என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமேசுவரம் கோவில்"
- வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராமேசுவரம்:
தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்க தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள் கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். இதற்காக பக்தர்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதே போல் பேய்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபம், தனுஷ்கோடி கடற்கரை, கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
- ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர்.
ராமேசுவரம்:
தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.
அந்த வகையில் ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.
- நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவின் 8-வது நாள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்த ருளினர். கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் இருந்து தேரோட்டம் நடந்தது. சிவ கோஷத்துடன் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னி ட்டு கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
- இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமேசுவரம்:
இந்தியாவில் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.
இந்த நிலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் ரூ.400 வரை வசூலிக்கப்படும் எனவும் அதில் இருந்து ரூ.80, ரூ.160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் அறநிலையத்துறையின் முடிவு வாபஸ் பெறப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செ.சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை வருகிற 20-ந்தேதிக்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் 28.2.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+2
- பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
- ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகையில் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதன் காரணமாக அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். வருடத்தின் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது.
முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி மகாளய அமாவாசைக்காக வெள்ளிக்கிழமை முதலே பஸ், கார் மற்றும் வேன்கள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாதசுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.
தொடர்ந்து பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடியபின் ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை சாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் பாதுகாப்புக்காக ராமேசுவரம் நகர் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடற்கரை கோவில் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமும், ரோந்து சென்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவிபட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
- வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.
- விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.
அதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களுக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாகவும், இதர நாட்களில் வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.
அந்த வகையில், ராமேசுவரத்திற்கு விடுமுறை நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை இருக்கும். இதனால் வியாபாரம் அதிகளவில் காணப்படும். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.
இந்நிலையில், தமிழகத்தில் காலாண்டு தேர்வு வருகிற 17-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் மிகுவும் குறைந்தே காணப்பட்டது.
அக்னி தீர்த்த கடல், கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடல், தரிசனம் செய்ய நீண்ட வரிசை என்று எதுவும் இல்லாமல் காணப்பட்டது. அதிலும் இன்று வந்த அதிக அளவிலான பக்தர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாகவும், தேர்வு முடிந்த பின்னரே பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படும் என தெரிவித்தார். மேலும் பூஜை பொருட்கள், கலைப்பொருட்கள் விற்பனையும் பெரிதும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.
- கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
- தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர்.
ராமேசுவரம்:
காசிக்கு நிகராக கருதப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.
இதனால் மாதத்தில் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது.
கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். 2-வது ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதற்காக நேற்று காலை முதல் வேன், பஸ்கள் மூலமாக வந்த அவர்கள் அமாவாசை நாளான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டனர். அங்கு புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதன் காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
ராமேசுவரத்தில் நேற்றும், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கோவில் வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ராமேசுவரம் பஸ் நிலையம் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அங்குள்ள கடலில் அமைந்துள்ள நவக்கிரகங்களை வழிபட்டனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 ஆயிரம் அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய கடந்த 12-ந்தேதி முதல் நாளை வரை 6 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
ஆடி அமாவாசையான இன்று சுவாமியை வழிபட நேற்று முதலே தாணிப்பாறை மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தகர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர். இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை முதலே நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றுபடித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படித்துறைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்து எள்ளும் நீரும் இறைத்தனர்.
குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இதனால் பாபநாச நாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல் கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையோரம் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன் குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். உவரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். தூத்துக்குடியில் கடற்கரையோரங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து மக்கள் தர்ப்பணம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதேபோல் குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பலி தர்ப்பணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
ராமேசுவரம்
உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள அக்னீதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக விசேஷ, விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி விடுமுறை நாளான இன்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமேசுவரத்தில் கோவில், ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ராமேசுவரத்திற்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தனுஷ்கோடி சென்று உற்சாகமாக கடற்கரையில் பொழுதை கழித்தனர்.
மேலும் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
- ராமேசுவரம் கோவிலின் உள்பிரகாரங்களில் கம்பி வேலி அமைப்பதை நிறுத்த வேண்டும்.
- அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்:
தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறியும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கோவில் இணை ஆணையர் மாரியப்பனை கண்டித்தும், அவரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டி வலியுறுத்தியும் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று கோவில் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
இதில் மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் போஸ், அ.தி.மு.க. நகர் செயலாளர் அர்ச்சுனன், நாம் தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் இளங்கோ, இந்திய தேசிய காங்கிரஸ் நகர் தலைவர் ராஜீவ் காந்தி, பாரதிய ஜனதா கட்சி நகர் தலைவர் ஸ்ரீதர், இந்து மக்கள் கட்சி நகர் தலைவர் பிரபாகரன், விசுவ இந்து பரிசத் பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம் கோவிலின் உள்பிரகாரங்களில் கம்பி வேலி அமைப்பதை நிறுத்த வேண்டும். உள்ளூரை சேர்ந்த சீர் பாத ஊழியர்களை வெளியேற்றக் கூடாது. வெயில் காலங்களில் பக்தர்களுக்கு வசதியாக நிழல் கூரை அமைக்க வேண்டும். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தரிசன பாதை அமைக்க வேண்டும். 22 தீர்த்த கிணறுகளுக்கு செல்லும் பாதைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- ராமேசுவரம் கோவிலில் புகுந்த மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழை நீண்ட நேரம் பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டது. குளம் போல் மழை நீர் தேங்கியதால் அதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் விரைந்து வந்து மழைநீரை வெளியேற்றினர். ராமேசுவரத்தில் அதிகளவு மழை பெய்யும் போது கோவிலுக்குள் தண்ணீர் குளம் போல் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய சிரமம் ஏற்படுகிறது. எனவே கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புத்துணர்வு கிடைப்பதால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- 12 ஜோதிர் லிங்கங்களில் ஒரு லிங்கம் ராமேசுவரம் கோவிலில் மூலவர் சன்னதிக்கு அருகில் உள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் முக்கியமானதாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவில் வருகை தருவார்கள்.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியும், கோவிலில் அமைந்துள்ள தீர்த்த கிணறுகளில் நீராடியும் சாமி தரிசனம் செய்கின்றனர். இதன் மூலம் புத்துணர்வு கிடைப்பதால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும், பல்வேறு தோஷ நிவர்த்திக்காக பரிகார பூஜைகள் செய்யவும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்தனர்.
12 ஜோதிர் லிங்கங்களில் ஒரு லிங்கம் ராமேசுவரம் கோவிலில் மூலவர் சன்னதிக்கு அருகில் உள்ளது. இந்த ஜோதிர் லிங்கத்தை வழிபட பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதே போல் நடராஜர் சன்னதியில் பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சம் மூலம் சுவாமியை சுற்றி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடராஜரை வழிபட்டால் பாவம் தீரும் என்று கூறப்படுவதால் அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெளிநாட்டு பக்தர்கள் சிலரும் சாமி தரிசனம் செய்தனர். சிலர் கோவிலில் விற்பனை செய்யப்படும் தீர்த்தங்களை வாங்கி சென்றனர்.
இதனால் ராமேசுவரம் இன்று திருவிழா கோலம் பூண்டு இருந்தது. கோவில் பகுதியில் உள்ள கடைகளில் கடல் சார்ந்த பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது. பாசி மாலை, சங்கு உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
- ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
- கழிவு நீர் கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
ராமேஸ்வரம்:
ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் 22 புனித தீர்த்த கிணறுகள், பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரிசை முறை, பிரகாரங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு வசதிகள், கழிவு நீர் கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளையும் வழங்கினார்.
பின்னர், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்தும், ஒருங்கிணைந்த பெருந்திட்டப்பணிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்