search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி தலைவர்"

    • கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
    • பணியாற்றிய இத்தனை வருடத்தில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி.

    இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    அதுவும் நகராட்சி 19-வது வார்டில் புதுப்புதூர் பகுதியில் மட்டுமே அதாவது ஒரே பகுதியில் மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று அவர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவரை கவுரவிக்க முடிவு செய்தனர்.

    இதற்காக சிறப்பு விழா எடுத்தனர். 19-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதாராணி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு கலந்துக்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நஞ்சாம்மாள் வேலை செய்தபோது எப்படி நடந்துக்கொண்டார் என்று பெருமையாக தெரிவித்தனர்.

    நகராட்சித்தலைவர் பேசும்போது, பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளுக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    தொடர்ந்து நஞ்சம்மாளுக்கு சால்வைகள், சந்தன மாலைகள் அனுவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.

    • மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகராட்சி தலைவர் ெதாடங்கி வைத்தார்.
    • இந்த கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.

    மானாமதுரை

    மானாமதுரையில் தமிழக அரசின் தூய்மை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சி அலுவலகம் அருகே வைகை ஆற்றங்கரையோரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகர் மன்றத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து நகர் மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி கூறுகையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் நகரங்களில் தூய்மை இயக்கத்தின் சார்பில் மானாமதுரை நகராட்சியில் பல இடங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இக்கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.

    • சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
    • தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததுடன், சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி 25-வது வார்டு மூகாம்பிகை காலனி பகுதியில் போதிய அளவில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதியில் முறையாக வடிகால் அமைத்து, மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அம்பேத்கர் நகர் சமுதாயக்கூடம் அருகே உள்ள சரஸ் (வயது 44) வீட்டின் ஒருபகுதி நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் சரசும், அவருடைய மகன்கள் மனோஜ், தனசேகர் ஆகியோர் உள்புறமாக தூங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீடு இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த திருமுருகன் பூண்டி நகராட்சித் தலைவர் குமார் இடிந்து கிடக்கும் வீட்டை சீரமைக்க தனது சொந்த செலவில் ரூ. 5000 மதிப்பில் ஹாலோ பிளாக் கல் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    • உடுமலை நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.
    • வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பாக திரும்புமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை போலீஸ் நிலையத்துக்குள் கையில் பளபளக்கும் கத்தியுடன் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.உடனடியாக அவரிடமிருந்த கத்தியை பறித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் உடுமலை நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.உடனடியாக பொள்ளாச்சி சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த மத்தீனை தொடர்பு கொண்டு வழியில் எங்கும் வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பாக திரும்புமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.அத்துடன் அந்தியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தவரை போலீசார் சென்று பாதுகாப்புடன் உடுமலை அழைத்து வந்துள்ளனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தி.மு.க.வினர் உடுமலை போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.சம்பவம் குறித்து தி.மு.க.வினர் கூறியதாவது:-நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்யும் நோக்கத்தில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர்.அவர்கள் சரணடைந்துள்ள ஷேக் தாவூத் என்ற இந்த நபரிடம் நகராட்சித் தலைவரின் புகைப்படத்தைக் காட்டியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தியுடன் போலீசில் சரணடைந்துள்ளார்.எனவே அந்த மர்ம நபர்கள் யார்? அவர்களை ஏவியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சித் தலைவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'என்று கூறினர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-சரணடைந்த நபர் பெயர் ஷேக் தாவூத்(வயது 21).தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் உடுமலை வந்துள்ளனர்.இவருக்குத் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்றுள்ளார். பிறந்த குழந்தை இறந்து விட்டதால் பாதிக்கப்பட்ட இவர் ஊர் ஊராகச் சுற்றி வந்துள்ளார்.மேலும் உடுமலையிலேயே டீ மாஸ்டர்,பூ வியாபாரம் என பல வேலைகளை செய்துள்ளார்.தற்போது போலீஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த இவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகிறார்.அவர் கூறிய தகவல்கள் உண்மையா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று போலீசார் கூறினர்.கூலிப்படையை ஏவி உடுமலை நகராட்சித் தலைவரைக் கொல்ல சதி நடந்துள்ளதாக தகவல் பரவியதால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மாணவிகளுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
    • இணைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் ஜஸ்டின்திரவியம், திருக்குமார், சின்னசாமி, மங்களகவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம், ஆக.6-

    75-வது சுதந்திரதினத்தையொட்டி நாடுமுழுவதும் மாணவிகள் பணிபுரிந்த செயற்கை கோள் மென்பொருள் தயாரிப்பு பணியில் திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10 மாணவிகள் சாதனை படைத்தனர்.

    11-ம் வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் மோடி தலைமையில் செயற்கை கோள் செலுத்தும் நிகழ்ச்சியில் நாளை பங்கேற்கின்றனர்.

    சாதனை மாணவிகளை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் உத்தரவுபடி நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் ஆகியோர் பள்ளிக்கு சென்று பாராட்டினர்.

    மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும் ஊக்கத்தொகை வழங்கியும் நகராட்சி தலைவர் பாராட்டினார். இதில் இணைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் ஜஸ்டின்திரவியம், திருக்குமார், சின்னசாமி, மங்களகவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் நகராட்சிக்கு தினசரி 46 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும்.
    • நகரில் பல்வேறு இடங்களில் பற்றாக்குறையாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் மின் மோட்டாா் வைத்து குடிநீா் உறிஞ்சியது கண்டறியப்பட்டால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் கூறியதாவது:- பல்லடம் நகராட்சிக்கு தினசரி 46 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும். ஆனால் தற்போது 10 லட்சம் லிட்டருக்கும் குறைவாக தான் தண்ணீா் வருகிறது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் பற்றாக்குறையாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிடைக்கின்ற தண்ணீரை அனைத்து வாா்டு பகுதிக்கும் ஏற்றத்தாழ்வு இன்றி வழங்கிடவும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப கூடுதல் குடிநீா் பெற்றிடவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில்11-வது வாா்டு பெரியாா் நகா் பகுதியில் குடிநீா்க் குழாய் இணைப்பில் மின் மோட்டாா் பொருத்தி தண்ணீா் உறிஞ்சி எடுக்கப்படுவதால் தங்களுக்கு போதிய குடிநீா் கிடைப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் புகாா் மனுவில் கூறியிருந்தனா்.

    அதைத்தொடா்ந்து நகராட்சி அலுவலா்கள் அப்பகுதியில் ஆய்வு செய்த போது 3 குடிநீா்க் குழாய் இணைப்புகளில் மின் மோட்டாா் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நகராட்சி அலுவலா்கள் அந்த இணைப்புகளைத் துண்டித்து மோட்டாா்களை பறிமுதல் செய்துள்ளனா். பல்லடம் நகராட்சி பகுதியில் மின் மோட்டாா் வைத்து குடிநீா் குழாயில் தண்ணீா் உறிஞ்சி எடுத்தால் உடனடியாக குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பல்லடம் நகராட்சி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றாா்.

    ×