search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீவைகுண்டம்"

    • தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
    • ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க கூடாது. மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் பஸ் சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதேபோல் ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்திலேயே இயங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் வக்கீல் கருப்பசாமி, வியாபாரி சங்கத் தலைவர் காளியப்பன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு, தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தாமிரபரணி பாசன திட்ட குழு முன்னாள் தலைவர் உதயசூரியன், பாசன விவசாய சங்க தலைவர்கள் சீனிப்பாண்டியன், வைகுண்ட பாண்டியன், தியாகசெல்வன், பரமசிவன், துரையப்பா, பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் விவசாய சங்க தலைவர் அலங்காரம், பொருநை நதிநீர் மேலாண்மை சங்க பொதுச் செயலாளர் முருகன் மற்றும் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
    • பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திரு நகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். (வயது 70).

    இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது ஆழ்வார்திருநகரியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

    நேற்று ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதியில் மழை பெய்த காரணத்தினால் அங்குள்ள சிறு அரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். அவர்கள் ஏரல் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் திடீரென மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் சொல்லி கொடுப்பது குறித்து அறிந்த அவர்கள் நேரடியாக 20 பேரும் வருகை தந்தனர்.

    காலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால் அரங்கத்திற்குள் நுழைந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை சிலம்ப ஆசான் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

    பிரான்ஸ் நாட்டினர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.

    அதை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    உடனே அதே இடத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நெடுங்கம்பு, நடுகம்பு மற்றும் ரெங்கராட்டினத்தைச்சுற்றி பயிற்சி அளித்தார். சிறிது நேரத்திலேயே சிலம்ப கலையைக்கற்றுக்கொண்ட பிரான்ஸ் நாட்டினர், ரெங்கராட்டினத்தை தானாகவே சுற்றி அசத்தினர்.

    அப்போது உடன் இருந்த மாணவ-மாணவிகளும், அங்கு வந்த பிரான்ஸ் நாட்டினரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

    • வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
    • பயணிகளுக்கு ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்க வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சிறப்பு ரெயில் நாளை காலை சென்னை வந்தடையும்.

    சிறப்பு ரெயிலானது சற்று நேரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

    பயணிகள் அனைவருக்கும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும், ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவு.

    திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட விரைவு ரெயில் வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

    டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் ஆகியோர் கேட்டறிந்தனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    • 300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது.
    • ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3-வது நாளாக தவித்து கொண்டிருக்கும் 500 பயணிகளையும் மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    திருச்செந்தூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் மழையில் சிக்கியது.

    300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது. எனவே அவர்களை மீட்க முடியவில்லை.

    ஒரு பக்கம் பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி ஆறு. மற்ற மூன்று பக்கமும் அளவுக்கு அதிகமான வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு குழுவினரால் நெருங்க முடியவில்லை. இன்று 3-வது நாளாக ரெயிலிலேயே தவிக்கிறார்கள்.

    சூலூர், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து கடற்படை, விமானப்படையை சேர்ந்த 7 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி ரெயிலில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை இன்று ஹெலிகாப்டரில் மீட்டனர். அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகள் அளிக்கப்பட்டன. பின்னர் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் உள்பட 55 பெண்கள், 19 சிறுவர்கள், 3 கைக்குழந்தைகளை ராணுவத்தினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் பெட்டிகளில் இருக்கும் பயணிகளுக்கு இன்று காலையில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

    இன்று மாலைக்குள் அனைவரையும் மீட்பதற்கு முப்படைகளும் ஒருங்கிணைந்து வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவாக மீட்பு பணி தொடங்கும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாமிரபரணி ஆற்றுக்கரை பகுதியில் பழந்தின்னி வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.
    • இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளில் பழந்தின்னி வவ்லால்களும் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாமிரபரணி ஆற்றுக்கரை பகுதியில் பழந்தின்னி வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.

    மேலும், சோனகன்விளை, சாத்தான்குளம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த வவ்வால்கள் காணப்படுகின்றன. இந்த வவ்வால்கள் உயரமான மருதமரங்களில் வசித்து வருகின்றன.

    இந்த வவ்வால்கள் அனைத்தும் பகல் முழுவதும் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு கிடக்கும். இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும்.

    இந்த பகுதியில் உள்ள வவ்வால்கள் கூட்டமாக இரவு நேரங்களில் கடல் கடந்து இலங்கை அவுனியா காடுகளுக்கு சென்று இரைதேடி விட்டு அதிகாலையிலேயே தங்களது இருப்பிடங்களுக்கு வந்துவிடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பாலுட்டி இனத்தை சேர்ந்த இந்த அரிய வகை பழந்தின்னி வவ்வால்கள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன. தற்போது மீதமிருக்கும் பழந்தின்னி வல்லால்களும் மின் கம்பிகளில் சிக்கி பலியாகி வருகின்றன. அண்மை காலமாக இந்த பகுதியில் மின் கம்பியில் சிக்கி உயிரிழக்கும் பழந்தின்னி வவ்லால்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக மட்டும் புதுக்குடி, சாத்தான்குளம், சோனகன்விளை பகுதியில் பல வவ்வால்கள் மின் கம்பிகளில் இறந்த நிலையில் தொங்குவதை காண முடிகிறது. இது இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.

    இது குறித்து சிவகளை காடுபோதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று இந்த பழந்தின்னி வவ்வால்கள். சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, உயிரின பெருக்கம் போன்றவற்றில் இந்த வவ்வால்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    அண்மை காலமாக இந்த வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றன. தற்போது ஆடி மாத காற்று மிகவும் வேகமாக வீசி வருவதால் இரவில் இரைதேடி சென்றுவிட்டு அதிகாலையில் திரும்பி வரும் வவ்வால்கள் மின் கம்பிகளில் சிக்கிக் கொள்கின்றன. மெல்லிய இறகுகளை கொண்டதாக இருப்பதால் வவ்வால்கள் எளிதாக மின் கம்பியில் சிக்கி கொள்கின்றன. மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை விட, இரு கம்பிகளுக்கு இடையே இறக்கை சிக்கி உயிரிழக்கும் வவ்வால்களே அதிகமாக உள்ளன.

    மேலும், இறந்த வவ்வால்கள் மின் கம்பியில் அப்படியே தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை காணும் மற்ற வவ்வால்களும் அந்த பகுதிக்கு வந்து உயிரை விடுகின்றன. தினமும் பல வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்து தொங்குவதை ஆங்காங்கே காண முடிகிறது. இந்த அரிய வகை வவ்வால்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் பகுதியில் காணப்படும் மின் கம்பிகளில் பிவிசி குழாய்களை மாட்டிவிட வேண்டும். அதன் மூலம் வவ்வால்கள் கம்பிகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கலாம். மேலும், இறந்து தொங்கும் வவ்வால்களை உடனுக்குடன் அகற்றினால் மற்ற வவ்வால்கள் அந்த பகுதிக்கு வந்து உயிரிழப்பதை தடுக்க முடியும்.

    பழமையான மரங்கள் பல தீவிபத்தில் அழிந்து வருவதால் வவ்வால்களுக்கு இருப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, தீவிபத்துக்களில் மருதமரங்கள் அழிவதை தடுக்க வேண்டும். மேலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைத்தது போல, ஸ்ரீவைகுண்டம் பகுதியை பழந்தின்னி வவ்வால்கள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • நன்மை தரும் தொழில்நுட்பங்கள் பற்றி முருகன் விரிவாக பேசினார்.
    • வேளாண் செயலிகள் குறித்து மாசானசெல்வம் பேசினார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் மூலம் ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் கொட்டாரக்குறிச்சி கிராமத்தில் உழவர் கூட்ட விழா இன்று நடந்தது. வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள் முருகன் (உழவியல்) மற்றும் மாசான செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர் முருகன் விவசாயத்தில் கடைபிடிக்கப்படும் நன்மை தரும் தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக பேசினார். வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் மாசானசெல்வம் வேளாண் செயலிகளின் விவசாய பயன்பாடுகள் குறித்தும் உபயோகிக்கும் முறைகள் குறித்தும் விவரிவாக விளக்கி பேசினார்.

    உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் முருகன் தொழில்நுட்ப கையேட்டினை வெளியிட ஊராட்சி துணைத்தலைவர் லதா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து வேளாண் தொழில்நுட்பங்கள் ஊர்மக்களுக்கு சென்றடையும் வகையில் விவசாயிகள் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டார அட்மா தொழில்நுட்ப வல்லுநர்கள் இசக்கிராணி, ஆனந்தி, மற்றும் அசோக், அய்யாசாமி, ஆகியோர் செய்திருந்தருந்தனர்.

    • புதுக்குடி கீழூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • இறந்தவர்களை சுமந்து செல்ல ஏதுவாக படிகள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வது வார்டு பகுதியில் புதுக்குடி கீழூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு என தனியாக சுடுகாடு இல்லாத நிலையில் காலம் காலமாக ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தின் மேல் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இறந்தவர்களைப் புதைத்து வருகின்றனர்.

    நெல்லை, திருச்செந்தூர் பிரதான சாலை ஓரத்தில் இருந்து சுமார் 20 அடி உயரமுள்ள பள்ளத்தில் இறந்தவர்களை ஆபத்தான முறையில் சுமந்து சென்று அடக்கம் செய்து வந்தனர். இதற்கிடையில் நெடுஞ்சாலை துறையினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர்.

    இதனால், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி கீழூர் மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இறந்தவர்களை சுமந்து செல்பவர்களும், துக்க நிகழ்வில் பங்கேற்ப வர்களும் தடுப்புக் கம்பியை தாண்டி சுமார் 20 அடி உயர பள்ளத்தில் இறங்கி ஏறுகின்றனர்.

    இந்நிலையில், இறந்தவர்களை சுமந்து செல்ல ஏதுவாக குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் தடுப்பு கம்பிகள் அகற்றி பள்ளத்தில் இறங்குவதற்கு வசதியாக படிகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கீழுரை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வியாபாரி நேற்று உடல் நலம் இன்றி இறந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் கொண்டு சென்று பெரும் சிரமங்களுக்கிடையே தடுப்பு கம்பிகளை தாண்டி 20 அடி பள்ளத்தில் அவரது உடலை சுமந்து சென்று நல்லடக்கம் செய்தனர். பொதுமக்களின் சிரமத்தை போக்க உடனடியாக தடுப்பு கம்பிகளை அகற்றி படிகள் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 1995-1997-ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி 142 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 1995-1997-ம் கல்வி ஆண்டில் 11 முதல் 12ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    1995-1997-ம் கல்வி ஆண்டில் 11 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகள் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வெள்ளிவிழா நிகழ்ச்சியை நடத்தினர்.

    பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி அப்போது பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் அலுவலகப் பணியாளர் களையும், தற்போதைய ஆசிரியர்களையும் குடும்பத்தோடு பங்கேற்று அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பழைய நினைவு களை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு நினைவுப் பரிசுகளை வழங்கினர். பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியதுடன் வெள்ளி விழா நினைவாக பள்ளிக்கு சுத்திகரிப்பு குடிநீர் எந்திரம் வழங்கியதுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில், குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி கல்வி அபிவிருத்தி சங்க செயலர் கோட்டை சண்முகநாதன், பள்ளி செயலர் முத்தையா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தியாகச்செல்வன், துணைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, நிர்வாக குழு உறுப்பினர் கோட்டை கணேசன்,

    தலைமை ஆசிரியர் முத்து சிவன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி, முன்னாள் ஆசிரியர்கள் விஸ்வநாதன், பட்டுப் பாண்டி, வைகுண்டராமன், தொழிலதிபர் கணேசன், பார்த்திப சங்கர், குமார வேல், முன்னாள் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
    • டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி அடையாள அட்டைகளை வழங்கினார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் குரூஸ் கோவில் வளாகத்தில் 300 நபர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, 1000 இலவச மரக்கன்றுகள் மற்றும் கிராம உதயம் மஞ்சப்பை வழங்கும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு குரூஸ் கோவில் பங்குத்தந்தை கிஷோக், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார். டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாள ர்களுக்கான அடையாள அட்டை, மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப் பையை வழங்கினார். தனி அலுவலர் ராமச்சந்திரன் கருத்துரை வழங்கினார். கிராம உதய தன்னார்வ தொண்டர்கள் வெள்ளூர் முத்துராஜ், முருகசெல்வி, கண்ணன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தன்னார்வ தொண்டர் செல்வன் துரை நன்றி கூறினார்.

    • ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளபிரான் கோவிலில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் ஊஞ்சல் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
    • கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பால் குறட்டில் ஊஞ்சலில் எழுந்தருளினார்.

    தென்திருப்பேரை:

    தமிழக கோவில்களில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணம் ஊஞ்சல் திருவிழா நடைபெறும். நவ திருப்பதியில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளபிரான் கோவிலில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் ஊஞ்சல் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது.நேற்று காலை விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்யல் கோஷ்டி நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, சுவாமி கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பால் குறட்டில் ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை, நாலாயிர திவ்ய பிரபந்தம் கூறப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு நாராயணன், ராமானுஜன், சீனு, அத்யாபகர்கள் சீனிவாசன், பார்த்தசாரதி, சீனிவாச தாத்தம், வைகுண்ட ராமன், ஜெகநாதன் நாலாயிர திவ்ய பிரபந்தம் கூறினர். நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, ஸ்தலத்தார்கள் ராஜப்பா, வெங்கடாச்சாரி, சீனிவாசன், திருவிழா உபயதார் இசக்கி முத்து உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள நவ திருப்பதிகளில் முதலாவது திருப்பதி தலம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் ஆகும்.
    • ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளபிரான் கோவிலில் 3 நாட்கள் பவித்ரோத்ச திருவிழா நடந்தது.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள நவ திருப்பதிகளில் முதலாவது திருப்பதி தலம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் ஆகும். கடந்த 3 நாட்களாக பவித்ரோத்ச திருவிழா நடந்தது. தினசரி நடை பெறும் பூஜை முறைகளில் விடுதல் ஏற்படும்.

    அதனை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதங்களில் பரிகார பூஜைகள் செய்யப்படும். அதேபோல் இந்த ஆண்டும் ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளபிரான் கோவிலில் 3 நாட்கள் பவித்ரோத்ச திருவிழா நடந்தது. 3-ம் நாள் காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9.30 மணிக்கு யாகசாலை ஹோமம் தொடங்கி 11.30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. பின் திருவாராதனம் நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி தீர்த்தம், சடாரி பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், சீனிவாசன், ராமானுஜம், சீனு ஆகியோர் செய்திருந்தனர். மாலை 7 மணிக்கு தோழிக்கிணியானில் சுவாமி கள்ளப்பிரான் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் கொடிமரம் சுற்றி புறப்பாடு நடந்தது. பின்னர் கிருஷ்ணன் குறட்டால் எழுந்தருளினார். மன்னார், சீனிவாசன், ராமானுஜம், பார்த்தசாரதி, சீனிவாசதாத்தம், ஜெகநாதன் ஆகியோர் ராமானுஜ நூற்றந்தாதி பாடல் சேவித்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உற்சவர் தாயார்களுடன் மூலவர் சுற்றி பிரகாரமாக வந்து யதாஸ்தானம் வந்தடைந்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன் ராஜப்பா வெங்கடாச்சாரி, வாசன் தேவராஜன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜித் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×