என் மலர்
நீங்கள் தேடியது "நாய் கடித்து காயம்"
- எலும்புகள் வெளியில் தெரியும் அளவுக்கு சதைகளை குதறி எடுத்தது.
- நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
திருமங்கலம்:
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வெளிநாட்டு இனமான ராட்வீலர் என்ற நாய் கடித்து குதறியதில் 5 வயது சிறுமி ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து ராட்வீலர் என்ற நாய்களை அப்புறப்படுத்த மாகராட்சி உத்தரவிட்டது.
வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இருந்தபோதிலும் பலர் செல்லப்பிராணிகளாக வெளிநாட்டு நாய் இனங்களை வளர்ப்பதை கவுரமாக கொண்டு வளர்த்து வருகிறார்கள். அப்படி வளர்த்த ஒரு நாய் தனது எஜமானரையே கடித்து குதறியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுசாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர்கள் கண்ணன்-ஜான்சி ராணி தம்பதியினர். இவர்கள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் 2 வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். ஜான்சி ராணியின் மகன் சென்னையில் வசித்து வருவதால் தம்பதியினர் மட்டுமே வீட்டிலிருந்து நாய்களை பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காய வைத்த துணிகளை எடுப்பதற்காக மாலை 5 மணி அளவில் ஜான்சிராணி மாடிக்கு சென்றுள்ளார். அப்போது நாயின் அருகில் இருந்த துணியை எடுக்க முயன்ற போது திடீரென ஒரு நாய் ஜான்சிராணி மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்து குதறியது. இதில் அவரது இடது கை பலத்த சேதம் அடைந்து சிதைந்து போனது.
கையில் இருந்த எலும்புகள் வெளியில் தெரியும் அளவுக்கு சதைகளை குதறி எடுத்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தாலும், நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. பின்னர் ஒரு வழியாக நாயிடம் இருந்து தப்பித்து மாடியில் இருந்து மெதுவாக ஜான்சி ராணி கீழே இறங்கி வந்துள்ளார்.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஜான்சி ராணி இடது கை மிகவும் சேதம் அடைந்திருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவயதில் இருந்து பழக்கப்பட்ட நாய், வளர்த்த வரையே கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாடியில் இருக்கும் நாயை கட்டிப்போட்டு வைக்காததால் அப்பகுதியில் குடியிருக்கும் அனைவரும் வெளியே வர பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
- போலீசில் புகார்
- நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் தகவல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று பள்ளிக்குச் சென்று வீடு திரும்பினார். அதன் பிறகு பெற்றோருடன் சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது போலீஸ் நிலைய வீதியில் கடைக்குச் சென்ற பள்ளி மாணவியின் கையை நாய் கடித்தது. காயமடைந்த சிறுமி சந்தைக்கோடியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மேலும் அந்த நாய் கடைக்கு சென்ற ஒருவரையும் கடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் உடனடியாக ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளருக்கு நாய்கள் பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி நாய்கள் பிடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நாய்கள் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.