என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்துக்கழகம்"

    • போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
    • அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 13 புதிய அரசு பஸ்கள் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

    பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில், அரசு பஸ் மூலமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது.

    இதற்கிடையே போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். அவ்வாறு ஒரு நாளும் நடைபெறாது. அரசு போக்குவரத்து கழகம் ஒரு போதும் தனியார் மயமாகாது.

    அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்பு பழைய பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 11,000 புதிய பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நலிவடைந்த நிலையில் இருந்த அரசு போக்குவரத்து கழகம் தற்போது இன்று புத்துயிர் பெற்று வருகிறது.

    எனவே தனியார் மையம் என்ற தகவல் தவறானது. இப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களும் நடத்துனர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள்.

    இதற்காக அவர்களுக்கு உயர பிரச்சனை காரணம் ஏற்பட்டபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு 10 சென்டிமீட்டர் உயரத்தை குறைத்து அவர்களும் பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினார்.

    எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் செல்வம், கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, ஏர்போர்ட் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
    • பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.

    திருப்பூர்:

    அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் சில விதிமீறல்கள் நடப்பதாக தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்த சில வழிகாட்டுதல்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் பஸ் இயக்கப்படும் போது லைெசன்ஸ் பெற்ற ஒரு பணியாளர் மட்டுமே பஸ்களை நகர்த்த வேண்டும். வேறு ஒருவர் இயக்க கூடாது. பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஓய்வறைகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது கூடாது. மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மதுஅருந்திய நிலையில் பணிக்கு வருபவர் குறித்து பாதுகாவலர் கண்காணிக்க வேண்டும். பஸ்சில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், வெடி பொருட்களை ஏற்ற எந்த நேரத்திலும் அனுமதிக்க கூடாது. பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தரப்பில் இருந்து திருப்பூர் உள்பட அனைத்து கிளை மண்டல மேலாளர்களுக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பஸ்கள் இயக்கம்.
    • தொடர் விடுமுறையால் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சுபமுகூர்த்தம், 7-ந்தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி, 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாள் என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் 5, 6 மற்றும் 7-ந் தேதிகளில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 5, 6 மற்றும் 7-ந் தேதிகளில் ஆயிரத்து 30 பஸ்களும், மற்றும் 8-ந் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 6 மற்றும் 7-ந்தேதிகளில் 192,3150 பஸ்களும், மாதாவரத்தில் இருந்து 6 மற்றும் 7-ந் தேதிகளில் 20 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×