என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயான கொள்ளை"

    • சிவபெருமான் அக்னி குளத்திலே குளித்தார்.
    • சிவனார் இங்கு வந்து தங்கிய இரவு தான் மகாசிவராத்திரி

    சிவபெருமானுக்கும் பிரம்மாவிற்கும் ஏற்பட்ட சண்டையில் பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது. அதை ஏந்திய நிலையில் பித்து பிடித்தவராக கிளம்பி அகிலமெல்லாம் அலைந்து திரிந்தார் சிவபெருமான்.

    கபாலம் நீங்காத நிலையில் உள்ள சிவபெருமான் தண்டகாருண்யம் வழியாக செஞ்சி மாநகர் வந்து சேர்ந்தார். செஞ்சியிலே உள்ள மக்கள் கபாலம் நீங்க சங்கரனுக்கு 32 வித அபிஷேகங்களெல்லாம் செய்தார்கள். அப்போதும் அது நீங்கவில்லை.

    அந்த அபிஷேக நீர் சென்றதை தான் சங்கராபரணி ஆறு என்று சொல்லுகின்றார்கள். செஞ்சியிலே உள்ள மக்கள் பலரும் தாங்கள் மலையனூர் சென்றால் கையிலே உள்ள கபாலம் நீங்கி விடும் என்று சொல்ல, அதை கேட்ட சிவபெருமான் அப்போதே மலையனூர் செல்ல வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் உடனே மலையனூருக்கு வந்து சேர்ந்தார்.


    சிவபெருமான் அக்னி குளத்திலே குளித்தார். சிலநாட்கள் இங்கே தங்கியிருந்தால் தமது உடல்நிலை நன்றாகும் என்று நினைத்தார். மேலும் இங்கே நடப்பதை பார்க்கும் போது பலவகையிலே நம்பிக்கை ஏற்பட்டது. பிறகு பிச்சை எடுத்தார். அதை கபாலம் சாப்பிட்டது. சுடலைக்கு சென்று சாம்பலை உண்டார். அவருடைய பசியும் தீர்ந்தது.

    சிவனாரின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படி மாயவன் மாய மாளிகை ஒன்றை ஏற்படுத்தினார். மாளிகையை கண்ட சிவபெருமான் அங்கே போய் உறங்கலாமே என்று எண்ணி, மாளிகையின் வாசலிலே போய் நின்று, ''அம்மணி! பிச்சை! பர்வதா! பிச்சை! அன்னதாய்! அம்மணி!'' என்று பலமுறை குரல் கொடுத்தார்.

    அந்த குரல் கேட்டவுடன் பார்வதி தேவியார் துடித்து போனார். வந்திருப்பது தன் கணவர் என்று தெரிந்து கொண்டார். பிறகு வெளியே வந்து பார்த்தார். ''சுவாமி! சற்று பொறுங்கள் நான் கொடுக்கன் குப்பம் சென்று இப்போது தான் வந்தேன். உடனே சமையல் செய்து போடுகிறேன். சற்று அமருங்கள்!'' என்று சொல்லி வடக்கு வாயிற்படியில் திண்ணையிலே அமரச் செய்தார். அவரும் திண்ணையிலே போய் அமர்ந்தார்.

    உள்ளே சென்ற பார்வதி தேவியார் பிறகு விநாயகரை அழைத்து, ''மகனே! நீ இவரை கவனமாக நின்று பார்த்துக் கொள்ள வேண்டும். இவர் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கிறார். நீ உட்கார்ந்திருந்தால் உறங்கிவிடுவாய். அதனால் உனக்கு நிற்க சக்தி கொடுக்கிறேன். நீ நின்று காவல் செய்!'' என்றாள். விநாயகரும் காவல்காத்து நின்றார். அவர் தான் வடக்கு வாயிற்படி மேற்புறம் நிற்கும் சக்தி விநாயகர்.


    திண்ணையிலே அமர்ந்திருக்கும் சிவனாருக்கு உறக்கம் வந்தது. அமர்ந்திருந்த திண்ணையிலே படுத்துறங்கிவிட்டார்.

    சிவனார் இங்கு வந்து தங்கிய இரவு தான் மகாசிவராத்திரி என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் சிறிது நேரம் உறங்கிவிட்டு தாகம் எடுக்க நீர் வேண்டி மயானத்திற்கு சென்றார்.

    உள்ளே சென்ற பார்வதி தேவியார் ஆபத்சகாயரான விஷ்ணுவையும் லட்சுமியையும் இப்பொழுது வரவேண்டும் என்று வேண்டினாள். எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று கூப்பிடுவதால் கோபாலனையே, இங்கே விநாயகர் பெருமானாக அமர்த்தியுள்ளார். அவர்தான் மேற்கு வாயிற்படியில் வடபுறம் அமர்ந்திருக்கும் கோபால விநாயகராவார்.

    பார்வதி தேவியார் அழைப்பை ஏற்று விஷ்ணுவும் லட்சுமியும் உடனே வந்தார்கள். அவர்களிடம் அன்னையார், ''என் கணவன் கையிலிருக்கும் சுபாலம் நீங்க சீக்கிரம் ஒருவழி சொல்லுங்கள்'' என்றார்.

    இதற்கு பகவான் விஷ்ணு, ''பார்வதி மகாலட்சுமியிடத்திலே உள்ள அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகளை தயார் செய்து அந்த பிரம்ம கபாலத்திற்கு போடவேண்டும். அப்படி போடும்போது, உணவுகளை மூன்று உருண்டைகளாகச் செய்து, முதல் இரண்டு உருண்டைகளை கபாலத்திலே போட வேண்டும். மூன்றாவது உருண்டையை இறைக்க வேண்டும். மற்றவைகளை நான் சொல்வது போல நீ செய்ய வேண்டும் என்றார்.

    உடனே அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டது. அவற்றை எடுத்துக் கொண்டு கிழக்குவாசல் வழியாக காவல் தெய்வமான பாவாடைராயன் வீரபத்திரனுடன் பார்வதி அமாவாசை இரவு நடுநிசியிலே சென்றாள். அவர்களை பாதுகாக்க விஷ்ணுவும் உடன் சென்றார்.


    சிவனார் மயானத்திலே எலும்புகளை கடித்து நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு பார்வதி தேவியார் வந்து சேர்ந்தார். சிவனாரின் கையிலே உள்ள கபாலத்திற்கு முதல் உணவு உருண்டையை போட்டார். கபாலம் பசிமிகுதியால் சாப்பிட்டது. இரண்டாவது உணவு உருண்டையை போட்டார். அதையும் ருசிமிகுதியால் சாப்பிட்டது.

    விஷ்ணுவின் ஆலோசனைப்படி 3-வது உருண்டையை போடுவது போல பாவனை செய்தாள் பிரம்ம கபாலம் அதை சாப்பிட ஏங்கி நின்றது. அது ஏங்கி நிற்பதை பார்வதி பார்த்து விட்டாள். போடுவது போல பாவனை செய்து தூக்கி இறைத்தாள்.

    ருசி மிகுதியாக இருக்கவே கபாலம் பிரம்மன் கொடுத்த சாபத்தையும் மறந்து சிவபெருமானை விட்டுவிட்டு உணவுகளை பொறுக்கித் தின்றது. இந்த நிகழ்ச்சியைத்தான் அகிலமெங்கும் மயானசூறை என்று கொண்டாடுகிறார்கள்.

    • டிஜிட்டல் பேனர்கள் வைக்க தடை
    • வேலூர் போலீசார் அதிரடி உத்தரவு

    வேலூர்:

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் மயான கொள்ளை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மயானகொள்ளை விழாவில் செல்லவுள்ள தேரின் உயரம் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மயானக்கொள்ளை சாமி சிலை அமைக்கப்பட்ட வாகனத்தில் தீப்பிடிக்கக்கூடிய வகையில் உள்ள பொருட்களை பயன்படுத்தாமல், மின் சாதனப்பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உள்ளதா? என தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்தல் வேண்டும்.

    ஊர்வலத்தில் அலங்கரிக்கப்படும் சிலைகள் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். மேலும் ஒலி அளவு வடிவிலான நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்க வேண்டும். விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படக்கூடாது, மின் திருட்டு செய்திடல் கூடாது. நிகழ்விடத்தில் எவ்வித அரசியல் கட்சியினர் பேனர்களோ, மதத்தலைவர்கள் பேனர்களோ வைத்தல் கூடாது.

    பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், மதசார்பின்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வப்போது வருவாய், காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். சாமி சிலை ஊர்வலங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு 3 மணிக்குள் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு எவ்வித இடையூறும், இல்லாத வகையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

    சாமி சிலைகளை நான்கு சக்கர வாகனங்கள் அதாவது மினி லாரி, டிராக்டர் மூலமாக மட்டுமே ஏற்றிச் செல்லப்பட வேண்டும். மாறாக மாட்டு வண்டிகள் மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஏற்றிச்செல்லக்கூடாது.

    ஊர்வலத்தில் கலந்து கொண்டு காளி, காட்டேரி நீலி, சூலி, அனுமான் போன்ற பல வேடங்கள் தரித்து பல பிரிவுகளாக ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பக்தர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் கலந்து கொள்ளவேண்டும்.

    மயானக்கொள்ளை ஊர்வலத்தில் வரும் பக்தர்கள் மற்ற மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் ஒலிபெருக்கி அமைத்து இசை தட்டு முழங்கியோ, பேசிபோ பாடல் இசைத்தோ ஊர்வலத்தில் செல்ல அனுமதி இல்லை.

    மயானக் கொள்ளை ஊர்வலம் செல்லும் போது ஊர்வலத்தின் இடையிலோ அல்லது ஊர்வலத்தின் கடைசியிலோ செண்டமேளம், ஆகியவைகளை அடித்துக்கொண்டு ஊர்வலத்தில் வரக்கூடாது. தாரை தப்பட்டை

    மயானக் கொள்ளை ஊர்வலத்திற்கு முன்பு மட்டும் நிர்வாகிகளுடன் போக்குவரத்திற்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படாமலும் ஊர்வலத்தை நிறுத்தாமலும் நகர்ந்து கொண்டே மங்கள மேளம் அடித்து செல்லவும்.

    மயானக் கொள்ளை ஊர்வலம் செல்லும் போது வழிநெடுகிலும் பட்டாசுகளை ஆங்காங்கே வெடிக்கக் கூடாது. ஊர்வலம் ஆரம்பிக்கும் இடத்திலும், சாமி சிலை சேரும் சுடுகாட்டிலும் மற்றும் ஊர்வலம் நின்று பேச அனுமதிக்கப்பட்ட இடத்திலும் பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் வரவேண்டும்.

    மயானக் கொள்ளை ஊர்வலம் மசூதி மற்றும் சர்ச் வழியே செல்லும் போது ஊர்வலத்தில் செல்பவர்கள் மசூதிக்கோ, முஸ்லீம் மதத்தினருக்கோ புண்படும் வகையிலான செயல்களையோ செய்து கொண்டோ கோஷமிட்டுக்கொண்டோ அல்லது மசூதி முன்பு நின்று ஆட்டம் போடவோ கூடாது.

    மயானக் கொள்ளை ஊர்வலத்தில் செல்பவர்கள் பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலும் மற்றும் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் போஸ்டர் மற்றும் பேனர்களைக் வைக்க கூடாது.

    மயானக் கொள்ளை 19-ந் தேதி நடைபெற ஊர்வலத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஊர்வலம் நடைபெற உள்ள வேண்டும். அனுமதி இல்லாமல் பிற இடங்களுக்கு அனுமதி கிடையாது.

    மயானக் கொள்ளை ஊர்வலத்தில் வருபவர்கள் யாரேனும் மது அருந்திய நிலையில் வரக்கூடாது. அவ்வாறு யாரேனும் வந்தால் தேவைப்படும் பட்சத்தில் மது போதையில் இருப்பவர்களை அப்புறப்படுத்தி ஊர்வலத்தினை அமைதியாக நடத்திட காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும்.

    மயானக் கொள்ளை திருவிழா தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள் வைக்ககூடாது மீறி வைப்பவர்கள் மீது காவல்துறை எடுக்கும் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.

    சாமி ஊர்வலத்தை மாலை 6 மணிக்குள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு பழனி இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி செந்தில்குமார் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி இறந்தவர்களின் கல்லறை, நினைவிடங்கள் சுடுகாட்டில் புதுப்பிக்கப்பட்டு இருந்தது.
    • சேலம் காசிமுனியப்பன் கோவில் தெருவில் உள்ள ஆதிசிவன் அங்காளம்மன் கோவிலிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.

    சேலம்:

    மாசி மாதத்தில் வரும் அமாவாசையில் நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. அதன்படி, மாசிமாத அமாவாசையொட்டி இன்று மாநகரின் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதாவது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், பெரியாண்டிச்சியம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவர்.

    சேலம் டவுன் தேர்வீதி பெரிய அங்காளம்மன் கோவில், ஜான்சன்பேட்டை அங்காளம்மன் கோவில், வின்சென்ட் அங்காளம்மன் கோவில், நாராயண நகர் ஏரிகரை அங்காளபரமேஸ்வரி கோவில், கிச்சிப்பாளையம் அங்காளபரமேஸ்வரி கோவில், ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில் மற்றும் மாநகரில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளம் முழங்க அந்தந்த பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்காளம்மன் போன்று பல்வேறு சாமிகள் போல வேடமிட்டு ஆடியவாறு சென்றனர்.

    அப்போது வழிநெடுக திரளான மக்கள் நின்றுகொண்டு தங்களின் பல்வேறு நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் சாமியாடியவாறு வந்த பக்தர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்தனர். ஆட்டுக்குட்டிகளை வாங்கிய பக்தர்கள் தங்கள் கழுத்தில் தூக்கிபோட்டு ஆடியபடியே வந்ததுடன், ஆட்டின் குரல் வளையை கடித்து ரத்தம் குடித்தனர்.

    இன்னும் சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி, அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டே சுடுகாடு நோக்கி வந்தனர். சாமியாடியவாறு வந்த பக்தர்களின் உடல் முழுவதும் ஆடு, கோழிகளின் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. மேலும் சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைகுழியில் கிடந்த இறந்த மனிதனின் மண்டை ஓட்டை கவ்வியபடியும், ஆடு, கோழிகளை கடித்து ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    இது மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. இப்படி மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் வீட்டில் உள்ள பொதுமக்கள், அவர்களின் பாதங்களில் தண்ணீர் ஊற்றி கழுவி வழிபட்டனர்.

    சேலம் பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் மயான கொள்ளை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஆக்ரோஷத்துடன் ஆடியவாறு வந்த பக்தர்கள், அங்கு கூடி இருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர்.

    மேலும், ஜான்சன்பேட்டை சுடுகாடு, சந்தைபேட்டை மயானம், கன்னங்குறிச்சி சுடுகாடு, சீலநாயக்கன்பட்டி சுடுகாடு, நஞ்சப்பட்டி சுடுகாடு என நகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சுடுகாடுகளில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. சேலம் அம்மாபேட்டை, நாராயணநகர், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, கிச்சிப்பாளையம், கன்னங்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் ஊர்வலமாக அருகில் உள்ள சுடுகாட்டில் நடந்த மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு வந்தனர்.

    காக்காயன் சுடுகாட்டுக்கு பட்டைகோவில், அணைமேடு, பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம், குமார சாமிபட்டி, சின்னபுதூர், பொன்னம்மாபேட்டை, கருவாட்டுபாலம், ஆனந்தா பாலம் இறக்கம் ஆகிய இடங்களில் இருந்து சாமி ஊர்வலத்துடன் காளிவேடமிட்ட பக்தர்கள் வந்தனர்.

    காளிவேடமிட்ட பக்தர்கள் சுடுகாட்டை நெருங்கும் வேளையில் அதன்பாதையில் திருமணம் ஆகாத இளம்பெண்கள், குழந்தையில்லாத பெண்கள் மற்றும் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டவர்கள் நேர்த்தி கடனாக தரையில் படுத்திருந்தனர். அவர்களை சாமிவேடமிட்ட பக்தர்கள் ஒவ்வொருவராக தாண்டி சென்றனர். இவ்வாறு செய்தால் அவர்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் தீரும், நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தோஷம் நீங்கும், பேய், பிசாசு பிடித்தவர்கள் குணம் அடைவார்கள், நோய்நொடிகள் தீரும் என்பது ஐதீகம்.

    மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி இறந்தவர்களின் கல்லறை, நினைவிடங்கள் சுடுகாட்டில் புதுப்பிக்கப்பட்டு இருந்தது. இறந்தவர்களின் நினைவிடங்களில், உறவினர்கள் மாலை அணிவித்தும் தேங்காய், பழம், அவல், பொரி வைத்தும் வழிபட்டனர். அத்துடன் இறந்தவர்களுக்கு பிடித்தமானவற்றை படையலாக வைத்தும் வழிபாடு செய்தனர். இதே போல சேலம் காசிமுனியப்பன் கோவில் தெருவில் உள்ள ஆதிசிவன் அங்காளம்மன் கோவிலிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.

    ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சாமி சிலைகள், அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டது. சேலம் மாநகரில் சுடுகாட்டில் நடத்தப்பட்ட மயானக் கொள்ளை நிகழ்ச்சியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேலும் மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில், மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்கா ளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு சென்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில், மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, ஏற்காடு ஜெரினாகாடு புது மயானத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து, மேள தாளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

    இந்த சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்கா ளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு சென்றனர். அப்போது வழிநெடுக திரளான மக்கள் நின்றுகொண்டு, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், சாமியாடி வந்த பக்தர்களிடம் ஆடு, கோழிகளை கொடுத்தனர்.

    அதனை வாங்கிய பக்தர்கள், ஆட்டின் குரல் வளையை கடித்து ரத்தம் குடித்தும், கோழியை வாயில் கவ்வியபடியும் சுடுகாடு நோக்கி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நெமிலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.

    கோவிலில் இருந்து அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் மயானம் நோக்கி புறப்பட்ட போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து அங்காளம்மன் மயானத்திற்கு சென்ற பின்னர் அங்கு ஆடு மற்றும் கோழி பலியிடப்பட்டது. பின்னர் படையல் இடப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    மயானத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான திருமணமான புதுமண பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் முட்டிப்போட்டு குழந்தை வரம் கேட்டு வழிபட்டனர்.

    அவர்களுக்கு கோவில் பூசாரி எலுமிச்சை பழம் மற்றும் அங்காளம்மனுக்கு படையலிடப்பட்ட ரத்த சோறு ஆகியவற்றை வழங்கினார்.

    இதே போல் கடந்த வருடங்களில் குழந்தை இல்லாமல் வேண்டிக் கொண்ட பெண்கள் குழந்தை பிறந்தவுடன் மயானத்திற்கு வந்து குழந்தை வரம் கொடுத்த அங்காளம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குழந்தையை சூறை விட்டு பின்னர் கோவில் பூசாரியிடம் காணிக்கை வழங்கி தங்களது குழந்தைகளை பெற்று சென்றனர்.

    இதேபோல் சுடுகாட்டில் தங்களது முன்னோர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்த போது விரும்பி சாப்பிட்ட பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல், கிழங்கு உணவு பொருட்கள் மட்டுமின்றி குவாட்டர் பாட்டில்கள் , குளிர்பானங்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவைகள் வைத்தும் குடும்பத்தோடு வழிப்பட்டனர்.

    மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு விழாக் குழுவின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×