search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூவம் ஆறு"

    • தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
    • தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆறு திருமழிசை, பூந்தமல்லி வழியாக சென்னைக்குள் வருகிறது.

    புதுச்சத்திரம் கிராமத்தில் கூவம் ஆற்றை வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக கடந்த 1950-ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலம் திருநின்றவூர் வழியாக, ஆவடி, பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியமானது ஆகும்.

    இந்த தரைப்பாலத்தில் புதுச்சத்திரத்தில் இருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, பெரியபாளையம், புதுவாயல் கூட்டுச்சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அரசு, தனியார், தொழிற்சாலை பஸ்கள், கனரக வாகனங்கள் உட்பட தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும்.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலத்த சேதம் அடைந்த இந்த தரைப்பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு ரூ.90 லட்சம் செலவில் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

    ஆனால் பயன்பாட்டிற்கு வந்த 3-வது நாளிலேயே சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. அதன் பின்னர் மீண்டும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை. கரையின் இருபக்கமும் எந்த வித தடுப்பு சுவரும் இல்லாமல் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.

    இந்த தரைப்பாலத்தில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக சவுக்கு கம்புகளை தடுப்புகளாக அதிகாரிகள் கட்டி வைத்துள்ளனர். இந்த கம்புகளும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டவை.

    தற்போது கம்புகள் அனைத்தும் சேதம் அடைந்து உடைந்து விழுந்து கிடக்கிறது. மேலும் இந்த தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. தரைப்பாலப்பகுதியில் தெரு மின்விளக்குகள் எதுவும் கிடையாது.

    இரவு நேரத்தில் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடு வதற்காக சாலையோரம் திருப்பும் போது வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

    வாகன விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தில் கட்டப்பட்டு உள்ள தடுப்பு கம்புகளை வாகன ஓட்டிகள் வேடிக்கையுடன் பார்த்து செல்கிறார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகம் புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டி செல்வது சவாலானது.

    கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் சென்றால் கூவம் ஆற்றிற்குள் விழும் அபாயம் உள்ளது. தரைப்பாலத்தில் எந்த தடுப்புகளும் இல்லை.

    இதில் விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தின் பக்கவாட்டில் சவுக்கு கம்புகளை கட்டி வைத்தி ருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. இந்த கம்புகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள் அதிவேகத்தில் வந்தால் எப்படி தடுக்கும்.

    எதன் அடிப்படையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருக்கிறது என்றே தெரிய வில்லை. இது அதிகாரிகளுக்கு தெரியாதா? தரைப்பாலத்தில் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் உள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்தால் பருவமழையின் போதும் பாதிப்பு ஏற்டாமல் செல்ல முடியும் என்றனர்.

    • மழைநீர் வடிகால்களை தூர்வாருவதற்கு சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி உள்ளது.
    • வசிப்பவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்குகிறது.

    சென்னை:

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் மற்றும் பெருமழை காரணமாக சென்னை நகரம் வெள்ளக்காடானது. சென்னையில் பெரும்பாலான இடங்கள் சுமார் ஒரு வாரம் வரை வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் உணவு, குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர்.

    இதேபோல் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின் போதும், சென்னையில் வெள்ள பாதிப்பு தவிர்க்க முடியாததாக தொடர்ந்து வருகிறது. எனவே சென்னையில், தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால்களை தூர்வாருவதற்கு சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.7.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றில் குடிசைகள் மட்டுமின்றி பெரிய அளவிலான கட்டிடங்களும் உள்ளன. வீடுகள், சிறு தொழிற்சாலைகள், உணவு விடுதிகள ஆகியவை ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ளன. சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்க இதுபோன்ற நீர்நிலை ஆக்கிரமிப்பும் ஒரு காரணமாகும். ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைக்காலங்களில் வெள்ளம் வடிவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    இதற்கிடையே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

    சென்னையில், பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிய நிலையில், அங்கு செல்வதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

    மேலும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வரும் நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே தேர்தல் முடிவுகள் வெளியாகி தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் திரும்ப பெறப்பட்டதும் ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கும். அதற்கு முன்பாக, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
    • மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை (20.6 கி.மீ.) திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு சிக்கல்களால் அந்த பணி முடங்கியது.

    இதைத் தொடர்ந்து தற்போது சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். இரண்டு அடுக்கு மேம்பாலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.5 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இது அமைய உள்ளது. இதற்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் 2 அடுக்கு மேம்பால திட்டத்தில் துறைமுகம்- மதுரவாயல் வழித்தடத்தில் ஏற்கனவே கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட தூண்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    எழும்பூர் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் மொத்தம் 17 தூண்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. இந்த தூண்கள் முழுவதும் இடித்து அகற்றப்பட உள்ளது. இந்த தூண்கள் கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டது குறித்து சிக்கல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிதாக கட்டப்படும் சென்னை துறைமுகம்- மதுர வாயல் 2 அடுக்கு பறக்கும் சாலை திட்டத்தில் மொத்தம் 605 தூண்கள் மற்றும் 13 சரிவுப் பாதைகள் வர உள்ளன. மேம்பால பணிக்கு தூண்கள் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஒப்பந்ததாரர்கள் தொடங்கி உள்ளனர்.

    சில இடங்களில் மண் பரிசோதனையும் முடிந்து உள்ளது. மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு பறக்கும் மேம்பாலத் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது எழும்பூர், ஆயிரம் விளக்கு பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள 17 தூண்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பால பணியின் இறுதியில் துறைமுகத்துடன் 120 மீட்டர் தூரத்திற்கான இணைப்பு பகுதியில் நிலம் தேவைப்படுகிறது. இழப்பீடு வழங்குவது மூலம் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் நீங்கி உள்ளன. அரும்பாக்கத்தில் 4ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ரூ.91 கோடி இழப்பீடு தொகையாக மாநில அரசு வழங்குகிறது.

    துறைமுகத்தில் கடற்படையின் இடத்தில் உள்ள 64 வீடுகள் இடிக்கப்பட உள்ளது. நந்தனத்தில் புதிய வீடுகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இதன் பின்னர் கடற்படை இடத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்படும் என்றனர்.

    • மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது.
    • தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே– கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    இந்த பாலத்தை பயன்படுத்தி கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்துக்கு முக்கிய தரைப்பாலமாகவும் உள்ளது.

    மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது. பின்னர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.

    ஒவ்வொரு முறை தரைப்பாலம் சேதம் அடையும் போதும் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தரைப்பாலம் தற்காலிகமாக மட்டுமே சீரமைக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் 4-வது முறையாக சேதமடைந்தது. இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றி உள்ள கிராமஙகளைச் சேர்ந்தவர்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தில் பாலப்பணிகள் தொடங்கு வது என்ற குழப்பத்தில் சீரமைக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளின்படி அவசர தேவை பயன்பாட்டுக்காக கூவம் ஆற்றில் தற்போது 4 -வது முறையாக சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

    அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    • திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது‌

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதி வழியாக கூவம் ஆறு சென்னை நோக்கி செல்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் இந்த ஆறு சென்னையை நெருங்கும் வரை நல்ல தண்ணீர் ஆறாக உள்ளது . இதற்கு பிறகு கழிவுநீர் கலந்து சாக்கடை ஆறாக மாறி விடுகிறது.

    திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் இன்று காலை கூவத்தில் செடிகளுக்கு மத்தியில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் மட்டும் நான்கு டன்களுக்கு மேலாக மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை கொண்ட மீன்களாக இருந்தது. மேலும் செடிகளுக்கு மத்தியில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதால் செடிகளை அப்புறப்படுத்தி விட்டு செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கூவத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கழிவுநீரை விட்டு செல்வதாகவும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனங்கள் கூவத்தில் கலப்பதும் இது போன்று மீன்கள் செத்து மிதக்க காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மீன்கள் செத்திருக்கலாம் எனவும், ஆற்றில் நச்சு கலந்த நீர் கலந்து மீன்கள் இறந்ததா என்பதை அறிய மீன்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். வேறு ஏதேனும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் இரவு நேரங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம் கழிவு நீர் கொட்டப்படுகிறது. மேலும் ஆற்றங்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகள், தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை ஆற்றில் கலந்து விடுகின்றனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆற்றுப்பகுதியை அதிகாரிகள் சரியாக பராமரிப்பது இல்லை, கண்காணிப்பதும் இல்லை. ஏற்கனவே மழைக்காலத்திற்கு முன்பாகவே மழை நீர் செல்லும் ஆற்றுப்பகுதியை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் அது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகள் நிரம்பி தண்ணீர் செல்ல வழி இன்றி அடைத்து கிடைக்கிறது. தற்போது திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் இறந்த மீன்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது டன் கணக்கில் அங்கு மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் சிரமமடைந்துள்ளனர். மேலும் திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது

    • கடந்த ஒரு வார காலமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது.
    • போலீஸ் விசாரணையில் சர்க்கரை நோய்க்கு குணா சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னை சிந்தாரிப் பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் என்ற குணா. இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிந்தாரிப்பேட்டை கூவம் கரையோரமாக அவர் சுற்றி திரிந்துள்ளார். பின்னர் திடீரென பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் கீழே குதித்தார். அவர் கூவத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாரிப்பேட்டை போலீசாரும் எழும்பூர் தீயணைப்பு துறையினரும் ரப்பர் படகுகள் மூலம் குணாவை தேடி வருகின்றனர். மழை குறுக்கிட்டதாலும், இருள் சூழ்ந்ததாலும் தேடும் பணியில் நேற்று இரவு தொய்வு ஏற்பட்டது. இன்று காலையிலும் அவரை தேடும் பணி நடைபெற்றது.

    போலீஸ் விசாரணையில் சர்க்கரை நோய்க்கு குணா சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வரும் அவர் நேற்று காலையில் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியது தெரிய வந்துள்ளது. அதன் பிறகே குணா கூவத்தில் குதித்தது தெரிய வந்துள்ளது. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
    • வரும் பருவமழையின்போது இந்த தடுப்பணை வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது.

    இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

    இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் ஏற்கனவே அணைகள் உள்ளன. அதிக மழை பெய்யும்போது கூவம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக கடலில் கலந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில் கூவம் ஆற்றில் மேலும் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் 3-வது தடுப்பணை ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது.

    இந்த தடுப்பணை கடந்த பிப்ரவரி மாதம் 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டும் பணி தொடங்கியது. தற்போது இதில் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. அடுத்த மாதம் (ஆகஸ்டு) முழுஅளவில் தயாராகி விடும் என்று தெரிகிறது.

    இந்த தடுப்பணையில் 50 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். எனவே வரும் பருவமழையின்போது இந்த தடுப்பணை வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்ணையில் தண்ணீர் தேங்கும்போது அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும் அப்பகுதியில் உள்ள 600 ஏக்கர் விவசாய நிலங்கள், நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்சாகுபடி, கால்நடைகள், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து பயன்தரும். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    கூவம் ஆற்றின் குறுக்கே அதிகத்தூர் அருகே ரூ. 17.70 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும்போது சுற்றி உள்ள கிராமங்களில் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு நிலத்தடி நீர் அதிகரிக்கும். தடுப்ணையில் தண்ணீர் தேங்கும்போது தற்போது 35 அடி ஆழத்தில் இருக்கும் நீர்மட்டம், 15 அடியாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    • டிஜிட்டல் முறையை பயன்படுத்தி ஆறுகளை கணக்கெடுப்பதன் மூலம் ஆற்றின் எல்லைகளை வரைபடமாகவும் தயாரிக்க முடியும்.
    • சென்னையில் கூவம் ஆற்று பகுதியில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    சென்னை:

    கூவம், அடையாறு ஆறுகளில் நீர்வழிப்பாதைகளை கண்காணிக்க டிஜிட்டல் மூலம் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

    ஆற்றின் எல்லைகளை மிகவும் துல்லியமாக கண்காணிக்க டி.ஜி.பி.எஸ். எனப்படும் டிபரன்ஷியல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது.

    டிஜிட்டல் முறையை பயன்படுத்தி ஆறுகளை கணக்கெடுப்பதன் மூலம் ஆற்றின் எல்லைகளை வரைபடமாகவும் தயாரிக்க முடியும்.

    ஆறுகள் மற்றும் அது தொடர்பான திட்டங்களை நிர்வகிக்கும் குழுவினர் எதிர்காலத்தில் ஆறு பகுதிகளை யாராவது ஆக்கிரமித்தால் அதை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும். இதன்மூலம் ஆக்கிரமிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியும்.

    சென்னையில் கூவம் ஆற்று பகுதியில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். கோர்ட்டு வழக்குகள் காரணமாக இன்னும் 1000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இந்த டிஜிட்டல் முறை அமலுக்கு வந்தால் ஆக்கிரமிப்பு பிரச்சினை இருக்காது. இந்த பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதன்பிறகு ஆறுகளின் எல்லைகளை அளவிடும் பணி துரிதப்படுத்தப்படும்.

    நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும், நீர்த்தேக்க செயல்பாடுகளை கண்காணிக்கவும் மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது.

    • தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
    • ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது. இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன.

    மேலும் மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில், கூவம் ஆற்றில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.

    இந்த தடுப்பணை மூலம் அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய இந்த புதிய தடுப்பணை உதவும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

    • ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும்.
    • நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது.

    சென்னை:

    சென்னை நகரில் பாயும் முக்கிய ஆறுகளாக கூவம், அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளன. தற்போது இந்த ஆறுகளின் தண்ணீர் மாசு அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

    இதனை சரி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய 3 நீர் நிலைகளும் பயன்படுத்த முடியாத அளவில் இருப்பது தெரிய வந்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் அடையாற்றில் 23 இடங்களிலும், கூவம் ஆற்றில் 18 இடங்களிலும் பக்கிங்காம் கால்வாயிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது.

    இதில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எதிலும் கரைந்த ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதனால் இந்த நீரில் எந்த வகை உயிரினங்களும் வாழ தகுதி இல்லாதவையாக மாறி இருக்கிறது.

    ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும். இதேபோல் ரசாயன ஆக்சிஜன் 30 வரை இருக்கலாம்.

    சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உயிரியல் ஆக்சிஜன் 20-க்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால் நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 56-க்கும் மேல் உள்ளது. நெசப்பாக்கத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கூவம் மற்றும் பெருங்குடியில் இருந்து அடையாற்றில் கலக்கிறது.

    இந்த தகவல்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆறுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டன.

    தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இதை உறுதிபடுத்தி உள்ளது.

    நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இனி அரசால் எதுவும் செய்ய முடியாது' என்றார்.

    • மாநகராட்சி சார்பில் கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூர் பகுதியில் ஒரு உயர் மட்டப் பாலம் அமைக்கப்பட உள்ளது.
    • சின்ன நொளம்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள பாலத்திற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் சென்னை வளசரவாக்கம் பகுதியிலுள்ள கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் 2 உயர் மட்டப் பாலங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    இதனடிப்படையில், மாநகராட்சி சார்பில் கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூர் பகுதியில் ஒரு உயர் மட்டப் பாலமும், சன்னதி முதல் குறுக்குத்தெருவில் மற்றொரு உயர் மட்டப் பாலமும் அமைக்கப்பட உள்ளது. மேலும் சின்ன நொளம்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள பாலத்திற்காக ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு, வரைபடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் வாங்கப்பட்ட நிலங்களை நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் முடிவுற்ற பின் மாநகராட்சியிடம் இலவசமாக ஒப்படைக்க தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, சென்னை வளசரவாக்கம் கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், யூனியன் சாலையையும் இணைக்கும் வகையில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அவை சென்னை மாநகராட்சி சார்பில் சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ.42 கோடி 71 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், சன்னதி முதலாவது குறுக்குத் தெருவில் ரூ.31 கோடி 65 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், மொத்தமாக ரூ.74 கோடியே 36 லட்சம் மதிப்பில் 2 உயர் மட்டப் பாலங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொசு ஒழிப்பு பணியில் 1,262 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • மாநகராட்சிக்குட்பட்ட மழைநீர் வடிகால்களிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கொசு ஒழிப்பு பணியில் 1,262 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும், கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்பேரயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்பேயர்கள், 220 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் எந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் எந்திரங்கள் மற்றும் 66 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் மண்டலத்திற்கு 2 படகுகள் வீதம் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி வருகிற 29-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட மழைநீர் வடிகால்களிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×