search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி லட்டு"

    • பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றை தயார் செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
    • சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாது வாங்கிச்செல்வது வழக்கமாகும். இந்த லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

    இந்நிலையில், இனி பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை பக்தர்கள் லட்டு வாங்கி செல்ல விற்பனை செய்யவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • கடந்த மாதத்தில் 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
    • லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.

    திருமலை

    திருமலையில் பக்தா்களிடம் குறைகள் கேட்கும் (டயல் யுவர் இ.ஓ) நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் அதிநவீன எஸ்.வி.அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். உலகத்திலேயே நம்பர் ஒன் அருங்காட்சியமாக இது இருக்கும். அருங்காட்சியகத்தில் 3டி இமேஜிங் முறையில் வெங்கடாசலபதியின் தங்க நகைகள் பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரமான, சரியான எடையில் லட்டு பிரசாதங்களை தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.50 கோடியில் தானியங்கி எந்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளது. அதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுகாதாரமான, சுவையான லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்க முடியும்.

    ஆகாச கங்கை தீர்த்தம் பகுதியில் அஞ்சனாத்ரி கோவில் கட்டும் பணி பக்தர்களின் காணிக்கையில் ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடி வரையிலான செலவில் நடந்து வருகிறது. புதிய பரகாமணி கட்டிடம் 5-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும்.

    திருமலையில் உள்ள அக்கேசியா தோட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது. அதற்கானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அக்கேசியா தோட்டத்தில் பல வண்ண மரங்கள், செடி, கொடிகள் அமைக்கப்படும்.

    அத்துடன் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், செடி, கொடிகள், அரிய வகை மூலிகை தாவரங்கள் அக்கேசியாவுக்கு மாற்றப்படும். அதை, பக்தர்கள் பார்த்து மகிழலாம்.

    கடந்த மாதத்தில் 20 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 7 லட்சத்து 51 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.123.07 கோடி கிடைத்தது. 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.
    • சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, 'திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்குவது தொடர்பாக ஆலோசித்து அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்‌. இந்த தகவலை வைத்து, சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

    ஆனால் இந்த தகவல் வதந்தி என திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருப்தி லட்டு காப்புரிமை பெறப்பட்டது என்றும், சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் நீரிழிவு நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சர்க்கரை இல்லாத லட்டு வழங்கினால், பின்னர் வேறு ஏதாவது காரணத்தை வைத்து வேறு சில பக்தர்கள் வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் என்றும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் திருப்பதியில் லட்டுக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • லட்டுக்கள் விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.400 கோடி தேவஸ்தானத்திற்கு வருவாயாக கிடைக்கிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    வார இறுதி விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுகிறது.50 ரூபாய் விலையில் எத்தனை லட்டுக்கள் வேண்டும் என்றாலும் பக்தர்கள் பெற்று செல்லலாம். பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்லும்போது தனது உறவினர்கள் நண்பர்களுக்கு லட்டு பிரசாதங்களை வழங்குவதற்காக கூடுதலாக லட்டுக்களை வாங்கிச் செல்கின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் 4 லட்சம் லட்டுக்களும், பெரிய அளவிலான கல்யாண உற்சவ லட்டுக்கள் 2 ஆயிரமும், 15 ஆயிரம் வடைகள் தயார் செய்யப்படுகின்றன. இதற்காக 80 தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் 616 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    3 ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் வேலை செய்தாலும் 4 லட்சம் லட்டுகள் மட்டுமே தயார் செய்யப்படுகிறது.

    பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் திருப்பதியில் லட்டுக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே ரூ.50 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    லட்டு தட்டுப்பாட்டை போக்க ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்தில் இருந்து பூந்தி தயாரிக்கும் எந்திரங்களை வாங்க தேவஸ்தானம் கூட்டத்தில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எந்திரங்கள் மூலம் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தினமும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் தயாரிக்க முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டுக்களில் முந்திரி, பச்சை கற்பூரம், ஏலக்காய், சர்க்கரை, உலர்ந்த திராட்சை, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

    லட்டுக்கள் விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.400 கோடி தேவஸ்தானத்திற்கு வருவாயாக கிடைக்கிறது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாய், ஆர்ஜித சேவை மற்றும் அறை வாடகை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஆண்டுக்கு சராசரியாக 3 ஆயிரம் கோடி வருவாயாக கிடைக்கிறது. கூடுதல் லட்டு விற்பனை மூலம் மேலும் வருவாய் கிடைக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பிரசாத லட்டுக்களை தேவஸ்தான ஊழியர்களை கொண்டு மட்டுமே தயார் செய்ய வேண்டும். எந்திரங்களை கொண்டு தயார் செய்யக்கூடாது என ஜீயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ×