக்கிய பங்காற்றுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார் கவர்னர் ஆர்.என். ரவி.
    • கவர்னர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பதவி மற்றும் 8 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன.

    இதில் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு ஒப்புதல் வழங்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார்.

    இந்த நியமனம் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி அதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டார். அந்த கோப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.

    கவர்னர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, மீண்டும் அதே பரிந்துரையை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது.

    • பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன்.
    • நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும்.

    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு காவல் அதிகாரிகள், மற்றும் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

    அதில் தனது பணிக்காலத் தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை சுட்டிக் காட்டி இருப்பதுடன் காவலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார். கடிதத்தில் சைலேந்திரபாபு கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து பணி நிறைவு பெற்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

    இரண்டாண்டு காலம் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், குற்ற நிகழ்வுகளை தடுத்தோம், நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தோம். கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம்.

    ஆனால், தவறாக ஒருவரை குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்தவர்கள் யாராக இருந் தாலும் அவர்களை விட்டு விடவில்லை.

    ரவுடிகள் தொல்லை இல்லை, கூலிப்படைகள் நடமாட்டம் இல்லை என்ற நிலைமையை உருவாக்கினோம். இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே உங்களுக்கு பாராட்டுகள். உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்.

    கடந்த 2 ஆண்டுகளில் 3 லட்சம் இந்திய தண்டனை சட்ட வழக்குகள், 6 லட்சம் சிறு வழக்குகள், 18 லட்சம் இதர மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மோட்டார் வாகன சட்டத்தில் 5 கோடியே 30 ஆயிரம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 536 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பணியாகும்.

    பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமைப் பண்பு வளர்க்க உடல்நலம், மனநலம் காக்க வேண்டும். தொடர்கல்வி கற்க வேண்டும். ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும். காவல்துறையின் 1,34,000 பேரும் ஓர் ஆளுமை என்ற நிலை வரவேண்டும். அப்போது நம் செயல் சிறப்படையும். காவல்துறையின் செயல்பாட்டில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும்.

    வதந்திகளைக் கையாண்டது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது, கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது, போதைப் பொருள் நட மாட்டத்தை குறைத்தது, தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளைப் பார்த்து நான் வியப்படைகிறேன்.

    பொதுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்ப்பார்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து, அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

    நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும். ஆனால், நிறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச் சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக்கொண்டு, நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைமைச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் சீனியராக ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளார்.
    • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்கு செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணிபுரிந்து உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரான இறையன்பு மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஜூன் 30-ந் தேதி ஓய்வு பெறுகின்றனர்.

    இதனால் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

    தலைமைச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் சீனியராக ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளார். இவர் தற்போது தொழில் முதலீட்டு நிறுவனத்தில் (டிக்) கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சிவ்தாஸ் மீனா உள்ளார். மேலும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

    இவர்களது பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இதில் 3 பேர் பெயர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும்.

    அந்த வகையில் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றவர். 30 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். பணியில் அனுபவம் வாய்ந்தவர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்கு செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணிபுரிந்து உள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சிவ்தாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டார்.

    அதன் பிறகு மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதும் சிவ்தாஸ் மீனா தமிழக பணிக்கு திரும்பினார். தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார்.

    தமிழக டி.ஜி.பி.யாக உள்ள சைலேந்திரபாபு ஜூன் 30-ந்தேதி ஓய்வுபெறும் நிலையில் அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதிகாரமிக்க இந்த பதவிக்கு சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் பெயர் அடிபடுகிறது.

    புதிய டி.ஜி.பி.யாக நியமிக்க 3 மாதங்களுக்கு முன்பே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 5 பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். அதில் மத்திய அரசு 3 பேர் பட்டியலை தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கும். அதில் ஒருவர் டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார்.

    அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.யாக வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    சீனியாரிட்டி அடிப்படையில் 1988-ம் வருட தமிழக பேட்ச் அதிகாரி சஞ்சய் அரோரா, 1990 பேட்ச் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் போலீஸ் கமிஷனர்) ஆபாஷ்குமார் சீனா அகர்வால் 1991 பேட்ச் அதிகாரி அமரேஷ் புஜாரி ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் சிறப்பு குழு இயங்கும்.
    • வதந்தி பரப்புவோர் சமூக ஊடக கணக்குகளை முடக்கி நடவடிக்கை.

    தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற்காகவும் இந்த குழு பயன்படும். இதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்பு குழுவினை தமிழக காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் கணினி திறன் மற்றும் சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும். 

    குறிப்பாக பொய்யான வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அந்தப் பதிவினை நீக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினி சார் குற்ற வழக்குகள் பதிவு செய்யும் வகையில் இந்த குழு செயல்படும். சாதி மத அரசியல் மோதல்களை முழுமையாக தடுத்திடவும் வகையிலும் இந்த குழு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்களை பராமரிக்க வேண்டும்.
    • போராட்டங்களை ஒளிப்பதிவு செய்ய காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவலர்கள், சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை கவாத்துப் பயிற்சி வழங்க வேண்டும். இப்பயிற்சியை ஆயுதப் படையில் உள்ள உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும், கலந்து கொள்ளவும் அவர்களை அறிவுறுத்த வேண்டும்.

    ஆயுதப்படையில் உள்ள காவல் துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமிஷனர்களுக்கு கலவர சம்பவங்களில் படையை வழி நடத்துவதற்கு அவ்வப்போது உரிய பயிற்சி அளிக்க வேண்டும். ஆயுதப்படையில் கேடயம், லத்தி, ரப்பர் தோட்டாக்கள், பிளாஸ்டிக் தோட்டாக்கள், பம்ப் ஆக்சன் கன், கேஸ் கன், கேஸ் செல்கள் மற்றும் இதர ஆயுதங்கள் போதுமான அளவில் உள்ளதா? சரியாக வேலை செய்கிறதா? என அவ்வப்போது தணிக்கை செய்வதுடன், எவ்வாறு கையாள வேண்டும்? என கவாத்து பயிற்சியின்போது உரிய பயிற்சி வழங்க வேண்டும்.

    கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருண் மற்றும் இதர வாகனங்களை முறையாக பராமரித்து தயார் நிலையில் வைப்பதற்கு அறிவுறுத்தப்பட வேண்டும். ஒலி பெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு செய்யவும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு உட்படுத்த அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் சூப்பிரண்டுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை.
    • ஆர்டர்லிகளும் வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், புகார் தெரிவிப்பதில்லை.

    போலீஸ் உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்து வரும் போலீஸ்காரர்களை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை. ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை. எல்லாருக்கும் ஒரு உதவியாளர் தேவைதான். அதற்காக பொதுமக்கள் பணம் வீணடிக்கக்கூடாது'என்று கூறினார்.

    இதையடுத்து பேசிய கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளோம். மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்ப பெறப்படுவார்கள் என்று கூறினார். அப்போது பேசிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    அதனை டி.ஜி.பி. (சைலேந்திரபாபு) அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்க அவர் எடுத்துவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, இதுதொடர்பான நடவடிக்கை திருப்தி அளிக்கிறது.

    ஒரு அதிகாரி 5 பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களை ஆர்டர்லிகளாக பயன்படுத்தும்போது, மாதம் ரூ.2.50 லட்சம் அரசுக்கு செலவு ஆகுகிறது. உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை குறைந்த ஊதியத்துக்கு நியமிக்கலாம் என்று கூறினார். தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தை தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.

    அப்போது பேசிய பனீந்தர் ரெட்டி, உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களுக்கு அரசு சார்பில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாக கூறினார். இந்த நிகழ்வில் அனைத்து சந்தேகங்களும் கலையப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.

    அனைத்து கோணங்களிலும் சரியாக விசாரணை செய்து முடிவு எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது, பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளதாவது:

    மாணவி உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் அந்த பகுதியில் டிஐஜி தலைமையில் 530 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கலவரம் தொடர்பாக 70 பேரை கைது செய்துள்ளனர். கலவரம் அடங்கி உள்ளது. கலவரக்காரர்கள் தாக்கியதில் டிஐஜி, எஸ்பி உள்பட 52 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். காயம் ஏற்பட்டாலும் அவர்கள் அமைதி காத்தனர்.

    இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களையும் குற்றப் புலனாய்வுத்துறை விசாரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களை டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    ×