search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுநர் உரிமம்"

    • ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    கேரளா மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்ந்து சைரன் சத்தம் எழுப்பியபோதும் கார் ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தடுத்தார்.

    ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆம்புலன்சை தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து போலீசார் ரத்து செய்தனர்.

    மேலும் அந்த நபருக்கு போக்குவரத்து ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • கார் ஓட்டுவதற்கு இலகுரக மோட்டார் வாகனம் (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
    • லாரி ஓட்டுவதற்கு கனரக மோட்டார் வாகனம் (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.

    இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் வைத்திருக்கும் நபர்கள் 7,500 கிலோ எடைக்கு மிகாமல் இருக்கக்கூடிய போக்குவரத்து வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    கார் உள்ளிட்ட 4 சக்கர வானங்களை ஓட்டுவதற்கு இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும். அதே சமயம் லாரி போன்ற பெரிய கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு கனரக மோட்டார் வாகன (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.

    இலகுரக மோட்டார் வாகன லைசன்ஸ் (LMV) பெற்றவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், விபத்து காப்பீட்டு வழங்குவதில் பல்வேறு சட்டசிக்கல்கள் இருந்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நாட்டில் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆகவே LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடை வரையுள்ள போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்று தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பினை அடுத்து, விபத்து தொடர்பான இன்சூரன்ஸ் வழக்குகளில் காப்பீடு செலுத்துபவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்று காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டின.

    • போக்குவரத்து துறையின் சாரதி மென்பொருளில் போலி மருத்துவ சான்றுகள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்கவே புதிய அறிவிப்பு.
    • தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவு எண்ணை மருத்துவர்கள் சாரதி மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    40 வயதிற்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெறுவது மற்றும் புதுப்பிப்பது குறித்துசென்னை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில்,

    மத்திய மோட்டார் வாகன விதி எண் 5-ன்படி, 40 வயதிற்கு மேற்பட்டோர் மருத்துவச்சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ, புதுப்பிக்கவோ முடியும். மேலும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்களிடம் சான்றுபெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும், போக்குவரத்து துறையின் சாரதி மென்பொருளில் போலி மருத்துவ சான்றுகள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்கவே புதிய அறிவிப்பு என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவு எண்ணை மருத்துவர்கள் சாரதி மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
    • இந்த விதிமுறை ஜூன் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. அதனால் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விதிமுறை ஜூன் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், தமிழகத்தில் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து துறை சார்பில் முறையாக அரசாணை வெளியிடாததால் சட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதமாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜூன் 4க்கு பிறகு இந்த நடைமுறைக்கு அமலுக்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும்
    • இந்த விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது.

    அதனால் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    • எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது
    • ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும்

    பிப்ரவரி 28 முதல் ஓட்டுநர் உரிமங்கள், பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதில்,வாகன், சாரதி மென்பொருளில் அலைபேசி எண், முகவரி தவறாக தெரிவித்திருந்தாலும் விரைவு அஞ்சலில் அனுப்பப்படாது. ஓட்டுநர் உரிமம் தபாலில் டெலிவரி செய்யப்படாமல் திரும்ப பெறப்பட்டாலும் நேரில் ஒப்படைக்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரரிடமிருந்து உரிய ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் பெறப்பட்டு அதில் தான் அனுப்பப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
    • விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சூரஜ் வெஞ்சரமூடு. மலையாள திரைப்பட நடிகரான இவர் தேசிய விருது பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரஜ் ஓட்டிச்சென்ற கார் மோதி, மஞ்சேரியை சேர்ந்த சரத்(வயது31) என்ற வாலிபர் காயமடைந்தார். இதுகுறித்து நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது வழக்கு பதியப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை மோட்டார் வாகன துறைக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆகவே அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மோட்டார் வாகன துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    • விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
    • ஆட்டோவில் பள்ளி மாணவர்களை அதிக அளவில் ஏற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபத்துகளும் குறித்து ஓட்டுனருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    வீரபாண்டி,

    திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவில் உள்ள திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் ஆட்டோ ஓட்டுனருக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பாதுகாப்பான பயணம் செய்வதும், விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், ஆட்டோவில் பள்ளி மாணவர்களை அதிக அளவில் ஏற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபத்துகளும் குறித்து ஓட்டுனருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஆட்டோவில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தெரிவித்தார்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மலா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பலரும் கலந்து கொண்டனர்.

    • 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 சேவைகளை இனி இணைய வழியில் பெறலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களது சேவைகளை எவ்வித சிரமமும் இன்றி பெறும் வகையில், கணினிமயமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளில் முதற்கட்டமாக ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பழகுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட 6 சேவைகள் முற்றிலுமாக இணைய வழியில் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

    மீதமுள்ள 42 சேவைகளும் இணைய வழியில் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்தார். அந்த வகையில், 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, நகல் பழகுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், அனுமதி சீட்டில் (பெர்மிட்) பெயர் மாற்றம், அனுமதி சீட்டை ஒப்படைத்தல் போன்ற 25 சேவைகளை முற்றிலும் இணைய வழியில் மட்டுமே பெற முடியும். மீதமுள்ள 17 சேவைகளையும் இணைய வழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேசிய தகவல் மையம் எடுத்து வருகிறது.

    சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். விவரங்கள் மாறுபட்டிருந்தால் சேவையை பெற இயலாது. தற்போது அமலுக்கு வந்துள்ள 31 சேவைகளையும் https://tnsta.gov.in என்ற போக்குவரத்து ஆணைய இணைய தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொதுமக்களும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது.

    சென்னை:

    வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் மோட்டார் வாகன அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று அனைவரும் பணிபுரிய வேண்டும்.

    அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், அந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும்.

    சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொதுமக்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விரிவான செய்திக்குறிப்பு வெளியிடப் பட வேண்டும்.

    இது தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் மற்றும் புகார்கள் வந்தால், இந்த அறிவுறுத்தல் உடனடியாக திரும்பப் பெறப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாகிர் உசேன் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.
    • பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி கல்லூரி நேரத்தில் அளிக்கப்படுகிறது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஓட்டுநர் உரிமம் பெற்ற 17 மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் செய்யது அபுதாஹிர் கலந்து கொண்டார்.

    இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை 895 மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். மிக குறைத்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.  

    ×