search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்"

    • கோவை சரக டி.ஜ.ஜி விஜயகுமார் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
    • வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. வரும் மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதற்காக ஈரோடு அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் கோவை சரக டி.ஜ.ஜி விஜயகுமார் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி உள்பட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க.வில் ஏதாவது ஒரு அணியை துணிந்து ஆதரிப்பதா? அல்லது துணிந்து களம் இறங்குவதா? என்ற இரண்டு வழிகளும் தான் பா.ஜனதாவுக்கு உள்ளது.
    • எதை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கப் போவது எந்த கட்சி? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த முறை த.மா.கா. போட்டியிட்ட நிலையில் இந்த முறை அ.தி.மு.க. களம் இறங்க முடிவு செய்தது. இதற்காக த.மா.கா.விடம் பேசி உறுதியும் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் நாங்களும் போட்டியிடப் போகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்து இருக்கிறார்.

    அத்துடன் இருதரப்பினரும் சென்னையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்று மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசி ஆதரவும் கோரினார்கள்.

    இரு தரப்பும் ஆதரவு கோரியதால் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற தர்ம சங்கடமான நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டு உள்ளது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி அ.தி.மு.க. என்பதால் அந்த கட்சி போட்டியிடுவதில் பிரச்சினை இல்லை.

    ஆனால் இரு தரப்பும் மல்லு கட்டுவதால் பா.ஜனதாவும் யோசிக்கிறது. களம் இறங்கி பலத்தை பார்த்து விடுவது என்று யோசித்த பா.ஜனதாவுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் நிலைமை சாதகமாகி இருக்கிறது.

    யாருக்கு ஆதரவளித்தாலும் கூட்டணிக்குள் பாதிப்பு வரும் என்பதை காரணம் காட்டி பா.ஜனதாவே போட்டியிட்டு அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டுப்பெறலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே தேர்தல் தேதி அறிவித்ததுமே தேர்தல் பணிகளை கவனிக்க பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 14 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.

    அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான சரஸ்வதி உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர்.

    இவர்கள் தொகுதி முழுவதும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மாநில தலைமைக்கு வழங்கி உள்ளனர்.

    இதுதவிர கட்சி மேலிடம் அனுப்பிய தனிக்குழு ஒன்றும் சர்வே நடத்தி உள்ளது. இந்த குழுக்களின் அறிக்கை இன்று கொடுக்கப்படுகிறது.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் தொகுதியின் கள நிலவரத்தை ஆய்வு செய்கிறார்கள். தொகுதி நிலவரம் சாதகமாக இருந்தால் பா.ஜனதா கண்டிப்பாக போட்டியிடும்.

    அதேநேரம் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சமாதானப்படுத்தி தங்களுக்காக விட்டுக் கொடுக்கும்படி கேட்கும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

    இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து பா.ஜனதா தேர்தல் குழுவினர் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

    ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியாக களம் இறங்கினால் காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று விடும்.

    எனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சமரசம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கிறார்கள்.

    பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார். அதேபோல் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பா.ஜனதா போட்டியிட்டால் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுடன் நேருக்குநேர் மோத பா.ஜனதா தயாராகி வருகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக தங்களது செல்வாக்கை தெரிந்து கொள்ளும் வகையில் பா.ஜனதா இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது.

    அ.தி.மு.க.வில் ஏதாவது ஒரு அணியை துணிந்து ஆதரிப்பதா? அல்லது துணிந்து களம் இறங்குவதா? என்ற இரண்டு வழிகளும் தான் பா.ஜனதாவுக்கு உள்ளது.

    இதில் எதை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறுகிறது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

    இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட த.மா.கா. ஆதரவு தெரிவித்தது. வேட்பாளர் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சந்தித்தனர்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ.சி.சண்முகம், தமிழக அரசியலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால், புதிய நீதிக் கட்சி அதனை வரவேற்கும் என தெரிவித்தார்.

    • தமிழகத்தில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 101 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 102-வது இடைத்தேர்தல் ஆகும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் திராவிட கட்சிகளே மாறி, மாறி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது மகன் திருமகன் ஈவெராவுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்தார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜா போட்டியிட்டார்.

    இதில் 8 ஆயிரத்து 904 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இதனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு தொகுதி காங்கிரஸ் வசமானது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜா 58,396 ஓட்டுகள் பெற்று குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 11,629 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 10,005 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது. இதையடுத்து இந்த தொகுதியில் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும். தி.மு.க. அரசின் 1½ ஆண்டு ஆட்சி காலத்தில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது தி.மு.க. போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கடந்த முறை த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அ.தி.மு.க. போட்டியிட போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான சந்திரகுமார், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட த.மா.காவும் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.

    காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 2-வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களும் மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் த.மா.கா.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    கடந்த முறை எங்களது வேட்பாளர் யுவராஜா குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனவே இந்த முறை நாங்களும் போட்டியிட விரும்புகிறோம். இதுகுறித்து எங்களது கட்சி தலைவர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி வேட்பாளரை அறிவிப்பார். அதற்கான காலம் இன்னும் உள்ளது.

    இதற்கிடையே தி.மு.க-அ.தி.மு.க. இடையே நேரிடையாக பலப்பரீட்சை ஏற்படுமா? அல்லது கூட்டணி தர்மத்திற்காக மீண்டும் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்று தொண்டர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 101 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 102-வது இடைத்தேர்தல் ஆகும். இதுவரை நடந்த 101 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 29 முறை எதிர்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

    இதில் 1959-ல் அருப்புக்கோட்டையில் எஸ்.சுந்தரபாரதி, 2017-ல் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவர். மற்றவர்கள் ஆளும் கட்சி அல்லது அதன் கூட்டணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு இடைத்தேர்தலையும் ஆளும் கட்சியினர் கவுரவ பிரச்சினையாக கருதி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதற்கு விடை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

    • 1500 வாக்காளர்களுக்கு 1 வாக்கு சாவடி என்ற வகையில் இப்போது உள்ளது. கொரோனாவின் போது இந்த எண்ணிக்கையை இரண்டாக பிரித்தோம்.
    • இப்போது 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அளவில் உள்ளது.

    சென்னை :

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி: வாக்காளர் பட்டியலில் இனிமேலும் பெயர் சேர்க்க முடியுமா?

    பதில்: தாராளமாக பெயர் சேர்க்கலாம். 17 வயது பூர்த்தியானவர்களும் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம். 18 வயது ஆனதும் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு விடும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வருடத்தில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பணிகள் நடைபெறும்.

    கேள்வி: வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை கேட்டு பெற முடியுமா?

    பதில்: 100 ரூபாய் செலுத்தினால் பி.டி.எப். வடிவத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதில் போட்டோ இருக்காது.

    கேள்வி: வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அங்கிருந்த படியே தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

    பதில்: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் பட்சத்தில் இங்கு வந்து தான் ஓட்டு போட வேண்டும்.

    கேள்வி: புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை எப்போது கிடைக்கும்?

    பதில்: 1 மாதத்தில் வீடுகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.

    கேள்வி: தமிழகத்தில் வாக்குசாவடிகள் அதிகரிக்கப்படுமா?

    பதில்: 1500 வாக்காளர்களுக்கு 1 வாக்கு சாவடி என்ற வகையில் இப்போது உள்ளது. கொரோனாவின் போது இந்த எண்ணிக்கையை இரண்டாக பிரித்தோம். ஆனால் இப்போது 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அளவில் உள்ளது.

    கேள்வி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக புலம்பெயர்ந்த வாக்காளர்கள் ரிமோட் மூலம் வாக்களிப்பதற்கான ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.முக.வுக்கு எத்தனை கடிதம் அனுப்பினீர்கள்?

    பதில்: முதலில் ஆள் மூலம் கொடுத்து அனுப்பினோம். அதை வாங்க மறுத்ததால் ஸ்பீடு தபாலில் அனுப்பி வைத்தோம். அவர்கள் அதை திருப்பி அனுப்பிய தகவலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம்.

    கேள்வி: அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தபால் வந்தால் தான் பெற்றுக்கொள்வோம் என்று சொல்கிறார்களே. எனவே அந்த பதவியை குறிப்பிட்டு மீண்டும் தபால் அனுப்பப்படுமா? இந்திய தேர்தல் கமிஷன் இதுபற்றி ஏதும் கூறி இருக்கிறதா?

    பதில்: டெல்லியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    கேள்வி: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்து விட்டார்.

    இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்து விட்டீர்களா? அங்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும்?

    பதில்: 1 தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டால் அங்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் விதியாகும். அந்த அடிப்படையில் ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்துள்ளதால் இதுபற்றி தமிழக சட்டபேரவை செயலகத்தில் இருந்து இன்று எனக்கு தகவல் தருவார்கள். அதை இந்திய தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×