search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் கப்பல்"

    • 160 பயணிகள் பயணிக்கும் இந்த கப்பலில் 133 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
    • கப்பலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் காலை 5.30 மணிக்குள் நாகை துறைமுகத்திற்கு வந்துவிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது.

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இதையடுத்து நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இயக்கப்பட்ட 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

    ஆனால் அந்த கப்பல் போக்குவரத்து குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.

    இந்த நிலையில் 'சிவகங்கை' கப்பல் அதிகாரப்பூர்வமாக இயக்கப்படும் என்று கப்பலை இயக்கும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் நேற்று நாகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சுபம் குரூப் ஆப் கம்பெனி மற்றும் இன்ட் ஸ்ரீ ப்ரே சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து 'சிவகங்கை' என்ற பெயரில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை வருகிற 13-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

    160 பயணிகள் பயணிக்கும் இந்த கப்பலில் 133 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ரூபாயின்படி 18 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் ரூ.4800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணி 60 கிலோ எடை வரை உடைமைகள் எடுத்து செல்லலாம்.

    நாகை துறைமுகத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசந்துறையை சென்றடைகிறது. மீண்டும் அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்தை வந்தடைகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

    கப்பலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் காலை 5.30 மணிக்குள் நாகை துறைமுகத்திற்கு வந்துவிட வேண்டும். காலதாமதம் ஏற்படாதவாறு பயணிகளை பரிசோதனை செய்வதற்காக 4 கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
    • இந்தப் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 டிக்கெட் (ரூ.6500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.7670) விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இலங்கையின் இணையதளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.

    முதல் நாள் பயணத்துக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி. வரி, 75 சதவீத சிறப்பு சலுகையுடன் ரூ.2,803 மட்டும் வசூலிக்கப்பட்டது.

     

    இந்தப் பயணிகள் கப்பல் ஒரு மணிநேரத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் பயணிகளுக்குத் தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோக குளுகுளு ஏ.சி. வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சி பெட்டிகள் தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோக ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆபத்து காலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் அனைத்தும் உள்ளன.

    இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின் வட கிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மார்ச் மாதம் முதல் தினமும் போக்குவரத்து தொடங்க உள்ளது.

    • நாகப்பட்டினம், இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • நாகப்பட்டினம், காங்கேசன்துறை இடையிலான படகு சேவை மற்றொரு முக்கியமான படியாகும் என்றார்.

    புதுடெல்லி:

    நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

    இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்களுடன் இணைவது எனது பாக்கியம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை எமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல்.

    இந்தியாவும் இலங்கையும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரிகத்தின் ஆழமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன.

    நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு நீண்ட காலமாக அறியப்படுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் துறைமுகம் ஒரு மையமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க கால இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை போன்றவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி பேசுகின்றன.

    மகா கவிஞர் சுப்பிரமணிய பாரதி தனது 'சிந்து நதியின் மிசை' பாடலில், நமது இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் பற்றிப் பேசியுள்ளார். இந்த படகு சேவையானது அந்த வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது.

    இலங்கை ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சமீபத்திய விஜயத்தின்போது, எமது பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலை நோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையக் கருப்பொருள். இணைப்பு என்பது 2 நகரங்களை நெருக்கமாகக் கொண்டு வருவது மட்டுமல்ல. இது நம் நாடுகளை நெருக்கமாகவும், நம் மக்களை நெருக்கமாகவும், நம் இதயங்களை நெருக்கமாகவும் கொண்டு வருகிறது. இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. 2015-ம் ஆண்டில் நான் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதை நாங்கள் கண்டோம். பின்னர், இலங்கையிலிருந்து புனித யாத்திரை நகரமான குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம்.

    சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 2019-ல் தொடங்கியது. இப்போது, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை மற்றொரு முக்கியமான படியாகும்.

    இந்தியாவும் இலங்கையும் பின்-டெக் மற்றும் எரிசக்தி போன்ற பரந்த அளவிலான துறைகளில் இணைந்து செயல்படுகின்றன. யு.பி.ஐ.காரணமாக இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்துதல் ஒரு வெகுஜன இயக்கமாகவும் வாழ்க்கை முறையாகவும் மாறியுள்ளது. யு.பி.ஐ. மற்றும் லங்கா பே-ஐ இணைப்பதன் மூலம் பின்-டெக் துறை இணைப்பில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நமது வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்த நமது நாடுகளுக்கு ஆற்றல் பாதுகாப்பு முக்கியமானது. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த எங்கள் எரிசக்தி கட்டங்களை இணைக்கிறோம்.

    முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டு என்பது நமது இருதரப்பு உறவின் வலுவான தூண்களில் ஒன்றாகும். யாரையும் விட்டு வைக்காமல், வளர்ச்சியை அனைவருக்கும் எடுத்துச் செல்வதே எங்கள் பார்வை. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இலங்கையில் இந்திய உதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களின் வாழ்க்கையைத் தொட்டன. வடக்கு மாகாணத்தில் வீடுகள், நீர், சுகாதாரம் மற்றும் வாழ்வாதார ஆதரவு தொடர்பான பல திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

    காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவை வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ரெயில் பாதைகளை சீரமைக்க வேண்டும்; யாழ் கலாசார நிலையத்தை நிர்மாணித்தல், இலங்கை முழுவதும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை நடைமுறைப்படுத்துதல், டிக் ஓயாவில் உள்ள மல்டி-ஸ்பெஷாலிட்டி

    மருத்துவமனையை நாங்கள் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ் ஆகியவற்றின் பார்வையுடன் பணியாற்றி வருகிறோம்.

    சமீபத்தில் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தியது அனைவரும் அறிந்ததே. வசுதைவ குடும்பகம் பற்றிய எங்களது தொலைநோக்கு சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்பட்டது. இந்த பார்வையின் ஒரு பகுதி, நமது அக்கம்பக்கத்திற்கு முதலிடம் கொடுப்பது, முன்னேற்றம் மற்றும் செழுமையைப் பகிர்வது. ஜி20 மாநாட்டின் போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்பட்டது. இது ஒரு முக்கியமான இணைப்பு வழித்தடமாகும்.

    இது முழு பிராந்தியத்திலும் பொருளாதார தாக்கத்தை உருவாக்கும். 2 நாடுகளுக்கிடையிலான பலதரப்பட்ட தொடர்பை நாம் வலுப்படுத்துவதால் இலங்கை மக்களும் இதன்மூலம் பயனடைவார்கள். இன்று படகுச் சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்தமைக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

    மக்களின் பரஸ்பர நலனுக்காக எமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என தெரிவித்தார்.

    • வருகிற 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
    • டிக்கெட் விலை நபர் ஒருவருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ரூ. 6 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பணிகள் விரைவாக நடந்து வரும் வேளையில் வருகிற 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது. இதனால் நாகப்பட்டினம் துறைமுகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர்.

    இந்த குழுவினர் பயணிகள் சோதனை கருவி, மருத்துவ பரிசோதனை கருவி, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை சோதனை செய்யும் கருவி, உடமைகளை பாதுகாப்பாக வைப்பது என அனைத்திற்கும் தனித்தனியாக பிரம்மாண்டமான அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி துறைமுகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இதற்கான டிக்கெட் விலை நபர் ஒருவருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ரூ. 6 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ஒரு பயணி இலவசமாக 50 கிலோ எடையுள்ள பொருட்கள் எடுத்து செல்ல முடியும். இலங்கை செல்வதற்கு பாஸ்போர்ட், விசா ஆகியவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விமான நிலையத்தில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர் செய்யது ஹாசிப் ஜூஹைர் கூறினார்.

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் வருகிற 10-ந் தேதி காலை 7.30 மணிக்கு கப்பல் புறப்பட்டு 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த கப்பலின் சோதனை ஓட்டமானது இன்று காலை 9.45 மணிக்கு தொடங்கி நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் 14 அதிகாரிகள் கப்பலில் பயணம் செய்தனர். இது மீண்டும் இன்று இலங்கைக்கு திரும்பி வர உள்ளது. இதேபோல், நாளை சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது. துறை சார்ந்த பணிகளின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
    • அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா-இலங்கை இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து நாகை துறைமுகத்தில் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு சில நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாகை துறைமுகத்தில் இருந்து 2 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்துவிட்டது. மேலும் பயணிகள் கட்டணம் நிர்ணயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து துறைமுக நிர்வாகத்துடன் மத்திய, மாநில அரசு துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்காக கொச்சியில் இருந்து ஒரு கப்பல் சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த கப்பல் இலங்கை வழியாக நாளை (சனிக்கிழமை) மாலை அல்லது 8-ந் தேதி காலை நாகைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு பிறகு அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும். இதைத்தொடர்ந்து ஓரிரு வாரத்தில் நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

    இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

    • பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

    நாகை:

    அமைச்சர் எ.வ.வேலு இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் உள்ள காங்கேச துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

    இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    • கப்பல் 2 முதல் 5 இரவுகளுடன் கூடிய பயணத்தை கொண்ட பேக்கேஜுகளுடன் சுற்றுலா கப்பலாகவும் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே பயணிகள் கப்பல்கள் இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    அந்தவகையில் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    எம்.வி. எம்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட உள்ள இந்த புதிய பயணிகள் கப்பலை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இந்த கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் துறை ஆகிய 3 துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கப்பல் 2 முதல் 5 இரவுகளுடன் கூடிய பயணத்தை கொண்ட பேக்கேஜுகளுடன் சுற்றுலா கப்பலாகவும் இயக்கப்படுகிறது.

    சென்னை-இலங்கை இடையே பயணிகள் கப்பலை தொடங்கி வைத்த பின்பு மத்திய மந்திரி சர்பானாந்தா சோனோவால் சென்னையில் நடந்த வர்த்தக மேம்பாட்டு திட்டம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர், 'துறைமுகங்களில் சரக்குகளை கையாள்வதற்கான செலவை குறைக்க வேண்டும். நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியா முன்னோடியாக இருப்பதற்கு வர்த்தக அமைப்புகள் பெரும் பங்காற்றி வருகின்றன' என்றார்.

    இதன்பின்பு, 2022-23-ம் கல்வியாண்டில் சென்னை துறைமுகசபை பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு மத்திய மந்திரி விருது வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுகசபை தலைவர் சுனில்பாலிவால், துணைத்தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை ஜனவரியில் தொடங்கப்படும் என்றார்.

    கொழும்பு:

    இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி.சில்வா கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    புத்த கயா செல்லும் யாத்ரீகர்களுக்கும், வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.

    மேலும், இத்திட்டத்தின் முதல்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை வரும் ஜனவரி மாத மத்தியில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    ×