search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் கமிஷன்"

    • தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார்.
    • மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும்.

    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணியில் பல துறைகளை சேர்ந்த 4 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க தபால் ஓட்டு வசதியையும், ஒரே தொகுதிக்குள் பணியாற்றினால் பணிபுரியும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்கும் வசதியையும் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

    வழக்கமாக பயிற்சி மையங்களில் பெறப்படும் தபால் ஓட்டுகளை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரி பிரித்து, அவர் நியமிக்கும் அதிகாரி மூலம் அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவார். அதன் பின்னரும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளில் காலை 8 மணி வரை தபால் மூலம் அனுப்பப்படும் தபால் ஓட்டுகள் பெறப்படும்.

    அத்துடன் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார். அங்கு அவர் சென்று அந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை அளித்துவிட்டு, அவர் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்று வருவார்.

    இந்நிலையில் இந்தப்பணியில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட வேண்டியதாலும், இதனால் கால விரயம் ஏற்படுவதாலும், இந்த ஆண்டு தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை ஏற்று, தபால் ஓட்டுகளை மையப்படுத்தி ஒருங்கிணைந்து, தொகுதிகளுக்கு பிரிந்து அனுப்பும் புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

    அதன்படி, இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில் திருச்சி கலையரங்கம் திருமண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படுள்ளது.


    இங்கு இன்று காலை 9 மணியில் இருந்து, மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்தல் கமிஷனின் தபால் ஓட்டுகளுக்கான இந்த புதிய நடைமுறையின் படி திருச்சியில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் ஓட்டுகளுடன் 39 தொகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து, திருச்சி மையத்தில் ஒப்படைப்பார்கள்.

    இங்கு தொகுதி வாரியாக ஓட்டுகள் பிரிக்கப்பட்டு, அவர்கள் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்றுச் சென்று தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள் அதன்படி நேற்று வரை பெறப்பட்ட எல்லா தபால் ஓட்டுகளும் திருச்சி மையத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு, உடனடியாக எல்லா தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகளுக்கு வீண் அலைச்சல் கால விரயம் கூடுதல் செலவு ஆகியவை தவிர்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4 ஆயிரத்து 650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • கடந்த 75 ஆண்டுகால மக்களவை தேர்தல் வரலாற்றில், இவ்வளவு பொருட்கள் பிடிபடுவது இதுவே முதல்முறை ஆகும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகள், அன்றைய தினம் வாக்குப்பதிவை சந்திக்கின்றன.

    கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    அத்துடன், வாக்காளர்களுக்கு நகை, பணம், இலவச பொருட்கள், மதுபானம் உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.

    இதுவரை பிடிபட்ட பொருட்கள் பற்றிய புள்ளி விவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

    இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்கட்ட தேர்தல் 19-ந் தேதிதான் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4 ஆயிரத்து 650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ரூ.3 ஆயிரத்து 475 கோடி மதிப்புள்ள பொருட்கள்தான் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது, ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அதைவிட அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பிடிபட்டவற்றில், போதைப்பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் மட்டும் ரூ.2 ஆயிரத்து 69 கோடி மதிப்புடையவை. அவை மொத்த மதிப்பில் 45 சதவீதம் ஆகும். அவற்றை பிடிக்க தேர்தல் கமிஷன் சிறப்பு கவனம் செலுத்தியது.

    ரொக்கப்பணம் மட்டும் ரூ.395 கோடி பிடிபட்டுள்ளது. மதுபானங்களின் மதிப்பு ரூ.489 கோடி ஆகும்.

    மாநிலவாரியாக பார்த்தால், ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் ரூ.778 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பிடிபட்டுள்ளன.

    தேர்தல் கமிஷன் கண்காணிப்பில், கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து நாள்தோறும் ரூ.100 கோடி மதிப்புடைய பொருட்கள் பிடிபட்டு வருகின்றன.

    இதற்கு முறையான திட்டமிடல், அரசு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு, தொழில்நுட்ப உதவி ஆகியவைதான் காரணங்கள் ஆகும்.

    தேர்தல் பிரசாரத்திலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதிலும் அரசியல்வாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 106 அரசு ஊழியர்கள் மீதும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கடந்த 75 ஆண்டுகால மக்களவை தேர்தல் வரலாற்றில், இவ்வளவு பொருட்கள் பிடிபடுவது இதுவே முதல்முறை ஆகும். லஞ்ச வினியோகம் இல்லாமல், நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உறுதிப்பாட்டை இது உணர்த்துகிறது.

    ஹெலிகாப்டர்களில் சோதனை நடத்தப்படுவது புதிதல்ல. அதனால், விமான தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளங்களை உன்னிப்பாக கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வான்மார்க்கமாக பணம், இலவச பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்க இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
    • விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

    ஆனால் இந்த விளம்பர பொருட்களில் அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ இடம்பெறுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் கமிஷனிடம் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இல்லாமல் வெளியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஏ பிரிவு தடை விதிக்கிறது. ஆகவே, அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும்.

    அப்போதுதான் தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முடியும். தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்த முடியும். பேனரில் உள்ள கருத்துகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால், அதற்கான பொறுப்பை சுமத்த முடியும்.

    அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு வேட்பாளர் அல்லது கட்சிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிடலாம். ஆனால் பிற வேட்பாளருக்கு எதிராக விளம்பரம் வெளியிட தடை உள்ளது.

    விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும். அரசு செலவில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும்.
    • தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்காக 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்டு, எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசின் வழக்கமான ஊதியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் தேர்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலின்போது பல் வேறு வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும். அதிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை வேலைகள் மிக அதிகமாகிவிடும்.

    இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக 93 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிக பட்ச வாக்குகளை பெறும் வாக்குசாவடிக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
    • மத்தியபிரதேச பா.ஜனதா மந்திரி கோவிந்த் சிங் ராஜ்புத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போபால்:

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 17-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் பா.ஜனதாவுக்கும், எதிர்கட்சியான காங்கிரசுக்கும் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய பிரதேச போக்குவரத்து மற்றும் வருவாய்த்துறை மந்திரி கோவிந்த் சிங் ராஜ்புத் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தனது கட்சிக்கு ஆதரவாக அதிக பட்ச வாக்குகளை பெறும் வாக்குசாவடிக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    அவரது இந்த பேச்சின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    இது தொடர்பாக மத்திய பிரதேச மந்திரி கோவிந்த் சிங் ராஜ்புத் மீது காங்கிரஸ் தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது. விசாரணையில் அவர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்தியபிரதேச பா.ஜனதா மந்திரி கோவிந்த் சிங் ராஜ்புத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.
    • விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.

    கோழிக்கோடு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதனால் காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.

    இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான கோழிக்கோடு துணை கலெக்டர் கடிதம் அனுப்பி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் 15 கட்சிகள் பழைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • 282 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி :

    இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது இந்திய தேர்தல் கமிஷன் புதிய பட்டியலை தயாரித்து உள்ளது.

    இதன்படி நாட்டில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகள் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன

    மாநில கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகும்.

    இவை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாநிலக்கட்சிகள் அனைத்தும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக உள்ளன. தமிழ்நாட்டில் இந்த கட்சிகளின் எண்ணிக்கை 200 ஆகும். நாடு முழுவதும் இப்படி பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,597 என்பது குறிப்பிடத்தக்கது

    இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டு முறையாக செயல்படாத கட்சிகள் என 218 மாநிலக்கட்சிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 282 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 15 கட்சிகள் பழைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகளாக உள்ளன.

    • இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையில் 2 கட்ட அமர்வுகளில் ஆலோசித்தனர்.
    • கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி :

    அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதற்கிடையே சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் இதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலை இருந்துவந்தது. தேர்தல் கமிஷன் இதை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். அதேநேரத்தில் தேர்தல் கமிஷனுக்கு இது தொடர்பாக உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக உடனடியாக அங்கீகாரம் தந்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ந் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கான காலக்கெடு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

    இதை கருத்தில்கொண்டு தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அந்த முடிவுகளை இன்று அல்லது நாளை டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
    • விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு மே மாதம் 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    அத்துடன் காலியாக உள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கும், ஒடிசாவின் ஜார்சுகுடா, உத்தரபிரதேசத்தின் சான்பே, சுவர் மற்றும் மேகாலயாவின் சோஹியாங் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியதாவது:-

    பிப்ரவரி மாதம் வரையில் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்வதற்கு சூரத் கோர்ட்டு 30 நாள் அவகாசம் வழங்கி உள்ளது. எனவே அங்கு தேர்தல் நடத்த அவசரம் இல்லை. நாங்கள் காத்திருப்போம்.

    விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை. எனவே வயநாடு தொகுதி தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    எஞ்சிய பதவிக்காலம் ஓராண்டுக்குள் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்படுவதில்லை. வயநாடு தொகுதியைப் பொறுத்தமட்டில் எஞ்சிய காலம் ஓராண்டுக்கு மேல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    • தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    சென்னை :

    தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் கமிஷனின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. துணைத் தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணன் உன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இடைத்தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான ஆலோசனைகளை இந்திய தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

    அந்தத்தொகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைக்குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 4-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக ஆயிரத்து 430-க்கும் அதிகமான வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 16-ந்தேதி (இன்று) இந்த எந்திரங்களில் 2-ம் கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.

    பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும், ரிசர்வ் பாதுகாப்புப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த ஒரு கம்பெனியும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், அந்தத் தொகுதியில் பாதுகாப்புப்பணியை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு ஆயுதப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும் அந்தத்தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் சம்பந்தமாக எந்தவித புகார்கள் அளிக்கப்பட்டாலும் அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனின் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தத்தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷனிடம் பார்வையாளர்கள் அனுப்பி வைப்பார்கள்.

    புகார்களை ஆதாரத்துடன் அளித்தால் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் மற்றும் அனைத்து தேர்தல் தொடர்பான அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள்; 23 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருந்தனர்.

    மேலும் வழக்கம்போல தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. இறந்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    எனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் வரையில் வரப்பெற்ற விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து 145 பெயர்கள் நீக்கப்பட்டன.

    இடைத்தேர்தல் நடப்பதால் அந்தத் தொகுதியில் 7-ந்தேதிவரை (வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்) வாக்காளர் பெயர்களை சேர்க்க முடியும். அந்த வகையில் 375 ஆண் வாக்காளர்கள், 439 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என 816 பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் தற்போதுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியின் துணை வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி அங்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்; 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர்.

    • தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு, இந்த எந்திரம் மூலம் வாக்களிக்க முடியும்.
    • வாக்காளர்கள் பங்களிப்பை அதிகரிப்பதில் இது புரட்சிகரமான மாற்றமாக இருக்கும்.

    புதுடெல்லி :

    நவீன தொழில்நுட்ப யுகத்தில் புலம்பெயர்ந்தோர், இருந்த இடத்தில் இருந்தவாறு வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை. இது கவலை அளிக்கும் விஷயம் என தேர்தல் கமிஷன் கருதுகிறது.

    இதனால், வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

    நாட்டுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லாத நிலையில், இருக்கிற தரவுகளை வைத்து ஆய்வு செய்ததில், 85 சதவீத புலம் பெயர்ந்தோர் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு பணி மற்றும் இதர காரணங்களுக்காக சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

    உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 (மார்க் 3) மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் கமிஷனுக்காக ஒரு பொதுத்துறை நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதற்கு 'ரிமோட் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம்'. இதை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

    வாக்குப்பதிவுக்காக சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

    தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு, இந்த எந்திரம் மூலம் வாக்களிக்க முடியும். ஒரே வாக்குச்சாவடியில் உள்ள எந்திரத்தை பயன்படுத்தி, அதிகபட்சம் 72 தொகுதிகளுக்கான ஓட்டுகளை பதிவு செய்ய முடியும்.

    இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந்தேதி கூட்டம் ஒன்றுக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

    அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு இதற்கான அழைப்பை தேர்தல் கமிஷன் விடுத்துள்ளது. தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு செயல்முறை விளக்கங்களை செய்து காட்டுகிறது.

    மேலும் அரசியல் கட்சிகளிடம், ஜனவரி 31-ந்தேதிக்குள் எழுத்துமூலமான கருத்துகளும் கேட்கப்பட்டு உள்ளது.

    இந்த கருத்துகள் அடிப்படையில், எந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் முன்னெடுக்கும் என்று தெரிகிறது.

    இந்த வசதியை அறிமுகப்படுத்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் சட்டம், வாக்காளர்கள் பதிவு விதிமுறைகள் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வேண்டி இருக்கும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

    இந்த எந்திரம் நடைமுறைக்கு வந்தால், புலம்பெயர் தொழிலாளர்கள் ஓட்டுப்போட சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருக்காது.

    வாக்காளர்கள் பங்களிப்பை அதிகரிப்பதில் இது புரட்சிகரமான மாற்றமாக இருக்கும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

    ×