search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்த மருத்துவம்"

    • ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

    புதுடெல்லி:

    ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (என்.ஐ.எஸ்.) மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட 'ஏ.பி.என்.எம்.' மருந்து, ரத்த சோகை உள்ள வளரிளம் பருவத்துப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் அதனுடன் கூடிய சத்துக்களின் அளவை மேம்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆய்வு முடிவுகளின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆர். மீனாகுமாரி கூறுகையில், "ஆயுஷ் அமைச்சகத்தின் பொது சுகாதார முயற்சிகளில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

    வளரிளம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உணவு ஆலோசனை, நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் சித்த மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகள் ரத்த சோகை நோயாளிகளுக்கு பலன்களை அளித்தன. எனவே ரத்த சோகைக்கான சித்த மருந்துகள் செலவு குறைந்த பங்கை பொது சுகாதாரத்துக்கு அளிக்கின்றன" என்றார்.

    • ஆஸ்துமா இரண்டு வழிகளில் முக்கியமாக ஏற்படுகிறது.
    • இருமல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், விசில் சத்தம், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

    ஆஸ்துமா என்பது, பாதிக்கப்பட்டவரின் சுவாசப்பாதைகள் சுருங்கி, வீங்கி, கூடுதல் சளியை உருவாக்கும் ஒரு நிலை. இது சுவாசத்தை கடினமாக்குவதுடன் இருமலையும் ஏற்படுத்துகிறது, மூச்சு விடும்போது ஒரு வித விசில் சத்தம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

    காரணங்கள்

    ஆஸ்துமாவுக்கான முக்கிய காரணம் ஒவ்வாமை (அலர்ஜி) ஆகும். ஆஸ்துமா இரண்டு வழிகளில் முக்கியமாக ஏற்படுகிறது. ஒன்று உட்புற ஆஸ்துமா. ஒருவருக்கு மரபணு மூலமாகவோ, பரம்பரை வழியாகவோ ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவது உட்புற ஆஸ்துமா (இன்ட்ரின்சிக்) எனப்படுகிறது. இவ்வகையில் ஏற்படும் ஆஸ்துமா, சிறுவயதிலேயே அறிகுறிகளை வெளிப்படுகிறது. இது குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிறது.

    இரண்டாவது புறக்காரணிகளால் (எக்ஸ்டிரின்சிக்) ஏற்படும் ஆஸ்துமா. இது காற்றில் உள்ள தூசிகள், புகை, குளிர்ந்த காற்று, வாசனை திரவியம், குறிப்பிட்ட சில உணவுகள், சிட்ரஸ் பழங்கள், அதிக உணர்ச்சி வசப்படுதல், அதிகமாக உடற்பயிற்சி செய்வது, நுரையீரல் நோய்த் தொற்றுக்கள் போன்ற காரணங்களால் ஆஸ்துமா வருகிறது.

    அறிகுறிகள்

    இருமல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், விசில் சத்தம், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

    சித்த மருத்துவ சிகிச்சைகள்

    1) தாளிசாதி சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) சுவாச குடோரி மாத்திரை 1-2 வீதம் சாப்பிட வேண்டும்.

    3) கண்டங்கத்திரி அல்லது தூதுவளை லேகியம் 1-2 கிராம், காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) ஆடாதோடை மணப்பாகு 5-10 மி.லி. காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த மருந்துகளை சாப்பிட்டு பலன் பெறலாம்.

    • மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.
    • முடி உதிர்தல் பிரச்சனையை அலட்சியம் செய்யக்கூடாது.

    * கரிசாலை இலை, நெல்லி வற்றல், அதிமதுரம் சமமாக எடுத்து அரைத்துப் பூசி பின் குளித்து வரும் பழக்கத்தை மேற்கொண்டால் முடி கொட்டுதல் நிற்கும்.

    * நிலாவரை இலையை அரைத்து முடி உதிரும் இடத்தில் தேய்க்கலாம்.

    * துவரம் பருப்பை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் அதே நீரில் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுதல் நிற்கும்.

    * சிறிய வெங்காயத்தை நன்கு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

    * பேய்ப்புடல் சாறு எடுத்து தலையில் பூசி நன்கு ஊறிய பின் சீகைக்காய் போட்டுக் குளிக்க முடிஉதிர்தல் நிற்கும்.

    * செம்பருத்திப் பூவை நன்கு அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து, ஊற வைத்த பயித்தம் மாவு போட்டுக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்.

    * தேங்காய்ப்பால், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும்.

    * பொன்னாங்கண்ணிச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் சமமாக எடுத்து நீர் வற்றக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்தல் நிற்கும்.

    * உலர்ந்த மருதாணி இலைப்பொடி 2 ஸ்பூன், எள்ளு 2 ஸ்பூன் அதிமதுரப் பொடி 2 ஸ்பூன், நெல்லி வற்றல் 2 ஸ்பூன் இவைகளைப் பால் விட்டு அரைத்து தண்ணீர் கலந்து பின் சூடாக்கி, இளஞ்சூட்டில் இறக்கித் தலையில் தேய்த்து வேர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்

    * கோழி முட்டையின் வெண்கருவில் வெங்காயத்தை நசுக்கிப் போட்டு தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

    * மேலும் உடல் உஷ்ணம் மிகுந்தவர்கள் இரவில் நல்லெண்ணையை உள்ளங்காலில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

    சத்துக் குறைவுள்ளவர்கள் பழங்கள், கீரைகள், தாவர எண்ணைய்கள், நெய், கொட்டைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் முடி கொட்டுவது நிற்கும்.

    நாம் உண்ணும் உணவு நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு, நமது தோல் மற்றும் முடி பளபளப்பையும் பாதிக்கிறது.

    ஒருவருக்கு முடி உதிர்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. நம்முடைய தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறது என்றால், நம் உடலில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல். அதை நாம் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது.

    ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல தான் தலைமுடிக்கு மயிர்கால்கள். உங்களுக்கு நீண்ட வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.

    உங்களுடைய மயிர்கால்கள் வலுவிழந்து காணப்பட்டால் அது உங்களின் தலைமுடி வளர்ச்சியை பாதிக்கலாம். உங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய முடி பராமரிப்பு புராடக்டுகளில் அதிக கெமிக்கல்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

    தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ள உணவுகள் எடுக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து, வைட்டமின் சி, பி, இ போன்றவை இருக்கும்படியும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் பல்வேறு விதமான அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவற்றை நாள்தோறும் கையளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மட்டுமல்ல, தலை முடிக்கு பலம் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    நீங்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிக்களை ஒதுக்கிவைத்துவிட்டு அதற்கு மாற்றாக மேற்கூறிய ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்.

    • தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.
    • மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    வாதநீர் பிரச்சினை இல்லாமல், எப்போதும் உடல் வலி, சோர்வு இருந்தால் அது தசை வாதம் எனப்படும் பைப்ரோமயால்ஜியா நோயாக இருக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு, உடல் வலி, தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.

    காரணங்கள்:

    1. மூளை மற்றும் முள்ளந்தண்டுவடத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வலி மற்றும் வலியற்ற சமிக்ஞைகளை மிகைப்படுத்தலாம்.

    2. மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    3. நோய்த்தொற்றுகள் சில நேரங்களில் பிரச்சினையை தூண்டும் அல்லது மோசமாக்கும்.

    4. சில நேரங்களில் காயங்கள், விபத்து போன்ற உடல்ரீதியான நிகழ்வுகளால் தூண்டப்படலாம். நீடித்த உளவியல் அழுத்தமும் இந்த நிலையைத் தூண்டலாம்.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச்செந்தூரம் 200 மில்லிகிராம், சிவனார் அமிர்தம் 200 மில்லிகிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் இவைகளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் 5 கிராம் வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.

    3) வலியுள்ள இடத்தில் சிவப்பு குங்கிலிய தைலம், கற்பூராதி தைலம் கலந்து மெதுவாக தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    4) வைட்டமின் டி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பால், முட்டை, பாதாம், பிஸ்தா, முருங்கை கீரை, பாலக் கீரை, வால்நட் இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    5) உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும், மனச்சோர்வு நீங்க இறை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    • முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல்.
    • வைட்டமின் டி சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தண்டுவட எலும்புகள் தேய்வதால் வரும் வாதத்தை சித்த மருத்துவத்தில் தண்டக வாதம் என்றுகூறுவோம். தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையே சதையாலான டிஸ்க்" இருக்கும். இதன் இடையில் சைனோவியல் திரவம் என்ற எண்ணெய் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருக்கும். இவை ஒரு மெத்தை போல் இருந்து, தண்டுவட எலும்புகள் உராய்வில்லாமல் ஒழுங்காக செயல்படவும், உடல் அசைவிற்கும் உதவுகிறது.

    எலும்புகளுக்கு இடையேயுள்ள டிஸ்க்" நீர்த்துவம் குறைந்து, உலர்ந்து சுருங்கி இருந்தால் அது 'ஸ்பாண்டிலோசிஸ்' என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் ஒருபுறமாக அல்லது இருபுறமாக வெளியேநீட்டி நிற்பது ஹெர்னியேட்டட்டிஸ்க்' எனப்படும்.

    டிஸ்க் வீங்கி மிருந்தால் அது பல்ஜிங் தண்டுவட எலும்புகளின் ஓரத்திலிருந்து எலும்புகள் துருத்தி வளர்ந்து காணப்பட்டால் ஆஸ்டியோபைட் அல்லது ஸ்பர்' என்றும் விபத்து, காயங்களில் டிஸ்க்குகளில் ஏற்படும் வீக்கங்கள் அல்லது அழற்சிகள் ஸ்பாண்டிலைடிஸ்' என்றும் அழைக்கப்படும்.

     காரணங்கள்:

    அடிபட்ட காயங்கள் விபத்துக்கள் காரணமாகவும், தொழில் ரீதியாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சுமை தூக்குபவர்கள் மற்றும் டெய்லர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல், உட்கார்ந்து எழும்புவதில் சிரமம், நடை மாறுபடுவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1)அமுக்கரா சூரணம் 1 கிராம். சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. பவள பற்பம் 200 மி.கி, குங்கி லிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    4) தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித்தைலம் சிவப்புருக்கில் தைலம் விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம் குக்கில் தைலம் உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு இடுப்பு கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரில் இவாதாடக்கி வாதநாராயணன் முடக்கற்றான், தழுதாழை நொச்சி பழுத்த எருக்கம் இலை இவைகளில் ஒன்றை எண்ணெய்யில் வதக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் வேண்டும்.

    கொல்சியம் வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு முருங்கை கீரை, முட்டையின் வெள்ளை கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை வெந்தயம் உளுந்து இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.
    • நியாபக மறதி டிமென்சியா, அம்னீஷியா என இரு வகைகளில் அடங்கும்.

    நியாபக மறதி என்பது குழந்தைகள் முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். எல்லோரையும் பாதிக்கும் திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.

    நம் கண் முன்னாலேயே ஒரு பொருள் இருந்தும் அதை கவனிக்காமல் தேடிக் கொண்டே இருப்பது, அவசர கதியில் ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தேடுவது, கையில் கொண்டு செல்லும் பொருளை செல்லும் இடங்களில் வைத்து விட்டு, வந்த பின் எங்கு வைத்தோம் என்று தேடுவது.

    முன்பு அறிமுகமான நபரைத் திடீ ரென பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாமல் சமாளிப்பது, பேனா, சாவி, கண்ணாடி, பர்ஸ் இவைகளை கைகளிலோ அல்லது அருகிலோ வைத்து விட்டு தேடுவது. ஒருவருக்கு போன் செய்வதற்கு நினைத்து விட்டு மறந்துவிடுவது இவையாவும் இந்த திடீர் நியாபக மறதியில் வந்து விடும்.

     பொதுவாக நியாபக மறதி 'டிமென்சியா' மற்றும் 'அம்னீஷியா' என இரு வகைகளில் அடங்கும். நியாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள்:

    1) பிரமி நெய் 5 மி.லி வீதம் காலை, இரவு சாப்பிடலாம். இது மனக்குழப்பத்தை நீக்கும்.

    2) வல்லாரை மாத்திரை 1-2 மாத்திரை காலை, இரவு எடுக்க வேண்டும்.

    3) அமுக்கரா லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) நெல்லிக்காய் லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    5) சங்கு புஷ்ப மலர்களை டீ போட்டு குடிக்கலாம். இவை மூளை நரம்புகளுக்கு நல்ல பலனைத் தரும்.

    6) செம்பருத்திப் பூ, குங்குமப்பூ இவைகளை கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் மூளை, நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

    7) உணவில் வைட்ட மின் பி1, பி6, பி12 சத்து, செலீனியம், துத்தநாகம் குறைவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    8) வல்லாரை, பிரமி, துளசி இலைகள் நியாபக சக்தியை அதிகப்படுத்தும் மூலிகைகள். இவைகளில் வகைக்கு இரண்டு இலைகளை இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை குடித்து வர மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நியாபக சக்தி பெருகும்.

    9) வெண்டைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, புதினா, கேரட், திராட்சை, ஆப்பிள், பேரீச்சை, முட்டை, பசலைக்கீரை, சிறுகீரை, பாதாம் பருப்பு, வால்நட், முருங்கைக்காய் போன்றவைகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி வகை பழங்கள், பூசணி விதைகள், வேர்க்கடலை இவைகளில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்றவைகள் ஞாபகசக்தியை அதிகப்படுத்துகின்றன.

    10) தினமும் 10-15 நிமிடங்கள் உடற்பயிற்சி, யோகாசனங்கள், தியானம் செய்ய வேண்டும்.

    11) சீரான தூக்கம் இன்றியமையாதது, டி.வி, வீடியோ கேம்ஸ் இவைகளை தவிர்ப்பது நல்லது.

    • ஒற்றைத் தலைவலி சாதாரண தலைவலியை விட நீண்ட நேரம் இருக்கும்.
    • பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் கடுமையாக துடிக்கும்.

    ஒற்றைத் தலைவலி அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மன அழுத்த நிலைகள், கல்வி, வேலை மற்றும் தனிப்பட்ட மன அழுத்தங்கள், ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், அதிக நேரம் மொபைல், டி.வி., கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் செலவிடுதல், இரவு அதிக நேரம் கண் விழிப்பது, தூக்க முறைகள் மாறுபடுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒற்றைத் தலைவலிக்கான தூண்டுதல்களாக உள்ளது.

    இன்னும் மரபியல் ரீதியாக ஒரு குடும்ப உறுப்பினர் ஒற்றைத் தலைவலியால் பாதித்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் இந்த நிலை வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பெண்களுக்கு, குறிப்பாக பருவமடைதல், மாதவிடாய் மற்றும் இளமை பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இந்நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது.

    நோய் அறிகுறிகள்:

    ஒற்றைத் தலைவலி சாதாரண தலைவலியை விட நீண்ட நேரம் இருக்கும். பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் கடுமையாக துடிக்கும். கூடவே சிலருக்கு குமட்டல், வாந்தி, ஒளி மற்றும் ஒலி உணர் திறன் மற்றும் சில சமயங்களில் பார்வைக் கோளாறுகள் இருக்கும். ஒற்றைத் தலைவலி இருக்கும் காலம் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும்.

    சித்த மருத்துவம்:

    1) திரிகடுகு சூரணம் 1 கிராம், கௌரி சிந்தாமணி 200 மி.கி. ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. வீதம் இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா சூரணம் அல்லது லேகியம் 1 அல்லது 2 கிராம் வீதம் இருவேளை சாப்பிடவேண்டும்.

    3) ஒற்றைத் தலைவலி உள்ள இடத்தில் நீர்க் கோவை மாத்திரையை வெந்நீரில் உரசிபற்றிட வேண்டும்.

    4) மஞ்சள் அல்லது நொச்சி இலை வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.

    5) மன அழுத்தம் நீங்க பிரம்மி நெய் இரவு 5 மி.லி. வீதம் சாப்பிட வேண்டும்.

    • ட்ரை கிளிசரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
    • கார்போஹைட்ரேட் உணவுகள் ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது.

    ட்ரை கிளி சரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். நாம் சாப்பிடும் உணவில், உடலுக்கு தேவையான அளவு கலோரியை விட அதிகளவு கார்போஹைட்ரேட் வகை உணவுகளை நாம் உட்கொண்டால், அவை ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது. இது ஹைபர் ட்ரை கிளிசெரிடெமியா எனப்படும்.

     ட்ரை கிளிசரைடுகளின் வேலை பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்ட கலோரிகள் மூலம் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. ஆனால் இவை ரத்தத்தின் சராசரி அளவான 150-ஐ விட அதிகமாகும் போது இதய தமனிகள் மற்றும் ரத்த நாளங்களில் படிகிறது. இது அர்த்ரோஸ் கிளிரோசிஸ் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இவை பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

    வளர்சிதை மாற்ற நோய்க்குறிகளான இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை அளவு, டைப் 2 வகை நீரிழிவு நோய் இவைகளை ஏற்படுத்துகிறது.

     ட்ரை கிளிசரைடுகளை கட்டுக்குள் வைப்பது எப்படி?

    1) தினசரி நடைப்பயிற்சி, சைக்கிள், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிட உடல் செயல்பாடுகள் ட்ரை கிளிசரைடுகளைக் குறைத்து, 'நல்ல' கொழுப்பை அதிகரிக்கும்.

    2) கார்போஹைட்ரேட் வகை உணவுகளான சர்க்கரை, மாவுப் பண்டங்கள், குளிர்பானங்கள். சோடா, பிரக்டோஸ், பீட்சா, பர்கர், பேக்கரி உணவுகள் கூடுதல் கலோரிகளைத் தருவதால் இவை ட்ரை கிளிசரைடுகளாக மாற்றப்பட்டு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. அதிக கலோரிகளை தரும் உணவுகளை குறைப்பது ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கும்.

    சிவப்பு இறைச்சியை அளவுடன் எடுக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் சேர்ந்த உணவுகளை தவிர்க்கவும். மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகளின் அளவை உயர்த்துகிறது. ஆல்கஹாலில் அதிகமான கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

    3) ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சாளை மீன் (சார்டின்). டூனா மீன், பாதாம், வால்நட்,ப்ளாக் சீட்ஸ் (அலிசி விதை). ஆளி விதை, பூசணி விதை, முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், வெள்ளரி விதை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, புதினா, லவங்கப்பட்டை, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் இவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    4) எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் அளவுடன் எடுக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய். ஆலிவ் எண்ணெய் சிறந்தது.

    சித்த மருத்துவம்:

    1) ஏலாதிச்சூரணம்-1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மி.கி. வீதம் மூன்று வேளை வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) வெண்தாமரை இதழ் பொடியை காலை, இரவு ஒரு கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    • வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும்.
    • சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன.

    சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம் சிஸ்டின், ஷேந்தீன் வகை கற்கள் உருவாகிறது. சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. அவை வருமாறு:-

     1) சிறுகண் பீளை குடிநீர், நெருஞ்சில் குடிநீர், நீர்முள்ளி குடிநீர் இவைகளில் ஒன்றை ஒரு டீஸ் பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மி.லி. வீதம் காலை, மாலை என இரு வேளை குடிக்கவும்.

    2) அமிர்தாதி சூரணம் 1 கிராம், நண்டுக்கல் பற்பம் 200 மி.கி., சிலாசத்து பற்பம் 200 மி.கி., வெடியுப்பு சுண்ணம் 100 மி.கி. வீதம் இருவேளை தண்ணீர் அல்லது இளநீரில் சாப்பிடலாம்.

    3) கல்லுடைக்குடோரி - காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். கல்லுருக்கி இலை மற்றும் இரணகள்ளி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர சிறுநீரக கல் குணமாகும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

    சிறுநீரகக் கற்களை தடுக்கும் முறைகள்:

    வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது, கரைக்கிறது. எனவே பொட்டாசியம்

    சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை சாப்பிடலாம்.

    சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

    கால்சியம் அளவு குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.

     இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ருட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

    நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ள பருப்பு வகைகள், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும்.

    வெண்பூசணி, வெள்ளரிக்காய், கோவைக்காய். முள்ளங்கிக்காய், கரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்க வேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

    • தசை நாண்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது.
    • மணிக்கட்டு மற்றும் கையின் தொடர்ச்சியான இயக்கங்களுடன் தொடர்புடையது.

    முழங்கைகளில் வலி, விளையாட்டு பயிற்சி செய்யும் போது வலி அதிகரிப்பது இவை `டென்னிஸ் எல்போ' என்ற முழங்கை வாதத்தில் அதிகமாக காணப்படும். `டென்னிஸ் எல்போ' அல்லது `லேட்டிரல் எபிகாண்டிலைடிஸ்' என்பது முழங்கைகளில் ஏற்படுகின்ற ஒரு வாதம் ஆகும். இது முழங்கையில் உள்ள தசைகள் மற்றும் தசை நாண்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. `டென்னிஸ் எல்போ' பெரும்பாலும் மணிக்கட்டு மற்றும் கையின் தொடர்ச்சியான இயக்கங்களுடன் தொடர்புடையது.

    இதன் பெயர் `டென்னிஸ் எல்போ' என இருந்தாலும் டென்னிஸ் விளையாடாமல் கைகளால் தொடர் வேலை செய்யும் பிளம்பர்கள், கொத்தனார்கள், ஓவியர்கள், தச்சர்கள், இறைச்சி கடைக்காரர்கள், டிரைவிங், சமையல் செய்பவர்கள், கணினியைப் பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதிக நேரம் கைகளை பயன்படுத்தி வேலை செய்வது, முன் கை தசைகளை தொடர்ச்சியாக இயக்குவது மற்றும் தசை அழுத்தம் தரும் பணிகளை செய்யும் போது டென்னிஸ் எல்போ பாதிப்பு வருகிறது.

    அறிகுறிகள்:

    முழங்கைகளில் வலி, கைகளால் வேலை செய்தால் வலி அதிகரித்தல், நடுக்கம், கையை மடக்க முடியாமல் விறைப்பாக இருத்தல், முழங்கைகளில் வீக்கம், கைகளில் பலவீனம் போன்றவை காணப்படும்.

    இந்த நோயை எக்ஸ்-ரே, சி.டி. அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் செய்து அறியலாம். டென்னிஸ் எல்போ பிரச்சினைக்கு தீர்வாக கீழ்க்கண்ட சித்த மருந்துகள் பயன்தரும். இவற்றை அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

     1) பறங்கி ரசாயனம் 500 மி.கி. உணவுக்குப்பின் இரு வேளை.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், குங்கிலிய பற்பம் 200 மி.கி., அயவீரச் செந்தூரம் 200 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. உணவுக்குப்பின் இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    3) முழங்கையில் வலி உள்ள இடத்தில் உளுந்து தைலம் வைத்து தேய்க்க வேண்டும்.

    4) கை தசைகளை வலுப்படுத்தும் புரத உணவுகள் மற்றும் பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

    • பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.
    • நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன.

    ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா இவை மூன்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. உலகில் பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகள் இருந்தாலும் இவை மூன்றும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கொள்கைகள், நோய் அறியும் விதம், சிகிச்சை நுட்பங்கள் உள்ளன.

    குறிப்பாக நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன. அவற்றின் பாரம்பரிய தன்மைக்கேற்ப வெவ்வேறு அணுகுமுறையை கொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்வதும் அவசியமானது. ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

     சித்தா:

    தோற்றம்: பண்டைய தமிழகத்தில் வேரூன்றிய மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தை உருவாக்கிய பெருமை சித்தர்களுக்கு உண்டு.

    அடிப்படை: பித்தம், கபம், வாதம் ஆகிய மூன்றுடன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.

    சிகிச்சை முறை: தாதுக்கள், தாவரங்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் எண்ணற்ற பொருட்களும் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தியானம், யோகா மற்றும் உணவுப் பழக்கம் போன்றவற்றையும் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

    நோய் கண்டறிதல்: மருத்துவ பரிசோதனை, சிறுநீர் மற்றும் நாடித் துடிப்பு போன்றவைகளுடன் பித்தம், கபம், வாதம் போன்றவற்றின் சமநிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

     ஆயுர்வேதம்:

    தோற்றம்: இந்திய துணை கண்டத்தின் பழமையான மருத்துவ முறையாக விளங்குகிறது. ஆயுர் என்பது நீண்ட வாழ்வையும், வேதம் என்பது நூலையும் குறிப்பிடுகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் மாற்று மருத்துவ முறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் செல்வாக்கு பெற்ற மருத்துவ முறையாக திகழ்கிறது.

    அடிப்படை: சாத்வீக, ராட்சத, தமச ஆகிய முக்குணங்களுக்கு இணையாக ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் கூறப்படுகின்றன. இவை சம நிலையில் இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

    சிகிச்சை முறை: மூலிகைகள், உணவு பரிந்துரைகள், வாழ்க்கைமுறை, யோகா மற்றும் தியானம் ஆகியவை பொதுவான ஆயுர்வேத சிகிச்சைகளாக விளங்குகின்றன.

    நோய் கண்டறிதல்: பித்தம், வாதம், கபம் ஆகியவற்றின் சமநிலையை மதிப்பிடுவதோடு கூடுதலாக நாக்கு, நாடித் துடிப்பு, சிறுநீர் மற்றும் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன அமைப்பை பரிசோதிப்பதும் அடங்கும்.

     யுனானி:

    தோற்றம்: யுனானி மருத்துவம் பழங்கால கிரேக்கத்தில் உருவானது. பின்னர் பாரசீகம் மற்றும் அரேபியாவை சேர்ந்த மருத்துவர்களால் செம்மையாக்கப்பட்டு, முழுமையாக்கப்பட்டது.

    அடிப்படை: ரத்தம், கபம், மஞ்சள் பித்தம் மற்றும் கருப்பு பித்தம் ஆகிய நான்கும் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கு சமநிலையில் இருக்க வேண்டும் என்பது யுனானி மருத்துவத்தின் அடிப்படை தத்துவமாக விளங்குகிறது.

    சிகிச்சை முறை: மூலிகைகள், தாதுக்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆகியவை யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் அடங்கும். உணவுப்பழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

    நோய் கண்டறிதல்: யுனானி மருத்துவத்தில் நாடித்துடிப்பு, சிறுநீர், மலம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் நோயின் தாக்கம் மதிப்பிடப்படுகிறது.

    • எலும்புகள் அல்லது தசைகளுக்குள் ஏற்படும் காயங்களாலும் மூட்டுவலி வருகிறது.
    • காலையில் எழுந்தவுடன் வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுதல்

    மூட்டுகளில் ஏற்படுகின்ற காயங்கள் அல்லது புண்கள், இவற்றால் வீக்கம் அல்லது வலி ஏற்படுகிறது. மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், எலும்புகள் அல்லது தசைகளுக்குள் ஏற்படும் காயங்களாலும் மூட்டுவலி வருகிறது. ஆனால் பெரும்பாலும் குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற கீல்வாதம் தான் அதிகம். எலும்பில் உள்ள குருத்தெலும்பு தேய்வால் வருகின்றது.

    கீல்வாதம் (ஆஸ்டியோ ஆர்தரைடிஸ்):

    இவ்வகை மூட்டுவலி வயதானவர்களையும், பெண்களையும் மிக அதிகமாக பாதிக்கிறது. இந்த வகை வாதத்தில், கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை, குஷன் போன்று பாதுகாக்கும் குருத்தெலும்பு படிப்படியாக பலவீனமடைந்து, இறுதியாக, குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்துவிடுகிறது. மூட்டுகளிடையே உள்ள சினோவியல் திரவமும் அளவில் குறைகிறது. இதனால் கால் முட்டி எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கடுமையான கால் வலி, வீக்கம், சூடு இவற்றை ஏற்படுத்துகிறது.

    முடக்கு வாதம் (ருமட்டாய்டு ஆர்தரைடிஸ்):

    முடக்கு வாதம் என்பது ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு. நம் உடல் நோய் எதிர்ப்பு அமைப்பு நம் சொந்த உடலின் திசுக்களை தவறுதலாக தாக்கும்போது இது நிகழ்கிறது. இவ்வகை வாதத்தில் எலும்பில் தேய்வுகள் இருக்காது. ஆனால் வலி, வீக்கம், காலையில் எழுந்தவுடன் வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    யூரிக் அமிலம் அதிகமாவதால் ஏற்படும் கீல்வாதம்:

    ரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரித்து, மூட்டு களில் உள்ள இடைவெளிகளுக்குள் அமிலம் படிந்து வீக்கம், வலியை ஏற்படுத்துகிறது.

    பாக்டீரியா தொற்றால் ஏற்படும் செப்டிக் ஆர்தரைடிஸ்:

    செப்டிக் ஆர்தரைடிஸ் என்பது பாக்டீரியா தொற்று காரணமாக உருவாகிறது. நம் மூட்டுகளிடையே உராய்வைத் தடுக்க சினோவியல் திரவம் உள்ளது. பாக்டீரியாக்கள் இந்த திரவத்தில் நுழையும் போது, அவை குருத்தெலும்புகளை சேதப்படுத்தி இறுதியில் மூட்டு வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

    மேற்கூறிய வாத வகைகளில் பெரும்பாலும் லும்பு குருக் குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் வகை வாதம் தான், வயதான ஆண்கள் மற்றும் மகளிரை அதிக மாக பாதிக்கிறது. மாதவிடாய் முடிந்த மகளிருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் எலும்பு அடர்த்தி குறைவதும் முக்கிய காரணமாகும். இதற்கான மருத்துவ முறை பற்றி பார்ப்போம்.

    தவிர்க்க வேண்டியவை:

    உடல் பருமன் இருந்தால் அதை குறைக்க வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்ய செய்ய வேண்டும். எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். குளிப்பதற்கு வெந்நீர் சிறந்தது, புளிப்பு சுவை உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

    மருந்துகள்:

    சித்த மருத்துவத்தில் இந்த நோய்க்கு சிறப்பான மருந்துகள் உள்ளது. இவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

    * அமுக்கரா சூரணம் 1 கிராம், குங்கிலிய பற்பம் 200 மி.கி, முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி, ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    * அமுக்கராச் சூரணம் 1 கிராம், பூரணச் சந்திரோதயம் 100 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    * நொச்சி இலை, பழுத்த எருக்கிலை, வாத நாராயணன் இலை, தழுதாழை இலை இவைகளை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வலியுள்ள மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

    * வாத கேசரிதைலம், கற்பூராதி தைலம், விடமுட்டி தைலம், சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை வலியுள்ள மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

    ×