search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு நிறுத்தம்"

    • கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
    • மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதன் உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டம் மற்றும் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பூண்டி ஏரிக்கு மழை நீர்வர தொடங்கியதால் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கடந்த மாதம் 16-ந் தேதி இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 76 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அல்லது கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே இனிமேல் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.33 அடியாக உள்ளது.
    • இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.33 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,012 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • நீர்வரத்தை பொறுத்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பை அதிகரித்தும், குறைத்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • தற்போது அணையின் நீர்மட்டம் 52.20 அடியாக குறைந்து உள்ளது. நேற்று 969 கனஅடிநீர் திறக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி ெபறுகின்றது. பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட அணையில் முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டது. அதனைதொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    நீர்வரத்தை பொறுத்து அணையிலிருந்து தண்ணீர் திறப்பை அதிகரித்தும், குறைத்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 52.20 அடியாக குறைந்து உள்ளது. நேற்று 969 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்பட்டது. அணைக்கு 948 கனஅடிநீர் வருகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 129.55 அடியாக உள்ளது. 156 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1133 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.95 அடியாக உள்ளது. 38 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.96 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103. 88 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 1,214 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    தற்போது அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,214 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டப்பட்ட நிலையில் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 300 கனஅடி தண்ணீர் மட்டுமே தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது.
    • காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ள நீர் குறைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது

    திருச்சி :

    கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு ஆர்ப்பரித்து வந்ததையடுத்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டது.

    இதனால் காவிரியில் 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வரை வெளியேற்றப்பட்டது. இடையில் பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் கரூர் மாவட்டம் அருகேயுள்ள திருமுக்கூடலூரில் சேர்ந்து மாயனூர் கதவணை வந்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது. உபரி நீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் ஒன்றரை லட்சம் கனஅடி நீர் வரை வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கரையோரம் வசித்த மக்கள் மேடான பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். லால்குடி, உத்தமர் சீலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழைப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. உத்தமர்சீலி பகுதியில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதால் மூன்று நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

    இந்த நிலையில் தற்போது நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் முக்கொம்பு அணைக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அதில் காவிரியில் 26 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 49 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. அது நேற்றைய தினம் 51 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    இதையடுத்து காவிரியில் 26 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 25 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது. இன்றைய தினம் நீர்வரத்து மேலும் சரிந்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு வந்த 27 ஆயிரம் கனஅடி நீரில் 600 கனஅடி நீர் அய்யன் பெருவளை மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால்களில் திறந்த விடப்பட்டது. மீதமுள்ள தண்ணீர் முழுமையாக காவிரி டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ள நீர் குறைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.

    ×