என் மலர்
நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன கார்கே"
- ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.
- ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது.
ஐதராபாத்
இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவருடன் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை கடந்து சென்ற வாரம் தெலுங்கானாவில் நுழைந்துள்ளது.
யாத்திரையின் 56-வது நாளான நேற்று ஐதராபாத் நகரின் பாலநாகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த யாத்திரை தொடர்ந்தது. ஹபீஸ்பேட்டில் காலை இடைவேளையும், முதாங்கியில் மாலை இடைவேளையும் விடப்பட்டது.
பாதயாத்திரை சென்றவர்கள் கவுலம்பேட்டில் இரவில் ஓய்வெடுத்தனர்.
முன்னதாக இந்த பாதயாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பங்கேற்கும் யாத்ரீகர்களை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று போவன்பள்ளியில் சந்தித்து உரையாடினார்.
பின்னர் இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்ததாவது:-
இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள யாத்ரீகர்களை ஐதராபாத்தின் போவன்பள்ளியில் சந்தித்து பேசினேன். ராகுல் காந்தியுடன் 3,500 கி.மீ. நடந்து செல்லும் அவர்கள் நமது கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றனர்.
இந்திய ஒற்றுமை பயணம் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
- குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை.
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை
அறிவிக்கப்பட்டாயிற்று, குஜராத் சட்டசபை தேர்தல் திருவிழா. நாளை வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.
திரைப்படங்களுக்கு பூஜை போடுகிற நாளிலேயே படம் விலை போய்விடுகிறமாதிரி, தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டிலேயே வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
182 இடங்களை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இங்கு வெற்றி வாகை சூடி, 1995-ம் ஆண்டு தொடங்கி சுவைத்து வருகிற வெற்றிக்கனியை மீண்டும் சுவைத்துவிட பா.ஜ.க. துடிக்கிறது.
ஆட்சியை பறிகொடுத்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது, இந்த முறையாவது வெற்றி பெற்று, ஆட்சியைப்பிடித்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அஸ்திவாரம் போட நினைக்கிறது காங்கிரஸ்.
ஆனால் டெல்லி, பஞ்சாபில் வெற்றி பெற்று, இப்போது ஆம் ஆத்மியின் பார்வை குஜராத் பக்கம் திரும்பி இருக்கிறது. 2024 தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று கனவு வளர்த்து களத்தில் குதிக்கிறது, கெஜ்ரிவாலின் கட்சி.
மும்முனைப் போட்டி தேர்தல் களத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகத்துக்கு அணுவளவும் இடம் இல்லை. இந்த மோதலில் வெற்றி யாருக்கு என்பதே நாட்டின் பேசுபொருளாக மாறப்போகிறது.
"எங்கள் கட்சியே வெற்றி பெறும். இரட்டை என்ஜின் அரசு மீண்டும் அமையும். பிரதமர் மோடி தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம்" என்று தேர்தல் அறிவிப்பு வெளியான கணத்திலேயே மார் தட்டி இருக்கிறார், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா.
எந்தவொரு ஆட்சியும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறபோது, அதற்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படுவது வாடிக்கை. இப்போது அந்த வகையில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராய் திரும்பியுள்ள பிரச்சினைகள் உண்டு.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பில்கிஸ்பானு கும்பல் கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு, மோர்பி பால விபத்து, அரசு வேலைவாய்ப்பு தேர்வு வினாத்தாள் கசிந்துவிடுவதும் தேர்வு ஒத்திவைப்பும், கடைக்கோடி பகுதிகளில் சுகாதார வசதி-அடிப்படை கல்வி வசதியின்மை, மழைவெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமை, சரியான சாலை வசதிகள் இன்மை, அதிகபட்ச மின்கட்டணம், அரசு திட்டங்களுக்கு நில எடுப்பில் அதிருப்தி... இப்படி பா.ஜ.க. அரசுக்கு எதிரான அம்சங்கள் அணிவகுக்கின்றன.
குஜராத்தை சேர்ந்தவர் நாட்டின் பிரதமர் என்ற 'டிரம்ப் கார்டு' கை கொடுக்கும், மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு என்னும் பிரசாரம் வெற்றிதரும் என்று முழுமையாய் நம்புகிறது பா.ஜ.க.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் காங்கிரசின் கனவுக்கு காரணங்கள் உண்டு.
காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் விடுவிப்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்குவங்கி, 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வாக்குறுதி போன்றவை இந்த முறை கண்டிப்பாய் கைகொடுக்கும், வெற்றி தேடித்தரும் என்பது காங்கிரசின் நம்பிக்கை.
ஆனால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை; சோனியா-ராகுல் பிரசாரம் செய்வார்களா என்பது கேள்விக்குறி; முன்னிலைப்படுத்துவதற்கு கட்சியில் எழுச்சிமிக்க தலைவர்கள் குஜராத்தில் இல்லை என்பதெல்லாம் பின்னடைவுகள்.
பா.ஜ.க., காங்கிரசுடன் மல்லு கட்டப்போகிறது, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இந்தக் கட்சிக்கும் ஆட்சியை கைப்பற்றிவிடும் ஆசை இருக்கிறது. நாங்கள் மாறுபட்ட சக்தி என்னும் பிரசாரம், இலவச மின்சாரம்... வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்... 18 வயதான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என வாக்குறுதிகள் கைகொடுக்கும் என்று ஆம் ஆத்மி நம்புகிறது. இலவச வாக்குறுதிகளை குஜராத் மக்கள் வரவேற்பார்களா, மாட்டார்களா என்பது பட்டிமன்ற விவாதப்பொருள்.
ஆனால் பிரதமர் மோடி தேர்தல் இலவசங்களுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பும்போது, மக்களிடம் இந்த இலவச வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மறுக்கவும் முடியாது. பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களிடம் இது வரவேற்பை பெற்று ஓட்டு வங்கியாக மாறுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அம்சங்கள்.
அதே நேரத்தில் குஜராத் மாநில அரசியலில் ஆம் ஆத்மி கத்துக்குட்டி, குஜராத்தில் ஆம் ஆத்மியில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை, ஓட்டு வங்கி பெயருக்குகூட இல்லை என்பது பாதகமான அம்சங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டு தோல்வி அடைந்தால், அது ஆம் ஆத்மி இனி எடுக்கும் சோதனை முயற்சிகளுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தி விடும் வாய்ப்பும் இருக்கிறது.
வெற்றி யாருக்கு?
மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை என்ஜின் என்கிற பா.ஜ.க. வாதம், அந்தக்கட்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம். கட்சிக்கு தலித் தலைமை, வேலை வாய்ப்பு வாக்குறுதிகள், ஆட்சியைப் பறிகொடுத்து கால் நூற்றாண்டு என்ற அனுதாப அலை ஆகியவை காங்கிரசின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையலாம். ஆம் ஆத்மி மாற்றத்துக்கான அரசியல் என்ற வாதம் அதன் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.
கடைசி நேர மாற்றங்கள், அதிரடிகள், பிரசாரங்கள் என்ன விதமான அலையை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது.
டிசம்பர் 8 தான் வெற்றியை தீர்மானிக்கும். ஆமாம். அன்றுதான் ஓட்டு எண்ணிக்கை.
- பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.
- பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.
புதுடெல்லி:
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.
காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அவர் நாளையும், 9-ந்தேதியும் அங்கு பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு சட்டசபை தேர்தலை முதல் முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசத்தை பொறுத்த வரை எந்த கட்சியும் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. அங்கு பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களம் இறங்குகிறது.
- 2023-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- 224 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 1 முதல் 3 வேட்பாளர்களை கட்சி தேர்வு செய்யும்.
பெங்களூரு:
காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாராட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் இளைஞர்கள் மற்றும் பெண்களை அடையாளம் காண மாநில காங்கிரஸ் நேர்மையான முயற்சியை மேற்கொள்ளும்.
இதற்காக மாநில காங்கிரஸ் சார்பில் ஒரு குழு அமைக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் இந்த பட்டியல் மத்திய தேர்தல் குழுவால் பரிசீலிக்கப்படும் என்றார்.
பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-
2023-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை மதிப்பிடுவதற்காக 3 கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
224 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 1 முதல் 3 வேட்பாளர்களை கட்சி தேர்வு செய்யும். இந்த 3 பேரில் 50 வயதுக்குட்பட்ட ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார். இதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதே நேரத்தில் கார்கேவின் இந்த அறிவிப்பு அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், 68 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் வழங்காமல் இருக்க முடியாது.
மேலும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பலர் தற்போதும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். எனவே புதிதாக இளைஞர்களுக்கு சீட் எப்படி ஒதுக்க முடியும் என்றார்.
- மோடி அரசு விமானநிலையங்கள், துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது.
- நாட்டின் சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது.
மும்பை :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மராட்டியத்தில் நடைபயணம் செய்கிறார். இதையொட்டி நாந்தெட்டில் நேற்று முன்தினம் இரவு ராகுல் காந்தியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-
காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்தது என்று பா.ஜனதா தலைவர்கள் அடிக்கடி கேட்கின்றனர். காங்கிரசால் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாத்தோம். அதனால் தான் இன்று நீங்கள் (மோடி) பிரதமராக முடிந்தது.
ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என பா.ஜனதா உறுதி அளித்தது. ஆனால் தற்போது அவர்கள் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை மட்டும் கொடுத்து உள்ளனர். 18 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே போனது?.
மோடி அரசு விமானநிலையங்கள், துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது. நாட்டின் சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது. காங்கிரஸ் உணவு பாதுகாப்பை கொடுத்தது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜனதா கொண்டு வந்த 10 திட்டங்களின் பெயரை அவர்களால் கூறமுடியுமா?.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பேசுகையில், " பா.ஜனதா ஒரு நிகழ்வு. ஆனால் காங்கிரஸ் ஒரு பேரியக்கம். பிரதமர் அவர் தாயை சந்திக்கும் போது கூட கேமராவை தான் பார்க்கிறார். ஏனெனில் அது ஒரு நிகழ்ச்சி. பா.ஜனதா நாட்டுக்கு பசி, பயம், ஊழலை தான் கொடுத்து உள்ளது" என்றார்.
இதேபோல கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் தோரட், அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்டவர்களும் பேசினர்.
- ராகுல்காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார்.
- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று முதல்முறையாக கூடுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு வருகிற 2024-ம் ஆண்டு தேர்தல் நடக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் மத்தியில் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.
பா.ஜனதா தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்தது. வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
ராகுல்காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த 150 நாள் பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடைகிறது. இதன்மூலம் ராகுல்காந்தி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கானி, ரந்தீப் சுர்ஜேவாலா, பிரியங்கா காந்தி, சுனில்கனு கோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 8 பேர் கொண்ட பணிக்குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார்.
இந்த நிலையில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று முதல்முறையாக கூடுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் பணிக்குழுவுடன் நடைபெற உள்ள முதல் கூட்டம் இதுவாகும்.
இதில் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படுகிறது.
தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், பணிக்குழுவின் பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான திட்டம் ஆகியவை குறித்து மல்லிகார்ஜூன கார்கேயிடம் விளக்கம் அளிக்க உள்ளனர்.
- பிரதமர் மோடி, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தார்.
- பல்வேறு அரசுத்துறைகளில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
புதுடெல்லி :
பிரதமர் மோடி கடந்த மாதம் 'ரோஜ்கார் மேளா' என்ற வேலைவாய்ப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கடந்த 8 ஆண்டுகளாக வேலைவாய்ப்பை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார்.
முதல்கட்டமாக, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
இருப்பினும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். மத்திய செயலகத்தில் 1,600 பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியான பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். அப்படியானால், 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.
பல்வேறு அரசுத்துறைகளில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், பிரதமர் மோடி வெறும் 75 ஆயிரம் நியமன கடிதங்களை மட்டுமே வழங்கி இருக்கிறார்.
பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய செயலகத்தில் 1,600 காலி பணியிடங்கள் உள்ளன. என்ன காரணம்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கே.எஸ்.அழகிரி 2019-ம் பிப்ரவரி 8-ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.
- காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இருக்காது.
புதுடெல்லி :
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து பேசி உள்ளனர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அவர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழக காங்கிரசில் தற்போது கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. கடந்த 15-ந் தேதி நடைபெற்ற கட்சி வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாவட்ட தலைவர் நியமனம் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர்.
இதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீது புகார் கூறப்பட்டது. அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் இரு அணியாக சென்று இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இது காங்கிரசில் மட்டுமல்லாது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திடீரென சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டனர்.
அவர்கள் கே.எஸ்.அழகிரி மீது புகார் கொடுக்க சென்றதாக கூறப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு கார்கேவின் இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது, தமிழக காங்கிரசில் தற்போது நிலவும் கோஷ்டி பூசல் பற்றியும், இதற்கெல்லாம் நெல்லை மாவட்ட தலைவரை நியமித்ததில் கே.எஸ்.அழகிரி பாரபட்சமாக செயல்பட்டதே காரணம் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அவர்கள் பேசியதாக தெரிகிறது. கட்சி தொடர்பான மேலும் சில விஷயங்களையும் அவர்கள் தலைவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ந் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், 'தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றது முதல் கடந்த 15-ந் தேதி வரை எந்தவிதமான கோஷ்டி பூசலும் இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகவும் சாதுரியமாக செயல்பட்டு வந்தார். இதனை அண்மையில் நடைபெற்ற கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாள் விழாவில், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகவும் பெருமையுடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீர் கோஷ்டி பூசல் ஏற்பட்டு, முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது.
- மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி 71,056 பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த கடிதங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் ஸ்டண்ட் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்ததை அவர் நினைவூட்டி உள்ளார். பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்கியிருந்தால் எட்டு ஆண்டுகளில் பதினாறு கோடி வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.
ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில்தான் பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- காங்கிரசாரின் வெறுப்புணர்வுக்கு கார்கேயின் பேச்சே உதாரணமாகிறது.
- கார்கே கூறியது கண்டனத்துக்கு உரியது.
அகமதாபாத்:
குஜராத் சட்டசபை தேர்தல், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (டிசம்பர் 1-ந் தேதி) முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
ஆமதாபாத் நகரில் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
அனல் வீசிய அவரது பேச்சில், பிரதமர் மோடியை, ராவணனுடன் ஒப்பிட் டார். அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, மக்களிடம் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, உங்கள் கண்களில் என் முகத்தை நிறுத்தி, பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கள் என்கிறார். நாங்கள் எத்தனை முறைதான் உங்கள் முகத்தைப் பார்ப்பது? உங்கள் முகத்தை மக்கள் மாநகராட்சி தேர்தலில் பார்க்கிறார்கள். அடுத்து சட்டசபை தேர்தலின்போது பார்க்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலின்போதும் பார்க்கிறார்கள். எல்லா இடங்களிலும் உங்கள் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஏன்? உங்களுக்கு எத்தனை முகங்கள் இருக்கின்றன? நீங்கள் என்ன 100 தலைகளைக் கொண்ட ராவணனா?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குஜராத் முதல்-மந்திரி பூபேஷ் படேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "குஜராத் மக்கள் மீதான அவர்களின் (காங்கிரசாரின்) வெறுப்புணர்வுக்கு கார்கேயின் பேச்சே உதாரணமாகிறது. அவர்கள் நடந்துகொள்ளும் விதத்துக்காக இந்த முறையும் குஜராத் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்" என கூறி உள்ளார்.
இதை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா சாடி உள்ளார்.
அவர், "காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் கருத்துகளை பிரதிபலிக்கிறார் கார்கே. 2007-ல் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலின்போது சோனியா, மோடியை மரண வியாபாரி என அழைத்து இத்தகைய தனிப்பட்ட தாக்குதலை தொடங்கினார். கார்கே கூறியது கண்டனத்துக்கு உரியது. அவரது வார்த்தைகள், பிரதமர் மோடி மீதான அவமதிப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குஜராத்தி மீதான அவமதிப்பும் ஆகும்" என தெரிவித்தார்.
- கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும் எதிர்ப்பின் காரணத்தாலும் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது.
- தமிழ்நாட்டிலும் மாற்றம் உறுதி என்கிறார்கள் அழகிரி எதிர்ப்பாளர்கள். அதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.
சென்னை:
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் கடந்த வாரம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும், கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது.
இதையடுத்து முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. விசுவநாதன் ஆகியோர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து புகார் செய்தனர்.
மாநில தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதற்கிடையில் 11 எம்.எல்.ஏ.க்கள் கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்றக்கூடாது என்று வற்புறுத்தினார்கள்.
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையை தினேஷ் குண்டுராவ் ரத்து செய்தார். இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும், தினேஷ் குண்டுராவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
இதையடுத்து தினேஷ் குண்டுராவையும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியையும் டெல்லி மேலிடம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.
கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும் எதிர்ப்பின் காரணத்தாலும் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. அதே நேரம் 3 ஆண்டு செயல்பாடுகள், தற்போது மாநிலம் முழுவதும் 23,400 கொடியேற்றும் திட்டம் ஆகியவற்றையும் டெல்லி மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பிறகு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அழைத்து கார்கே ஆலோசனை நடத்தி இருக்கிறார். அரைமணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றி கருத்து கேட்டுள்ளார்.
அப்போது 'துடிப்பாக கட்சிக்கு வேலை செய்பவர்களை பார்த்து நியமியுங்கள்' என்று சிதம்பரம் கூறியதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
என்னதான் நெருக்கடி இருந்தாலும் ராகுல் நடைபயணம் நடந்து வருவதால் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தான் மாற்றம் இருக்கும் என்று பேசப்பட்டது.
ஆனால் ஆந்திரா, பீகார் ஆகிய மாநில உட்கட்சி பிரச்சினைகளில் அந்த மாநில தலைவர்களை அதிரடியாக மாற்றி உள்ளார்.
எனவே தமிழ்நாட்டிலும் மாற்றம் உறுதி என்கிறார்கள் அழகிரி எதிர்ப்பாளர்கள். அதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள். மேலிடத்தின் முடிவுக்காக தொண்டர்கள் காத்து இருக்கிறார்கள்.
- இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
- இமாசல பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி
இமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பா.ஜனதாவும், காங்கிரசும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
இது தொடர்பாக இமாசல பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் காங்கிரசின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும் மாநில மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச்செய்த இமாசல பிரதேச மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. அத்துடன் கட்சியின் அனைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி' என தெரிவித்தார்.