என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்கள்"
- தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது.
- தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்துங்கநல்லூர்:
தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து செல்லப்பட்டு சேதமடைந்தது.
இதனால் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரையிலான ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இந்த பகுதியில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது. தண்டவாளத்தை ஒட்டியுள்ள மின் கம்பிகள் அனைத்துமே சாய்ந்து வயல்வெளிகளில் கிடக்கின்றன. அவற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக ரெயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர் மற்றும் தாதன்குளம் பகுதியில் தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களும் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அங்கு சிக்கியவர்களுக்கும், சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 4 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலும், நேற்று நெல்லை அரசு மருத்துவ மனையில் வெள்ளம் புகுந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்த பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் இன்று தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கீதா மெட்ரிக் பள்ளி, டி.எம்.சி. காலனி, கோரம்பள்ளம், முத்தையாபுரம், புன்னக் காயல், முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல் பஸ் நிலையம், ஏரல் காந்தி சிலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களில் 31 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் ஒரு நாளைக்கு 3 இடங்களுக்கு சென்று முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் 93 இடங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் 4 பேர் கொண்ட ஒரு மருத்துவ குழுவும் தினமும் 3 இடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன் மூலம் 12 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இன்று நெல்லை மாவட்டத்தில் மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் 4 குழுக்களும், புறநகர் மாவட்ட பகுதிகளில் ஒரு குழுவும் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
- 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.
- கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் மழை தண்ணீர் வடியவில்லை. இதனால் குக்கிராமங்களில் சிக்கி இருக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இன்று 60 படகுகளுடன் மீனவர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் பிற்பகல் முதல் கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.
- எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என வெள்ளத்தில் காத்திருத்தோம்.
- 3 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பி விட்டோம் என்ற நிம்மதி.
ஆம்னி பஸ்சில் சிக்கி தவித்த பெண் பயணி நந்தினி கூறியதாவது:-
நான் கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து எனது 2 குழந்தைகளுடன் ஆம்னி பஸ்கள் சொந்த ஊரான குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றேன். 19-ந் தேதி காலை தூத்துக்குடி வந்தபோது மழை வெள்ளத்தால் ஊரே தத்தளித்து கொண்டிருந்தது.
வெள்ளத்தில் மிதந்தபடி நாங்கள் வந்த பஸ் சிரமத்திற்கு இடையே மாற்று வழியில் ஏரல் அருகே உள்ள தென் திருப்பேரை வந்தது.
அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.
எங்களை பின் தொடர்ந்து வந்த சுமார் 25 ஆம்னி பஸ்கள் வரிசையாக அங்கேயே நிறுத்தப்பட்டன. சுமார் 500 பேர் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் பரிதவித்தோம். 19-ந் தேதி மதியம் தென் திருப்பேரை பேரூராட்சியில் உணவு கொடுத்தனர். பின்னர் யாரும் கண்டு கொள்ளவில்லை. சாப்பாடு மற்றும் செல்போன் இணைப்பு கிடைக்காமல் மின்சாரமும் இல்லாத இடத்தில் இரவு முழுவதும் தவித்து வந்தோம்.
யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று (20-ந் தேதி) தகவலறிந்து ஹெலிகாப்டர் மூலம் எங்களுக்கு உணவு பொட்டலங்களை வீசினர். அதில் பொட்டலங்கள் மழை வெள்ளத்தில் விழுந்தன.
என்ன செய்வதென்று தெரியாமல் எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என வெள்ளத்தில் காத்திருத்தோம். வெள்ளம் வடிந்து வரும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு சில பஸ்களில் அனைவரையும் ஒன்றாக ஏற்றி நாசரேத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தோம். 3 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பி விட்டோம் என்ற நிம்மதியும் மகிழ்ச்சியும் உள்ளது என்று அவர் கூறினார்.
- தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
- நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியான ஊட்டுவாழ்மடத்தில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசாங்க உதவிகள் கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தார்.
பின்னர் நாகர்கோவில், வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதேபோன்று நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகள் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருகிறது. இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. அதற்கான ஒரு முழு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை பொறுத்த வரை 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோன்று 17 மணி நேரம் தொடர்ச்சியாக மழையை சந்தித்த மாநிலம் கிடையாது எனினும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை நீர் நிலைகளில் இருந்து அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை.
- நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.
பெரு மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகளாக மாறி உள்ளன. இன்னும் பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் உமரி காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் மூன்று நாட்களாக தங்கள் கிராமத்தினர் வெளியேற முடியாமலும் யாரும் உதவிக்கு வராமலும் தவித்துக் கொண்டிருப்பதாக தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதை பார்த்ததும் நேற்று நள்ளிரவில் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு தகவல் அனுப்பியுள்ளார். கலெக்டரும் அதை பார்த்துவிட்டு உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவித்துள்ளார். நள்ளிரவிலும் தூங்காமல் பணியாற்றிய நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.
- கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.
- சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.
சென்னையில் இருந்து கடந்த 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்ற ஆம்னி பஸ்கள் இன்னும் சென்றடையவில்லை.
தென்திருப்பேரியில் 24 பஸ்கள் சிக்கி கொண்டதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து அதில் உள்ள பயணிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி பஸ்கள் இயக்க முடியவில்லை.
மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 50 ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. கடந்த 17-ந்தேதி புறப்பட்ட பஸ்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.
அந்த பஸ்களை இதுவரையில் வெளியே எடுக்க முடியவில்லை. பஸ்சின் பாதி அளவிற்கு வெள்ளம் புகுந்ததால் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
தூத்துக்குடியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடியாததால் 2 நாட்களாக மீட்க முடியவில்லை. இன்று தான் அவற்றை வெளியே எடுக்க வேண்டும். தற்போது மழை நின்று வெள்ளம் வடிந்து வருவதால் சிக்கிய பஸ்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து 3 நாட்களாக சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து புறப்படடு செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் தூத்துக்குடி சுங்கசாவடி வரை தற்போது இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு சேவை சீராகி விட்டது. வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது. மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து இன்னும் ஆம்னி பஸ் சேவை முழுமையாக தொடங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டத்தை மீறும் ஆம்னி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக கனிவு காட்டினால் அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
- ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பஸ்கள் பயணக் கட்டணத்தை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தி உள்ளன.
சென்னையிலிருந்து நாளை மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.3200, நெல்லைக்கான கட்டணம் ரூ.3400, கோவைக்கான கட்டணம் ரூ.3999 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தீபஒளி திருநாள் நிறைவடைந்து வரும் 13-ஆம் நாள் மேற்கண்ட நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான கட்டணம் இன்னும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.4950 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.4120, கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.4950 கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பஸ் முன்பதிவுக்கான இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீப ஒளி திருநாளைக் கொண்டாடுவதற்காக கடன் வாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்லும் மக்களை கசக்கிப் பிழியும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில் காந்தி பிறந்தநாள் உள்ளிட்ட தொடர் விடுமுறையின் போதும், ஆயுத பூஜை விடுமுறையின் போதும் ஆம்னி பஸ்கள் கட்டணம் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். தமிழக அரசின் போக்குவரத்துத் துறையும் அதிரடி சோதனைகளை நடத்தி, ரூ.37 லட்சம் தண்டம் விதித்ததாக செய்தி வெளியிட்டது. ஆனால், உண்மை என்னவென்றால், மொத்தம் 13 ஆயிரம் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்த அதிகாரிகள், அவற்றில் 2092 பஸ்களுக்கு மட்டுமே இந்த தண்டத்தை விதித்துள்ளனர். அதுவும் கூட ஒரு பஸ்ஸுக்கு சராசரியாக ரூ.1768 மட்டுமே தண்டமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர ஊர்தியில், தலைக்கவசம் அணியாமல், 50 கி.மீக்குள் அதிக வேகத்தில் சென்றாலே ரூ.2,000 தண்டம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு அதை விட குறைவாக தண்டம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதற்காக பறிமுதல் செய்யப்பட்ட 119 ஆம்னி பஸ்களை அரசு உடனடியாக விடுவித்து விட்டது. சட்டத்தை மீறும் ஆம்னி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, இந்த அளவுக்கு கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?
ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டும் கூட, அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்
- அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் 120 பஸ்கள் பிடித்து வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பஸ்களில் முறையான ஆவணங்கள் வைத்திருந்தும் சில பஸ்களை பிடித்து வைத்துள்ளதாகவும், இதனால் பஸ்களை விடுவிக்காவிட்டால் இன்று மாலை 6 மணி முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆம்னி பஸ் சங்க தலைவர்களுடன் போனில் பேச்சுவர்த்தை நடத்தினார். போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்தித்து பேசி போராட்டத்தை கைவிடும்படி அவர்களிடம் எடுத்துக் கூறினார். அதன் பேரில் போக்குவரத்து துறை அதிகாரி சண்முகசுந்தரத்தைச் சந்தித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் பேசினார்கள்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஆம்னி பஸ் சங்கத்தினருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் சில கோரிக்கையை சொல்லி உள்ளனர்.
குறிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பஸ்களில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்கள். தவறு இழைக்கும் பஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை என்று தெரிவித்தனர். எனவே நான் அதிகாரிகளிடம் சொல்லி உள்ளேன். ஆகவே பிடித்து வைத்துள்ள பஸ்களை ஆய்வுசெய்து தவறு இல்லை என்றால் பஸ்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற பஸ்கள் நடவடிக்கைக்கு உட்படும். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதேபோல் வெளிமாநில பதிவு பஸ்களை ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இப்போது பண்டிகை விடுமுறை காலமாக இருப்பதால் மக்களை பாதிக்காத வகையில் மேலும் கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தில் ஆம்னி பஸ் சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். எனவே பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் ஆகி விடும் என எதிர்பார்க்கிறேன்.
கூடுதல் கட்டணம் பிரச்சினை வராமல் இருப்பதற்காக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கடந்த ஆண்டை போலவே ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அதன்பிறகும் அவர்கள் ஏதும் தவறு செய்தால் அது குறித்து புகார் செய்வதற்கு தீபாவளிக்கு முன்பாக தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆம்னி பஸ்களில் மற்றொரு சங்கமான தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் கூறுகையில், "ஆம்னி பஸ்கள் அனைத்தும் இயங்கும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்" என்று கூறினார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து ஆம்னி பஸ் நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை கே.கே.நகரில் உள்ள அலுவலகத்தில் போக்குவரத்து துறை இணை ஆணையர் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைகளை அதிகாரிகள் கவனமுடன் பரிசீலித்தனர். அரசு தரப்பிலும் பல்வேறு நிபந்தனைகள் வைக்கப்பட்டன. இவைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆம்னி பஸ் நிர்வாகிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
- தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்
- இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை:
பண்டிகை, விடுமுறை மற்றும் முக்கிய சிறப்பு நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்தாலும் கடைசி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புறப்படுவதால் போக்குவரத்து சேவையை அதிகமாக்குவது அவசியமாக மாறிவருகிறது.
இந்நிலையில், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தும் ஆம்னி பஸ்களை நாடி வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக, தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதை காணமுடிகிறது.
இதையடுத்து ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் இரட்டிப்பு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
தற்போது ஆயுதபூஜை விடுமுறை தொடர்ந்து 4 நாட்கள் வந்ததால் ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகளவு உயர்த்தப்பட்டு விட்டதாக புகார்கள் எழுந்தன. சில ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 150 சதவீதத்துக்கும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கிடையே ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. இதற்காக அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறி 120-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. அந்த பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுவதும் தடை செய்யப்பட்டது.
மேலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அந்த ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பஸ்களை சிறை பிடித்ததோடு அபராதமும் விதிக்கப்பட்டதால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
ஆம்னி பஸ் கட்டணத்தை ஒழுங்குபடுத்த கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தென் மாநில ஆம்னி பஸ்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும், பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் போக்குவரத்து அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டுள்ளோம்.
கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கி வந்தது.
இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பஸ்களை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறை பிடித்தும், மீண்டும் சிறை பிடிப்பதை நிறுத்தக் கோரியும் இன்று (24-ந்தேதி) மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது.
இன்று ஆம்னி பஸ்களில் 1 லட்சத்துக்கு மேலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். அவர்களை போக்குவரத்து துறை சார்பாக வழியில் இறக்கி விடுவதை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் கனத்த இயத்துடன் இதனை அறிவிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அதுபோல மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் இன்று மாலை முதல் திரும்புவதற்கு ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர்.
இன்று மட்டும் சுமார் 1 லட்சம் பயணிகள் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களில் இருந்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் ஸ்டிரைக் அறிவிப்பால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாற்று ஏற்பாடுகள் கடைசி நிமிடத்தில் செய்யமுடியாத நிலையில் பெரும்பாலானோர் இன்று சொந்த ஊர்களில் இருந்து புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ஆம்னி பஸ் ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தசரா திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
- பஸ்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் 21 முதல் 24-ந்தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி மைசூரு சாமுண்டி மலையில் உள்ள காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது. இது 414-வது தசரா விழா ஆகும்.
தசரா விழா தொடங்கி உள்ளதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளதால், மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது.
தசரா திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
இதனால் பஸ்களில் கூட்டம் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே பெங்களூருக்கு வெளியே 500 பேருந்துகளை இயக்குமாறு பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கும், கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்திற்கும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் 21 முதல் 24-ந்தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய பிறகு 46,000-க்கும் மேற்பட்ட நபர்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர். மேலும் நேற்று அந்த எண்ணிக்கை 56,000 ஆக உயர்ந்தது. இதனால் 2 நாட்களில் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
விழா காலத்தை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து ஐதராபாத் செல்ல ரூ.3,000, மங்களூருவுக்கு ரூ.2,000, பெலகாவிக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000, ஹுப்பள்ளிக்கு ரூ.1,700 முதல் ரூ.1,900 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கின்றனர். விஜயபுராவுக்கு ஒரு நபருக்கு பயண கட்டணம் 2,500 ரூபாயை தாண்டியுள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.
- சோதனையில், முறையான அனுமதி இல்லாமல் 2 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடை யநல்லூர், செங்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சென்னை, பெங்களூர்,கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.
இதில் எந்த ஆம்னி பஸ்களும் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் மணிபாரதி மற்றும் ராஜன்,உள்ளிட்டோர் தென்காசி குத்துக்கல்வலசை சாலையில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது நாகலாந்து மாநிலத்தின் பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை சோதனை செய்த பொழுது பயணிகளை ஏற்றி இறக்கம் செய்ய தமிழகத்தின் பெர்மிட் உள்ளிட்ட எந்த முறையான அனுமதியும் இல்லாமல் 2 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்வதற்குமட்டுமே அனுமதிபெறப்பட்டு அதனை ஆம்னி பஸ் இயக்கத்திற்கு பயன்படுத்தியது கண்டறி யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த 2 ஆம்னி பஸ்களையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினர்.மேலும் தகுதிச்சான்று இல்லாததால் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்