search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுத பூஜை"

    • மங்களகரமான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையில், அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்!
    • சரஸ்வதி தேவி நம் அனைவருக்கும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் வழங்குவாள்.

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சுப தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

    சரஸ்வதி தேவி நம் பாதையை தனது கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.

    இந்த ஆயுத பூஜை நமக்கு மிகச் சிறந்த புதுமை மற்றும் மீள்திறன் உலகை வடிவமைக்கத் தேவையான சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும். ஒரே குடும்பமாக நாம் இணைந்து, 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    • நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.

    ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
    • எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடம் கிடைக்காத வெகு தூரம் பயணிப்போர் ஆம்னி பஸ்களில் பயணித்தனர்.

    சென்னை:

    ஆயுத பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) விஜயதசமி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.

    எனவே கல்வி, பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர் நேற்று முன்தினம் முதலே சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கினர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விரைவு பஸ்களில் பயணிக்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இவற்றில் பயணிக்க வந்தவர்களால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பஸ் நிலையங்களை அடைய மாநகர பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பயணித்தவர்களால் அங்கும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே நேரம், சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த வாகனங்களில் ஊர் சென்றதாலும், பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கடை தெருவுக்கு வந்ததாலும் முக்கிய சாலை, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இது ஒருபுறம் இருக்க, சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ரெயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வழக்கமான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தாம்பரத்தில் இருந்து கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு ரெயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடம் கிடைக்காத வெகு தூரம் பயணிப்போர் ஆம்னி பஸ்களில் பயணித்தனர். அவர்கள், வழக்கத்தை விட அதிக தொகை செலுத்தி பயணிக்க வேண்டியிருப்பதாக கவலை தெரிவித்தனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பஸ், ஆம்னி பஸ் மூலம் 3 லட்சத்துக்கு மேற்பட்டோரும், ரெயில்கள் மூலம் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் என மொத்தமாக சுமார் 7 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

    இதுமட்டுமின்றி பலர் தங்கள் சொந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

    • தொடர் விடுமுறையால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
    • மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், ஆயுதபூஜை அன்று விடுமுறை தினம் என்பதால் சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால

    அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
    • சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னை:

    ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது நவரத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை - மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ.4,200 என இருந்த நிலையில் தற்போது ரூ.12,026-லிருந்து ரூ.18,626-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை - தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.5006-ல் இருந்து ரூ.11,736 முதல் ரூ.13,626 வரை அதிகரித்துள்ளது.

    சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னை - சேலம் இடையே வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3317-ல் இருந்து 10,792-ஆக அதிகரித்துள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை குறிவைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் வெளியூர்களுக்கு செல்பவர்கள், பஸ், ரெயில்களில் நேற்று முதல் பயணத்தை தொடங்கி விட்டனர்.
    • தீபாவளிக்கு இன்னும் 2 வாரம் இருப்பதால் முன்பதிவு மேலும் அதிகரிக்கும்.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் நாளை (வெள்ளிக்கிழமை)யும் அதனை தொடர்ந்து சனிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு பொது விடுமுறை நாளாகும். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் வெளியூர்களுக்கு செல்பவர்கள், பஸ், ரெயில்களில் நேற்று முதல் பயணத்தை தொடங்கி விட்டனர்.

    பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டதால் இன்று வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகிறது.

    கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் வழக்கமாக இயக்கப்படும் 2024 பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 2 ஆயிரம் பஸ்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று பயணம் செய்ய 41 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல மட்டும் 24 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவற்றில் பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

    சென்னைக்கு வருவதற்கு மட்டும் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். விடுமுறை முடிந்து சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு நடப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

    தீபாவளி பண்டிகை இந்த மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாட இருப்பதால் 29, 30 ஆகிய இரண்டு நாட்களுக்கு பயணம் செய்ய 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 2 வாரம் இருப்பதால் முன்பதிவு மேலும் அதிகரிக்கும்.

    தீபாவளி சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படுவது குறித்து வருகிற 15-ந் தேதி அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசாருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு சிறப்பு பஸ்கள் எத்தனை நாட்கள் இயக்கப்படுகிறது. எந்தெந்த நாட்களில் இயக்கப்படுகிறது. இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை என்ன? சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் எத்தனை என்பது போன்ற விவரங்களை அமைச்சர் அறிவிக்கிறார்.

    இந்த ஆண்டு கிளாம்பாக்கத்தில் இருந்து பெரும்பாலான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் அங்கு செல்வதற்கு தேவையான இணைப்பு பஸ்கள் குறித்தும் அறிவிப்பு வெளியாகும்.

    • கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுவார்கள்.
    • தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள்.

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆதி பராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும்; அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும்; கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுவார்கள்.

    உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும்.

    ஊக்கமுடன் கூடிய உழைப்பே வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.

    விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.

    மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • மெட்ரோ ரெயில்கள் காலை 8 முதல் 11 மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயங்கும்.
    • இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    ஆயுத பூஜை விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மெட்ரோ ரெயில்கள் காலை 8 முதல் 11 மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயங்கும்.

    * காலை 5 முதல் 8 மணி மற்றும் காலை 11 முதல் மாலை 5 மணி, இரவு 8 முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயங்கும்.

    * இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஆயுதபூஜை, விஜயதசமி உள்பட தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கடுவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/10/2024 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிசாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/10/2024 (புதன்கிழமை) அன்று 225 பேருந்துகளும், 10/10/2024 (வியாழக்கிழமை) அன்று 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/10/2024 புதன்கிழமை அன்று 35 பேருத்துகளும் 10/10/2024 வியாழக்கிழமை) அன்று 265 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதாரைத்திலிருந்து 09/10/204 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார புதன் கிழமை அன்று 6,582 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 22.236 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 21,311 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பூஜையில் பொரி, முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
    • நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.

    வேலாயுதம்பாளையம்:

    அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. அந்த நாளில், படித்த புத்தகங்கள், கணக்கு வழக்கு எழுதிய டைரிகள், வாகனங்கள், இயந்திரம், கருவி, ஆயுதங்களை வைத்து பூஜை செய்கின்றனர். அந்த பூஜையில் பொரி, முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பழமையான முறையில் பொரி தயாரிக்கப்படுகிறது. கர்நாடகா, மேற்கு வங்கத்தில் இருந்து நேரடியாக, 64 என்ற நெல் ரகங்களை வாங்கி, அதில் இருந்து அரிசி எடுத்து, அதில் சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து காய வைத்து, சர்க்கரை, சோடா சேர்த்து, பொரி தயாரிப்பதை 'ஓருப்பு பொரி' என்கின்றனர்.

    அதேபோல் சிகப்பு அரிசியை வாங்கி, அதில் பொரி தயாரிப்பதை 'சிகப்பரிசி பொரி' என்கின்றனர். தவுட்டுப்பாளையம் அருகே சுல்தான்பேட்டையில், விறகுகளில் நெருப்பு மூட்டி செய்யப்படும் பொரி சுவையாக இருக்கும். இதனால், மக்கள் அடுப்பு பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர்.

    இதுகுறித்து பொரி தயாரிக்கும் ராமசாமி என்பவர் கூறியதாவது:-

    நாங்கள் தயாரிக்கும் பொரி சுவையாக இருக்கும். இதை சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மூன்று தலைமுறையாக பொரி தயாரித்து வருகிறோம். கையால் தயாரிக்கப்படும் பொரி என்பதால், சுவை மிகுந்தது. கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்துள்ளதால், பொரி தயாரிப்பவர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை நீங்கலாக, பிற காலத்தில், பானிபூரி, மிக்சர் உட்பட பல உணவுப் பொருள்களுடன் கலக்கவும், கோவில், வீடு , கடைகளில் தினசரி பூஜையில் வைக்கவும், ரெகுலராக பொரியை வாங்கிச் செல்கின்றனர். கையால் தயாரிக்கப்படும் பொரி வகை, உடல் நலத்திற்கு ஏற்றது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
    • லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார்.

    தமிழ்நாடு முழுக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வார இறுதியை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை என நீண்ட விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாடினர்.

     

    இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுனர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசை வழங்கிய லெஜண்ட் சரவணன் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    கொண்டாட்டத்தின் அங்கமாக, ஆட்டோ ஓட்டுனரின் ஆசைக்கு இணங்க லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். மேலும் அங்கு கூடிய பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு 2023 ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக இன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 1213 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3313 பேருந்துகள் இயக்கப்படுகிறது மற்றும் பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்லும் வகையில் 1846 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×