என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கார்த்திகை தீபத்திருவிழா"

    • நெய் மற்றும் உபயதாரர்கள் மூலமாக பெறப்பட்ட எண்ணை ஆகியவை கொண்டு கொப்பரைகளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
    • விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி முருகமலை பரமேஸ்வரன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. தீபத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.சாமிக்கு சிறப்பு அபிசேகம் செய்து பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    மாலை சரியாக 5.55மணிக்கு திருக்கோயில் வழிபாட்டு முறைப்படி சிறப்பு பூஜை செய்து கிராம சூடக்குடம் மற்றும் மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் இருந்து பெறப்பட்ட நெய் மற்றும் உபயதாரர்கள் மூலமாக பெறப்பட்ட எண்ணை ஆகியவை கொண்டு கொப்பரைகளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

    விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் அருணாசேகர் செய்திருந்தார். திருவிழாவிற்கான பாதுகாப்பு பணியினை தேவதானப்பட்டி போலீசார் மற்றும் வனச்சரக அதிகாரிகளும் செய்தனர். தேவதானப்பட்டி பேரூராட்சி துப்பரவு மற்றும் சுகாதார பணி செய்தனர்.

    • சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தேரோட்டம் வருகிற 26-ந்தேதி காலையில் நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதந்தோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக காலை உத்தமர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு காலை 7:15 மணிக்கு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

    தொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் சந்தனம், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தர்ப்பை புல், மா இலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றன.

    விழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், அன்னவாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 25-ந்தேதி நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த கிரீடம் செங்கோல் வழங்கி சிறப்பு ஆராதனை நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி காலையில் நடைபெறுகிறது. அன்று மாலையில் கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருக்கார்த்திகை தினம் அன்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும்.
    • ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும்.

    கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதால் ஏராளமான பலன்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். இதனால் தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.


    வெள்ளி, தங்கம், பஞ்சலோகம் என எந்த விளக்கையும் ஏற்றலாம். ஆனாலும், மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது கூடுதல் மகிமையாகும்.

    கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும். ஏனெனில் இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்வதாக ஐதீகம்.

    அதேபோல, தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் உறைந்துள்ளனர்.

    தீபம் ஏற்றும்போது, சூரிய உதயத்திற்கு முன்பாகவே ஏற்றிவிட வேண்டும். குறிப்பாக, பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவதால், புண்ணியம் சேரும்.

    மாலை வேளைகளில் 6 மணிக்கு வீட்டின் வாசலில் 2 அகல் விளக்குகளை ஏற்றுவதால், குடும்பத்திற்கு புண்ணியம் கிடைக்கும். முன்வினைப் பாவங்களும் நீங்கும். திருமணத் தடைகளும் விலகிவிடும்.

    கார்த்திகை மாதங்களில் தீபங்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டும். முக்கியமாக, கோலமிடப்பட்ட வாசலில் 5 அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.


    திண்ணையில் 4 அகல் விளக்குகளும், மாடங்களில் 2 அகல் விளக்குகளும், நிலைப்படியில் 2 அகல் விளக்குகளும், நடையில் 2, முற்றத்தில் 4 அகல் விளக்குகளும் ஏற்ற வேண்டும்.

    தினமும் விளக்கேற்ற முடியாவிட்டாலும், துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய இந்த 3 தினங்களிலாவது கண்டிப்பாக தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    விளக்கேற்றும்போது, ஒரு முகம் ஏற்றினால், நினைத்த செயல்கள் நடக்கும் என்பார்கள். இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால், புத்திரதோஷம் நீங்கும்.

    நான்கு முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் சேரும். சர்வ பீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும். அதேபோல விளக்கின் திசையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    குடும்பத்திலுள்ள துன்பங்கள், இன்னல்கள் நீங்க வேண்டுமானால் கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றலாம். கடன் தொல்லை தீர வேண்டுமானால், மேற்கு திசையிலும், திருமணத்தடை நீங்க வேண்டுமானால் வடக்கு திசையிலும் விளக்கேற்றலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

    திருக்கார்த்திகை தினம் அன்று வீட்டு முற்றத்தில் 4, சமையலறையில் 1, நடையில் 2, பின்கட்டில் 4, திண்ணையில் 4, மாட குழியில் 2 , நிலைப்படியில் 2, சாமி படத்துக்கு கீழே 2, வெளியே யம தீபம் ஒன்று, கோலமிடும் இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும். இந்த 27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிப்பதாகும்.

    கார்த்திகை மாதத்தின் 30 நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.
    • தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாள் உற்சவம் இன்று விமரிசையாக நடந்தது. நாளை மறுநாள் 10-ந் தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வரும்.

    தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந்தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம்தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சியளிக்கும். அதையொட்டி, தொடர்ந்து 11 நாட்களும் மலையில் தீபம் ஏற்றப்படும். அதற்காக, 4,500 கிலோ தூய நெய் ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1,500 மீட்டர் திரியும் தயார் நிலையில் உள்ளது.

    இதில், மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் தீட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்துள்ளனர். மேலும், தீப கொப்பரையில் உமையாளுக்கு இடபாகம் அருளிய அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில், மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். மலையில் தற்போது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால், தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டு வருகிறது.

    தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கியுள்ளனர். மாட வீதிகள், கிரிவலப் பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் தேர் இடத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையொட்டி 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசார் தங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படைகளை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், ஆட்டோக்கள் கட்டணங்கள் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்கள் நிறுத்தவும் ஆங்காங்கே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக தீபம் ஏற்றும் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தடுத்து பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனவே, வருகிற 13-ந்தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுனர் குழு நேரடி ஆய்வு நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர்.

    அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர்கள் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக்குழுவினர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு தொடர்பாக வல்லுநர்குழு கள ஆய்வை தொடங்கினர்.

    இந்த குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக போலீசார், பாம்புக்கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப்படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு, வனத்துறை குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழுவும் உடன் சென்றனர்.

    மலை அடிவாரத்தில் பாதுகாப்பு கருதி அவசரகால ஊர்தியுடன் கூடிய மருத்துவக்குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வல்லுநர் குழு இன்று மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    பக்தர்கள் மலையேறினால் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உள்ளனர்.

    அதன் அடிப்படையில், மலை ஏற பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை 2 நாட்களில் அரசு அறிவிப்பு வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • நாளை 2 மணி முதல் மாலை 6 மணி வரை மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.
    • கோவிலில் 4 திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 7-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலையில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, யாகசாலை, தங்கரதம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று வந்தன.

    6ம் நாளான இன்று சாயரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது மூலவர் சன்னதியிலும் கோவிலில் 4 திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.

    நாளை கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    தொடர்ந்து 4.30 மணியளவில் சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலைக்கு சென்ற பின்பு பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றுதலும், சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறும்.

    சொக்கப்பனை ஏற்றப்படுவதால் நாளை தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை திருக்கார்த்திகையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. அதன் பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மலைக்கோவிலுக்கு செல்ல யானைப்பாதையையும், கீழே இறங்குவதற்கு படிப்பாதையையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    ×