search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை மறியல் ROAD BLOCKEDE"

    • தம்பிரான்பட்டி ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி ரேஷன் கடையில் நேற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தம்பிரான்பட்டி ரேஷன் கடையில் பயோமெட்ரிக் முறை மெஷின் வேலை செய்யாததால் ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர் ராகவன் மிஷினை சரி செய்தவுடன் பொருட்கள் வழங்கப்படும் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செட்டிகுளம் -செஞ்சேரி கிராம சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனி ச்சாமி, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கைகளால் எழுதி பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததால் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பேனர் கிழிக்கப்பட்டதால்

    பெரம்பலூர்

    மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கட்சியின் தொடக்க நாளான தை 1-ந்தேதியை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கிழித்து சென்றனர். இதையடுத்து அந்த பேனரை மர்ம நபர்கள் வேண்டும் என்றே கிழித்துள்ளனர் என்று கூறி, நள்ளிரவில் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களை நான்கு ரோட்டில் சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் பேனரை கிழித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது 

    • 12 கிராம மக்கள் திருப்புனவாசலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பறையத்தூர், சோத்திரிவயல், மங்களம், எட்டிச்சேரி, புத்தாம்பூர் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாம்பாற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது.இப்பகுதிகளில் ஓடும் பாம்பாறானது ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டு லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரசு அறிவித்துள்ள வரம்பு எல்லையை மீறி மணல் அள்ளப்படுவதாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனுமதித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விவசாய நிலங்கள் வறட்சியடைந்து காணப்படுவதாகக் கூறி திருப்புனவாசல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்மந்தப்பட்ட ஆற்றுப்பகுதியில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில் தங்கள் பகுதி ஏற்கனவே வறட்சியான பகுதி, குடிதண்ணீர் இன்றி தவித்து வருகிறோம், இந்நிலையில் தற்போது மணல் குவாரி அமைத்து நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தங்கள் பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மணல் குவாரியை இங்கிருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் பொதுமக்களை பெரிய அளவில் திரட்டி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

    • பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • குழாயில் குடிநீர் கலங்கலாக வந்ததால்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து நூத்தப்பூர் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு தெருக்குழாயில் வந்த குடிநீர் கலங்கலாக மாசு ஏற்பட்ட நிலையில் வந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக இதேபோன்று குடிநீர் வந்ததால், ஊராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் நேற்று திடீரென பொதுமக்கள் நூத்தப்பூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கை.களத்தூரில் இருந்து நூத்தப்பூர் வழியாக பெரம்பலூர் செல்வதற்கு வந்த அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பார்வையற்றோர் திடீர் சாலை மறியல் நடைபெற்றது.
    • 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி

    திருச்சி:

    திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதி ராயல் சாலையில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போலீசார் எதிர்ப்பையும் மீறி நடை பெற்ற இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொருளாளர் வரதராஜன், செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் வருவாய் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ. ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்டி கடை வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். நலிவுற்ற இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகையை பார்வையற்ற இசை கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு சுமை கட்டணத்தை விலக்கு அளிக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு என தொழில் கூட்டத்தை அரசு ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்தப் போராட்டத்தினால் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக ராயல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.

    • கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • மத்திய, மாநில அரசை கண்டித்து நடந்தது

    திருச்சி:

    அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவும், விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் மற்றும் தமிழகத்தில் சொத்து வரி, மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், அதேபோன்று ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் இன்றைய தினம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது

    அதன்படி திருச்சி மாநகர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பு 120க்கும் மேற்பட்டோர் சிங்கார தோப்பு பகுதியில் இருந்து கண்டன கோஷங்களை எழுப்பிய படி செஞ்சட்டை அணிந்தபடி பேரணியாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசாரால் கைது செய்தனர்.

    • மின்சாரம் பாய்ந்து மாடு செத்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பசுமாட்டை உடற்கூறு பரிசோதனை செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட புதுக்குடி கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இந்நிலையில் எந்திரங்களின் சோதனை ஓட்டத்திற்காக மின்மாற்றியில் இருந்து தற்காலிகமாக மின்சாரம் பெற்று பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் ஞானசேகரன் என்பவரது மாடு அந்த வழியாக வந்தபோது, மின்வயரை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே செத்தது.

    இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகர் மற்றும் அப்பகுதி மக்கள் மின் வயரை பாதுகாப்பின்றி அலட்சியமாக அமைத்திருந்ததாக, அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தேவையில்லை என்று கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவர் செல்வம் தலைமையிலான குழுவினர் இறந்த பசுமாட்டை உடற்கூறு பரிசோதனை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×