search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்கள்"

    • நாகர்கோவிலுக்கு செல்லவே ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.
    • தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேலும் திருச்சி, மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சென்றன. அந்த ரெயில்களில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரெயில் நிலையங்களில் இருந்து ஏற வேண்டியவர்கள் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணித்தனர்.

    மின்சார ரெயில்களும் பல்லாவரம் வரை இயக்கப்பட்டது. இதனால் மின்சார ரெயில்களில் சீக்கிரமாக சென்றுவிடலாம் என்று நினைத்தவர்களாலும் அது முடியவில்லை. எனவே பயணிகள் அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோ, கார்களில் படையெடுத்தனர்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு சென்ற பயணிகளும் அதிக அளவில் சென்றதால் ஜி.எஸ்.டி.ரோடு முழுவதும் வாகன நெரிசலில் சிக்கி திணறியது.

    குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்கு 2 மணி நேரம் வரை ஆனதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ டிரைவர்கள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி வசூலித்தார்கள்.

    போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததை காரணம் காட்டி ஆட்டோ டிரைவர்கள் கிளாம்பாக்கத்துக்கு சவாரி வர மறுத்தனர். இதனால் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்து பயணித்தார்கள்.

    அரசு பஸ்கள் போதிய அளவில் இல்லாததால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இரவில் வேறு வழியில்லாமல் ஆம்னி பஸ்களை நாடினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் இரு மடங்கு கட்டணம் வசூலித்தார்கள்.

    வழக்கமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.700 முதல் ரூ.1500 வரை வசூலிக்கப்படும். நேற்று ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.

    தனி நபராக சென்றவர்கள் கட்டண உயர்வை கண்டு கொள்ளாமல் பயணித்தார்கள். ஆனால் குடும்பமாக சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டார்கள்.

    நேற்று இரவில் மதுரை செல்லவே ரூ.3,500 கட்டணம் வசூலித்தார்கள். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த மாதிரி அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

    செயலிகளில் வெளிப்படையாக வெளியிடப்படும் கட்டணங்கள் அதிகமாக இருந்தால் மட்டும் ஒரு சில பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது வெறும் கண் துடைப்பு நாடகம் என்றார் தஞ்சையை சேர்ந்த பயணி சிதம்பரம்.

    அவர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்ல ரூ.2,500 கொடுத்து டிக்கெட் வாங்கியதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
    • கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம்.

    தமிழகத்தில் கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.

    இந்நிலையில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளுக்கான வரியை உயர்த்தியதற்காக தமிழகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நேற்று கேரள சட்டசபையில் பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கான மானியங்கள் மற்றும் வாகனங்கள் வரி மீதான விவாதத்தை நிறைவு செய்த அமைச்சர், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்து கூட பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
    • அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கான ஆம்னி பஸ்கள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகனப் பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீதமுள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.

    இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கின் விசாரணையில், "தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று மனுதாரர்கள் வாதம் முன்வைத்தனர்.

    இதனையடுத்து, "தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது" என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும் இந்த ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன.
    • ஆம்னி பஸ்களும் தமிழ்நாட்டிற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை.

    சென்னை:

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதிலும் 1,535 ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னி பஸ்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன.

    இவற்றுள் பெரும் பான்மையானவை புதுச்சேரி, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன.

    மேலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து அந்த மாநிலங்களுக்குச் செல்லாமல் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு வரியும் செலுத்தா மல் தமிழ்நாட்டிற் குள்ளாகவே இயங்கி வருகின்றன. இதுவும் ஒரு விதி மீறலாகும்.

    மேலும் இந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் பல தமிழ்நாடு மாநிலம் வழியே பிற மாநிலங்களுக்கு பயணிக்கின்றன. அவ்வாறு செல்லும் பொழுது விதிகளை மீறி தமிழ் நாட்டிற்குள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இவ்வகை ஆம்னி பஸ்களும் தமிழ்நாட்டிற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை.

    இதனை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப மூன்று முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கியும், மொத்தம் உள்ள 905 இதர மாநிலப் பதிவெண் கொண்டு அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயங்கும் ஆம்னி பஸ்களில் நாளது தேதி வரை 112 ஆம்னி பஸ்கள் மட்டுமே தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ் நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.

    ஆனால், இன்னும் 793 ஆம்னி பஸ்கள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை.

    எனவே, இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவ்வாறு முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராயந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

    மாநிலம் முழுவதிலும் கடந்த 18.06.2024 முதல் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலம் முழுவதிலும் 62 ஆம்னி பஸ்கள் மேற்கூறிய விதிமீறல்களுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இவ்வகை ஆம்னி பஸ்கள் அவற்றின் உரிமையாளர்களால் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்னையும், போக்கு வரத்து ஆணையரையும் சந்தித்து அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும், மேற்கொண்டு 200 ஆம்னி பேருந்துகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து பஸ்களின் இயக்கத்தினையும் முறைப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டுவருகின்றன.
    • இதனால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் நாளைமுதல் இயக்க தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 547 பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே, முன்பதிவு செய்த பயணிகள் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. சனி, ஞாயறு உள்பட அடுத்த நான்கு நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள சுமார் 20 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை ஆணையர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இது தொடர்பாக பேச்சவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் திங்கட்கிழமை வரை பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக,

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த ஆம்னி பேருந்துகள், பயணிகளுக்கான ஆம்னி பேருந்துகள் போன்றே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீதமுள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.

    எனவே, நாளை (14-ந்தேதி) முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் உறுதிப்படுத்தினார். ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் அவகாசம் வேண்டும் என்கிற பட்சத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், போக்குவரத்து துறை ஆணையரிடம் அனுமதிக்காக முறையிடலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது.
    • 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலேயே உள்ளது.

    சென்னை:

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கான ஆம்னி பஸ்கள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீத முள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.

    எனவே, நாளை (14-ந்தேதி) முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் உறுதிப்படுத்தி உள்ளார். ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும் அவகாசம் வேண்டும் என்கிற பட்சத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், போக்குவரத்து துறை ஆணையரிடம் அனுமதிக்காக முறையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில், போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    • பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பஸ் உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.
    • சான்றுகளை வாகன தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்.

    சென்னை:

    போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மோட்டாா் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) ஆம்னி பஸ்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (ஏ.ஐ.டி.பி.) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பஸ்கள் போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன.

    இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏ.ஐ.டி.பி. வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.

    அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு, அதிகாரிகளின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மோட்டார் வாகன துறை மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்துக்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து, டி.என். என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழகத்துக்குள் இயங்க அனுமதி சீட்டும் பெற்றுள்ளன. மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன.

    எனவே வருகிற 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே முறையற்ற வகையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது.

    இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பஸ் உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
    • நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் ஆம்னி பஸ்கள் உள்ளன.

    இந்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் பண்டிகை நாட்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்தி கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

    அதிக விலைக்கு கட்டணத்தை உயர்த்தும் பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பஸ் நிறுவனமும் பொருட்படுத்துவது இல்லை.

    பண்டிகை நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களாக இருந்தாலும், வார இறுதி நாட்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர் கதையாகவே இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

    வழக்கமாக சென்னை பெருநகரத்தில் இருந்து பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை காலகட்டங்களின் போது நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுள்ளனர்.

    பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.

    இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ் நிறுவனத்தினர் டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

    நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்று சென்னை, கோவை நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் கட்டணம் வழக்கத்தை விட கடுமையாக உயர்ந்துள்ளது.

    சாதாரண நாட்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சாதாரண இருக்கைகளுக்கு ரூ.600 முதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரத்தில் படுக்கை வசதிக்கு ரூ.900 முதல் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஏ.சி.படுக்கை வசதிக்கு பஸ்களின் தரத்திற்கு ஏற்ப ரூ.1,200 முதல் 1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

    இந்நிலையில் இன்றும், நாளையும் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் ரூ.935 முதல் ரூ.3500 வரை என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏ.சி. அல்லாத சில பஸ்களில் இருக்கை கட்டணம் ரூ.900-ல் இருந்து தொடங்குகிறது. மேலும் நேரங்களுக்கு தகுந்தவாறு ஏ.சி. அல்லாத பஸ்களில் சென்னைக்கு செல்ல கட்டணமாக ரூ.1000 என வசூலிக்கப்படுகிறது. இதேபோல ஏ.சி. வசதியுடன் கூடிய பஸ்களில் இருக்கை கட்டணமாக ரூ.1,150,ரூ.1,400, ரூ.1,580 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி. சிலீப்பர் சீட்டுக்கு ரூ.1,800 முதல் ரூ.2,000, ரூ.2,100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை இதே பஸ்களில் சென்னை செல்வ தற்கு கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில பஸ்களில் ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,300, ரூ.1400, ரூ.1500 என கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

    மேலும் ஏ.சி. சிலீப்பர் இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200, ரூ.2,300 ரூ.2,400, ரூ.2500, ரூ.2,800, ரூ.3,000, ரூ.3,400 வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

    இதேபோல நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவட்டார் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களிலும் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1000-த்தில் இருந்து தொடங்கி ரூ.1250, ரூ.1300, ரூ.1500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    அதேநேரத்தில் ஏ.சி.இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதலும், ஏ.சி. படுக்கை வசதிகளுக்கு ரூ.2500 முதல் ரூ.3500 வரை என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல நெல்லையில் இருந்து கோவைக்கு செல்வதற்கு ஏ.சி.அல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.850, ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேநேரம் ஏ.சி.சிலீப்பர் சீட்டுகளுக்கு ரூ.1,139 முதல் ரூ.1200, ரூ.1341, ரூ.1500 என கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சாதாரணமான நாட்களில் நெல்லையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்வதற்கு குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் ரூ. 650-ம், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் ரூ.900 முதல் ரூ. 1,200 என்ற நிலையில் டிக்கெட்டுகள் வசூல் செய்யப்படும். ஆனால் இன்று குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.350 வரை உயர்ந்து ஒரு டிக்கெட் ரூ. 1000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேபோல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை உயர்ந்து காணப்படுகிறது.

    இதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களின் கட்டணமும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    • ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
    • ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பஸ் முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொங்கலுக்கு பிறகு அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    ஆம்னி பஸ்களையும் 24-ந்தேதி மாலை 7 மணியில் இருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. இதுவரையில் ஆம்னி பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25, 26 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


    மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு அறிவித்தப்படி ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று இரவும் போக்குவரத்து ஆணையர் தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும், அரசின் உத்தரவை பின்பற்றாமல் இயக்கினால் போக்குவரத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கண்டிப்பாக ஆம்னி பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அங்கு 850 பஸ்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்து காத்து இருக்கின்ற நிலையில் பயணம் செய்ய கிளாம்பாக்கம் செல்ல வேண்டுமா? கோயம்பேடு போக வேண்டுமா? என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து அரசு விரைவு பஸ்களை இயக்குவதற்கு வசதி உள்ளது. ஆனால் ஆம்னி பஸ்களை நிறுத்த இடமில்லை. தினமும் சென்னையில் இருந்து 850 ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் விழாக் காலங்களில் 1200 பஸ்கள் வரை இயக்கப்படும். ஒட்டு மொத்தமாக எல்லா பஸ்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை. வசதி செய்து கொடுத்தால் நாங்கள் செல்லத் தயார்.

    முடிச்சூர் வரதராஜபுரத்தில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். நாளை (புதன்கிழமை) கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது.
    • வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதத்தை விளைவித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை பெய்து ஏற்பட்ட வெள்ளம் கடந்த ஒரு வாரமாகியும் இதுவரை பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. இன்றளவும் மாநகரின் முக்கிய பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அங்கு படிப்படியாக குறைந்து தற்போது முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

    மாவட்டத்தில் நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-தூத்துக்குடி பிரதான சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களாக பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக மாற்றுப்பாதைகளிலும், தற்காலிக பாதைகள் வழியாகவும் இந்த வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதுதவிர திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்படுகையையொட்டிய பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆழ்வார்தோப்பு, ஏரல், பழைய காயல், புன்னக்காயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் தனித்தீவுகளாக காட்சியளித்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


     அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில் கிராம சாலைகள், நகர்ப்புற சாலைகள், ஆற்றுப்பாலங்கள் உள்ளிட்ட வைகளும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவற்றை கணக்கெடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் பணிகள் நடக்கிறது. அதன்பின்னர் பாலங்கள், சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. ஒரு சில கிராமங்களில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஒரு வாரமாகியும் இதுவரையிலும் பொதுமக்கள் இருளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் வரையிலும் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்து முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் ஆய்வு செய்து வெள்ள நிவாரணமும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொன்னன்குறிச்சி, வல்லநாடு, முறப்பநாடு, அகரம், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நீரில் மூழ்கிவிட்டதால் மின்மோ ட்டார்கள் பழுது ஏற்பட்டுள்ளது.

    இதனால் காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி பல்லாயிரம் கன அடி நீர் வீணாக ஆற்றில் கலக்கும் சூழ்நிலையிலும் அப்பகுதி மக்கள் குடிக்க ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

    இதனால் ஆற்றில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்யும் பணி, கோரம்பள்ளம் ஆறு, சிற்றாறு பகுதிகளில் பாதிப்பை சரி செய்யும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சி, கோவை, மதுரை மண்டலங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 12 செயற்பொறியாளர்கள், 20 உதவி செயற்பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    படிப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு முழுமையாக இயல்புநிலை ஏற்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள், இது தவிர களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட வாழை உள்ளிட்டவைகள் வெள்ளத்தால் கடுமையான சேதம் அடைந்துள்ள நிலையில் அதனை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டுள்ளனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 நாட்களாக வெள்ள சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையான கணக்கெடுப்பு முடிந்த பின்னர் கலெக்டரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. அதன்பின்னரே வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.

    இதற்கிடையே வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த கிராமங்களிலும் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு விநியோகம் சீரடைந்துள்ளது. மாவட்டத்தில் இன்று சுமார் 110 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    • பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது.
    • பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்களாக விடாமல் பெய்த பெரு மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் தூத்துக்குடி மாநகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக மாறின. மழை ஓய்ந்ததை தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏரல் பகுதியில் பாலம் உடைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    அங்கு தற்காலிகமாக மாற்று சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதே போல ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அவற்றை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    தூத்துக்குடியில் 112 இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதில், 84 இடங்களில் சாலைகள் செப்பனிடபட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு உள்ளது.


    திருச்செந்தூர், பாளையங்கோட்டை சாலையில் 3 இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருந்தன. தற்போது 2 இடங்கள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் 3 மீட்டர் நீளத்திற்கு சாலை உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனை சீரமைக்க பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.

    ஏரல் பாலமும், ஆத்தூர் பாலமும் ரூ.19.94 கோடி ரூபாய் மதிப்பில் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டன. அணுகு சாலை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு விட்டது. அப்பகுதியில் தரைப்பாலம் உறுதியாக இருக்கிறது.

    நெல்லை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது. அதில், ஒரே ஒரு தூண் மட்டுமே கீழே இறங்கி உள்ளது. என்ஜினீயர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப குழுவை உடனடியாக வரவழைத்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தரைப்பாலம் வழியே வாகனங்கள் செல்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் 95 சென்டி மீட்டர் மழை பெய்ததால் சாலைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் 46, தூத்துக்குடி மாவட்டத்தில் 112, தென்காசி மாவட்டத்தில் 13, விருதுநகர் மாவட்டத்தில் 13, நாகர்கோவிலில் 5 சாலைகள் என நெடுஞ்சாலை துறையை பொறுத்த வரை ரூ.1000 கோடி அளவுக்கு சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 65 இடங்களில் சாலைகள் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.
    • வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதிகன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது.

    6 நாட்கள் ஆகியும் இன்று வரை சில பகுதிகள் இன்னும் வெள்ளப்பாதிப்பில் இருந்து மீளவில்லை. அதில் புன்னக்காயல் கிராமமும் ஒன்று. இந்த கிராமத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலுக்கு சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. தாமிரபரணி கரையோர கிராமமான இங்கு கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.

    கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் புன்னக்காயல் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 அடிக்கும் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் தற்போதும் சில பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் புன்னக்காயலில் மட்டும் இன்று வரை வெள்ளம் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.


    இதனால் அங்கு செல்ல முடியாமல் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு செல்ல முடியாமல் புன்னக்காயல் தனித்தீவாக காட்சியளிக்கிறது.

    பலத்த சேதம் அடைந்துள்ளதால் இன்று வரை அங்கு மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் கடந்த 6 நாட்களாகவே இருளில் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் பல வீடுகள் முழுவதும், பகுதியாகவும் இடிந்து உள்ளது. தற்போது வெள்ள நீர் குறிப்பிட்ட அளவு வடிந்து இருந்தாலும் பொதுமக்கள் முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.

    வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தேவாலயங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள பொதுமக்களுக்கு அருகில் உள்ள திருச்செந்தூர் மற்றும் வீரபாண்டியன் பட்டிணத்தில் இருந்து படகுகள் மூலம் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளம் வடிந்த பகுதியில் வீடுகளில் சேறும், சகதிமாக காணப்படுகிறது. எனவே வீடுகளை பாராமரிப்பு செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    10 அடி மட்டத்திற்கு தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த டி.வி. மிக்சி, கிரைண்டர் என அனைத்து பொருட்களும் நாசமாகின. இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, கன மழை எங்கள் கிராமத்தையே புரட்டி போட்டுள்ளது. தனித்தீவில் இருப்பது போல் நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். எனவே மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி நாங்கள் மீண்டும் வீடுகளில் குடியேற வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

    வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது. எங்கள் வாழ்வாதாரமும் முற்றிலும் அழிந்து விட்டது. எனவே எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×