search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்லிமலை"

    • சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலம் தொடங்கியதும் வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தினமும் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, தம்மம்பட்டி, சேலம் மாநகர பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் 17.4 மி.மீ. மழை பெய்தது. மேலும் ஏற்காட்டில் 6.6 மி.மீ. மழையும், தம்மம்பட்டியில் 8 மி.மீ. மழையும் என மாவட்டம் முழுவதும் 43 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்தது.

    நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் மோகனூர், ராசிபுரம், திருச்செங்கோடு, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மோகனூர்-34, பரமத்திவேலூர்-1, புதுச்சத்திரம்-12, ராசிபுரம்-4, திருச்செங்கோடு-11.20, கலெக்டர் அலுவலகம்-3.50, கொல்லிமலை-2. என மாவட்டம் முழுவதும் 66.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதற்கிடையே பேரிடர் மேலாண்மை துறையிடம் இருந்து இன்று முதல் 21-ந் தேதி வரை 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொல்லிமலை சுற்றுலா பகுதிகளான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் மேற்கண்ட சுற்றுலா தலங்களுக்கு வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பெய்யும்மழையின் அளவினை பொறுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவித்து உள்ளார்.

    • இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
    • நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.

    சேலம்:

    ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.

    இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மற்றும் மேட்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

    வழக்கமாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். தற்போது சராசரியாக 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தினம் வருகிறார்கள்.

    இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், இருசக்கர வாகனங்கள், பஸ்களில் வந்தனர்.இதுபோல் மேட்டூருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

    அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்த அவர்கள் பின்னர், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். பூங்காவில் உள்ள மீன் காட்சியகம், மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்புப் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலையில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழச்சி அடைந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
    • கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    கொல்லிமலை:

    கொல்லிமலை ஆகாய நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.

    இது கடல் மட்டத்திலிருந்து 1350 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.

    தற்போது கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது.
    • அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது. இங்கு அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிகை அம்மன் கோவில், மாசி பெரியண்ணன் சாமி கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, வாசலூர்பட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளது. விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்த நிலையில் அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். அருவிக்கு செல்லும் பாதை மற்றும் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    • செம்மேட்டில் சீக்குப்பாறை, சேலூர், கோயிலூர் வியூ என 3 வியூ பாயின்ட்கள் அருகருகே அமைந்துள்ளன.
    • அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.

    சேந்தமங்கலம்:

    இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது. இதனால் இங்கு எல்லாம் சீசனிலும் சுற்றுலா பயணிகள் வருகைப்புரிவார்கள். குறிப்பாக கொல்லிமலை முக்கிய இடமாக இருப்பது ஆகாய கங்கை, மாசிலா அருவி, அறப்பள்ளீஸ்வரர், கொல்லிபாவை என பல இடங்கள் உள்ளது.

    70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் செம்மேடு என்ற ஊர் வருகிறது. இதுதான் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். இங்கிருந்து வழிநெடுகிலும் லாட்ஜ், ஹோட்டல், ரிசார்டுகள் காணப்படுகின்றன.

    செம்மேட்டில் சீக்குப்பாறை, சேலூர், கோயிலூர் வியூ என 3 வியூ பாயின்ட்கள் அருகருகே அமைந்துள்ளன.

    இந்த மூன்றும் கொல்லிமலையின் அழகை ரசிக்க உதவுகின்றன. செம்மேட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் 'அறப்பளீஸ்வரர் கோயில்' அமைந்திருக்கிறது.

    அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. இங்கு வரும் தண்ணீரானது பல்வேறு மூலிகை மரம் மற்றும் செடிகளை கடந்து வருவதால் மூலிகை நறுமணம் வீசும். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வானில் இருந்து நீர் வீழ்வது போல் இருப்பதால் பார்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கும்.

    இங்கு செல்வதற்கு நுழைவு கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சுமார் 1,200 படிகள் செங்குத்தாக இறங்க வேண்டும். நல்ல உடல்நிலை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஏனென்றால் படிகள் மிகவும் செங்குத்தாக இருப்பதால் இறங்குவதும், ஏறுவதும் கடினம். கிட்டத்தட்ட 140 அடி உயரம்கொண்டது இந்த அருவி.

    படிக்கட்டுகளில் இறங்கி அருவிக்கு அருகில் செல்ல, செல்ல அருவியில் கொட்டும் தண்ணீரில் இருந்து வரும் சாரல் முழுவதுமாக குளித்தது போல மாற்றிவிடும். ஆகாய கங்கை அருவி கிட்டத்தட்ட 300 அடி உயரம்கொண்டது. இதில் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும்.

    ஆகாய கங்கை பார்க்கும்போது இயற்கையின் ஒட்டு மொத்த அழகையும் நம்ம கண் முன்னாடி தோன்றும். மேலே இருந்து விழும் தண்ணீர் ஊசி போன்று நம் உடல்மேல் படும். இதனால் ஊசி அருவியும் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.

    இதில் ஏப்ரல் மே, ஜூன் மாதங்கள் குறைந்த அளவே நீர் வருகிறது . ஜுலை மாதங்களில் மழைக்காலங்களில் சீசன் ஆரம்பிக்கிறது.

    தற்போது நம் அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையும் முற்றிலும் குறைந்து காணப்பட்டது. அருவில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • கொல்லிமலையில் மழை இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சீரான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் இங்கு குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
    • 50-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து பனிமூட்டம் நிலவுவதால், மேலே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஏறிய விட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பணிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை, தொடர்ந்து பெய்த மழையால் கொல்லிமலையில் சீதோசன நிலை முற்றிலும் மாறி குளிர்ந்த காற்று வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொல்லிமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் மழை இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சீரான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் இங்கு குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதையடுத்து விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்தனர். தொடர்ந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    50-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து பனிமூட்டம் நிலவுவதால், மேலே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஏறிய விட்டு வருகின்றன. மேகமூட்டம் மலைகளை கடந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. சென்னை, பெங்களூரு, ஆந்திரா, திருச்சி, கரூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், கொல்லிமலையில் பல்வேறு இடங்களையும் சுற்றி பார்த்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கடைகளிலும் வியாபாரம் களைக்கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×