search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயோமெட்ரிக்"

    • சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
    • பயோமெட்ரிக் தரவுகளை சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. மே 3ம் தேதி ஆரம்பித்த வன்முறையின் தாக்கம் இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இந்த வன்முறையுடன் போதைப்பொருள் பயங்கரவாதம், மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், காடுகளில் நடக்கும் போதைப்பொருள் சாகுபடி, கடத்தல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன.

    இந்நிலையில், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை மணிப்பூர் அரசு சேகரிக்கத் தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக மணிப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத மியான்மர் குடியேறிகளின் பயோமெட்ரிக் தரவுகள் முழுமையாக பெறப்படும்வரை அனைத்து மாவட்டங்களிலும் பயோமெட்ரிக் இயக்கம் தொடரும். இப்பணிகளை செப்டம்பர்  மாதத்திற்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத மியான்மர் குடியேறிகளை அடையாளம் கண்டு அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை பெறுவது குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் குழுவை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது என்று உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மணிப்பூர் மற்றும் மிசோரம் அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    குகி சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர், தோட்டா மற்றும் வெடிமருந்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

    காடுகள் அழிப்பு, போதைப்பொருள் சாகுபடி மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு மியான்மர் குடியேறிகளே காரணம் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • தங்களது வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர் வாயிலாக சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
    • இந்த சேவைக்கு கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பென்ஷனர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவுக்கான நேர்காணல், நடைபெற்று வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தலைமை கருவூல அலுவலகம் மற்றும் திருப்பூர் வடக்கு, அவிநாசி, தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளத்தில் உள்ள சார்நிலை கருவூல அலுவலகங்களில், பென்ஷனர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவு நடைபெற்று வருகிறது.

    கருவூலங்கள் வாயிலாக பென்ஷன் பெறுவோர், தங்கள் அருகாமையில் உள்ள கருவூலங்களுக்கு சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். ஆதார் கார்டு, பென்ஷனர் அட்டை, வங்கி கணக்கு விவரம், ஏதேனும் ஒரு மொபைல் எண் (ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை) கொண்டு சென்று, கைரேகை வைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள மாவட்ட தலைமை கருவூல அலுவலகத்தில் வாழ்நாள் சான்று பதிவுக்காக வரும் பென்ஷனர்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட தலைமை கருவூல அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கருவூலங்கள் வாயிலாக பென்ஷன் பெறுவோர் 12,519 பேர் உள்ளனர். இவர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவு நேர்காணல் நடைபெற்று வருகிறது. தாங்கள் ஓய்வூதியம் பெறும் அருகாமையில் உள்ள கருவூல அலுவலகங்களுக்கு காலை, 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். தாங்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணலில் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து பென்ஷனர்களும் வருகிற 2024 மார்ச் 31ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, கடந்த ஜூலை 2022 முதல் வீட்டில் இருந்த படியே, தங்களது வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர் வாயிலாக சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதற்கான புத்துணர்வு ஒப்பந்தமாக, தமிழக அரசுக்கும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கும் இடையே கடந்த ஜூன் 2023 இறுதியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஜூலை 2023 முதல் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை போக்கும் விதமாக, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீட்டிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

    ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல்போன் எண், பி.பி.ஓ., எண், மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்த பின் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும்.கடந்தாண்டு சுமார் 1.75 லட்சம் ஓய்வூதியதார்கள் வீட்டிலிருந்த படியே தங்களின் வாழ்நாள் சான்றிதழை தபால்காரர் வாயிலாக சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    எனவே ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே, தங்களது தபால்காரர்களிடம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர்.

    சென்னை:

    சென்னையில் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பக்கிங்காம் கால்வாயில் நீர்வழிப்பாதையில் கரையோரம் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட திட்ட அறிக்கையை நீர்வளத் துறையினர் தயாரித்து உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக சிவானந்தா சாலை-டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை இடையே 2.9 கி.மீட்டர் தூரத்திற்கு பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க முடிவு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதேபோல் நீர்வளத் துறையின் 2023-24 ம் ஆண்டின் கொள்கை குறிப்பின்படி பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய கால்வாய், அடையாறு கூவம் ஆறுகளில் பாயும் வடிகால் வாய்களில் சீரமைப்பு மற்றும் விரிவான மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்கு ரூ.1,281 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நீர்வழிப்பாதையை தூர் வாரி சீரமைத்தல், படகு போக்குவரத்து மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கின்றன.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் கால்வாய் கரையோரத்தை சீரமைக்கும் பணி தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் காலி செய்யும் போது அவர்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் கொடுத்து குடியமர்த்த வேண்டும் அல்லது ஏற்கனவே வசித்த இடத்தில் இருந்து 5 கி.மீட்டர் தூரத்திற்குள் குடிய மர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    ஆனால் கால்வாய் கரையோரம் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கு மாற்று இடம் அருகில் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதன் காரணமாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் அப்புறப்படுத்துவது தொடர்பாக என்ன மாதிரியான முடிவு எடுப்பது என்று அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.

    பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள முக்கிய இடங்களான விக்டோரியா ஹாஸ்டல், சிவராஜபுரம், சுங்குவார் தெரு, மட்டன் குப்பம், ரோட்டரி நகர், நீலம்பாஷா தர்கா உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த இடமாற்றம் அவர்களை கவலை அடையச் செய்து உள்ளது. இதுவரை எத்தனை குடும்பங்கள் இதில் பாதிக்கப்பட உள்ளது என்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டு அரசின் அறிவிப்பின்படி 15 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. கடந்த 2020-21- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கொள்கை குறிப்பில் இந்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 564 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் பற்றி பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர். ஆனால் இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பயோமெட்ரிக் கணக்கெடுப்புக்கு தகவல்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்பும் இப்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது "மறு குடியமர்த்தலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எங்கே? என்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. நாங்கள் தற்போது வசிக்கும் இடம் அருகே அல்லது 5 கி. மீட்டர் தூரதிற்குள் குடியமர்த்த வேண்டும். அப்படியானால்தான் எங்களது வாழ்வாதாரம் பாதிக்காது" என்றனர்.

    லாக் நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறும் போது, "எனது குடும்பம் பல தலைமுறைகளாக இங்கு வசிக்கிறது. எனக்கும் எனது மனைவிக்கும் வாழ் வாதாரம் இந்த பகுதியை சுற்றியே உள்ளது. குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். நாங்கள் எப்படி நீண்ட தூரத்திற்கு செல்ல முடியும். மேலும் மறு குடியமர்த்துதல் தொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்த தெளிவான முடிவும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை" என்றனர். சிவராஜபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும் போது, "பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க அருகிலேயே அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. ஆனால் அது வேறு துறைக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். மறுகுடியமர்த்தும் இடங்கள் எர்ணாவூர் மற்றும் கார்கில் நகர் என்று தெரிகிறது. அங்கு நாங்கள் செல்ல நிர்பந்திக்கப்படலாம் என்பதால் பயப்படுகிறோம்" என்றார்.

    அப்பகுதியை சேர்ந்த மற்றொருவர் கூறும்போது, "மறுகுடியமர்த்தலுக்கு தேவையான இடத்தை முடிவு செய்ய குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் போதுமானது. ஆனால் பயோமெட்ரிக் பதிவு மற்றும் படிவங்களில் கையெழுத்திட ஏன் வற்புறுத்த வேண்டும் மறுகுடியமர்த்தலுக்கான இடங்கள் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்காத நிலையில் இது சந்தேகத்தை எழுப்பி உள்ளது" என்றார்.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரை யோரத்தில் வசிப்பவர்கள் காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக சென்னை மத்திய மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் செல்வம் கூறும்போது, "பரம்பரை, பரம்பரையாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? இது அவர்களுக்கான இடம் கிடையாதா?"

    கால்வாய் அருகில் வசிக்கும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களிடம் பயோமெட்ரிக் தகவல்களை அதிகாரிகள் சேகரிக்க தொடங்கி உள்ளனர். பொது மக்களும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாக் நகர் பகுதியில் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். காலம், காலமாக வாழும் மக்களின் வாழ்விட உரிமையை பறிக்கக் கூடாது. அவர்களை மாற்று இடத்தில் நீண்ட தூரத்தில் குடியமர்த்தும் போது வாழ்வாதாரம் பாதிக்கும்" என்றார்.

    • அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.
    • பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாகவும், பணி நேரம் முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு சென்று விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தது.

    இதையடுத்து கேரள அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த கேரள தலைமை செயலாளர் ஜாய் ஏற்பாடு செய்தார். இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு, முதல் வேலை நாளில் கேரளாவின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என கடந்த வாரமே தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன் படி இன்று முதல் கேரளா அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டது.

    இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.

    மேலும் பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு நாளும் இதனை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் இந்த வருகை பதிவு முறை நிதித்துறையின் சம்பள பதிவேடுகளிலும் பதிவாகும் முறையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதுபோல அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரவும், வெளியேறவும் அவர்களின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தால் மட்டுமே முடியும். இதனால் இனி அலுவலகங்களுக்கு தாமதமாக வந்தாலோ, அல்லது அலுவலகத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறவோ வாய்ப்பு இல்லை.

    அவ்வாறு வெளியேறினால் அந்த ஊழியரின் விபரங்கள் அவர்களின் சம்பள பட்டியலில் பதிவாகும். இதன்மூலம் ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிலை உருவாகும்.

    தற்போது கேரள அரசின் தலைமை செயலகத்தில் செயல்பட்டு வந்த இந்த முறை இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம் குறைவான ஊழியர்களை கொண்டு இயங்கும் அலுவலகங்களில் இந்த முறை அமலுக்கு வரவில்லை.

    மேலும் போலீஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தவில்லை. விரைவில் அங்கும் இம்முறையை கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சியில் நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தலைமை வகித்தாா்.இதில், பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் கூறுகையில், நகரில் தேங்கியுள்ள குப்பைகள் துரிதமாக அகற்ற வேண்டும். அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆழ்குழாய்களில் இருந்து குடிநீா் கொண்டு செல்லும் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

    இதைத்தொடா்ந்து தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக 46 தீா்மானங்கள் நிறைப்பட்டன. இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் பாப்புகண்ணன் பேசுகையில், நகராட்சி அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு ஊழியா்களின் வருகை கண்காணிக்கப்படும். சொத்து வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு உரிய காலக்கெடுவுக்குள் சான்றிதழ்கள் வழங்க வேண்டும். அதே வேளையில் சான்றிதழ்கள் வழங்காவிட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில் நகா் மன்ற துணைத் தலைவா் ரவிசந்திரன், நகராட்சி ஆணையா் ராமா், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×