search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் கடித்து"

    • கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார்.
    • சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், உப்பு பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). கர்நாடக மாநிலம் மைசூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவரை நாய் கடித்துள்ளது. ஆனால் அதற்கு சிகிச்சை பெறாமல் முனுசாமி இருந்து விட்டார்.

    இந்தநிலையில் வெள்ளகோவிலுக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது டாக்டர், உங்களை ஏதேனும் நாய் கடித்து உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திருச்சியில் உள்ள நாய் கடி சிறப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    முனுசாமி நாய் கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் கதிரவன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே உள்ள நெய்வேலி தென்பாதி மற்றும் வடபாதி கிராமங்களில் நாய்கள் அதிகமாய் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நெய்வேலி கடை வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 24), மருதேஷ், நெய்வேலி வடபாதி கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரன், ஆகிய மூவரையும் சுற்றி திரிந்த வெறிநாய் கடித்தது.

    இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாய் ஒன்று மானை துரத்தி கடித்து குதறியது.
    • வனத்துறையினர் அங்குள்ள வனப்பகுதியில் மானை குழி தோண்டி புதைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் வனப் பகுதி சுமார் 1700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதியில் ஏராள மான மான்கள் வசித்து வருகிறது.

    தற்போது வறட்சி நிலவுவதால் இந்த மான்களுக்கு வனத்து றை சார்பில் ஆங்கா ங்கே தண்ணீர் தொட்டி கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மான்கள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்கு தண்ணீ ரைத் தேடி சென்று வருகிறது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து சுமார் 5 வயதுடைய ஒரு ஆண் மான் தண்ணீர் தேடி அங்குள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளது.

    அப்போது அங்கு சுற்றி திரிந்த நாய் ஒன்று மானை துரத்தி கடித்து குதறியது. இதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சென்னிமலை கால்நடை மருத்துவர் சு.விஜயகுமார் இறந்த மானை பிரேத பரிசோதனை செய்தார்.

    அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்குள்ள வனப்பகுதியில் மானை குழி தோண்டி புதைத்தனர்.

    • மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது.
    • இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சத்யா நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் அஞ்சலி, பிரவீன், தமிழ்ச்செல்வன், பிரவீனா ஆகிய 4 பேரையும், நேற்று மாலை அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் கடித்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் சத்யா நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.

    மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×