என் மலர்
நீங்கள் தேடியது "ஜஸ்பிரித் பும்ரா"
- ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள்.
- அப்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள்.
இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே குவித்திருந்தாலும், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது.
அணியின் கேப்டனாக செயல்பட்ட பும்ரா ஐந்து விக்கெட்டுகள் எடுத்த நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்கு பின்னர் 2-வது இன்னிங்சில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள் என்று இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா அறிவுரை வழங்கியதாக சிராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் எப்போதும் பும்ரா பாய் உடன் பேசிக்கொண்டே இருப்பேன். முதல் போட்டிக்கு முன்பே நான் என்னுடைய அனுபவத்தை கூறினேன். அப்போது அவர் என்னிடம் விக்கெட்டுக்காக ஓட வேண்டாம். ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள்.
அப்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள். அதற்குப் பிறகு நான் நன்றாக பந்து வீசினேன் விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன். ஆஸ்திரேலியா எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். ஏனென்றால் இந்த ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் என ஒரு வேகப்பந்து வீச்சாளர் விரும்பும் அனைத்தையும் ரசிக்கலாம். எனவே உங்கள் பந்துவீச்சை ரசிப்பதற்கு உங்களுக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை கிடைக்கும்.
என்று கூறினார்.
- நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி அறிவித்தது.
- இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.
அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நாடின் டி கிளர்க், இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட்-ஹாட்ஜ், வங்கதேசத்தை சேர்ந்த ஷர்மின் அக்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலிய சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அடிலெய்டு:
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கியது. கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. மெக்ஸ்வீனி 38 ரன்னும், லபுஸ்சேன் 20 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இன்னும் 94 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் கவாஜா விக்கெட்டை வீழ்த்திய பும்ரா இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 50 விக்கெட் எடுத்த 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா சமன் செய்தார்.
இதற்கு முன் 1979, 1983-ம் ஆண்டுகளில் கபில் தேவ் 2 முறை 50 விக்கெட்டுகளை எடுத்து அந்த சாதனையை முதல் முறையாக படைத்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜாகிர் கான் 2002-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர்களுக்கு பின்னர் இப்போது தான் பும்ரா 22 வருடங்கள் கழித்து ஒரே வருடத்தில் 50 விக்கெட் எடுத்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
- ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார்.
- ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார்.
பெர்த்-ல் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்பிய ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தினார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர், ரோகித் சர்மாவுக்கு பதில் ஜஸ்பிரித் பும்ராவை இந்திய அணி கேப்டனாக நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கபில் தேவ், "அதைப் பற்றி இப்போதே பேசுவது மிக சீக்கிரமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு போட்டியில், அவர் சிறந்தவர் என்று சொல்ல முடியாது, ஒரு மோசமான ஆட்டத்தால், அவர் அதற்குத் தகுதியற்றவர் என்றும் சொல்லிவிட முடியாது."
"ஒரு வீரர் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும். இதில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கடினமான நேரத்தில் அவர் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர முடியும்," என்று தெரிவித்தார்.
- சிலர் எனது பந்து வீச்சுப் பாணியை நிறுத்த வேண்டும் என்றார்கள்.
- தொலைக்காட்சியை பார்த்தே கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியாவும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
2 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (12) வீழ்த்தியுள்ளார். இந்திய பந்து வீச்சின் முதுகெழும்பாக பும்ரா விளங்குகிறார்.
இந்நிலையில் உலகில் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் பும்ராவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளிக்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பும்ரா கூறியதாவது:-
ஆரம்பத்தில் என்னுடைய பௌலிங் ஆக்ஷனை பார்த்தவர்கள் நான் ஆறு அல்லது ஏழு மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் என நினைத்தார்கள். அதனால் எனக்கு பயிற்சி அளிக்க பலரும் முன் வரவில்லை. சிலர் எனது பந்து வீச்சுப் பாணியை நிறுத்த வேண்டும் என்றார்கள். என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் நான் என் மேல் நம்பிக்கை வைத்தேன். தொலைக்காட்சியை பார்த்தே கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன்.
என அவர் கூறினார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
- மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.
- செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்படி இந்திய அணி பேட்டிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜஸ்பிரித் பும்ரா, "நீங்கள் என் பேட்டிங் திறமை பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் நான் தான். இதுபற்றி அறிந்து கொள்ள நீங்கள் கூகுளை பயன்படுத்தலாம். நகைச்சுவையை விட்டு விடுங்கள்," என்று பதில் அளித்தார்.

கூகுள் தேடல் குறித்த பும்ராவின் கருத்துக்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நான் கூகுள் செய்தேன். கம்மின்ஸ் பந்தில் சிக்சர் விளாசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு நிச்சயம் பேட்டிங் தெரியும். ஆகாஷ் தீப் உடன் இணைந்து ஃபாலோ ஆன்-ஐ தடுத்த விதம் நன்றாக இருந்தது ஜஸ்பிரித் பும்ரா," என்று குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் பிச்சையின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க், "அருமை" என்று பதில் அளித்து இருந்தார். இந்திய வீரர் பும்ராவின் கருத்துக்கு சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதில் அளித்தது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
- நான்காம் நாள் ஆட்டத்தில் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எனும் புதிய மைல்கல்லை கடந்து அசத்தியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள பும்ரா 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையோடு, சர்வதேச கிரிக்கெட்டில் புகழ்பெற்ற மால்கோம் மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆகியோரை முந்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யாரும் பும்ரா அளவுக்கு சிறப்பான சராசரியை வைத்திருந்ததில்லை.
200 விக்கெட்டுகளை கடந்தும், 201 மற்றும் 202வது விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ராவின் சராசரி 19.5 மட்டும் தான். இதன் மூலம் அவர் மால்கோம் மார்ஷல் (20.9), கோயல் கார்னர் (21.0) மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் (21.0) ஆகியோரை விட சிறப்பான சராசரியை வைத்துக் கொண்டு 200 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா சாதனை படைத்துள்ளார்.
இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த பந்துவீச்சாளரும் பும்ரா அளவுக்கு 19.56 எனும் சராசரியுடன் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெடெ்டில் பும்ராவின் 200வது விக்கெட் டிராவிஸ் ஹெட் ஆக அமைந்தது.
- ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- அதிக ரன்களை அடித்த இந்திய துவக்க வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர், நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவருமான ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆண்டு டாப் கிளாஸ் ஃபார்மில் முடித்துக் கொள்கிறார். இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ்-இன் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதோடு, அணியிலும் இடம்பெறவில்லை.
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த இந்திய துவக்க வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் இடம்பெறவில்லை. இவர்களுக்கு மாற்றாக அலெக்ஸ் கேரி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஹோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2024 ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியல்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)
பென் டக்கெட் (இங்கிலாந்து)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)
ஹேரி புரூக் (இங்கிலாந்து)
கமிந்து மெண்டிஸ் (இலங்கை)
அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பர் (ஆஸ்திரேலியா)
மேட் ஹென்ரி (நியூசிலாந்து)
ஜஸ்பிரித் பும்ரா - கேப்டன் (இந்தியா)
ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா)
கேஷவ் மகாராஜ் (தென் ஆப்பிரிக்கா)
- போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினோம்.
- மற்றவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1 - 3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய ஜஸ்பிரித் பும்ரா, "காயத்தால் விளையாட முடியாதது விரக்தியை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் உடலுடன் மல்லுக்கட்டாமல் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த தொடரில் பந்துவீச அதிக சாதகமான பிட்ச்-இல் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம். முதல் இன்னிங்ஸில் விளையாடும் போதே, கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்தேன். இதனால் தான் அந்த முடிவை எடுத்தேன்.
அப்போது மற்ற பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பேசிக் கொண்டோம். ஒரு பந்துவீச்சாளர் குறைந்த நிலையில், மற்றவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. இன்று காலை வெற்றிக்கு தேவையான போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினோம்.
இந்த தொடர் துவங்கியதில் இருந்தே நாங்கள் கடினமான போட்டியை வெளிப்படுத்தினோம். இதனால் இன்று நாங்கள் ஒருதலைபட்சமாக தோற்றோம் என்று அர்த்தமல்ல. டெஸ்ட் போட்டிகள் அப்படித்தான் செல்லும். நீண்ட நேரம் களத்தில் நின்று சூழ்நிலைக்கு ஏற்றவாரு விளையாடுவது முக்கியம். இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு வருங்காலத்தில் உதவும்.
தங்கள் பலத்தை அடிப்படையாக வைத்து விளையாடிய இளம் வீரர்கள் நல்ல அனுபவம் பெற்றனர். தொடரை வெல்ல முடியாததால் அவர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள். ஆனால் இந்த அனுபவத்தில் இருந்து அவர்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொள்வார்கள். இது சிறந்த தொடராக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். அவர்கள் கடினமாக போராடினார்கள்," என்று கூறினார்.
- ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது வழங்கப்படுகிறது.
- 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி 2024-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்படுகிறது என ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பும்ரா இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆவார்.
சோபர்ஸ் விருதை ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), அஸ்வின் (2016), விராட் கோலி (2017) ஆகியோர் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்பின்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
- இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்-இன் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது பும்ரா காயமடைந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. அதன் பின்னர் அவர் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) சிறப்பு மையத்தில் பும்ராவுக்கு சமீபத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் மருத்துவக் குழுவினர், தேர்வுக்குழு மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மாக எதுவும் தெரிவிக் கப்பட வில்லை.
இந்த நிலையில் சாம்பி யன்ஸ் டிராபி போட் டிக்கான வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. இதனால் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த முடிவை இந்திய தேர்வுக் குழுவினர் இன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதி இல்லாமல் இடம்பெறாமல் போனால் அவர் இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வேகப்பந்து வீரர் ஹர்ஷித் ராணாவும், பும்ராவுக்கான இடத்தில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
- அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
- யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டது. பி.சி.சி.ஐ. வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா இன்னும் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
இது குறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணியில் இடம்பெறுகிறார். மேலும், இந்திய அணியில் வருண் சக்கவர்த்தியும் இடம்பெற்றுள்ளார். இவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி.
பயணம் செய்யாத மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே. மூன்று வீரர்களும் தேவைப்படும்போது துபாய் செல்வார்கள்.