என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக பட்ஜெட்"
- சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு 2152 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை.
- இந்த நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசு மத்திய அரசு வழங்கக்கூடிய 2,152 கோடி ரூபாயை சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது என பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ப.சிதம்பரம் "மத்திய அரசுக்கு இப்பொழுதாவது வெட்கம் வந்து, அவர்கள் நிதியை தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக,
2025-2026ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது" எனக் கூறினார்.
- விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது.
- சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன்.
பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே.
புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?
அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்?
கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல. பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?
ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை. வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும்.
அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
3 பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை.
மாறாக, மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு, பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.
விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே போல, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்றே தெரியவில்லை.
பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம், மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம்.
அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது. பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையாக ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.
விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது.
இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு, இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு விரைவில் உணரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
- கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் குறித்த பரப்புரை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருக்கிறது.
கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மாணவர்களுக்கு இலவச கணினி போன்ற சில கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் கூட, அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளன.
2025-26ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
திமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.
கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு நிதியமைச்சர் நீண்ட நேரம், அதாவது 2.40 மணி நேரம் உரையாற்றினார்; நிதிநிலை அறிக்கை ஆவணம் மொத்தம் 182 பக்கங்களைக் கொண்டிருந்தது என்றாலும் அதில் திட்டங்களைத் தான் காணவில்லை.
1. ஐ.நா. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அலுவல் மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க இன்னும் 45 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கான ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாகவும், கட்டாயப் பாடமாகவும் செயல்படுத்த எந்த அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடாதது ஏன்?
2. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போலவே மத்திய அரசை கைகாட்டி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது சமூகநீதிக்கு திமுக அரசு இழைத்திருக்கும் பெரும் துரோகம் ஆகும்.
3. பள்ளிக்கல்வித்துறை தான் மிகவும் முக்கியமானது ஆகும். அத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6%, அதாவது ரூ. 2.14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது ரூ.46,767 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு சராசரியாக ரூ.4000 & ரூ.5000 கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் ரூ.2725 கோடி தான் உயர்த்தப்பட்டுள்ளது.
4. பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய நிதியும், ஆசிரியர்களும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?
5. உயர்கல்வித்துறைக்கான நிதி ரூ.1543 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அரசு கல்லூரிகளில் 15 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு கல்லூரிகளில் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.
6. மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.1708 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை ஒரே ஓர் அரசு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. வரும் ஆண்டிலும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
7. மாதம் ரூ.1000 மகளிர் உதவி வழங்கும் திட்டத்தில் பல லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல மாதங்களாகக் கூறி வருகிறார். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அத்திட்டத்திற்கான நிதி ரூ.87 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி நிர்வாகச் செலவினங்களுக்கே சென்று விடும் நிலையில், புதிய பயனாளிகள் எங்கிருந்து சேர்க்கப்படுவார்கள்? என்பதற்கு தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
8. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், நடப்பாண்டில் அத்திட்டத்திற்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே நிதிநிலை அறிக்கையில் கூறப்படவில்லை.
9. நீர்வளத்துறையின் சார்பில் சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்கான 1.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 6&ஆம் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகில் 4375 ஏக்கரில் அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படாதது ஏன்?
10. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும் திட்டம் மட்டும் தான் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.
12. 2025-26ஆம் ஆண்டின் இறுதிக்குள் 40 ஆயிரம் பேருக்கு புதிய அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆண்டுத் திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் ஆண்டுத் திட்டத்தை அறிவித்து விட்டாலும் கூட, எந்தப் பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்பது ஏமாற்று வேலை தான்.
12. 20 லட்சம் மாணவர்களுக்கு மடி கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அடுத்த இரு ஆண்டுகளில் தான் வழங்கப்படுமாம். திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 20 லட்சம் பேருக்கு மடிகணினி வழங்குவது சாத்தியமில்லை; அந்த வகையில் இதுவும் சாத்தியமற்றதாகும்.
13. சென்னை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்த அறிவிப்புகள் இல்லை. அவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது என்பதையே தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயல் தான்.
இன்னொருபுறம் தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை இருக்காது என்றும், ரூ.1000 கோடிக்கும் மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறி வந்த நிலையில், ரூ.41,634.93 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்க இருக்கிறது. இதனால் 2025-26ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ. 9 லட்சத்து 29,959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் ரூ.70,753 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.
நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன்சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிநிநிலை அறிக்கை ஆகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற மக்களின் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.
- அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக அரசின் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டால் தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் வாங்கியுள்ள நான்கு லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி அடைப்பதற்கான திட்டங்கள் இல்லாதது தமிழக அரசை திவால் ஆகி விடும் என்பதில் ஐயமில்லை.
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 100 குறைக்கப்படும் என்ற அறிவிப்பும், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், மாத ஒரு முறை மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் மாணவர்களின் கல்வி கடன், மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி போன்ற தேர்தல் வாக்குறுதிகளும் நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற மக்களின் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக உள்ளது. தமிழக மக்களுக்கு பயன்படாத பட்ஜெட்டை தமிழக அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
- லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட்டும் அமைந்துள்ளது. அதாவது உயர்கல்வித்துறைக்கு 8,494 கோடியும், கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு 2,020 கோடியும், 6,100 கி.மீ நீள சாலைக்கு 2,200 கோடியும், 1 லட்சம் வீடுகள் கட்ட 3,500 கோடியும், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 6,668 கோடியும் என பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கிய நிதியானது கடந்த ஆண்டுகளில் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது போல அமைந்து நிறைவேற்ற முடியாத திட்டங்களாக, அறிவிப்புகளாக மட்டுமே அமையும். ஏழை, எளிய மக்களின் நிலம், மனை, பத்திரம், பட்டா சம்பந்தமாக அவர்களுக்கு உரியதை உறுதி செய்வதற்கான அறிவிப்புகள் இல்லை.
குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த பழைய ஒய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்றைய பட்ஜெட்டில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் அம்சங்கள் இடம் பெறவில்லை. மிக முக்கியமாக போதைப்பொருட்களை ஒழிக்க, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒடுக்க, சட்டம் ஒழுங்கை கடுமையாக்க முக்கிய அம்சங்கள் இடம் பெறாத பட்ஜெட் இந்த பட்ஜெட்.
குறிப்பாக நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான, கடன் சுமையை குறைப்பதற்கான அழுத்தமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மக்களை திசை திருப்புவதற்காக, பல்வேறு துறைகளின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்காத, லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.
எனவே நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக மக்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யாத, எதிர்பார்ப்பை நிறைவேற்றாத ஏமாற்றும் பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
- ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
- திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,
தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.
ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக என்று கூறியுள்ளார்.
- சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.
- வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.
சென்னை:
தமிழக பட்ஜெட்டில் உரையில் கூறியிருப்பதாவது:-
சென்னை சைதாப்பேட்டை தாண்டர் நகரில் ரூ.110 கோடியில் புதிதாக 190 குடியிருப்புகள் கட்டப்படும். மக்களின் முதல்வர் திட்டத்தில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.
வரும் ஆண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும். 4 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படும்.
வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.
- மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
- நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் ஏப்.30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது. மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.
- காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 25 லட்சம் பட்டாக்களை வழங்கி உள்ளேன்.
* மக்கள் பிரச்சனைகளை கவனிக்காமல் விளம்பரம் செய்வதிலே தி.மு.க. அரசு கவனமாக உள்ளது.
* முதல்வரும், துணை முதல்வரும் தங்களை விளம்பரப்படுத்துவதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.
* புதிய பேருந்துகள் வாங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு என்பது வெற்று அறிவிப்பு.
* கடந்த 4 ஆண்டுகளில் 95 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம் என பொய்யாக கூறி உள்ளனர்.
* அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்கள் விடுதி திட்டத்தை தான் தி.மு.க. அரசும் செய்கிறது.
* நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.
* நிதி மேலாண்மை குழு அளித்த அறிக்கை என்ன? அதை அரசு செயல்படுத்தியதா? என்ற வெள்ளை அறிக்கை இல்லை.
* காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.
* காலை உணவுத் திட்டம் ஒன்றும் புதிய திட்டம் கிடையாது.
* அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய திட்டங்கள் என சட்டசபையில் அறிவித்துள்ளனர்.
* திடக்கழிவில் இருந்து மின்சாரம், சென்னை அருகில் புதிய நகரம் போன்ற அறிவிப்புகள் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை.
* வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடுதிகள், காலை உணவுத்திட்டம் போன்றவை புதிய திட்டங்கள் அல்ல.
* 3.5 லட்சம் காலிபணியிடம் நிரப்பப்படும் என்றார்கள், ஆனால் 57000 பணியிடங்களுக்கு தான் நியமனம்.
* 4 ஆண்டுகளில் 57,000 காலிப் பணியிடங்களை தான் தி.மு.க. அரசு நிரப்பி உள்ளது.
* ஓராண்டில் மட்டும் எப்படி 40,000 காலி பணியிடங்களை நிரப்ப முடியும்.
* ஓராண்டு காலத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்ற முடியாது.
* டிஎன்பிஎஸ்சி-யில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 பணியிடங்களை நிரப்ப முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
- நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்!
- விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!
சென்னை :
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2 மணிநேரம் 38 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்க்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்
ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்
இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்
தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்
புதிய நகரம்
புதிய விமான நிலையம்
புதிய நீர்த்தேக்கம்
அதிவேக ரயில் சேவை
என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!
'எல்லோர்க்கும் எல்லாம்' எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட்2025!
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.
- 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.
- பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது பொய்.
* 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.
* சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.100 குறித்து அறிவிப்பு எங்கே?
* பெட்ரோல், டீசலுக்கான விலைக்குறைப்பு குறித்த வாக்குறுதி என்ன ஆனது?
* மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி குறித்த அறிவிப்பு இல்லை.
* பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
* ரேசன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை என்ற அறிவிப்பு இல்லை.
* கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள தி.மு.க. அரசு.
* கடன் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல என தி.மு.க. அரசு நிரூபித்துள்ளது.
* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
- கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள்:-
* திருவான்மியூர் - உத்தண்டி இடையே 14.2 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளுக்கான ரூ.2,100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* சென்னை மெட்ரோ ரெயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
* மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாக இது அமையும்.
* கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.
* நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு விலையின்றி இதுவரை 10 லட்சத்திற்கும் மேலான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டில் மேலும் 5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
* ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.